Search This Blog

Saturday, July 02, 2011

பி.ஜே.பி., ஊழல் எதிர்ப்புக் கட்சியா?, ஓ பக்கங்கள், ஞாநி

லஞ்சம் ஊழல், கறுப்புப் பணம், அதிகார முறைகேடுகள் பற்றியெல்லாம் பேசும் யோக்கியதை இந்தியாவில் எந்தக் கட்சிக்கும் இல்லை. ஆனால் இப்போது ஸ்பெக்ட்ரம் தொடங்கி லோக்பால் மசோதா வரையிலான சர்ச்சைகளில் பாரதிய ஜனதா கட்சி தன்னை சுத்தமான கட்சி போலவும் காங்கிரஸ்தான் மோசமான கட்சி என்றும் சித்திரிக்க முயற்சிக்கிறது. அண்ணா ஹசாரே, சுவாமி ராம்தேவ் ஆகியோரின் போராட்டங்களைப் பின்னாலிருந்து ஆதரிக்கிறது.

ஆனால் காங்கிரசும் சரி, பாரதிய ஜனதாவும் சரி, காமராஜர் பாணியில் சொல்லப் போனால் ஒரே (ஊழல்) குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதற்கு இன்னொரு ஆதாரத்தை இப்போது தெஹல்கா இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தயாநிதிமாறனுக்கு இருக்கும் தொடர்பை அம்பலப்படுத்திய அதே பத்திரிகையாளரான அஷீஷ் கேத்தான்தான் இதையும் செய்திருக்கிறார்.சுவாமி ராம்தேவ் எட்டு நாள் உண்ணா விரதம் இருந்ததும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ மனைக்கு ஓடோடி வந்து ராம்தேவை சந்தித்தார், உத்தர்கண்டின் பி.ஜே.பி முதலமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க். அதே மருத்துவ மனையில் 68 நாள் உண்ணா விரதத்துக்குப் பின் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இன்னொரு சாமியார் நிகமானந்தாவை முதல்வர் எட்டிக் கூடப் பார்க்கவில்லை.


நிகமானந்தா செத்தே போனார். அப்போதும் முதலமைச்சர் அவரைப் போய் பார்க்கவில்லை. ஏனென்றால் நிகமானந்தா யாரை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தாரோ, அவர்களெல்லாம் முதலமைச்சரின் ஆதரவுடன் கங்கை நதிப் படுகையைச் சூறையாடிக் கொண்டிருந்தவர்கள். தில்லியில் படித்தவரான நிகமானந்தா ஹரித்வாரில் இருக்கும் சுவாமி சிவானந்தாவின் மாத்ர சதன் என்ற ஆசிரமத்தைச் சேர்ந்த 38 வயது துறவி. இது அசலான ஆசிரமம். எளிய குடியிருப்பில் சில துறவிகள் தங்கி வாழும் இடம். ராம்தேவின் குட்டி நகரம் போன்ற ஆசிரமம் அல்ல. ஆனால் இந்த ஆசிரமத் துறவிகள்தான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, கங்கை நதியும் படுகையும் சூறையாடப்பட்டு நாசமாக்கப் படுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இங்கே இயங்கும் நூற்றுக்கணக்கான கல் குவாரிகள் சட்ட விரோதமானவை. அவற்றின் பாதிப்பால் எழும் தூசு அருகில் உள்ள குடியிருப்புகளில் வாழ்வோருக்கு உடல் நலப் பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. மரங்கள் கூட பாதிக்கப்பட்டுவிட்டன. அவை காய்ப்பதில்லை, நிலத்தடி நீர் வற்றி விட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  கங்கைக் கரையோரம் குளிக்கும் இடங்களுக்கு அருகிலும் கும்ப மேளா நடைபெறும் பகுதிக்கு அருகிலும் கல் குவாரிகள் இயங்கக்கூடாது என்ற தடையை சுவாமி நிகமானந்தா சார்ந்துள்ள ஆசிரமம் நீதிமன்றத்தில் வழக்காடி பெற்றது. ஆனால் பெரும் பாலான கல் குவாரிகளுக்கு மாநில அரசின் மாசுக் கட்டுப் பாட்டு வாரியமே சம்மத சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இந்த குவாரிகளில் இயந்திரங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவும் பின்பற்றப்படுவதில்லை.ஏழடி ஆழம் வரையில்தான் தோண்டலாம் என்ற விதியும் மீறப்பட்டு அறுபது எழுபது அடி ஆழத்துக்கெல்லாம் தோண்டப்பட்டு கற்களெடுக்கப்படுகின்றன.


