Search This Blog

Thursday, July 14, 2011

தயாநிதியை அடுத்து உருளும் தலைகள்! - டெல்லி ரகசியங்கள்

 
மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்!முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சி கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை.
 
அதைப்போலத்தான் தயாநிதி மாறனும். கடந்த முறை 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்தாக வேண்டிய நெருக்கடி. இப்போது உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, ராஜினாமா செய்துள்ளார்!ஆ.ராசாவும் கனிமொழியும் கைதானபோது, தயாநிதி மாறன் ஆதரவாளர்கள் வருத்தப்படவில்லை. அதேபோல், இப்போது தயாநிதி குறித்து 'தெஹல்கா’ செய்திக் கட்டுரை வெளியிட்டபோது, அந்த இதழை பாட்டியாலா நீதிமன்றத்தில்வைத்து கனிமொழியும் ஆ.ராசாவும் படித்து மகிழ்ந்த காட்சிகள், டெல்லி மீடியாக்களின் கண்களில் இருந்து தப்பவில்லை. இவை, தி.மு.க. வரலாற்றின் மிகச் சோகமான இறங்குமுகத்தின் சாட்சியங்கள்!
 
 
தயாநிதி பதவி விலகல் குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவராலும் தயாநிதிக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. ''உலகத் தில் குறிப்பாக, இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல'' என்று சொன்னார். ''பத்திரிகையாளர்கள் பூதாகாரமாகச் சொன்னதை சி.பி.ஐ. நம்பியது. அதைஉறுதிப் படுத்திக்கொள்ள வழக்குப் போட்டுள்ளது'' என்று ஏற்கெனவே சொன்னவர்தான் கருணாநிதி. பத்திரிகைகள் சொன்ன பொய்யை கருணாநிதி ஏன் நம்பினார்? அப்பாவி ஆ.ராசாவைஏன் பதவி விலகச் சொன்னார்? அதாவது, தி.மு.க. தலைவர் இன்னமும் தன்னுடைய சகாக்களின் தவறை உணரவோ, ஒப்புக்கொள்ளவோ, முன்வரவில்லை!
 
தயாநிதி மாறனின் பதவி விலகல் யாரும் எதிர்பாராத திடுக் சமாசாரம் அல்ல. என்றைக்கு ராசா மீது வழக்குப் பதிவு ஆனதோ... அன்றே இதுவும் தீர்மானிக்கப் பட்டது. ''ஆ.ராசா பதவி விலகியே ஆக வேண்டும்'' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள் குரல் கொடுத்தபோது, ''பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இருந்தே இப்படித் தான் நடக்கிறது. அந்த சமாசாரங்களையும் விசாரிக்க வேண்டும்'' என்று காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், தானே வலியப் போய் விவகாரத்தில் மாட்டிக்கொண்டன. பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். அடுத்து, அருண்ஷோரி வந்தார். வாஜ்பாய் ஆட்சியில் மூன்றாவதாக இந்தத் துறையைக் கைப்பற்றியவர் தயாநிதி மாறன். சி.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் 'மூன்றாவது அமைச்சர்’ என்று சொல்வது, தயாநிதி மாறனைத்தான். அவரது பெயரை இந்த அறிக்கையில் நேரடியாகச் சொல்லாமல், இந்த கோட் வேர்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.
 
 
தயாநிதி மாறன் குறித்த சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள கஷ்டமான சுற்றிவளைப்புப் புகார் அல்ல. தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங் கரன், தன்னுடைய ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்தது தொடர்பான ஒரு புகாரை சி.பி.ஐ-யிடம் கொடுக்கிறார். ''என்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பம் கொடுத்தேன். அவர்கள் லைசென்ஸ் தர மறுத்தார்கள். தரக் கூடாது என்பதற்காகவே தேவை இல்லாத கண்டிஷன்களைப் போட்டார்கள். அதன் பிறகு, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க தயாநிதி கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டினார். அதன் பிறகு, குறைந்த விலைக்கு நான் அதை விற்றேன். நிறுவனம் கை மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு தொலைத் தொடர்பு லைசென்ஸ் கிடைத்தது. என்னை மிரட்டியதும், குறைந்த விலைக்கு நிறுவனத்தை விற்கக் கட்டாயப்படுத்தியதும், எனது தொழிலுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன்  சொல்லி இருக்கிறார். இவரது பெயரைச் சொல்லாமல், 'ஜென்டில்மேன்’ என்று கோட் வேர்டைச் சொல்கிறது சி.பி.ஐ. தனது அறிக்கையில்!
 
