Search This Blog

Tuesday, April 23, 2013

எனது இந்தியா (மொகலாய ஓவியங்கள் !) - எஸ். ரா

 

நோவாவின் கப்பலில் மிருகங்கள் ஏற்றப்​பட்டது என்பதை விவரிக்கும் மொகலாய ஓவியம் ஒன்று இருக்கிறது. ஜெசுவிட்டுகளின் வருகையால் கிறிஸ்தவ கருத்தாக்கங்கள் சில நுண்ணோவியமாக வரையப்பட்டு இருக்கின்றன. அவற்றில் இந்த ஓவியம் முக்கியமானது. அக்பர் நாமா ஓவியத் தொகுப்பில் உள்ள மிஸ்கின் வரைந்த இந்த ஓவியத்தில் முதலைகள் வாய் திறந்து நிற்கின்றன. யானை, ஒட்டகம், மான் என பல்வேறு கப்பலில் ஏற்றப்பட்ட மிருகங்களின் சாந்த நிலையும் முகபாவங்களும் ஆகச்சிறப்பாக உள்ளது. கப்பலின் வடிவமும் அதன்  அடுக்கு நிலைகளும் அதை ஓட்டுகின்றவன், திரைப்பானை இறக்கி விடுபவர்கள், கீழே விழுந்த ஒருவரை காப்பாற்ற முயற்சிப்பவர்கள் என்று எத்தனை நிலைகள். அத்துடன், படகில் முன்னும் பின்னும் வரும் முதலைகள், மீன்கள். தூரத்து பறவைகள், அலைபாயும் கடல் என்று ஓவியம் முழுமையாக இருக்கிறது. இதிலும் உருவங்களின் சமநிலையும் வண்ணங்களும் உள்ளார்ந்த இயக்கமும் சமநிலையில் உள்ளது. பொதுவாக, நுண்ணோவியங்களில் சிவப்பு, நீலம், பச்சை போன்ற நிறங்களே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் அல்லது துணியில் சித்திரத்தைத் தீட்டி விட்டு அதன்மீது வண்ணங்களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இதில் எது பிரதானப்படுத்தப்பட வேண்டும்? எங்கே ஒளிர வேண்டும்? எது மறைக்கப்பட வேண்டும்? என்று, தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. அதோடு, நிறக்கலவையை உருவாக்குவதும் பயன்படுத்துவதும் முக்கியமாகக் கவனிக்கப்படுகிறது. பிரதான உருவங்களைச் சுற்றிலும் ஒளிர்வு போல அமைக்கப்படுவது அதன் முக்கியத்துவம் கருதியே. நுண்ணோவியத்தில் நிறையக் குறியீடுகள், உருவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நித்யத்துவத்தைக் குறிக்க கையில் ரோஜா மலர் கொடுக்கப்படுகிறது. ஆசைகளைக் குறிக்க மான் பயன்படுத்தப்படுகிறது. தர்மத்தைக் குறிக்க நாயும், ரகசியத்தை, இச்சையைக் குறிக்க பூனையும் அடையாள​மாகின்றன

விலங்குகளையும் தாவரங்களையும் பெர்ஷிய ஓவிய மரபில் கற்பனையான தன்மையுடன் வரை​வார்கள். ஆனால், மொகலாய பாணியில் இவை இரண்டும் மிக யதார்த்தமாக, இயல்பான தோற்றத்தில் பொலிவுற வரையப்பட்டுள்ளன. குறிப்பாக, யானை, குதிரை, மான் ஆகியவை மொகலாய ஓவியங்களைப் போல அத்தனை அழகுடன் வேறு எதிலும் சித்திரிக்கப்படவில்லை. 'ஹம்ச நிசாமி’ என்ற கவிதை நூலுக்கு வரையப்பட்ட 36 ஓவியங்கள் மொகலாய ஓவியச் சிறப்பின் உன்னதங்கள் என்றே கூற வேண்டும். ஹூமாயூன் ஆணைப்படி வரையப்பட்ட இந்த ஓவியங்களில் ஒரு பகுதி இன்று பிரிட்டிஷ் மியூசி​யத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

