Search This Blog

Monday, April 22, 2013

ஓ பக்கங்கள் - திருப்பிக் கட்ட முடியுமா? ஞாநி

 
உலகின் பிரும்மாண்டமான இந்துக் கோயில் வளாகங்கள் எனப்படும் அங்கோர் வாட் சரித்திர பூமிக்கு சிங்கப்பூர் நண்பர் சரவணனுடன் சென்று மூன்று நாட்களை அங்கே கழித்தேன். கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்கள் சிவன், விஷ்ணு கோயில்களாகத் தொடங்கி பௌத்த கோயில்களாக மாறி சில நூறு வருடங்களிலேயே சிதிலமடைந்து, சிற்பங்கள் மேலைநாட்டினரால் கொள்ளையடிக்கப்பட்டு, பின் தொடர்ந்து நடந்த பல்வேறு யுத்தங்களால் கவனிப்பாரற்று மேலும் பாழாயின. சுமார் இருபது முப்பது வருடங்களாகத்தான் இந்தக் கோயில்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் நிதி உதவியுடன் யுனெஸ்கோ வழிகாட்டுதலில் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன.அடர்ந்த மரச் சோலைகளின் நடுவே இருக்கும் அகழிகளும் கோட்டைச் சுவர்களுமாக இருக்கும் இந்தக் கோயில் இடிபாடுகளில் கம்போடிய சமூகத்தின் ஒரு காலத்தைய வளமும் செழிப்பும் கலைத் திறனும் பளிச்சிடுவதைப் போலவே, கோயில் வளாகத்திலும், வெளியே சியாம் ரீப் நகரின் ஒவ்வொரு சந்திலும் மூலையிலும் கடைத்தெருவிலும் கம்போடியாவின் இன்றைய கொடூரமான ஏழைமை முகத்தில் அறைகிறது. ஆஸ்திரேலியா முதல் கனடா வரையிலான சுற்றுலாப் பயணிகள் இடிந்த இந்து/பௌத்த கோயில்களைக் காண வரவில்லையென்றால் இந்த நகரம் முழுக்க செத்துப் போய்விடும். உள்ளூரில் எதற்கும் கம்போடிய ரியாலை யாரும் விரும்புவதில்லை. அமெரிக்க டாலர் மட்டுமே பெரிதும் புழங்குகிறது. ஒரு டாலருக்கு நான்காயிரம் ரியால்! கம்போடியாவில் எந்தப் பெரும் தொழில் உற்பத்தியும் இல்லை. ஓடும் எல்லா கார்களும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. நகரத்தில் பஸ் வசதியே கிடையாது. மொய்ப்பெடுக்குப் பின்னால் டிராக்டர் டிரெலர் போல சீட் வைத்த இணைப்பைக் கட்டிக் கொண்டு டுக்டுக் எனப்படும் ஆட்டோக்கள் மட்டுமே ஓடுகின்றன. 90 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பியே இருக்கிறார்கள். எல்லாரும் டூரிஸ்டுகளை நம்பி இருக்கிறார்கள். 
 
