Search This Blog

Wednesday, July 06, 2011

இன்ஜினியரிங் கவுன்சிலிங். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. ..


பெரும்பாலானவர்களின் கனவு... லட்சியம்... டார்கெட் என்றிருக்கும் இன்ஜினீயரிங் படிப்புக்கான, 2011-12 கல்வியாண்டின் கவுன்சிலிங் திருவிழா... ஜூலை 8-ம் தேதியிலிருந்து முப்பத்தைந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்க இருக்கிறது!'எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது, எந்த பிரிவில் சேர்வது, அதையெல்லாம் எப்படித் தேர்ந்தெடுப்பது, கவுன்சிலிங் விதிமுறைகள் என்னென்ன?

புரோக்கர்கள் உஷார்!  

கவுன்சிலிங் நடக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிறைய புரோக்கர்கள் வலம் வருவார்கள். தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருந்து அனுப்பப் பட்டிருக்கும் அந்த புரோக்கர்கள், பெற்றோர், மாணவர், ஆசிரியர் என்று பல போர்வைகளில் அங்கே நடமாடுவார்கள். கொஞ்சம் ஏமாந்தால், உங்களின் மனதைக் குழப்பி, அவர்கள் புரோக்கர் வேலை பார்க்கும் கல்லூரியில் உங்களை சேர வைத்துவிடு வார்கள். அவர்களுடைய வலையில் துளிகூட சிக்காமல் தப்பிப்பது மிக முக்கியம்.

 கல்லூரி பெயர்களில் கவனம்!  