காபூலில் அமைக்கப்பட்டிருந்த ஓவியப் பட்ட​றைக்கு ஹிமாயூன் நேரில் சென்று தானே ஓவியங்​களை வரையக் கற்றுக் கொண்டார் எனவும் தனக்கு விருப்பமான கவிதைகளுக்கு அவரே ஓவியங்கள் வரைவார் என்றும் கூறப்படுகிறது. ஜஹாங்கீர் காலத்தில் ஐரோப்பிய ஓவியங்கள் அறிமுகமானதால் மரபான மொகலாய ஓவிய முறையில் ஐரோப்பிய வண்ணங்களைப் பயன்படுத்தும் புதிய முறையும் சேர்ந்திருக்கிறது.

மொகலாய ஓவியங்களில் ஒரு பகுதி பாலின்பத்​தைப் பற்றியவை. குறிப்பாக, மன்னர் தனது ஆசைநாயகிகளுடன் பாலுறவு கொள்ளும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு அந்தரப்புரத்திலும் படுக்கை அறையிலும் மாட்டப்பட்டு இருந்தன. அத்துடன், காமத் தூண்டுதல்களை உருவாக்குவதற்காக இதுபோன்ற ஓவியத்தொகுதிகளை உருவாக்கி இருக்கின்றனர்.

மெய்த் தேடலில் நாட்டம் கொண்ட மொகலாய மன்னர்கள், முக்கிய சூபி ஞானிகளைப் பற்றிய ஓவியங்களை வரையச்செய்து பாதுகாத்திருக்​கிறார்கள். மன்னர் பிரார்த்தனை செய்வது, சூபி ஞானியிடம் அறிவுரை கேட்பது, சூபி ஞானிகள் சொல்லிய கனவுகள் பலித்த கதை என்று மெய்ஞானம் தொடர்பான ஓவியங்களும் அதிகம் வரையப்பட்டுள்ளன. மொகலாய நுண்ணோவிய மரபில் மன்சூர் மிக முக்கியமானவர். இவர், பெர்ஷியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு ஆதரிக்கப்பட்ட ஓவியக்கலைஞர். ஜஹாங்கீரின் ஆட்சிக் காலத்தில் அரச சபை ஓவியராக இருந்தவர். மன்சூர் வரைந்து இருக்கும் விலங்குகளிலும் பறவைகளிலும் உள்ள நுட்பம் வியக்கத்தக்கது. அவற்றை இயற்கையியல் பற்றிய விஞ்ஞான ஆய்வு என்றே சொல்ல வேண்டும். மன்சூர், ஜஹாங்கீருக்கு நெருக்கமாகவும் இருந்திருக்கிறார். அத்துடன், மன்னரின் வனவேட்டைகளுக்கு அவருடன் சென்று, ஓவியம் வரைந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக, மன்னர் காஷ்மீருக்கு வேட்டைக்குச் சென்றபோது மன்சூரும் உடன் சென்றிருக்கிறார். அந்த ஓவியங்களைத் தனி ஓவியத்தொகுப்பாக வெளியிட்டு இருக்கின்றனர்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசத்தின் முக்கியக் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு சித்திர நூல்களாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி, ராமாயண ஓவியத்தொகுதி ஒன்றை உருவாக்குவதற்கு பத்துக்கும் மேற்பட்ட ஓவியர்கள் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணிபுரிவார்கள். ஓவியங்களைச் சுற்றிய பார்டர்களுக்கு தங்கமுலாம் பூசப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உஸ்தாத் மன்சூர் போலவே அக்பர் மற்றும் ஷாஜகான் ஆட்சியில் முக்கிய ஓவியராக இருந்தவர் கோவர்தன். இவர், பிரபல ஓவியரான பவானிதாஸின் மகன். அக்பரின் அன்றாட அலுவல்களை இவர் ஓவியங்களாக தீட்டியிருக்கிறார். அவற்றில் ஓர் ஓவியத்தில் அக்பரின் இயல்பைக் குறிக்கும்படியாக அக்பரின் இரண்டு பக்கங்களில் ஒரு பக்கம் சிங்கமும் மறுபக்கம் பசுவும் இருப்பது போன்று வரைந்திருக்கிறார். கோவர்தன் வரைந்த ஷாஜகான் மற்றும் தாரா இருவரும் குதிரையில் பயணம் செய்வது போன்ற ஓவியமும் தனித்த அழகுடன் காணப்படுகிறது. பாபர்நாமா என்ற புத்தகத்துக்கு ஓவியங்கள் வரைந்தவர்களில் கோவர்தனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொகலாய மன்னர் ஹுமாயூன் இந்தியா திரும்பியபோது மிர் சயித் அலி, அப்து உஸ் சமாத் என்ற இரண்டு பாரசீக ஓவியர்களை தன்னுடன்அழைத்து வந்தார். அவர்களால் மரபான பாணி​யுடன் இணைந்து மொகலாய பாணி ஒன்று புதிதாக உருவானது.

மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் ஓவியங்களுக்கான அரசு ஆதரவு இல்லாததால் இதன்மதிப்பு குறைய ஆரம்பித்தது. மன்னர் இரண்டாம் ஷா ஆலம் (1759-1806) காலத்தில் இந்தப் பாணி சில மாற்றங்களுடன் ராஜபுதன ஓவியப் பாணியாக மாறியது. 18-ம் நூற்றாண்டில் ராஜபுதனத்து அரசவைகளில் இந்த வகை ஓவியங்கள் மிகவும் புகழ்​பெற்று விளங்கின. கண்ணனுடைய வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஓவியங்கள் அதில் பிரதானமானவை. அழகிய நிலத்தோற்றங்கள், கிருஷ்ண லீலைகள் போன்ற ஓவியங்கள் பெரிதும் விரும்பப்​பட்டன. அரண்மனை மற்றும் கோட்டைச் சுவர்களில் இந்தவகை ஓவி​யங்கள் வரையப்பட்டன. பல நூல்களின் கையெழுத்துப் பிரதிகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பயன்படுத்தப்படும் நிறங்கள் இயற்கையான வண்ணங்கள். இந்த ஓவியங்களுக்குப் பொன், வெள்ளி போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. மரபாகவே ராஜஸ்தானியர்கள் சிவப்பைக் கொண்டாடு​கிறார்கள். அவர்களின் கலை வெளிப்பாட்டில், உடைகளில், வீடுகளில், சிவப்பு நிறமே பிரதானமாக இடம்பிடித்து இருக்கிறது. தமிழர்களுக்கு வெள்ளைதான் அதிகம் பிடித்திருக்கிறது. செருப்பில் இருந்து துண்டுவரை அத்தனையும் வெள்ளை நிறத்தில் தேர்வு செய்பவர் நிச்சயம் தமிழனாகத்தான் இருப்பார்.