 
மூன்றாவது அமைச்சருக்கும் ஜென்டில்மேனுக்கும் நடக்கும் யுத்தம்தான் இந்த வழக்கு. இதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியத்தை சி.பி.ஐ-யும் மத்திய அமலாக்கத் துறையும் கொண்டுவருகின்றன. ''இந்த டீலிங் மூலமாக ஆதாயம் பெற்ற மேக்சிஸ் தன்னுடைய துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.'' என்பதுதான் சி.பி.ஐ. கொண்டுவரப்போகும் குற்றச்சாட்டு. அதாவது, கலைஞர் டி.வி. மீது என்ன மாதிரி யான புகார்கள் கூறப்பட்டனவோ, தேபோன்று இந்த விவகாரத்திலும் வரப்போகிறது. ''நான் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது, எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது, நான் அமைச்சராக இல்லை!'' என்று தயாநிதி தரப்பு விளக்கம் வைத்துள்ளது. ''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் 1998-ம் ஆண்டு முதலே தொடர்புகள் உண்டு'' என்றும் சொல்கிறார்கள். ஆனால், சி.பி.ஐ. இன்னும் என்ன மாதிரியான பூதங்களைக் கோர்ட்டில் கொண்டுவந்து கொட்டப் போகிறது என்று தெரியவில்லை.
 
 
''அடுத்து, யாரைக் குற்றப் பத்திரிகையில் கொண்டுவரப் போகிறீர்கள்?'' என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் கிண்டலாகக் கேட்கும் அளவுக்கு, மத்திய அரசாங்கத்தின் முகம் சிதைந்துகொண்டு இருக்கிறது. தயாநிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிவசங்கரன் உள்ளிட்ட 10 பேரிடம் வாக்குமூலம் வாங்கி வைத்துள்ளது சி.பி.ஐ.ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு, தயக்கம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு வங்கிகள் மூலமாகக் கடனாகத் தரப்பட்டுள்ளன. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை, பி.ஜே.பி. குறிவைத்து தாக்கி வருகிறது. எந்தக் கேள்விகளும் கேட்காமல், நிதித் துறை அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டதன் பின்னணியில் அடங்கி உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்கிறது பி.ஜே.பி.
''மத்திய மந்திரி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ராசா, இந்த ஊழலின் ஒரு பங்குதாரர்தான். இன்னொரு பங்குதாரர் சிதம்பரம்.'' என்கிறது பி.ஜே.பி. இவர்கள் அடுத்ததாக, கபில்சிபலையும் குறிவைத்து உள்ளார்கள். இப்போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கபில்சிபல் இருக்கிறார். ''ரிலையன்ஸ் கம்பெனி தனது தொலைபேசிச் சேவையை கிராமப் பகுதி களில் இருந்து திடீரென ரத்து செய்தது. இது விதிமுறையை மீறிய செயலாகும் என்று சொல்லி தொலைத் தொடர்புத் துறை 650 கோடியை அபராதமாக விதித்தது. அதாவது, 13 மண்டலத்துக்குத் தலா 50 கோடி என்று தொகை முடிவு செய்யப்பட்டது. இந்த 50 கோடியை 5 கோடியாகக் குறைத்து இருக்கிறார் கபில்சிபல். இந்தச் சலுகை மூலமாக அவர் அடைந்த லாபம் என்ன என்று விசாரிக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி. கேட்கிறது. ஏற்கெனவே, அமைச்சர் சரத்பவார் மீதான குற்றச்சாட்டு எழுந்து அடங்கி இருந்தது. அதையும் மீண்டும் கிளறப்போகிறார்கள்.
 
 
போகிற போக்கைப் பார்த்தால், மன்மோகன் சிங் அதிக நாட்கள் நீடிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது!  
 vikatan
 

No comments:

Post a Comment