Search This Blog

Monday, July 25, 2011

சென்ற வார அரசியல் ஒரு பார்வை

2ஜிக்கு ‘நோ’ ஜி


 நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்றி வரும் 2ஜி அலைக்கற்றை ஊழலை குறித்த திரைப்படத்தை, சௌந்தர்யா இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. ஜான் மனோகர் என்பவர் திரைக்கதையை (உண்மைக் கதையை) எழுதி இயக்குகிறார். இந்த ஊழல் தொடர்பாக கம்பிக்குப் பின்னால் இருக்கும் ராஜா, கனிமொழி, மற்றும் அந்த வரிசையில் சேரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற தயாநிதி மாறன் ஆகியோர் உருவ ஒற்றுமைக்கு ஏற்ப நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஆனால் இந்தப் படம் வெளி வந்தால் கட்சியின் பெயர் இன்னமும் டேமேஜ் ஆகும் என தி.மு.க. தலைகள் கருதுகின்றன. எனவே படம் எடுப்பதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் யார் மூலமாவது வழக்கு போட யோசிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் விசாரணை நடந்துவரும் இந்த சமயத்தில் இது தொடர்பான படம் எடுக்கத் தடை போடவேண்டும் என்று வழக்கு போடப்படுமாம். கட்சிக்குத் ‘தொடர்பில்லாத’ ஒருவர் கூடிய விரைவில் வழக்கு போடலாம்.

பெட்ரோலால் எரியும் வயிறு! 

கடந்த ஒரு வருடத்துக்குள் ஆறு முறைக்கு மேல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது. கேட்டால் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை சரிசெய்ய விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று சொல்கிறார்கள். உண்மை என்ன? கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் தொடர்பான உற்பத்தி செலவுகளையும் சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் அடக்க விலை 30 ரூபாய்தான். ஆனால் நாம் அழுவது 67 ரூபாய் 41 காசு. கிட்டத்தட்ட 37 ரூபாய் மத்திய, மாநில அரசுகளுக்கு வரியாய் போகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் 1,26,288 கோடியாகும். ஆனால் பொருந்தாக் கணக்கு சொல்லி நஷ்டம் என்கிறார்கள். அரசு கொடுக்கும் மான்யம் 23,000 கோடி. ஆனால் மத்திய மாநில அரசுகளுக்கு வரி வருவாய் கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி. நம்மிடமிருந்து பொய் சொல்லிப் பணத்தைப் பிடுங்கி ‘நாங்கள் நவரத்தினா நிறுவனங்கள்’ என்று டிஸ்கோ ஆடுகின்றன பெட்ரோலிய நிறுவனங்கள். பெட்ரோல் விலை விவகாரத்தில் நம்மை இன்னமும் இளிச்சவாயர்களாக்கி வருகின்றன மத்திய, மாநில அரசுகள்.

காட்சி மாறாதா? 


ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை, அமைச்சர்கள்தான் மாறிக் கொண்டிருக்கின்றனர் என்று தா. பாண்டியன் ஒரு கூட்டத்தில் பேசியது சரிதான்" என்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மணலுக்கு அதிகாரபூர்வமற்ற ஏஜெண்ட் ஆண்டிகோலத்து முருகன் பெயர் கொண்டவர் என்றால் இந்த ஆட்சியில் ஆறுமுகத் தோற்றத்து முருகன்" என்று சொல்லப்படுகிறது. சி.பி.எஸ்.சி.பாடத் திட்டத்தின் படி பள்ளி திறக்க மாநில அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் வேண்டுமென்றால் கடந்த ஆட்சியில் ஐந்து லட்சம் காணிக்கையாம். விலைவாசி ஏறி விட்டதால் இருபது லட்சமாக அது உயர்த்தப்பட்டு விட்டதாம். சமச்சீர் குளறுபடியைச் சரி செய்ய நேரமில்லை. கல்லாவைத் திறந்து வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கடுகடுக்கிறார் (உண்மையான) கல்வித் தந்தை ஒருவர்.

எங்களை வெளுத்திடாதீங்க! 

 புதிய தலைமைச் செயலக வளாகத்தில் கடந்த 30,40 வருடங்களாக 30 சலவைக்கார குடும்பங்கள் வசித்து வந்தன. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கே இருந்த மற்ற குடியிருப்புவாசிகளின் தேவைகளை இவர்கள் நிறைவேற்றி வந்தார்கள். தலைமைச் செயலகம் கட்டும்போது இவர்களது வீடுகளை இடித்தது மட்டுமல்லாது சலவைக்கான தண்ணீர் தொட்டிகளையும் உடைத்துப் போட்டுவிட்டார்கள். இப்போது அங்கே தலைமைச் செயலகம் வரப் போவதில்லை. எனவே எங்களுக்கு அதே இடத்தில் வீடு கட்டித் தரவேண்டும். மீண்டும் சலவைத் தொழில் செய்ய கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். நாங்கள் வணங்கி வந்த அரச மரப்பிள்ளையார் கோயிலுக்கு 18 லட்சம் கொடுத்து, திருப்பணி செய்ய உத்தர விட்ட முதல்வர் அம்மா, எங்கள் கோரிக்கையையும் பரிவுடன் கவனிக்க வேண்டும்" என்கிறார்கள் சலவைத் தோழர்கள்.

ஆஹா, என்ன அடக்கம்!

தமிழக அமைச்சர்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜய் தவிர வேறு யாரும் கூட்டங்களில் வாயைத் திறக்க ரொம்பவே யோசிக்கிறார்கள். எதையாவது பேசி வில்லங்கமாகி அமைச்சர் பொறுப்புக்கு ஆபத்து வந்து விடப் போகிறதோ என்ற பயம்தான். இந்தச் சூழலில் சமீபத்தில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி தொடர்பான கருத்தரங்கில் சிறப்பு மலரை வெளியிட்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பழநியப்பன், ஒரு வார்த்தை கூட பேசாமல் போனதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. 
1 comment:

  1. நல்ல நடை..வாழ்த்துக்கள்..

    ReplyDelete