கடும் வெயிலில் கோயில் இடிபாடுகளைப் பல கிலோமீட்டர் நடந்து நடந்து சுற்றிப் பார்த்தபோது அவை என்னைக் கவர்ந்ததை விட, அதிகமாக என் கவனத்தை ஈர்த்தது வேறொன்றுதான். கோயில் வளாகத்துக்குள் பல்வேறு கம்போடிய இசைக் கருவிகளை உட்கார்ந்து இசைத்தபடி, டூரிஸ்டுகளிடம் மௌனமாகப் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த குழு ஒன்றைப் பார்த்தேன். அன்றிரவு நகரத்துக்குள் டூரிஸ்டுகள் அதிகம் புழங்கும் பப் ஸ்ட்ரீட், நைட் மார்க்கெட் பகுதியில் நடுத்தெருவில் இதே போன்ற இன்னொரு குழுவைப் பார்த்தேன்.  இந்த இசைக் குழுக்களில் இருப்போர் பலரும் கம்போடியாவில் சுமார் 30 வருடங்கள் அமெரிக்க, ரஷ்ய, சீன ஆயுத உதவியுடன் வெவ்வேறு இயக்கங்கள் நடத்திய யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் எல்லோரையும் பாதித்தது யுத்தத்தின் ஒரே அம்சம் தான். பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள். சண்டையிடும் எதிரெதிர் அணிகள் இன்னொரு அணி தம்மை நெருங்கவிடாமல் தடுக்க மாறிமாறி நிலமெங்கும் கண்ணிவெடிகளைப் புதைத்திருக்கின்றன. சண்டை முடிந்தாலும், கண்ணிவெடிகளை அகற்றும் வேலை முடியவில்லை. எங்கெல்லாம் கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிப்பது சுலபமல்ல. அரசாங்கத்தின் ராணுவங்கள் கண்ணி வெடியைப் புதைக்கும்போதே அதைப் பற்றிய வரைபடம் தயாரித்துக் கொள்ள வேண்டும். கெரில்லா அமைப்புகளும் வரைபடம் வைத்திருப்பதுண்டு. ஆனால் பெரும்பாலான சமயங்களில் இரு தரப்பினரின் பாசறைகளும் தளவாடங்களும் அழிக்கப்படும்போது இந்த வரைபடங்களும் அழிந்துவிடும். ராணுவத்தின் வரைபடத்தின் பிரதி வேறு நகரில் தலைமையகத்தில் இருக்கும் வாய்ப்பு உண்டு. போராளி அமைப்புகள் அழியும் போது எல்லாத் தகவல்களும் சேர்ந்தே அழியும் வாய்ப்பே அதிகம்.இந்தக் கண்ணிவெடிகள் எங்கெங்கே இருக்கின்றன என்று தெரியாமல் காலை வைத்து உறுப்புகளை இழந்து நடைப்பிணங்களாக வாழ்வோர் நிலை மிக பரிதாபகரமானது. கம்போடியாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்படி கை கால் இழந்தவர்களாக உள்ளனர். அவர்களில் சிலர்தான் பாட்டு பாடி டூரிஸ்டுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். 
 
