இடம் விற்பனைக்கு, வீடு விற்பனைக்கு, காடு விற்பனைக்கு, கழனி
விற்பனைக்கு... என்றெல்லாம், இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஏன்,
கிராமங்கள் கூட விற்பனைக்கு என்று கடந்த காலங்களில் வட இந்தியாவில்
பரபரப்பு கிளம்பியது. இப்போது... ஒரு நாடே விற்பனைக்கு வந்து இருப்பது
உலகையே அதிர வைத்திருக்கிறது!
ஆம், கிரேக்க நாடு விற்பனைக்கு வந்திருக்கிறது. 'இதைத் தொடர்ந்து
இத்தாலியும் விற்பனைக்கு வரவிருக்கிறது' என ஐரோப்பியா நாடுகள் அலறல்
போடுகின்றன.
இதற்கெல்லாம் காரணம்.... உலகமயம், தாராளமயம், தனியார்மயம் என்கிற மூன்று
மாயப் பிசாசுகளும் சேர்ந்து கொண்டு நடத்திவரும் பேயாட்டம்தான்! இந்த
மாயப்பிசாசுகளின் கைப்பாவையாகச் செயல்பட்ட ஆட்சியாளர்களால், கிரேக்க
நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குப் போய், நாடே ஆட்டம் கண்டு
கிடக்கிறது. இத்தாலியிலும் கிட்டத்தட்ட அதே நிலைதான்!
அதே மாயப்பிசாசுகளைத்தான், நம்முடைய பொருளாதாரப் புலி... மாண்புமிகு
மன்மோகன் சிங் பட்டுக் கம்பளம் விரித்து இங்கே வரவழைத்து, விருந்து உபசாரம்
செய்து கொண்டிருக்கிறார், பல ஆண்டுகளாக! அதன் காரணமாக உருவான போலி
பொருளாதாரம், தற்போது புற்றுநோய் போல தேசத்தை உள்ளிருந்து அழித்துக்
கொண்டிருக்கிறது.
போலி பொருளாதாரம்?
''ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நைசாக புகுந்து, பேராசையை உசுப்பிவிட்டு,
கடைசியில் ஒழித்துக் கட்டுவதுதான் போலி பொருளாதாரத்தின் வேலை. உலக
வங்கியும், சர்வதேச நிதியமும்தான் இதன் சூத்திரதாரிகள். தற்போது
இந்தியாவுக்குள்ளும் குடியேறி விட்டது இந்தப் போலிப் பொருளாதாரம். விடாது
கருப்பு கணக்காக... இது, இந்தியாவையும் வீழ்த்தாமல் விடாது''. 'ஒரு நாட்டின் உற்பத்தி விகிதத்தைக் கணக்கில் கொள்ளாமல், மேம்போக்காக சந்தை
மற்றும் விற்பனை விகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிடப்படுவதையே
'போலி பொருளாதாரம்' அல்லது 'போலி பொருளாதார வளர்ச்சி'' என்று
வர்ணிக்கின்றனர், இந்தப் பொருளாதார நிபுணர்கள்.
இதை ஒரு எளிதான உதாரணம் மூலம் பார்க்கலாம். ஒரு விவசாயி கடந்த வருடம் 10
மூட்டை நெல்லை உற்பத்தி செய்து, மூட்டை 1,000 ரூபாய் என 10,000 ரூபாய்க்கு
விற்பனை செய்கிறார். இந்த ஆண்டு 8 மூட்டையை உற்பத்தி செய்து மூட்டை 1,500
வீதம் 12 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார். இதில் அந்த விவசாயியைப்
பொறுத்தவரை 2 ஆயிரம் ரூபாய் அவருக்கு வளர்ச்சி. ஆனால், தேசத்தின் மொத்த
உற்பத்தியில் 2 மூட்டை வீழ்ச்சி.
ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியின் சந்தை மதிப்புதான் (விவசாயம்,
தொழில், சேவை) நாட்டின் மொத்தப் பொருளாதாரம். அதாவது... ஜி.டி.பி.
(நிஞிறி). இந்த அளவை ஒப்பிட்டுத்தான் ஒரு நாட்டின் வளர்ச்சி விகிதம்
கணக்கிடப்படுகிறது.அந்த ஒப்பீட்டு வளர்ச்சியைத்தான் 9% வளர்ச்சி... 10% வளர்ச்சி... என
அவ்வப்போது அறிவிக்கின்றனர். இந்தக் கணக்கீட்டில்தான் போலி பொருளாதாரம்
தனது திருவிளையாடலைத் தொடங்கி இருக்கிறது.
நமது பொருளாதாரப் புலிகள், உற்பத்தியைக் கண்டுகொள்ளாமல்... விற்பனை விலை,
சந்தை விலையை மட்டும் கணக்கிட்டு, ஜி.டி.பி. உயர்கிறது எனச் சொல்கிறார்கள்.
ஆனால், உண்மையில் காகிதத்தில் மட்டுமே உயருகிறது பொருளாதாரம்.
புற்றுநோயின் தாக்கம் உடனடியாகத் தெரியாது. உடல் ஆரோக்கியமாக இருப்பதுபோல்
தோன்றும், நோய் முற்றிய பிறகுதான் வெளியில் தெரியும். கிட்டத்தட்ட
இந்தியாவின் பொருளாதாரமும் அப்படித்தான்.
இதன் வீரியம் வெளிப்படும்போது, கிரேக்கத்தின் நிலைக்கு இந்தியா
தள்ளப்படும். விலைவாசியை உச்சாணியில் ஏற்றி உட்கார வைத்துவிட்டு, உற்பத்தி,
விளைச்சல் சரிந்தாலும் 'நாடு வளர்கிறது' என்று கூசாமல் பொய்
சொல்கிறார்கள். ஒரு நாட்டின் பொருளாதாரம் கோபுரம் போன்றது. உற்பத்திப்
பொருளாதாரம் அதன் அடித்தளத்தைப் போன்றது. உருமாற்றுப்
பொருளாதாரமும், சேவைப் பொருளாதாரமும் அதன் சிலைகளைப் போன்றவை. சிலைகளை
மட்டும் பார்த்துவிட்டு, கோபுரம் பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், அடித்தளம் கொஞ்சம் அசைந்தால்... நாட்டின் பொருளாதார கோபுரம்...
குப்பை மேடு ஆகிவிடும் என்பதை ஏனோ உணர மறுக்கிறார்கள்.
உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் இந்த சூழ்ச்சிகளை அறியாமல்,
அமெரிக்கப் புலியைப் பார்த்து சூடு போட்டு கொண்டிருக்கும் இந்தியப்
பூனைகளே... எப்போதுதான் திருந்துவீர்களோ?
This comment has been removed by the author.
ReplyDeletenice article keep it up mapu
ReplyDelete