காஞ்சி
மகா பெரியவாளை ஒரு மகானாக மட்டுமின்றி, தங்களின் கண்கண்ட தெய்வமாகவே
போற்றித் துதித்த பக்தர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களது வாழ்வில் பல
இக்கட்டான நேரங்களிலும், அவர்களுடைய அடுத்தகட்ட நகர்வுக்கான
தருணங்களின்போதும் தம்முடைய தீர்க்க தரிசனத்தால்- தீட்சண்யத்தால் அந்த
அன்பர்களின் பிரச்னைகளைக் களைந்ததோடு, அவர்களது வாழ்க்கையையும்
செம்மைப்படுத்தியவர் என்பதால், மகாபெரியவாமீது அவர்களுக்கெல்லாம் அதீத
அன்பு; மிதமிஞ்சிய பக்தி!'' - பரவசத்துடன் விவரித்த நீலக்கல் ராமச்சந்திர
சாஸ்திரிகள், அதற்கு உதாரணமாகச் சில சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
''அது, 1950-ஆம் ஆண்டுன்னு நினைக்கிறேன். மடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அன்பர் சுவாமிநாதனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குக் கண்ணில் குறைபாடு; பார்வை இல்லாம போச்சு! சென்னையில் இருக்கும் பிரபல கண் ஆஸ்பத்திரிகளுக்கெல்லாம் குழந்தையைக் கொண்டுபோய்க் காண்பிச்சார் சுவாமிநாதன். ஆனால், டாக்டர்கள் கைவிரிச்சுட்டாங்க. சுவாமி நாதன் மனசு ஒடிஞ்சு போயிட்டார்.
திக்கற்றவருக்குத் தெய்வம்தானே துணை! ஒருநாள்,குழந்தையை
எடுத்துக்கொண்டு நேரே மடத்துக்கு வந்துட்டார் சுவாமிநாதன். மகாபெரியவா
முன்னால் குழந்தையைக் கிடத்தி, விஷயத்தைச் சொல்லி, ''பெரியவாதான் கருணை
பண்ணணும்''னு கண்ணீர் விட்டுக் கதறினார்.
மகாபெரியவா மெள்ள அருகில் வந்து, குழந்தை யின் கண்களை
உற்றுப் பார்த்தார். கொஞ்சம் கற்கண்டு கொண்டுவரச் சொல்லி, குழந்தையில்
மார்பில் வைத்தார். குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுவதுபோல் மீண்டும் ஒரு ஆழமான
பார்வை. பிறகு, ''குழந்தையைத் தூக்கிட்டுப் போ. எல்லாம் சரியாயிடும்''
என்று கருணை பொங்க உத்தரவு தந்தார்.
சுவாமிநாதன் முகத்தில் அப்படியரு மகிழ்ச்சி! 'இனி கவலை
இல்லை. மகா பெரியவா சொல்லிட்டதால, குழந்தைக்கு நிச்சயம் பார்வை
கிடைச்சிடும். ஏதோ கர்ம வினை... அதுவும் பெரியவாளோட அனுக்கிரகப் பார்வையால்
சரியாயிடும்’ என்று மனப்பூர்வமாக நம்பினார் அவர். அந்த நம்பிக்கை
வீண்போகவில்லை. சில நாட்களிலேயே, குழந்தைக்கு மெள்ள மெள்ள பார்வை
வந்துவிட்டது.
அதன்பிறகு, சுவாமிநாதன் சென்னை- பெருங்களத்தூரில் வந்து
குடியேறினார். அவரோட குழந்தை வளர்ந்து பெரியவ ளாகி, அந்தப் பெண்ணுக்கும்
நல்ல இடத்தில் கல்யாணம் ஆகி, இப்ப சுவாமி நாதனுக்கு 'அனுராதா’ன்னு ஒரு
பேத்தி இருக்கா. எல்லாம் மகா பெரியவாளோட அனுக்கிரகம்'' என்று விவரித்து
முடித்த நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அருகிலிருந்தவரைச்
சுட்டிக்காட்டி, ''அதுசரி... இவரை உங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்கலையே,
இவர் யாரு தெரியுமா?'' எனப் பூடகமாகக் கேட்டார். அந்த அன்பரை அப்போதுதான்
கவனித்தோம். கண்களில் நீர்மல்க அமர்ந்திருந்தவர், சிறு புன்னகையுடன்
சொன்னார்: ''நான்தான் அந்தச் சுவாமிநாதன்!''
நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் தொடர்ந்தார்...