கண்ணி வெடி விபத்தில் பாதிக்கப்படுவோருக்கான நியாயத்தை யாரிடமும் போய் கேட்கமுடியாது. போரில் பாலச்சந்திரன் போன்ற குழந்தைகளை சுட்டுக் கொன்றதற்காக இலங்கை ராணுவத்தைப் போர் குற்றவாளியாக கூண்டில் நிறுத்த வாய்ப்பாவது இருக்கிறது. ஆனால் கண்ணிவெடி விபத்தில் கை கால் இழந்த சிறுவர்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு என்று எந்தத் தரப்பையும் தனியே அடையாளம் காட்ட முடியாது. (இந்த வாசகத்தைத்தான் கண்ணி வெடி பாதிப்புக்குள்ளானோருக்கான இணையதளம் ஒரு சிறுவன் படத்துடன் சொல்கிறது: இந்தச் சிறுவன் வேறுவிதமாக இந்த நிலைக்கு ஆளாகியிருந்தால் அதற்கு யாரையாவது பொறுப்பாக்க முடியும். ஆனால் கண்ணிவெடியில் பாதிக்கப்பட்டால், அதற்குப் பொறுப்பு என்று யாரையும் நீதிக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி நியாயம் கேட்க இயலாது.)கம்போடியாவில் கண்ணிவெடியில் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்கள்தான். சுமார் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கே காட்டில் சுள்ளி பொறுக்கச் செல்பவர்களும், வியட்நாம் யுத்தத்தின் போதும் உள்ளூர் யுத்தத்தின் போதும் போடப்பட்ட குண்டுகளின் உலோகக் கவசங்களைப் பொறுக்கிக் கொண்டு வந்து விற்றுப் பிழைக்கச் செல்வோரும் கண்ணிவெடியாலும் இன்னும் வெடிக்காமல் இருக்கும் சில க்ளஸ்ட்டர் குண்டுகளாலும் உயிரையும் உறுப்புகளையும் இழக்கிறார்கள்.பெருமளவில் கம்போடியாவில் கண்ணி வெடிகளும் குண்டுகளும் வயல்களிலிருந்தும் நிலங்களிலிருந்தும் கடந்த பத்தாண்டுகளில் அகற்றப்பட்டாலும் இன்னும் சுமார் 60 லட்சம் கண்ணிவெடிகள் இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்கள். கண்ணிவெடியை அகற்றுவது எளிதானதும் மலிவானதும் அல்ல. ஒரு கண்ணிவெடியைப் புதைக்க ஆகும் செலவு வெறும் மூன்று டாலர்தான். அகற்றுவதற்கு ஒரு வெடிக்கு சுமார் 1200 டாலர் செலவு ஆகிறது. வருடந்தோறும் சுமார் மூன்று கோடி டாலர் கண்ணிவெடி அகற்ற மட்டும் உலக நாடுகளின் நன்கொடை மூலம் செலவிடப்படுகிறது. இதே நிதி உதவி நீடித்தால், மொத்த கண்ணிவெடிகளையும் அகற்றி முடிக்க 15 முதல் 20 வருடம் ஆகும் என்கிறார்கள். அதுவரை அந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியாது. கம்போடியாவில் கண்ணிவெடி வைத்தவரே கண்ணிவெடிக்கு எதிராக இயக்கம் நடத்தி செயல்பட்டு வருகிறார். அவர் பெயர் அக்கிரே. ஆறு வயதில் அவர் பெற்றோர் கெமர் ரௌஜ் எனப்படும் இடதுசாரி தீவிரவாதப் போராளி அமைப்பால் கொல்லப்பட்டனர். அவரை அமைப்பே எடுத்து வளர்த்தது. பத்து வயதிலேயே அந்த அமைப்பின் போர் வீரராக்கப்பட்டார் ரே. பின்னர் 16 வயதில் எதிரிகளான வியட்நாம் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டதும், அந்த ராணுவத்தின் படை வீரராக்கப்பட்டார். இப்படி குழந்தைச் சிப்பாயாக இருந்தது முதல் யுத்தம் முடியும்வரை ரே தானே ஆயிரக்கணக்கான கண்ணி வெடிகளைப் புதைத்திருக்கிறார். தொண்ணூறுகளின் இறுதியில் யுத்தம் ஓய்ந்ததும், ரே கண்ணிவெடிகளுக்கு எதிரானவராகவும் யுத்த எதிர்ப்பாளராகவும் மாறி இதுவரை 50 ஆயிரம் கண்ணிவெடிகளை தாமே அகற்றியிருக்கிறார். 
 
தானே எந்த நவீன உபகரணமும் இல்லாமல், வெறும் குச்சிகளை வைத்துக் கொண்டு வெடி இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அகற்றும் திறமையுடையவர் ரே.உலகம் முழுவதும் கண்ணிவெடி அகற்றலில் ஈடுபடும் அமைப்புகள் அவருக்கு இதற்கான நவீனப் பயிற்சி கொடுத்து தொடர்ந்து அவரைப் பயன்படுத்துகின்றன. ரேவை சி.என்.என். டி.வி. 2010ன் தலைசிறந்த மனிதராக அறிவித்தது. அவர் வாழ்க்கை இப்போது ஒரு படமாக்கப்பட்டு வருகிறது.அக்கி ரே கண்ணிவெடி ஆபத்து பற்றி விளக்குவதற்கென்றே ஒரு தனி மியூசியத்தை சியாம் ரீப் நகரில் வைத்துள்ளார். அங்கே சென்று சுற்றிப் பார்த்தேன். அதில் சொல்லும் தகவல்கள் எல்லாம் பெரும் கவலை அளிக்கின்றன. உலகம் முழுவதும் கண்ணி வெடிகளை இனி வைக்கக்கூடாது, முழுக்க நீக்கிவிட வேண்டும் என்று ஐ.நா. மூலம் கனடா ஒட்டாவா நகரில் ஒப்பந்தம் 1997ல் போடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு 167 நாடுகள் கையெழுத்திட்டன. இவை தம்மிடம் உள்ள கண்ணிவெடிகளை எல்லாம் அழித்துவிட ஒப்புக் கொண்டன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பல்வேறு ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, இன்னும் பல சிறு நாடுகள் இவை.கையெழுத்துப் போட மறுக்கும் நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, சீனா, ரஷ்யா, கியூபா, இஸ்ரேல், ஐக்கிய அரபு நாடு, பாகிஸ்தான்........ இந்தியா! இன்னும் கண்ணிவெடிகள் தயாரித்து விற்கும் மிகச் சில நாடுகளில் ஒன்று இந்தியா! இந்தியன் என்பதற்காக நான் வெட்கப்படும் விஷயங்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.கம்போடியாவிலிருந்து திரும்பும் வழியெல்லாம் என் மனம் இலங்கையைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. அக்கி ரே போல அங்கிருந்து யாரேனும் வெளிப்பட்டு வருவார்களா? யாழ்ப் பாணமும் கிழக்கும் வன்னியும் இன்னமும் கண்ணி வெடிகளால் நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக வன்னியின் செழுமையான வயல்களில் வேளாண்மை செய்யவே முடியாதபடி அவற்றில் நாற்றுக்கு பதிலாக கண்ணிவெடிகளை விடுதலைப்புலிகளும் சிங்கள ராணுவமும் விதைத்து வைத்திருக்கிறார்கள். 
 