அரசு நேரடியாக நடத்தும் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் நடத்தும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இன்ஜினீயரிங் படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன. இவற்றில், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் நீங்கலாக, மற்ற கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்குத்தான் அண்ணா பல்கலைக்கழகம் கவுன்சிலிங் நடத்துகிறது. 
எந்தக் கல்லூரியில் சேருவது?  
நமக்கு வழங்கப்பட்டிருக்கும் தர வரிசை எண்ணுக்கு எந்தெந்தக் கல்லூரிகள், என்னென்ன பாடப்பிரிவுகள் எல்லாம் கிடைக்கக்கூடும் என்பது போன்றவற்றை மாணவர்கள் முதலில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். கல்லூரியின் பெயர்களில் கூட மாறுபாடு இருக்கிறது என்பதால், அக்கல்லூரிக்கான 'கோட்’ நம்பரையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கவுன்சிலிங்கில் ஒரு நொடி வித்தியாசத்தில்கூட விரும்பிய கல்லூரி கைவிட்டுப் போகலாம். எனவே, குறைந்தது இருபது கல்லூரிகளையும், நான்கைந்து கோர்ஸ்களை சாய்ஸாக வைத்துக் கொண்டால், தடுமாற்றம் இருக்காது. கவுன்சிலிங்குக்கு வரும்போது கையோடு எடுத்துவரச் சொல்லப்பட்டிருக்கும் சான்றிதழ்களில் 'அட்டஸ்டேஷன்’ பெற்று, சரி பார்த்து கொண்டு செல்லத் தவறக்கூடாது. 
 ரீ-டோட்டலிங் செய்தவர்கள் கவனிக்க! 
ரீ-டோட்டலிங் மற்றும் ரீ-வேல்யூஷனுக்கு விண்ணப்பித்து கூடுதல் மார்க் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு, 'கட் ஆஃப் மார்க்’கும் கூடியிருக்கும். ஆனால், முன்கூட்டியே கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிப்பதால், பழையபடியிலான 'கட் ஆஃப் மார்க்' அடிப்படையில்தான் அவர்களுக்கும் அழைப்பு வந்திருக்கும். அதன்படி கவுன்சிலிங் சென்றால்... நல்ல கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு பறிபோகக் கூடும். எனவே, இத்தகைய மாணவர்கள், தாங்கள் புதிதாக பெற்றிருக்கும் 'கட் ஆஃப் மார்க்'குக் கான கவுன்சிலிங் நடைபெறும் தேதியை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு சில நாட்கள் முன்னதாகவே அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சென்று, அங்கே இயங்கும் இன்பர்ஃமேஷன் சென்டரில் அதிக மார்க் பெற்றிருக்கும் விவரங்களை அத்தாட்சியுடன் காண்பிக்க வேண்டும். அவர்களுடைய வழிகாட்டுதலின்படி, உரிய 'கட் ஆஃப் மார்க்' பேட்ச் மாணவர்களுடன் இணைந்து கொள்ளலாம்.
நீங்கள் மட்டுமே முடிவெடுக்க வேண்டும்!  
கவுன்சிலிங் செல்பவர்கள் முதலில் சந்திப்பது, வியூயிங் ஹால் (Viewing Hall). இங்கு ஆறு பெரிய ஸ்கிரீன்களில் சேர்க்கைக்கான இடம் இருக்கும் கல்லூரிகள் மற்றும் கோர்ஸ்கள் பற்றிய விவரங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதிலேயே 'இந்தக் கல்லூரி கிடைக்குமா..?’ என்று நாம் 'ஷார்ட் லிஸ்ட்’ செய்துகொள்ளலாம்.
அடுத்ததாக, ப்ரீத்திங் ஹால். இங்கு பெற்றோர்களும் மாணவர்களும் அழைக்கப்படுவார்கள். கவுன்சிலிங் விதிமுறைகள், நிலவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஸ்கிரீன் மூலமாக விளக்கப்படும். சர்டிஃபிகேட்டுகளை சரிபார்ப்பார்கள். பிறகு, கவுன்சிலிங்தான்.
அந்த ஹாலுக்குள் 50-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களும், ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு உதவியாளர் இருப்பார். உங்களுக்கு விருப்பமான கல்லூரி, அதன் 'கோட்’, பிரிவுக்கான பிராஞ்ச் 'கோட்’-ஐ அவரிடம் தெரிவியுங்கள். ஒருவேளை அந்தக் கல்லூரியில் இடம் தீர்ந்திருந்தது என்றால், பதற்றப்படாமல் அடுத்த சாய்ஸை சொல்லுங்கள். இப்படி இறுதியாக நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரியை, 'ஃபைனலா கோட் பண்ணிடலாமா?’ என்று உதவியாளர் கேட்பார். ஒரு முறை கல்லூரியின் கோட் மற்றும் பிராஞ்ச் கோட்-ஐ சரி பார்த்துவிட்டு, ஓ.கே சொல்லுங்கள். எந்த முடிவையும் நீங்களே எடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். யார் அவசரப்படுத்தினாலும் பதற்றப்படாமல், நிதானமாக தேர்ந்தெடுங்கள்!
கல்லூரியைத் தேர்வு செய்யுங்கள் இப்படி !  
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஏ.ஐ.சி.டி.இ) கீழ் வருகின்ற அனைத்து பொறியியல் கல்லூரிகளும் தங்களது கல்லூரியில் உள்ள பாடப் பிரிவுகள், மாணவர்கள், ஆசிரியர்கள், அவர்களின் தகுதிகள், கல்லூரியின் தேர்ச்சி விகிதம் என எல்லா விவரங்களையும் தங்கள் கல்லூரியின் வெப்சைட்டில் கட்டாயமாக வெளியிட்டிருப்பார்கள். எனவே, இணையத்தின் மூலமாக கல்லூரிகளின் தரத்தைத் தெரிந்து கொள்ளலாம். அல்லது, உங்களுக்கு விருப்பமான கல்லூரியில் ஃபைனல் இயர் படிக்கும் மாணவர்களிடம் அதன் லேப் வசதிகள், கேம்பஸ் இன்டர்வியூக்கள் போன்றவற்றை விசாரித்து தெளிவு பெறலாம்.
கட் ஆஃப் மார்க்ஸ்!  
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் கணித மதிப்பெண்களை இரண்டால் வகுக்க வேண்டும். இயற்பியல் மற்றும் வேதியியல் மதிப்பெண்களை தனித்தனியே நான்கால் வகுக்க வேண்டும். கிடைக்கும் விடைகளை கூட்டினால் வருவதே 'கட் ஆஃப் மார்க்'. இதன் அடிப்படையில்தான் தர வரிசை பட்டியல் தயாரிக்கப்படும்.
ஒரே 'கட் ஆஃப் மார்க்'கில் பலர் இருக்கும்போது, சாதி வாரியான இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னுரிமை வழங்கப்படும். அப்படியும் ஒரே 'கட் ஆஃப் மார்க்'கில் வந்தால்... மேத்ஸ், பிஸிக்ஸ் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் ஒரே 'கட் ஆஃப் மார்க்' என்றால், ஆப்ஷனல் பாடங்கள் (பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்) மூலமாகவும், அதிலும் ஒரே 'கட் ஆஃப் மார்க்'கில் இருப்பவர்கள் பிறந்த தேதி என படிப்படியாக பரிசீலிக்கப்படுவார்கள். 
நெடுஞ்செழியன்
டெக்னோ கிராட்ஸ் இண்டியா காலேஜ் ஃபைன்டர்

No comments:

Post a Comment