''இன்னொரு சம்பவமும் உண்டு. ஆந்திராவைச் சேர்ந்த ரெட்டியார் சமூகத்து
அன்பர் ஒருத்தர், மகாபெரியவா மீது பக்தி மிகுந்தவர். அடிக்கடி
ஸ்ரீமடத்துக்கு வருவார். அவரோட குழந்தைக்கும் பார்வை இல்லைன்னு குழந்தையைத்
தூக்கிட்டு வந்தார். அன்னிக்கு லட்சார்ச்சனை நடந்தது. கற்பூர ஆரத்தி
முடிஞ்சு, தோடகாஷ்டகம் எல்லாம் சொல்லி முடிச்சதும், மகாபெரியவாகிட்ட விஷயம்
சொல்லப்பட்டது. பெரியவா எழுந்து வந்து குழந்தையை அப்படியே கொஞ்ச நேரம்
உற்றுப் பார்த்தார். ''குழந்தையை எடுத்துண்டு போங்கோ..! எல்லாம் நல்லபடியா
ஆயிடும்''னு கை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணுவது போல் சொன்னார். வெகு
சீக்கிரமே அந்தக் குழந்தைக்கும் பார்வை கிடைச்சுது. குழந்தை வளர்ந்து
பெரியவளாகி, அவளுக்குக் கல்யாணமும் ஜாம்ஜாம்னு நடந்தது.
ரெட்டியார் மகாபெரியவாளின் அனுக்கிரகத்தால் தன்
மகளுக்குப் பார்வை கிடைச்சதை அவரே வந்து சொன்ன பிறகுதான் எங்களுக்கும்
தெரிய வந்தது. மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு பக்தர்கள் வெறுமே ஒரு
போற்றுதலா மட்டும் சொல்லிடலை. அவர் அனுக்கிரகத்தை, அருட் கடாட்சத்தை
அனுபவித்து உணர்ந்துதான் அப்படிச் சொல்லியிருக்காங்க. அவரோடு இருந்ததும்,
அவருக்குச் சேவை செய்ததும் எங்கள் பாக்கியம்!''
- பரவசத்துடன் சொல்லி நிறுத்தியவர், ஒரு கணம் கண்மூடி
யோசித்தவராகப் பேச்சைத் தொடர்ந்தார்... ''தேனம்பாக்கத்தில் மகாபெரியவாகூட
இருந்திருக்கேன். நிறையச் சொல்வார். அப்போதெல்லாம் ஒரு சிநேகிதராகத்தான்
தெரிவார். ஒரு பெரிய மடத்துக்கு அதிபதின்னு தோணாது எனக்கு. 'எனக்குப் பாடத்
தெரியும். பாடட்டுமா?’ன்னு ஒருநாள் படுத்திருக்கும்போது கேட்டார். அவர்
சங்கீதத்துல சிறந்த வேங்கடமஹி பரம்பரையில் வந்தவர் என்கிற விஷயம்
பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்தது. அதனாலதான் சங்கீதத்தின் மேல் அவருக்கு
அத்தனை ஆர்வம் இருந்திருக்கு.
ஒருமுறை, மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம்
வாசிச்சுக் கேட் கணும்னு விரும்பினார் மகாபெரியவா. இந்த விஷயம் மணி
ஐயருக்குத் தெரிய வந்ததும், உடனே புறப்பட்டு மடத்துக்கு வந்துட்டார்.
அவருக்கு மகாபெரியவா மீது அபார பக்தி! அவரை 'அபிநவ நந்தி’ன்னு சொல்வார் மகா
பெரியவா.
மடத்துக்கு வந்த மணி ஐயரிடம், 'தனி வாசி! கேட்கணும்போல
இருக்கு’ என்றார் பெரியவா. மணி ஐயர் 'தனி’ வாசிச்சார் (தனி என்பது ஒருவகை
தாள லயம்). மகாபெரியவாளும் ரசித்துக் கேட்டார். பிறகு, மணி ஐயருக்கு
ஆசீர்வாதம் பண்ணி, அவர் மனைவியை அழைத்து, உலகளந்த பெருமாள் கோயிலில்
அருளும் ஆரணவல்லித் தாயாருக்குப் பொன்தாலி செய்து சாத்தச் சொன்னார்
மகாபெரியவா. அதை உடனடியாக நிறைவேற்றினார் மணி ஐயர்.
புகழ்பெற்ற டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி, மணி ஐயருக்குச்
சிநேகிதர். ஐயர் மீது பக்தின்னு கூடச் சொல்லலாம். மகாபெரியவா மணி ஐயரைக்
கூப்பிட்டு மிருதங்கம் வாசிக்கச் சொல்லிக் கேட்டதை அறிந்து, ரொம்பவும்
வியந்து போனாராம் சி.வி.கிருஷ்ணசாமி.