மண்ணில் விழுந்தால் மறுபடி விதையாக முளைப்போம் என்பது கண்ணிவெடிக்குப் பொருந்தாது. மண்ணில் நடப்போரை சவமாக ஆக்கும் விதை அது. மொத்தம் 640 கிராமங்கள் கண்ணி வெடி களால் வீணாக்கப்பட்டுக் கிடக்கின்றன. முப்பது வருடங்களில் கண்ணிவெடிகளால் மட்டும் சுமார் 20 ஆயிரம் சிங்கள ராணுவத்தினரும் 12 ஆயிரம் விடுதலைப்புலிகளும் பாதிக்கப்பட்டதாக ஒரு கணக்கு சொல்கிறது. கடந்த 4 வருடங்களில் மட்டும் சுமார் 900 கோடி இலங்கைப் பணம் (சுமார் 180 கோடி இந்திய ரூபாய்) கண்ணிவெடி அகற்ற செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இன்னும் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பகுதிதான் பாக்கி என்றும் 90 சதவிகித கண்ணி வெடிகளை அகற்றியாகிவிட்டது என்றும் அரசு சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை என்று தொண்டு நிறுவனங்கள் சொல்கின்றன. சரியான கணக்குகள் எதற்கும் கிடையாது. தமிழர் பகுதிகளில் இன்னும் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமலே இருக்கிறது என்கிறார்கள்.  கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தமிழர் விதவைப் பெண்கள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். மாதக் கூலி 200 டாலர் (சுமார் 2500 இலங்கை ரூபாய்). இந்த வேலையும் இல்லாவிட்டால், இந்தப் பெண்கள் இன்னும் கோரமான வறுமையில் துயரப்படுவார்கள். முதலில் இயந்திரம் மேல் மண்ணை அகற்றும். பின்னர் மூன்றடிக்கு மூன்றடி சதுரத்தில் பெண் கூலிகள் ஆறு அங்குல ஆழம் வரை தோண்ட வேண்டும். கண்ணிவெடியின் தலை தெரிந்ததும், தோண்டுவதை நிறுத்தி ராணுவ வீரரிடம் சொன்னால் அவர்கள் அடுத்து வந்து அதை அகற்றுவார்கள். கம்போடியா பற்றி அறியும் எவரும் இலங்கைத் தமிழர்களை மறுபடியும் ஆயுதம் எடுத்து யுத்தம் நடத்தும்படி ஒருபோதும் தூண்டமாட்டார்கள். அப்படிச் செய்தால் அவர்களுடைய மனித நேயத்தையும் இன உணர்வையும் நான் நிச்சயம் நம்பமாட்டேன். யுத்தம் எதற்கும் தீர்வல்ல. அது தீர்த்துக் கட்டுவது மனிதர்களின் வாழ்க்கையை மட்டும்தான். 
 
இடிந்த அங்கோர் வாட் கோயில்களை திரும்பக் கட்டி விடமுடியும். ஆனால் சிதைந்த வாழ்க்கைகளை - அது தமிழரானாலும் சிங்களவரானாலும், கம்போடியரானாலும், வியட்நாமியரானாலும் ஒருபோதும் நம்மால் திருப்பிக் கட்டவே முடியாது.

No comments:

Post a Comment