யோசித்துப் பார்த்தால் ஒவ்வொரு மாநிலமும் இப்படித் தனக்கென ஒரு நிறத்தைக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தானின் கலைகளை நுட்பமாகப் பார்த்தால், மரபும் நவீனமும் அதில் கலந்திருப்பதை நாம் உணர முடியும். குறிப்பாக, ராஜஸ்தானிய நுண்ணோவி​யங்களைப் பாருங்கள். அவை, மரபான ஓவியங்களாகத் தோற்றம் அளித்தாலும் அதில் பெர்ஷிய மற்றும் அரபுப் பாணிகளின் கலப்பு காணப்படுகிறது. ராஜஸ்தானிய கிருஷ்ணனும் ராதையும் பிற மாநிலங்களில் காணப்படும் கிருஷ்ணன் ராதையைப்போல இல்லை. உருவ அமைப்பு, உடைகள் மற்றும் முகபாவங்கள் ஆகியவை வேறுபட்டு இருக்கின்றன. உணர்ச்சிகளைப் பிரதானமாக வெளிப்படுத்துவதில் ராஜஸ்​தானிய நுண்ணோவியங்கள் தனித்திறன் கொண்டிருக்கின்றன. காத்துக்கிடக்கும் ராதை என்ற ராஜஸ்தானிய ஓவியத்தை கண்காட்சி ஒன்றில் பார்த்தேன். ஆற்றங்கரையில் ராதை காத்திருக்கிறாள். ஆற்றில் ஒடும் மீன்கள்கூட சோர்ந்து போய் வால் வளைந்து சோம்பியே காணப்படுகின்றன. கரையோர மரம் வளைந்து சரிந்து நிற்கிறது. தண்ணீரின் அலைகள்கூட சீற்றமில்லாமல் இருக்கின்றன. அவளது உடைகளில்கூட தளர்ச்சி காணப்படுகிறது. முகத்தில் ஏக்கம் ததும்ப ராதை காத்திருக்கிறாள். ஓவியத்தின் மூலையில் ஒரு சிறிய நாகம் தலையை லேசாகத் தூக்கிப்பார்த்து தானும் சோகமடைந்தது போலிருக்கிறது. மரத்தில் உறைந்து போன காற்று, வெறுமையான மேகம், அதன் நீல வண்ணம், அவளது உடையின் பிரகாசமான நிறத்தேர்வு, மரத்தின் வெளிறிய பச்சை நிறம், அவள் எவ்வளவு ஏக்கத்துடன் இருக்கிறாள் என சூழலின் வழியே அவளது தனிமையின் வலியை அந்த ஓவியம் பார்வையாளனுக்குத் துல்லியமாகச் சொல்லிவிடுகிறது.

மினியேச்சர்ஸ் எனப்படும் நுண்​ணோ​வியம் ஹைக்கூ கவிதையைப் போன்றது. அதற்குள், வெளிப்படையான எளிமையைத் தாண்டி உள்ளார்ந்த தத்துவப் பொருள் இருக்கிறது. ஆகவே, அதை ரசிப்பதற்கு தொடர்ந்த ஈடுபாடும் நுட்பமான அக்கறையும் அதிகம் தேவை. வனவேட்டையை ஓவியம் வரைவது பெரும் சவால்.  வேட்டையாடும் மன்னர் அல்லது பிரபுக்களுடன் காட்டுக்குள் ஓவியர்களும் சென்று கோட்டோவியமாக வரைந்து கொண்டுவந்து பிறகு அதை வண்ணம் தீட்டுவதுண்டு. மன்னர்களின் வேட்டையைப் பிரதானமாக கொண்ட மொகலாய மினியேச்சர்கள் நிறைய இருக்கின்றன. அக்பர் துப்பாக்கி ஏந்தி வேட்டையாடும் ஒரு ஓவியம் மிகவும் குறிப்பிடத்தக்கது. அதில், அக்பர் கையில் உள்ள துப்பாக்கி அன்றைய காலகட்டத்தில் அறிமுகமான ஆயுதங்களைப் பற்றிய சாட்சியாகக் கருதப்படுகிறது.

ராஜபுதன ஓவியங்களைப் பற்றி ஆராய்ந்துள்ள கலை விமர்சகர் ஆனந்த குமாரசாமி, ''இந்த ஓவியங்கள் அன்றைய இந்திய இலக்கியங்களின் மாற்று​வடிவம் போன்றவை. எந்தக் கவித்துவ அனுபவத்தை இலக்கியங்கள் உருவாக்கியதோ அதற்கு நிகராக அதே கருவில் வரையப்பட்ட ஓவிய வகைமை'' என்கிறார். மொகலாய ஓவியங்களில் பெரும்பான்மையானவை இன்று இந்தியாவில் இல்லை. வெளிநாட்டு மியூசியங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. நமது மரபின் பொக்கிஷங்​களை நாம் பராமரிக்க தவறிவிட்டோம் என்பதே உண்மை. வரலாற்றை ஆராயும் அறிஞர்கள், கல்வெட்டுக்களைப் போலவே பழங்கால ஓவியங்களையும் நுணுக்கமாக ஆராயும்போது அறியப்படாத பல சரித்திர உண்மைகள் வெளிப்படக்கூடும். அந்தவகையில் ஓவியமும் ஒரு வரலாற்றுச் சாட்சியே!


No comments:

Post a Comment