Search This Blog

Friday, April 05, 2013

ஓ பக்கங்கள் - போராட்டமும் போதைகளும்! ஞாநி


தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கும் மாணவர் போராட்டம் பற்றிப் பல்வேறு விவாதங்கள், சர்ச்சைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. 

போராட்டம் ஒரு பெரும் எழுச்சியின் அடையாளம்; இல்லையில்லை - சின்ன அளவில் நடந்ததை தமிழ் தேசிய அமைப்புகள், புலிகள் ஆதரவு அமைப்புகளின் தீவிர இளைஞர்கள் பின்னின்று நடத்தி சேனல்களின் உதவியுடன் ஊதிப் பெரிதாக்கிக் காட்டிய போராட்டம்தான் இது; சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை பற்றிய படங்கள் கிளறிவிட்ட அடிப்படை மனிதநேய உணர்ச்சிகளுக்கு அப்பால் மாணவர்களுக்கு உலக அரசியல் தெரியவில்லை, உள்ளூர் அரசியலும் தெரியவில்லை, உணர்ச்சி மட்டுமே இருக்கிறது; ஈழத்தமிழர்களின் முதல் தேவை அங்கே ராணுவ நீக்கமும், வாழ்வாதார வாய்ப்புகளும், படிப்படியான அரசியல் உரிமைகளுமே தவிர, ராஜபட்சே கும்பலைத் தண்டிக்கக் கூக்குரலிடுவதால் ஒரு பயனுமில்லை; புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நலன் வேறு, ஈழத்திலேயே வாழும் தமிழர்களின் நலன் வேறு; இன்னொரு ஆயுதப் போராட்டம்தான் ஈழத்தைப் பெற்றுத் தரும்; இல்லையில்லை பொது வாக்கெடுப்பின் மூலமே அறவழியில் ஈழம் பெற முடியும்; இரண்டும் சாத்தியமில்லை - தனி ஈழம் அமைய ஒருபோதும் அமெரிக்கா, சீனம், இந்தியா மூன்று நாடுகளும் அனுமதிக்கப்போவதே இல்லை; ராஜபட்சே அரசின் மூலம் தங்கள் புவி அரசியல் லாபங்களுக்காக மூன்று நாடுகளும் காய் நகர்த்துவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை; இல்லையில்லை - மாணவர்கள் எழுச்சி அடுத்தகட்டத்தில் இந்திய ஒருமைப் பாட்டையே கேள்விக்குள்ளாக்கும் வலிமை உடையது - என்று பற்பல பார்வைகள் இந்த விவாதங்களில் வெளிப்படுகின்றன.

இவை எதையும் என்னால் முழுமையாக ஏற்கவும் முடியாது; முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. எல்லாப் பார்வைகளும் கொஞ்சம் கொஞ்சம் உண்மைகளை, யதார்த்தத்தைத் தம்முள் வைத்திருக்கின்றன.

