Search This Blog

Friday, April 05, 2013

அருள்வாக்கு - மனஸை அடக்கு!

‘ஆத்மா மனஸுக்கு அப்பாற்பட்டது; மனஸோடு ஸம்பந்தப்படாமல் வெறுமே தானாக இருந்து கொண்டிருப்பது’ என்று சொல்லிவிட்டு, ‘மனஸை இழுத்து அடக்கி ஆத்மாவிடம் வசப்படுத்து’ என்றும் சொன்னால் என்ன அர்த்தம்? மனோதீதமான, நிஷ்க்ரியமான (கார்யம் செய்யாததான) ஆத்மா மனஸை எப்படித் தன்வசத்தில் வைத்துக் கொள்ளும்?

ஸரி, மனஸுக்கு ஆத்மா அப்பாற்பட்டதுதான், அதற்குக் கார்யமும் இல்லைதான். ஆனாலும், நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத மாயையால் இதே ஆத்மாதான் மனஸுக்கும் ஆதாரமாய் நிற்கிறது; அது இல்லாவிட்டால் மனஸால் ஒரு கார்யமும் பண்ண முடியாது என்றும் இப்படி மாயையால் ஆத்மாதான் மனஸ் என்று ஒன்றை அவிழ்த்து விட்டு, அது வெளியிலே ஓடிக் கொண்டிருப்பதற்கும் சக்தி தருகிறது என்றால், அவிழ்த்து விட்டதைத் தனக்குள்ளேயே எப்படியோ இழுத்துக் கரைத்துக் கொண்டு விடும் என்பதையும் ஏற்க வேண்டியது தானே?

‘மனஸை அடக்கி ஆத்மாகிட்டே வசப்படுத்து’ என்றவுடன் ஆத்மாவிலே மனஸ் எப்படி ஸம்பந்தப்படும் என்று கேட்கிறவர்கள், இன்னொன்றும் யோசித்துப் பார்க்கணும். ‘மனஸை அடக்கு,’ ‘மனஸை இழு’ என்றெல்லாம் சொல்வது மட்டும் எப்படி ஸாத்யம் என்று யோசித்துப் பார்க்கணும். அஞ்ஞான தசையிலுள்ள ஜீவனுக்குத்தான் இந்த உபதேசமெல்லாம். ஞானமடைந்து விட்டவனுக்கு உபதேசம் எதற்கு? அஞ்ஞான தசையில் உள்ள ஜீவத் தன்மைக்கே மனஸ் தான் காரணம். மனஸுக்கு மேற்பட்டதாக அஞ்ஞான ஜீவனிடம் எதுவும் கிடையாது. அப்படியிருக்கும் போது, ‘மனஸை இழு, அடக்கு’ என்றால், எதைக் கொண்டு ஜீவன் இதைப் பண்ண முடியும்? அவனிடம் உள்ள ஸர்வமுமே மனஸ்தான் என்றிருக்க, அதை வேறு எதனால் அவன் உள்ளே இழுக்கவோ அடக்கவோ முடியும்? மனஸ்தான் அவனுக்காக எல்லாம் பண்ணுவதும், அவனையே ஆட்டிப்படைத்து எல்லாம் செய்யப் பண்ணுவதும்.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment