Search This Blog

Tuesday, November 29, 2011

டேம்- 999' (DAM 999)


தமிழக-கேரளா மாநிலங்களுக்கு இடையில் தீர்க்கப்படாதப் பிரச்னையாக கனன்று கொண்டிருக்கும் முல்லை- பெரியாறு அணை விவகாரம், அவ்வப்போது ஏதாவது ஒரு ரூபத்தில் பரபரப்பாகிவிடும். தற்போது, 'டேம்- 999' (DAM  999) என்கிற திரைப்பட வடிவில் பூதம் கிளம்பிவிட்டது.கேரளப் பகுதியில் அணை கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பதால், அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தரப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் இருக்கிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இதை ஏற்க மறுத்து, உரிய அளவுக்கு அணையில் தண்ணீரை தேக்க மறுத்து வருகிறது கேரளா. பழைய அணையை உடைத்துவிட்டால், தமிழகத்துடனான ஒப்பந்தம் காலாவதியாகிவிடும் என்று கணக்குப் போட்டு, 'அணை பலகீனமாக இருக்கிறது. அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்டப் போகிறோம்' என தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறது. விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்று, 'அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும்கூட, அதை ஏற்க மறுத்து அடம் பிடித்து வருகிறது கேரளா.

இந்நிலையில்தான்... முல்லை-பெரியாறு அணை விஷயத்தைப் பின்னணியாகக் கொண்டு, அணை உடைவது போலவும், வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் இறப்பது போலவும் பீதியூட்டும் காட்சிகளோடு 'டேம்-999’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது... தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த படத்தின் இயக்குநரான சோஹன்ராய், ''இந்தப் படத்தைப் பார்த்த பின்பு, முல்லை- பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசும் சம்மதிக்கும்'’ என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பது... விஷயத்தை மேலும் சிக்கலாக்கி வருகிறது! 

ஏன் ?

கேரளாவைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி இப்படி ஏதாவது செய்து முல்லை-பெரியாறு அணையை உடைத்து, புதிய அணை கட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் உணர்வு... தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் முதல்வர்கள், மக்கள் பிரதிநிதிகள் யாருக்குமே இல்லை. கேரள மாநிலத்தில் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து மக்கள் பிரநிதிகளும் ஒரே குரலில் பிரச்னைகளை எதிரொலிக்கிறார்கள். ஒன்றாகக் கைகோத்து பிரதமரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் இருந்து முன்னாள் முதல்வரோ... இந்நாள் முதல்வரோ... மக்கள் பிரதிநிதிகளோ... இதுவரை யாருமே இப்பிரச்னை தொடர்பாக பிரதமரைச் சந்தித்து பேசவில்லை.  மார்க்சிஸ்ட் கட்சியின் அச்சுதானந்தன் கடந்த காலத்தில் முதல்வராக இருந்தபோது, அணை உடைந்து மக்கள் பலியாவது போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஒரு சி.டி-யை கேரளா அரசின் இணையதளத்தில் வெளியிட வைத்தார். கேரள மக்களிடமும் அது வினியோகிக்கப்பட்டது. இப்போது டேம்-999 படத்தை இயக்கியிருக்கும் சோஹன்ராய்தான் அந்தப் படத்தையும் எடுத்திருந்தார். அப்போதே தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், அரபு நாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த பணக்காரர்களின் உதவியுடன் 'டேம்-999’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். 999 என்பது... முல்லை-பெரியாறு அணை கட்டப்பட்டபோது, கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே எழுதப்பட்ட 999 வருட ஒப்பந்தத்தைக் குறிக்கும் எண். இதிலிருந்தே இந்தப் படத்தின் நோக்கம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.


1 comment: