ஐ.பி.எல்.லில், பல கிரிக்கெட் வீரர்களின் நிலைமை பரிதாபமானது. ஒவ்வொரு
வருடமும் அணி மாறிக் கொண்டே இருக்க வேண்டும். இதனால் சரியான வாய்ப்புகளும்
கிடைக்காது. மரியாதையும் காற்றில் பறந்துவிடும்.
இப்படிப்பட்ட சூழலிலும் 2013 ஐ.பி.எல்.லில், தினேஷ் கார்த்திக், அமித்
மிஸ்ரா ஆகிய இருவரும் தங்களை வலுவாக நிரூபித்திருக்கிறார்கள்.
கார்த்திக்கின் திறமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கூட உணரவில்லை. முதலில்
தில்லி அணிக்காக ஆடினார். மூன்று வருடங்களுக்குப் பிறகு அணியிலிருந்து
நீக்கப்பட்டார். 2011ல் நடந்த ஏலத்தில் ரூ. 4.77 கோடிக்கு கார்த்திக்கை
விலைக்கு
வாங்கியது பஞ்சாப். ஆனால், அடுத்த வருடமே மும்பை அணிக்கு டிரான்ஸ்ஃபர்
செய்துவிட்டது. (ரூ. 12.4 கோடிக்கு என்று சொல்லப்படுகிறது.) அப்போது,
மும்பை அணி சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாறிக்
கொண்டிருந்தது. கார்த்திக் உள்ளே நுழைந்தவுடன் மும்பை அணி பீமபலம்
கொண்டதாகிவிட்டது. சச்சின் அணியில் கார்த்திக் மிக மரியாதையுடன்
நடத்தப்பட்டார். இந்த ஐ.பி.எல்.லில் மூன்றாவதாகக் களம் இறங்க
அனுமதியளிக்கப்பட்டது. அவ்வளவுதான், கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டார்.
இவருடையது நீண்ட நெடிய பயணம். ராகுல் டிராவிட் இனி விக்கெட் கீப்பராக
நீடிக்க வேண்டாம் என்று பி.சி.சி.ஐ. முடிவெடுத்தபோது இந்திய அணிக்குத்
தேர்வானவர், தினேஷ் கார்த்திக். ஆனால் அந்தச் சந்தோஷம் நீண்டநாள்
நீடிக்கவில்லை.
புயல் மாதிரி இந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைந்து பல விக்கெட் கீப்பர்களின்
வாழ்வை மாற்றினார் மகேந்திரசிங் தோனி. இதனால், தோனி ஓய்வு எடுக்கும்
நேரத்தில்தான் கார்த்திக், பர்தீவ் படேல் போன்ற மற்ற விக்கெட்
கீப்பர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும், கார்த்திக் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை. பேட்ஸ் மேனாக
இந்திய அணிக்குள் நுழைந்தார். 2007 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு ஷேவாக்
அணியிலிருந்து நீக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக்
அவர் இடத்தைப் பிடித்தார். கார்த்திக்கின் பெரிய சாதனை, இங்கிலாந்தில்
நடந்த டெஸ்ட் தொடரில் வெற்றிகரமான தொடக்க ஆட்டக்காரராக சாதித்தது. சமகால
இந்திய ஓபனர்களில் யாருக்கும் இல்லாத
பெருமை இது. அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெல்ல கார்த்திக்கின்
பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனாலும், சிறிது சறுக்கினாலும் அணியிலிருந்து
அடிக்கடி நீக்கப்பட்டதால் கார்த்திக்கின் அருமையை யாருமே உணர முடியாமல்
போய்விட்டது. கூடவே கார்த்திக்கின்
கீப்பிங் தொடர்பாக நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அதிர்ஷ்டத்துக்காக தன்
பெயரில் கூடுதலாக a, c ஆகிய எழுத்துகளைச் சேர்த்துப் பார்த்தார். எதுவுமே
கைகூடவில்லை. நிரூபிக்க வாய்ப்புக் கிடைத்த ஐ.பி.எல்.லிலும் நிரந்தரமாக
ஓர் அணியில் நீடிக்க
முடியாமல் போனது. விளைவு, இந்திய கிரிக்கெட்டின் எந்தவொரு திட்டத்திலும்
இல்லாமல் போனார்.
இந்த ஐ.பி.எல்., கார்த்திக்கின் ஐ.பி.எல். கார்த்திக்கின் ஆட்டம் fearless
cricket என்பதையொட்டி இருந்தது. அதாவது, தன்னுடைய அணி எந்தச் சூழலில்
இருந்தாலும், எதிரணிக்கு அடுத்த வாய்ப்பை அளிக்காமல், இன்னும்
சொல்லப்போனால், அவர்களுடைய ஆதிக்கத்தைத் தன் ஆட்டத்தால் நொறுக்க வேண்டும்.
ரிச்சர்ட்ஸின் ஆட்டம் எப்போதும் இப்படித்தான். 1996 செமி ஃபைனலில்
இந்தியாவுக்கு எதிராக அர்விந்த் டிசில்வா ஆடியதும்
fearless cricket தான். கடந்த ஒரு வருடத்தில், தன்னுடைய ஆட்டத்தையும் அணுகு
முறையையும் வெகுவாக மாற்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜாம்பவான்கள்
உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியில், டாப் ஸ்கோரராக இருப்பது அவ்வளவு எளிதல்ல.
இப்போது, தன் கீப்பிங்கிலும் நிறைய மாற்றம் செய்திருக்கிறார். ‘ஆனால், அதை
நிரூபிக்க முடியாமல் இருக்கிறேன்,’ என்கிறார் கார்த்திக். ‘விக்கெட்
கீப்பிங்கில் தவறு செய்யாமல் இருப்பதற்காக நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
ஒரு பேட்ஸ்மேன் தாம்
செய்த தவறுகளைத் திருத்திக் கொண்டதை நிரூபிக்க முடியும். ஆனால், விக்கெட்
கீப்பிங்கில் என்னுடைய முன்னேற்றத்தைக் காண்பிப்பது சிரமம். அதை மற்றவர்கள்
உணர்வது சுலபமல்ல’ என்கிறார். சச்சின், பாண்டிங், ரோஹித் சர்மா,
பொலார்ட் உள்ள ஓர் அணியில் நிகரற்ற நட்சத்திரமாகத் திகழ்வது மிகக்கடினம்.
கார்த்திக் அதைச் சாதித்திருக்கிறார்.
அமித் மிஸ்ரா:
அடுத்த கும்ப்ளேவாக வளர்ந்திருக்க வேண்டியவர். முதல் டெஸ்டிலேயே 5
விக்கெட்டுகள் எடுத்தவர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எங்கே அமித்
மிஸ்ரா என்று தேட வேண்டிய நிலைமை. இப்போது, மிஸ்ராவுக்கும் இந்த ஐ.பி.எல்.
பெரிய திருப்புமுனை.
மிஸ்ரா, முதலில் தில்லி அணியில் ஆடினார். பிறகு, டெக்கான் ஹைதராபாத்
அணிக்கு மாறினார். இப்போது புதிய ஹைதராபாத் அணியான சன் ரைஸர்ஸின்
மிகப்பெரிய பலமாக விளங்குகிறார். 2008, 2011ல் ஐ.பி.எல். ஹாட்ட்ரிக் எடுத்த
மிஸ்ரா, இந்த ஆண்டும் இன்னொரு ஹாட்ட்ரிக் எடுத்திருக்கிறார்.
ஐ.பி.எல்.லில், மூன்று முறை இந்தச் சாதனையை யாரும் செய்ததில்லை.
மிஸ்ராவுக்கு 30 வயதாகிவிட்டது. மிகக் குறைந்த டெஸ்ட் (13) மற்றும்
ஒருநாள் ஆட்டங்களில்தான் (15) ஆடியிருக்கிறார். 2003ல் இந்திய அணி ஒருநாள்
அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதிலிருந்து வாழ்வா சாவா நிலைமைதான். முதல் டெஸ்டிலேயே தன்னை
நிரூபித்தாலும், அடிக்கடி அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால்
பாதிப்புக்குள்ளானார். ஆனால், ஐ.பி.எல்.லில் தொடர்ந்து தம்மை
நிரூபித்துக் கொண்டிருந்தார். இந்த வருட ரஞ்சிப் போட்டியில் பேட்டிங்,
பௌலிங் இரண்டிலும் பிரமாதப் படுத்திவிட்டார். ஒரு டபுள் செஞ்சுரி உள்பட.
இதனால், சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுடனான ஒரு நாள்
தொடரில் தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல். லில், கூக்ளி, டாப் ஸ்பின்,
ஃப்ளிப்பர் என்று விதவிதமாகப் பந்து வீசி எதிரணியினரைத் திணறடித்து
வருகிறார்.
இந்திய அணியில் அஸ்வின், ஓஹா, ஜடேஜா என்கிற வலுவான ஸ்பின் கூட்டணி
அமைந்த பிறகும் முட்டிமோதுகிறார் மிஸ்ரா. கும்ப்ளேவுக்குப் பிறகு இந்திய
அணியில் நல்ல லெக் ஸ்பின்னர் இல்லை. இந்தக் குறையை
மிஸ்ராதான் தீர்க்கவேண்டும்.
ஐ.பி.எல்.லுக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி
போட்டிக்கு தினேஷ் கார்த்திக்கும் அமித் மிஸ்ராவும் கட்டாயம் சேர்க்கப்பட
வேண்டும்.
No comments:
Post a Comment