Search This Blog

Saturday, July 23, 2011

தொடர்கிறது சமச்சீர் மாயை! ஓ பக்கங்கள், ஞாநி


சமச்சீர் கல்வி என்பது ஒரு கனவு; ஒரு லட்சியம்; ஒரு லட்சியக் கனவு.

கல்வியை வியாபாரமாக நடத்திக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அதை ஏற்கமாட்டார்கள். அந்த வணிகத்துக்குத் துணை போகக்கூடிய அரசியல்வாதிகளும் அதை ஆதரிப்பது போல நடித்து ஏமாற்றுவார்கள். தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் சமச்சீர் கல்வியை ஏற்கெனவே அரசியலாக்கிச் சிதைத்துவிட்டார்கள். தன் பங்குக்கு இப்போது நீதிமன்றங்களும் குழப்பத்தை அதிகரித்திருக்கின்றன.


மெட்ரிகுலேஷன், ஸ்டேட் போர்ட், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என்று நான்கு விதமான பாடத் திட்டங்கள் இருப்பதற்குப் பதிலாக ஒரே பொதுப் பாடத்திட்டத்தை எல்லா பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என்பது சமச்சீர் கல்வியின் ஓர் அம்சம். அந்த ஓர் அம்சத்தை மட்டும்தான் கருணாநிதியின் அரசு செயல்படுத்த ஆரம்பித்தது. ஜெயலலிதா அரசு நிறுத்திவிட்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பின்படி, ஜெயலலிதா அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்து சமச்சீர் கல்வித்திட்டத்தை ஒழிக்கப் பார்த்தது தவறு. தி.மு.க அரசு தயாரித்து வைத்த பாடப் புத்தகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுவிட்டது.அத்தோடு நிறுத்திக் கொள்ளாதது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. பாடத்திட்டத்தில் நிபுணர்கள் சொல்லும் மாற்றங்கள், சேர்க்கைகள் இருந்தால், அவற்றை மூன்று மாதங்களுக்குள் துணைப் புத்தகங்களாகத் தரும்படி உத்தரவிட்டிருக்கிறது. இது தேவை யற்ற குழப்பம்.


நீதிமன்றம்

பாடப் புத்தகங்கள் தரமற்றவை; அவற்றை மாற்றியமைத்து அடுத்த கல்வியாண்டிலிருந்து புதுப் புத்தகங்களை அறிமுகப்படுத்துவோம் என்றுதான் ஜெயலலிதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மாற்றியமைக்க மூன்று மாதம் போதும் என்கிறது நீதிமன்றம். ஆனால் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்கும் உரிமை அரசுக்கு உண்டு என்பதை நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வேலை செய்ய தனக்கு ஒரு வருடம் தேவை என்று அரசு சொல்லும்போது, இல்லையில்லை மூன்று மாதம் போதும் என்று எப்படி நீதிமன்றம் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. எத்தனை மாதம் தேவை என்பது நிர்வாக முடிவு. அதைத் தீர்மானிப்பது நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு அமைத்த நிபுணர் குழு உறுப்பினர்கள் அதற்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்று நீதிமன்றம் முன்பு மனுதாரர்கள் சிலர் வாதாடியிருந்தார்கள். அந்த விஷயத்துக்குள் போக விரும்பவில்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள். 


ஏன் போக விரும்பவில்லை என்று சொல்ல வேண்டாமா? அரசு நியமித்த குழுவே சரியில்லை என்று வாதிடப்படும் போது, நீதிமன்றம் அந்தக் குழு சரியான குழுதான் என்றாவது சொல்ல வேண்டும். அல்லது சரியில்லை என்றாவது சொல்ல வேண்டும். இரண்டுமே சொல்லமாட்டேன் என்பது என்னமாதிரியான தீர்ப்பு என்று புரியவில்லை.ஏன் தயங்குகிறார்கள் என்றும் புரியவில்லை.முந்தைய அரசு உருவாக்கிய பொதுப் பாடத்திட்டம் சரியில்லை என்று புதிய அரசு எந்த ஆய்வும் செய்து முடிவுக்கு வரவில்லை என்றும், அந்தப் பாடத்திட்டம் சமச்சீர் கல்வி பற்றி நான்கு ஆண்டுகள் ஆராய்ந்த பின் எடுத்த முடிவு என்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.நான்கு ஆண்டுகள் ஆராய்ந்த பின்னர் முத்துக்குமரன் குழு தெரிவித்த பரிந்துரைகள் பொதுப் பாடத்திட்டம் பற்றி மட்டும் அல்ல. அடிப்படை வசதிகள், பயிற்றுவிக்கும் தரம், தேர்வு முறை என்று பல பரிந்துரைகள் முத்துக் குமரனால் வழங்கப்பட்டுள்ளன.நான்காண்டு ஆய்வுக்குப் பின் உருவாக்கிய மீதி பரிந்துரைகளை ஏன் தி.மு.க. அரசோ புதிய அரசோ நிறைவேற்ற முன்வரவில்லை என்று நீதிபதிகள் கேட்கவே இல்லை. கேட்டிருக்க வேண்டும். உத்தரவிட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வி சட்டத்துக்குக் கொண்டு வந்த சட்டத்திருத்தம் செல்லாது என்று நீதிபதிகள் எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்று பார்த்தால், இந்திய அரசியல் சாசனத்தில், சம உரிமையை வழங்கும் 14ம் பிரிவுக்கு அது எதிரானது என்றுதான். கல்வி பெறுவதற்கான சம உரிமை என்பது பொதுப் பாடத்திட்டம் மட்டும்தானா? சமச்சீர் கல்வியின் மீதி அம்சங்களையும் உடனே நிறைவேற்ற வேண்டும் என்றல்லவா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் ?பொதுப் பாடத்திட்டம் இந்த ஆண்டே வந்தாலும், இன்னும் சில மாதம் கழித்து வந்தாலும், அது சமச்சீர் கல்வியாக இருக்கப் போவதில்லை என்பதற்கு இரு காரணங்களைப் பார்ப்போம்.

 ஆசிரியரின் தரம்

தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியரின் தரமும் அரசுப் பள்ளி ஆசிரியர் தரமும் சமமாக இல்லவே இல்லை. சென்ற பதினைந்து நாட்களில் நான்கு செய்திகள் தமிழ் நாட்டில் வெளியாகியிருக்கின்றன. நான்கும் ஆசிரியர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவது, மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வது பற்றியவை. இதில் ஒரு சிலர் தலைமை ஆசிரியர்கள். எல்லா குற்றவாளி ஆசிரியர்களும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். தனியார் பள்ளியில் இப்படிப்பட்ட ஆசிரியர் ஒரு நாள்கூட வேலையில் நீடிக்க முடியாது. விதிவிலக்காக இருக்கக் கூடிய நல்ல தரமான அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவுதான். இந்தப் பிரச்னை பற்றி எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் அரசு இருக்கிறது. சமச்சீர் கல்விக்காகத் தெருவில் இறங்கிப் போராடும் இடதுசாரி கட்சிகள்கூட தங்கள் ஆசிரியர் சங்கங்கள் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க எதுவும் செய்வதில்லை.

இரண்டாவது பிரச்னை

தி.மு.க. அரசு தன் கடைசி காலத்தில் கல்வித் துறையில் செய்துவிட்டுப் போன இரண்டாவது குளறுபடி. தனியார் பள்ளிக் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக முதலில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவை நியமித்தது.அவரது பரிந்துரைகளைத் தனியார் பள்ளி முதலாளிகள் எதிர்த்ததும் இன்னொரு குழுவாக நீதிபதி ரவிராஜபாண்டியனை நியமித்தது.இவர் நிர்ணயித்த கட்டணங்களையும் பள்ளி முதலாளிகள் ஏற்கவில்லை.ஆனால் அவை உடனடியாக நடைமுறைக்கு வருவதாகப் புதிய அரசு அறிவித்துவிட்டது. பல ஊர்களில் பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையில் கட்டணம் தொடர்பாகக் கடும் சண்டைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.பல பள்ளி நிர்வாகங்கள் இப்போது புது உத்தியை மேற்கொண்டுவிட்டன. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும்தான் செலுத்துவோம் என்று பெற்றோர் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு, இந்தக் காசுக்கு உங்கள் குழந்தைக்கு இவ்வளவுதான் தரமுடியும் என்று பள்ளி செயல் திட்டத்தையே மாற்றி வருகிறார்கள். அதிகக் கட்டணம் கொடுத்தால் வேறு மாதிரி செயல்திட்டம். பல பல்ளிகளில் குறைந்த கட்டணம் செலுத்திய குழந்தைகளுக்கான பள்ளி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளையாட்டு, அசெம்ப்ளி பிரேயர், பேச்சுப் போட்டி முதலான போட்டிகள், ஸ்பெஷல் க்ளாஸ் எதுவும் கிடையாது. காலையிலிருந்து மதியம் வரை எல்லாருக்குமாகப் பொதுவாக வகுப்புகள் நடத்திய பின்னர், குறைந்த கட்டண மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மீதிப்பேருக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்புகளைத் தொடர்கிறார்கள்.