பாலக்காடு மணி ஐயர் தனது 60-வது பிறந்தநாளுக்கு மகா
பெரியவாகிட்ட ஆசீர்வாதம் வாங்க வந்தார். 'நான் எந்தக் கோயிலுக்கும்
போறதில்லே. கச்சேரிக்காகப் போனாலும், தரிசனம்னு பண்ணினது இல்லை!’ என்று
உண்மையைச் சொன்னார். அப்போது மகாபெரியவா என்ன சொன்னார் தெரியுமா? 'நீ
ஆத்மார்த்தமா மிருதங்கம் வாசிக்கறதே அந்த பகவானுக்குப் பண்ற சேவைதான்.
அந்தப் புண்ணியமே உனக்கு நிறையக் கிடைச்சிருக்கு. அது போதுமே!’ என்றார்.
தன் மீது பக்தி கொண்ட அன்பர்கள்தான் என்றில்லை; வேற்று
மதத்தவர்களிடமும் ரொம்பக் கருணையும், அன்பும், அருளையும் கடாட்சித்தவர்
மகாபெரியவா'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், அதற்கு உதாரணமாக ஒரு
சம்பவத்தைச் சொன்னார்.
''காஞ்சிபுரத்தில் ஓர் அதிகாரி இருந்தார். அவர் வேற்று மதத்தவர் என்றாலும், மகாபெரியவாமீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்.
ஒருமுறை, அவரின் மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல்
போனது. வயிற்றில் ஒரு கட்டி; அதை ஆபரேஷன் செய்து அகற்றினால்தான்
உயிர்பிழைப்பார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். துக்கம் தாளாமல்,
மகாபெரியவாளைத் தரிசிக்க வந்தார் அவர். அன்று மகா பெரியவா காமாட்சியம்மன்
கோயிலில் இருந்தார். அதிகாரியும் கோயிலுக்குச் சென்றார். அங்கே சரியான
கூட்டம். பெரியவா வாயே திறக்கலை. அவர் கையில் ஏலக்காய் மாலை ஒன்று இருந்
தது. அதிகாரியை அருகில் அழைத்து, கையை நீட்டச் சொல்லி அந்த ஏலக்காய்
மாலையைக் கொடுத்துவிட்டு, கையைத் தூக்கி ஆசீர்வதித்தார்.
அதிகாரியும் நம்பிக்கையுடன் திரும்பினார். அதன்பிறகு,
மறுபடியும் தன் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அந்த அதிகாரி.
பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், 'கட்டி இருந்ததாகவே தெரியலையே?! ஆபரேஷன்
எதுவும் வேண்டாம்’ என்று கூறிவிட்டார்கள். அதிகாரிக்குத் தெரியும்... இந்த
அற்புதம் மகா பெரியவாளின் அனுக்கிரகத்தால் நிகழ்ந்தது என்று. இன்றைக்கும்
அந்த ஏலக்காய் மாலையைப் பத்திரமாக வைத்திருக்கிறார் அந்த அதிகாரி.
ஒருமுறை, அவரின் மகனுக்கு பரீட்சை ரிசல்ட் வந்தது.
பேப்பர்ல தன்னோட நம்பரை சரியா பார்க்காம, ஃபெயிலாயிட்டோம்னு நினைச்சு,
வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டான். அவனை எங்கு தேடியும்
கிடைக்கவில்லை. அப்போதும் மகாபெரியவாளிடமே வந்து சரணடைந்தார் அந்த அதிகாரி.
'பையன் கிடைச்சுடுவான். கவலைப்படாதே!’ என்று அருளினார் மகா பெரியவா. பையன்
எங்கேயெல்லாமோ சுத்திவிட்டு, மூணு மாசம் கழிச்சு வீடு வந்து சேர்ந்தான்.
அதிகாரிக்குச் சந்தோஷம் தாளலை. ஓடி வந்து மகா பெரியவாகிட்ட விஷயத்தைச்
சொல்லி, கண்கள் கசிய வணங்கிச் சென்றார். பரீட்சையில் அவன் நல்ல மதிப்பெண்
எடுத்துத் தேர்ச்சி பெற்றிருந்தது கூடுதல் சந்தோஷம்!
மகா பெரியவாளின் பரிபூர்ண அனுக்கிரகம் இருந்தா போதும்.. எல்லாம் நல்லதாகவே முடியும்.''
No comments:
Post a Comment