விதிகளை மேற்பார்வையிட, கல் குவாரிகள் இருக்கும் ஹரித்வார், பௌரி மாவட்டங்கள் மொத்தத்துக்குமாக ஒரே ஒரு சுரங்க ஆய்வாளர்தான் இருக்கிறார். ஷைலேந்திர சிங் என்ற இந்த அதிகாரி கடந்த மே 11ஆம் தேதி, சட்டவிரோதமாக அகழப்பட்ட கற்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்தினார். ஆனால், கல் குவாரி மாஃபியா அரசியல் மேலிடத்துக்குச் சொல்லி உடனடியாக லாரிகளை விடுவித்தது. அத்தோடு நிற்கவில்லை. ஷைலேந்திர சிங் மீதே திருட்டுக் குற்ற வழக்குப் பதிவு செய்ய வைத்திருக்கிறது. கல் குவாரி கம்பெனிகள் சட்ட விரோதமாக இயந்திரங்களைப் பயன்படுத்தும் படங்களுடன் அவர் அரசுக்கு அளித்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

சென்ற வருடம் மார்ச் மாதத்தில் மாவட்ட வனத்துறையைச் சேர்ந்த அதிகாரி பதக் என்பவர், ஒரு குவாரியில் ரெய்டு நடத்தி அங்கே மொத்தம் 45ஆயிரம் டன் கற்கள் சட்டவிரோதமாக எடுத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார். ரெய்டு நடக்கும்போதே அவருக்கு மாநில பி.ஜே.பி. அமைச்சரிடமிருந்து ஃபோன் வந்தது. ஃபோனில் பதக் பேசாமல் தம் ப்யூனைப் பேசச் சொல்லிவிட்டு, ரெய்டை நடத்தி முடித்தார்.குவாரி உரிமையாளர், கைதுக்கு பயப்படும் எல்லா முதலாளிகளும் செய்வது போல மருத்துவமனையில் சேர்ந்தார். பிறகு தம்மிடம் இருக்கும் கற்கள் எல்லாம் எங்கெங்கே வாங்கப்பட்டன என்று சில ரசீதுகளை பதக்கிடம் அளித்தார். வாங்கிய இடத்தில் அப்படி ஒரு கணக்கு பதிவாகவே இல்லை என்பதைக் கண்டுபிடித்த பதக், குவாரி உரிமையாளருக்கு ஒரு கோடி 15 லட்ச ரூபாய் அபராதம் விதித்தார். ஆனால் இரு மாதங்கள் கழித்து பதக் இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவர் விதித்த அபராதம் ரத்து செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் சுந்தரம், குவாரி சட்ட விரோதமாக எதுவும் செயல்படவில்லை என்று முடிவெடுத்தார்! போலி ரசீதுகளை ஏற்றுக் கொண்டார். 

குவாரிகளின் அரசியல் செல்வாக்கே அனைத்து ஊழல்களுக்கும் காரணம். மாநில பி.ஜே.பி. அமைச்சர்களில் பலருக்குச் சொந்தமாக குவாரிகள் இருக்கின்றன. சிலர் தங்கள் பெயரிலேயே வைத்திருக்கிறார்கள். உணவு அமைச்சர் திவாகர் பட், கல்வி, நல்வாழ்வு அமைச்சர் பவன்ந்த் சிங், மாவட்ட பி.ஜே.பி. தலைவர்கள் தாக்குர் சிங், விக்ரம் சிங், ஜகதீஷ் கலகோட்டி என்று பட்டியல் நீள்கிறது.