இப்படிப்பட்ட கொடுமையை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது. ஒரே வகுப்பில் இருக்கும் குழந்தைகளை இரண்டு விதமாகப் பிரித்து நடத்துவது. அரசு, தனியார் பள்ளிகளின் குழந்தைகள் எல்லாருக்கும் சமச்சீர் கல்வி என்று ஒரு பக்கம் கேட்டுக் கொண்டிருக்கும்போது, இப்போது தனியார் பள்ளிகளுக்குள்ளேயே சமமற்ற கல்வி முறை புகுத்தப்பட்டுவிட்டது.  

ஒரே தீர்வுதான்

அரசு நிர்ணயித்த கட்டணங்களைப் பின்பற்றவில்லை என்றால் அந்தப் பள்ளியை ஒன்று இழுத்து மூடவேண்டும். அல்லது அரசே எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வித் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் ஆழமானவை. ஆனால் நடப்பவை எல்லாம் மேம்போக்கானவை. முதலில் எல்லா பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வருமானவரி விதிக்க வேண்டும். அறக்கட்டளைக்கு வரி விலக்கு உண்டு என்றால், பள்ளி, கல்லூரி கட்டண வருவாய் செலவுகளை அறக்கட்டளையின் இதர நடவடிக்கைகளிலிருந்து பிரித்து வரி விதிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களை வசூலித்தால் மட்டுமே வரி விலக்கு தரவேண்டும். 

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார் . அமெரிக்காவைப் பின்பற்று என்று சொல்லும் போக்குப் பெருமளவு அதிகரித்துள்ள இன்றையச் சூழலில், கல்வி விஷயத்தில் அமெரிக்காவைப் பார் என்று நான் சொல்ல விரும்புகிறேன்.

அமெரிக்காவில் மொத்த மாணவர்களில் வெறும் பத்து சதவிகிதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். மீதி அத்தனை பேரும் அரசுப் பள்ளிகளில்தான் உள்ளனர். தமிழ் நாட்டில் சரிபாதிக்கு மேல் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள். அங்கே 12 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர். இங்கே 34 பேருக்கு ஓர் ஆசிரியர் என்பது அதிகாரபூர்வக் கணக்கு. நடைமுறையில் அறுபதுக்கு ஒருவர்.குடியிருக்கும் பகுதியில் இருக்கும் பள்ளியில்தான் அமெரிக்காவில் படிக்க முடியும். விதிவிலக்காக மட்டுமே வேறு இடத்துக்குச் சென்று படிக்க முடியும். இங்கே மைல் கணக்கில் பயணம் செய்து படிப்பது சகஜமாக இருக்கிறது.அமெரிக்காவில் பாடத் திட்டம் மாவட்ட அளவில் முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டமும் அதற்கு உரிய பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். எல்லாவற்றுக்குமான பொது அம்சங்கள் உண்டு. இங்கே நேர்மாறான முயற்சியில் இருக்கிறோம்.

கல்வியை அரசியலிலிருந்தும் வணி கத்திலிருந்தும் பிரித்தால்தான் அசலான மாற்றம் வரும். அமெரிக்காவில் தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இங்கே கல்வியை அரசியலும் வணிகமும் தான் தீர்மானிக்கின்றன. எனவே சமச்சீர் மாயைத் தொடரும்.

இந்த வாரக் கேள்விகள்

முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு இருப்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகார பூர்வமான நிகழ்ச்சியில் அவர் நீதிபதிளுடன் கலந்து கொள்ளக்கூடாது என்று சில வழக்கறிஞர்கள் அண்மையில் எதிர்த்தார்கள். தலைமை நீதிபதி ஜெயலலிதாவை வீட்டுக்கு அழைத்து, தேநீர் விருந்து கொடுத்தபோது அவர்கள் ஏன் தலைமை நீதிபதிக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை ?


தி.மு.க. ஆட்சியில், கலைஞர் குடும்பப் படமான எந்திரனுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குச் சிறப்புக் காட்சி போட்டுக் காட்டப்பட்டபோது அதற்குச் சென்ற நீதிபதிகளுக்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? அப்போது ஓட்டல் தாக்குதல் வழக்கில் புகார் பதிவாகித் தேடப்பட்ட குற்றவாளியாக இருந்த சன் பிக்சர்ஸ் நிர்வாகி சக்சேனாதான் நீதிபதிகளை வரவேற்றார் என்பதை ஏன் அப்போது இதே வழக்கறிஞர்கள் கண்டுகொள்ளவே இல்லை?

No comments:

Post a Comment