Search This Blog

Friday, July 01, 2011

எய்ட்ஸ் இல்லா இந்தியா எப்போது?

லக அளவிலான எய்ட்ஸ் பாதிப்பு தர வரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு, 10-வது இடம். 95,000 இளைஞர்கள் இந்தியா வில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்கிறது ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை.''பாலியல் தொழிலாளர்களுக்கும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும்தான் எய்ட்ஸ் வரும் என்பது தவறு. 25 வயதுக்குக் கீழ் உள்ள எந்த இளைஞரும் இந்த அபாய வளையத்துக்குள் வரக்கூடிய வாய்ப்புஉள்ளது. விடலைப் பருவத்தில் ஓர் இளைஞனுக்குத் தன் உடல் குறித்த சந்தேகங்களைக் குடும்பத்தில் யாருடனும் ஆலோசிக்க முடியாத சூழலில், அரைகுறை புரிதல் உடைய தன் நண்பர்களுடன் இது தொடர்பாக ஆலோசிக்கும்போதுதான் தவறு களுக்கான தாழ்ப்பாள் திறக்கிறது. பள்ளிப் பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்த்தல், பாலியல் தொழிலாளர்களையும், திருநங்கைகளையும், ஆண்-ஆண் உறவு கொள்பவர்களையும் அரவணைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துதல் இவைதான் எய்ட்ஸ் பாதிப்புகளைக் குறைப்பதற்கான வழிகள். இதேபோல, திருமணத்துக்கு முந்தைய 'ஹெச்.ஐ.வி. வாலன்டரி டெஸ்டிங்’ ரத்தப் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது'' என்கிறார் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் இணை இயக்குநர் (தகவல், கல்வி மற்றும் தொடர்பு) அலெக்ஸ் பரிமளம்.

ஐ.நா. அறிக்கையின் இன்னோர் அதிர்ச்சியான அம்சம்... பாதிக்கப்பட்ட இள வயதினரில் 46,000 பேர் பெண்கள். ''பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிய, ஒன்றிரண்டு வழிகள்தான் இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களிடம் செய்யப்படும் எய்ட்ஸ் பரிசோதனை இதில் பிரதானமானது. இந்த வகை பரிசோத னையால் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையை எய்ட்ஸ் நோய்த் தொற்றில் இருந்து ஒரு பெண்ணால் தடுக்க முடியும். ஆனால், யாரையும் கட்டாயப்படுத்த முடியாதே?

பள்ளி, கல்லூரிகளில் எய்ட்ஸ் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்கிறார்கள். ஆனால், 'தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம்’ சார்பில் நடத்தப் பட்ட கூட்டத்தில், நமது கல்வித் துறையும் சுற்றுலாத் துறை அமைச்சகமும் பங்கேற்கவே இல்லை. பொறுப்பு வாய்ந்த அமைச்சகங்களே இப்படிப் பொறுப்பு இல்லாமல் இருப்பது நியாயமா?



தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி. எனப்படும் 'ஆன்ட்டி ரெட்ரோவைரல் தெரபி’ வழங்கப்படுகிறது. ஆனால், ஜி.ஹெச்சில் உள்ள கவுன்சிலர்களுக்கு, நோயாளிகளைப்பற்றிய விவரங்களை 'டேட்டா என்ட்ரி’ செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது. பிறகு எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை கூற இயலும்? தவிர, எய்ட்ஸ் நோய்த் தொற்று ஏற்பட்ட பெண்கள் ஒன்றாகக் கூடிக் கலந்துரையாட, சென்னை, திருவண்ணாமலை, திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ஐந்து மாவட்டங்களில் மட்டும்தான் 'டிராப்பிங் சென்டர்’கள் இருக்கின்றன. இந்த மாவட்டங்களில் மட்டும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் போதுமா?'' என்கிறார் 'பாசிட்டிவ் விமன் நெட்வொர்க்’ அமைப்பின் தேசியத் தலைவர் கௌசல்யா.

ஒவ்வொரு நாளும் 7,000 பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.  

இந்தியாவில் 'எய்ட்ஸ்’ நோய்க்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பது தொடர்பான ஆராய்ச்சி, சென்னை காச நோய் ஆய்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மையத்தின் ஆய்வுத் தலைவரான மருத்துவர் ராமநாதன் சில விஷயங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

 

''ஹெச்.ஐ.வி. வைரஸ் அவ்வப்போது தன்னைத்தானே மாற்றிக்கொள்ளும். இதை மரபணு திடீர் மாற்றம் (ஜெனிட்டிக் மியூட்டேஷன்) என்பார்கள். அதனால்தான், இந்த நோய்க்கான தடுப்பு மருந்தையோ அல்லது இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை. புதிய மருந்துக்காகப் பல ஆய்வுகள்நடக் கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் எய்ட்ஸ் குறித்த விழிப்பு உணர்வை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது'' என்கிறார் ராமநாதன்.

எய்ட்ஸ் இல்லாத நாளைய இந்தியாவே நமக்கான இந்தியா!


விகடன் 

1 comment:

  1. நல்ல படைப்பு...நண்பரே...better safe than sorry..

    ReplyDelete