Search This Blog

Sunday, July 24, 2011

ஏலம்... எப்படி எடுக்கணும்?

 
'பொது ஏல அறிவிப்பு’  செய்தித்தாள்களில் இப்படி வரும் விளம்பரங்களை தினம் தினம் பார்த்திருப்பீர்கள். வங்கிகள் ஏலத்திற்கு விடும் பொருட்களை நம்மவர்களில் பலர் வாங்க நினைப்பதே இல்லை. காரணம், அதனால் பெரிதாக லாபம் இருக்காது என்று நினைத்துவிடுவதுதான். ஆனால், விஷயம் தெரிந்த சிலர் ஏலத்திற்கு வரும் சொத்துக்களை மட்டுமே குறி வைத்து வாங்குகிறார்கள்.
 
பொதுவாக வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன் திரும்ப வராதபோது பிணையாக வைக்கப்பட்ட வீட்டையோ அல்லது நகையையோ ஏலம் விட்டு, தங்களுக்கான கடன் தொகையை எடுத்துக் கொள்ளும். இந்த சொத்துக்களை மார்க்கெட் ரேட்டைவிட குறைவான விலையில், எந்த வில்லங்கமும் இல்லாமல் வாங்கலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.இப்படி ஏலத்துக்கு வரும் சொத்துக்கள் வீடு, தங்க நகைகள் என மதிப்புமிக்கதாக இருப்பதால், அவற்றை ஏலம் எடுக்கும்போது என்னென்ன விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு அலசல்
 
வீடு ஏலம்...


வீட்டின் மதிப்பைவிட கடன் தொகை எப்போதுமே குறைவாகத்தான் இருக்கும். கடன் தொகை திரும்ப வந்தால் போதும் என்ற மனநிலையில் தான் வங்கிகள் இருக்கும் என்பதால், பெரிய அளவில் விலையை ஏற்ற மாட்டார்கள்.

சில நேரங்களில் சந்தை மதிப்பைக் கணக்கிட்டு ஏலத் தொகை நிர்ணயிக்கப்படும். சம்பந்தப்பட்ட வங்கிதான் சொத்து மதிப்பீட்டாளராக இருக்கும் என்பதால், அது சொல்லும் சந்தை மதிப்பும் நம்பகமானதாகவே இருக்கும். அதுவும் 1520% வரை விலை குறைவாகவே இருக்கும்.

 'ஃபுல் ஃபர்னிஷ்டு’ வீடுகள் ஏலத்தில் எடுக்கும்போது, சில நேரங்களில் சந்தை மதிப்புக்கும் குறைவாகவே கிடைக்கும்.

எல்லா ஆவணங்களும் வங்கியிடம் இருக்கும் என்பதால், ஏலத்தில் வாங்கும் வீட்டின் அனைத்து ஆவணங்களையும் வங்கியே கொடுத்துவிடும்.

வங்கியிடமிருந்து வாங்குவதால் பொதுவாக எந்த வில்லங்கமும் இல்லாமல்தான் இருக்கும்.

ஏலத்தில் எடுத்த வீட்டை வைத்து, திரும்பவும் வங்கிக் கடன் பெறமுடியும். சில வங்கிகள் ஏலத்தில் வீடு வாங்குவதற்குகூட கடன் வழங்குகின்றன.

ஏலத்தில் வாங்கிய வீட்டைப் பதிவு செய்ய குறிப்பிட்ட வங்கியின் மேலாளரே பத்திரப்பதிவில் கையப்ப மிடுவதால் மோசடிகள் நடக்க வாய்ப்புக் குறைவு.

வெளிப்படையான விலை, வங்கி வழி பணப் பரிமாற்றம் என்பதால் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே சொல்லிவிடலாம்.

மொத்த கடன் தொகையிலிருந்தே ஏல கேட்புத் தொகை தொடங்குவதால் நமக்கு ஏற்ற விலைக்கு வரும்போது வாங்கி விடலாம்.

ஏல முறையில் வாங்கும் போது இடைத்தரகர்கள், கமிஷன் தொந்தரவுகள் இருக்காது என்பது சூப்பர் பிளஸ் பாயின்ட்.


  ஏல முறை!
பொதுவாக தனியார் வங்கிகள் தாங்கள் கையகப் படுத்தும் வீடுகளை நேரடி யாகவே ஏலம் விடுகின்றன. கூட்டுறவு வங்கிகள் எனில் முறையான அரசு அங்கீகாரம் பெற்ற ஏலதாரர்கள் மூலம் ஏலம் விடுகின்றன. வங்கி நிர்ண யித்த தொகையைவிட அதிகமாக அல்லது ஏலம் கேட்கும்போது யார் அதிகமாகக் கேட்கிறார் களோ அவர்களுக்கே வீடு தரப்படும். இது சம்பந்தமாக செய்தித்தாள்களில் அறிவிப்பு வரும்போது ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவதாக வங்கியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.


 தகுதி! 


ஏலத்தில் கலந்து கொள்ள எந்த தகுதி வரம்பும் கிடையாது. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 

ஏலத்துக்கு வரும் வீட்டை ஏலம் எடுப்பவர் களுக்கு காண்பிக்கவும் செய்வார்கள்.