சுவாமி நிகமானந்தாவும் சிவானந்தா ஆசிரமத் துறவிகளும் குவாரிகளுக்கு எதிராகப் போராடி வந்ததில் நீதிமன்றம் மூலம் சின்னச் சின்ன உத்தரவுகளை சாதகமாகப் பெற்றபோதும் ஒரு பெரிய குவாரியான ஹிமாசல் கிரஷர்ஸ், மாநில சுற்றுலா அமைச்சர் கௌஷிக்கின் ஆதரவுடன் தொடர்ந்து சட்டத்தையே வளைத்து வந்திருக்கிறது. கும்ப மேளா நடக்கும் பகுதிகளில் குவாரிகளுக்கு அனுமதி இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதும், ஹிமாசல் கிரஷர்ஸ் மட்டும், தங்கள் குவாரி உள்ள பகுதி, கும்பமேளா பகுதியில் இல்லை என்று அரசையே திருத்தம் வெளியிடச் செய்தது. அதை எதிர்த்தும் நிகமானந்தா நீதிமன்றத்துக்குச் சென்றார். 
 
ஹிமாசல் கிரஷர்சின் உரிமையாளர் கணேஷ் அகர்வால் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். அவர் அப்பா விஸ்வ ஹிந்து பரீஷத்தில் பிரமுகர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சுதர்சன், மோகன் பகவத் ஆகியோர் ஹரித்வார் வந்தால் அகர்வால் வீட்டில்தான் தங்குகிறார்கள். குவாரிகளுக்கு எதிராகப் பல முறை சிவானந்தா ஆசிரமத் துறவிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திப் போராடி வந்திருக்கிறார்கள். 1998ல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் பின்னர்தான் குளிக்கும் இடங்கள் அருகே குவாரிகளுக்குத் தடை வந்தது. 2008ல் நடத்திய போராட்டத்தின் போது நிகமானந்தா, 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஹிமாசல் கிரஷர்சின் சுரங்கப் பகுதி, கும்ப மேளா பகுதிக்குள் இருப்பதாக 1998ல் அரசே வரைபடங்களில் காட்டியிருக்கிறது. இப்போது அதை எப்படி மாற்றிச் சொல்ல முடியுமென்பதே அவரது கேள்வி. 2009லும் 2010லும் புதுப் புது உத்தரவுகள் போட்டபோதும் ஹிமாசலுக்கு மட்டும் விதிவிலக்குத் தொடர்ந்தது.போராட்டமும் தொடர்ந்தது.


கடைசியில் 2010 பிப்ரவரியில் ஹிமாசல் குவாரி இருக்கும் இடமும் தடை செய்யப்பட்ட பகுதியில் வரும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்த உத்தரவை சாமர்த்தியமாக, சட்ட ஓட்டைகளுடன் போட்டது. உத்தரவின் கீழ் விதிகள் வகுக்கப்படவேண்டும். அதைச் செய்யாமலே உத்தரவை மட்டும் அறிவித்தது. ஹிமாசல் உரிமையாளர் இந்தச் சட்டக் கோளாறை சுட்டிக்காட்டி உத்தரவுக்கு நீதி மன்றத்தில் தடை வாங்கிவிட்டார். மறுபடியும் நிகமானந்தா உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். கடைசியாக டிசம்பர் 2010ல் விதிகள் வரையறுக்கப்பட்டு ஹிமாசல் குவாரிக்குத் தடை வந்தது. ஒரே ஒரு நாள்தான் குவாரி முடங்கியது. அடுத்த நாளே அரசின் விதிகளுக்கு எதிராக ரிட் தாக்கல் செய்து தன் மீதான தடையை குவாரி தற்காலிகமாக நீக்கும் உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் நிகமானந்தா வழக்கு தொடுத்தார். உண்ணாவிரதம் தொடங்கினார்.  