ஏல கேட்பில் கலந்துகொள்ள கட்ட வேண்டிய தொகையை, வங்கி வரைவோலை வழியாகத்தான் கட்ட வேண்டும். சில சமயங்களில் இந்த தொகை ஐம்பதாயி ரத்திற்கு மேற்பட்டால் கண்டிப்பாக வங்கிக் கணக்கு இருந்தால்தான் வரைவோலையே கிடைக்கும்.
 
அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு வருமானவரி கணக்கு எண் இருக்க வேண்டும். 
 
 
நகை ஏலம்...

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏலத்தில் வரும் நகைகளை குறைவான விலையில் வாங்கிவிடலாம் என்பது சிறப்பான விஷயம். ஏலத்தில் நகைகளை வாங்குவது எப்படி, அதற்கான வழிமுறைகள் எப்படியெல்லாம் பின்பற்றப் படுகிறது என்பது குறித்து பார்க்கலாம்...
 
 
அடகுக்கு வரும் நகைகளை உடனே ஏலத்திற்கு விடுவதில்லை. நான்கு முதல் ஐந்து முறையாவது நோட்டீஸ் அனுப்பி, நகை அடகு வைத்திருப்பவர்களிட மிருந்து உரிய பதில் வர வில்லை என்றால் மட்டுமே ஏலம் விடப்படும் என்பதால் இந்த நகைகளுக்கு பிற்காலத்தில் எந்த சிக்கலும் வராது.

நகைகள் ஏலத்திற்கு விடப்படும் அறிவிப்பை நாளிதழ் மூலம் செய்வார்கள்.
அதில் நாள், ஏலம் விடும் இடம், ஏலமுறை குறிப்பிடப் படும். பெரும்பாலும் சம்பந்தப்பட்ட வங்கிகளி லேயே ஏலம் நடைபெறும்.

ஏலத்தில் பங்குபெற விரும்புபவர்கள் ஏலம் நடைபெறுவதற்கு முன்பே குளோஸ்டு கவர் படிவத்தில் தங்களைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்துவிட வேண்டும்.

நகையை அடகு வைத்தவர் கட்டவேண்டிய அசல், வட்டி மற்றும் அபராதத் தொகை என அனைத்தையும் சேர்த்துதான் ஏலத் தொகை நிர்ணயிக்கப்படும். அன்றைய தினத்தில் தங்கத்தின் விலை என்னவோ, அதைத் தாண்டாத அளவுக்கு இந்த தொகை இருக்கும்.

ஏலம் நடக்கும்போது, நாம் விரும்பும் விலையைக் கேட்கலாம். வங்கிக்கு கட்டுப்படியாகும் விலை கிடைத்து விட்டால் பணத்தை பெற்றுக் கொண்டு நகையைத் தந்துவிடுவார்கள். ஆனால், உடனடியாகக் கிடைக்காது. முதலில் ஏலத் தொகையில் 25% கட்ட வேண்டும்.

ஏலம் நடைபெற்றது பற்றி சம்பந்தப்பட்ட வங்கி அதன் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்து, சரியான முறையில்தான் ஏலம் நடந்தது என ஒப்புதல் அளித்த பிறகே மீதமுள்ள தொகையை (75%) வாங்கிக் கொண்டு நகையைத் தருவார்கள். ஏலத் தொகையை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

நகைக்கு அளிக்கப்பட்ட கடன் தொகை போக, ஏலம் நடத்தியதற்கான செலவுத் தொகையையும் கழித்து பாக்கித் தொகை இருந்தால் அதனை நகை அடகு வைத்த உரிமையாளருக்கு வங்கி சேர்த்துவிடும்.

ஆதாயம்!
 
புதிதாக நகைகள் வாங்கினால் சேதாரம், செய்கூலி போன்றவை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ஏலத்தில் நகை வாங்கினால் பண விரயத்தைத் தவிர்க்கலாம். தவிர, இன்றைய மார்க்கெட் விலையைவிட குறைவான விலையில் வாங்கலாம்.

ஏலத்தில் எடுத்த நகைகளில் டிசைன்கள் பிடிக்கவில்லை என்றால், அதை மார்க்கெட் ரேட்டுக்குக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளலாம்.

அதிக பணத்தைக் கொட்டி கொடுத்தால்தான் அது நல்ல பொருள் என்று நாம் நினைக்கிறோம். ஏலத்திற்கு வரும் பொருளை இளக்காரமாக நினைப்பதை விட்டுவிட்டு, குறைந்த விலையில் அதிக லாபம் தரக்கூடிய சொத்துக்களை வாங்க ஒரு நல் வாய்ப்பாகவே கருதலாம்!

பானுமதி அருணாசலம், நீரை.மகேந்திரன்.

2 comments:

  1. சென்ற பதிவும் இந்தப் பதிவும்
    அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவுகள்
    மிகச் ச்ரியாக தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளீர்கள்
    நன்றி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஏலதாரர் ஆவது எப்படி

    ReplyDelete