அறுபது நாட்கள் உண்ணாவிரதம் கடந்தபின் நிகமானந்தாவின் உடல்நிலை மோசமாயிற்று. மாவட்ட மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தரப்பட்டது. ஏப்ரல் 30ந்தேதி அவருக்கு ஒரு ஊசி போடப்பட்டது. ஊசி போட்டதும் சிரிஞ்சையும் குப்பியையும் நர்ஸ் தம்முடனே எடுத்துச் சென்று விட்டார். என்ன ஊசி என்று நிகமானந்தாவுடன் இருந்தவர்களுக்குச் சொல்லப்படவில்லை. இதன் பின் நிகமானந்தாவின் உடல் நிலை படுமோசமாயிற்று.அடுத்து அவர் டேராடூனில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுவாமி ராம் தேவ் இருந்த அதே மருத்துவமனை. முதலமைச்சர், ராம்தேவை சந்தித்த அதே மருத்துவமனை. நிகமானந்தா ஜூன் 13ந்தேதி இறந்தார்.அவர் சுய நினைவின்றி கோமாவில் இருந்தபோது அவர் தொடுத்த வழக்கில் மே 26 அன்று உத்தர்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாரின் கோஷும் சர்வேஷ் குமாரும் ஓர் உத்தரவிட்டனர். ஹிமாசல் குவாரியை மூடவேண்டுமென்பதுதான் அந்த உத்தரவு. அந்த குவாரியினால் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. நிலத்தடி நீர் வற்றிவிட்டது. குவாரியின் தூசுகளால் மாமரங்கள் பாதிக்கப்பட் டன. கிராம மக்களுக்கு மூச்சுக் குழாய் நோய்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த குவாரி மூடப்படவேண்டும் என்று நீதிபதிகள், இதுவரை நிகமானந்தாவும் அவரது ஆசிரமத் துறவிகளும் கூறி வந்ததையெல்லாம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

நிகமானந்தாவின் மரணத்துக்கு பி.ஜே. பி.யிடமிருந்து எந்த அனுதாபச் செய்தியும் இல்லை. எந்த அமைச்சரும் பிரமுகரும் வந்து அஞ்சலி செலுத்தவும் இல்லை. பலத்த மௌனம்தான் ஒரே அஞ்சலி.

தங்கள் ஊழல் அம்பலமாகும்போது சத்தமே போடாமல் நழுவிவிடுவார்கள். பி.ஜே.பி. சாமியார்கள் ஆதரவுக் கட்சி என்று வட இந்தியாவில் ஒரு கருத்து உண்டு. ஆனால் நிச்சயம் நிகமானந்தா போன்ற சாமியார்களை அது ஆதரிப்பதில்லை. ஆழ்ந்த கடவுள் பக்தி உள்ளவர்கள் கட்சி என்றும் நம்பப்படுகிறது. ஆனால் மஞ்சுநாத் சுவாமி கோயிலில் சத்தியம் பண்ணச் சொன்னால், எடியூரப்பா நழுவிவிடுகிறார்.ஊழலுக்கெதிராக மக்கள் போராட்டம் தான் தேவைப்படுகிறது. அதில் எந்தக் கட்சியையும் சேர்த்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை. இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை சில நீதிமன்றங்கள்தான். 

உண்ணாவிரதம் இருந்தால் எந்தப் பயனும் இல்லை. சாக விட்டுவிடுவார்கள் என்று நான் சொல்வதுதான் நிகமானந்தா விஷயத்திலும் நடந்திருக்கிறது. அவரும் அவர் சகாக்களும் அடைந்த சின்னச் சின்ன வெற்றிகள் கூட உண்ணாவிரதத்தால் வரவில்லை. நீதிமன்றத்தில் அவர்கள் தொடுத்த வழக்குகளினால்தான் கிடைத்தன.

No comments:

Post a Comment