கலைஞர் கருணாநிதியே புலம்பியது போல தி.மு.கவை மத்திய ஆட்சியிலிருந்து விலகச் செய்ததைத் தவிர வேறு எந்த நன்மையும் ஈழத்தமிழர்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை. போர் சமயத்தில் இப்படிப்பட்ட நெருக்கடியைக் கொடுத்து போர்நிறுத்தம் செய்ய வைத்து, கொஞ்சம் உயிர்களையேனும் காப்பாற்றி இருக்கக் கூடிய கடமையைச் செய்யத் தவறியதற்காக இப்போது தி.மு.க.வுக்குத் தரப்பட்ட தண்டனையாக இந்த ஆட்சி விலகல் நிர்ப்பந்தத்தைக் கணித்து ஆறுதலடையலாம். ஆனால், ராஜபட்சே கும்பலுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ அவரவர் போர்க் குற்றங்களுக்காக, அரசியல் பிழைகளுக்காக இப்படி தண்டனை அளிப்பது அவ்வளவு எளிதல்ல.தமிழக மாணவர்களின் போராட்டத்தின் சக்தி என்பது தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து பதவி விலக வைக்கும் அளவுக்குத்தான் உள்ளது. அதே சமயம் இந்தப் போராட்டம் எத்தனை குறைபாடுகள் நிரம்பியதாக இருந்தாலும், ஈழத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் மெத்தனத்தை, தவறுகளை, இந்திய அரசியல் கட்சிகளின் அரைகுறை புரிதலை, அலட்சியத்தை, கடுமையாக வெளிப்படுத்த உதவியது.மாணவர்கள் ஏன் இதே உந்துதலுடன் அண்மைக் காலத்தில் வேறு பிரச்னைகளில் போராடவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. காவிரி, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, தர்மபுரி சாதிவெறித் தாக்குதல் போன்றவற்றில் இதே வீரியத்துடன் ஏன் போராட வரவில்லை என்று கேட்கப்படுகிறது. ஒரே காரணம்தான். அவை எதுவும் பாலச்சந்திரன் முகம் எழுப்பும் உணர்ச்சிகளை எளிதில் எழுப்பவல்லவை அல்ல. அவை எதுவும் உணர்ச்சி அடிப்படையில் போராடக்கூடிய பிரச்னைகளும் அல்ல. அறிவார்ந்த தெளிவின் அடிப்படையில் மட்டுமே போராடப்படக் கூடியவை. இப்போது நடந்த மாணவர் போராட்டம் போல 1965 மொழித் திணிப்பு எதிர்ப்புக்குப் பின்னர் இதுவரை நடந்ததில்லை என்றும் ஒரு கருத்து பேசப்படுகிறது. இவையெல்லாம் மிகைக் கருத்துகளே ஆகும். இடதுசாரி இயக்கங்களில், கட்சிகளில் தம்மை இணைத்துக் கொண்ட மாணவர்கள் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தொண்ணூறு களிலும் இரண்டாயிரங்களிலும் பல்வேறு பிரச்னைகளில் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடைசியாகக் கூடச் சமச்சீர் கல்வியில் சுணக்கம் ஏற்பட்டதை எதிர்த்தும், பள்ளிக்கட்டண விஷயத்திலும் போராடிக் கொண்டுதான் இருந்தார்கள். கட்சிகளைச் சாராமல் மாணவர்கள் போராடுவதாகக் காட்ட விரும்பும் மீடியா, அரசியல் இயக்கங்கள் சார்ந்த மாணவர்கள் இளைஞர்கள் போராட்டங்களை எப்போதுமே பெரிதாக சித்திரிப்பதில்லை. எல்லா அரசியல் கட்சியும் மோசம் என்ற பார்வையை விரும்பும் மீடியா அதை ஊக்குவிக்க வசதியாக அண்மை மாணவர் போராட்டத்தை வடிவமைத்துக் காட்டியது என்பதும், இதைத் தங்களுக்கு வசதியான தந்திரோபாயமாகக் கருதிய அரசியல் சக்திகள் முகம் காட்டாமல் மாணவர்களுக்குப் பின் நின்றன என்பதும் மீடியா- அரசியல் ஆய்வுக்கான விஷயங்கள்.

மாணவர்கள் இன்னின்ன விஷயங்களுக்காகப் போராடவில்லை என்று பட்டியல் போடுவதில் ஓரளவுக்கு மேல் அர்த்தமில்லை. போராடியதை மீடியா எப்படிக் காட்டுகிறது என்பது முக்கியம். எதற்குப் போராடுகிறார்களோ அதை எப்படி என்ன புரிதலோடு போராடுகிறார்கள் என்பது முக்கியம். அவ்வளவுதான்.முதலில் மாணவர்கள் எதற்கும் ஏன் போராட வேண்டும் என்று கேட்பவர்களும் உண்டு. படிக்கும் வயதில் படித்து அறிவையும் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதிலும் கவனத்தைச் சிதறவிடக் கூடாது. அப்போது தான் பின்னாளில் எந்தத் துறையிலும் எந்தப் பிரச்னையையும் எதிர் கொண்டு தீர்க்க அவர்களால் இயலும் என்று கருதுவோர் உண்டு. அண்மையில் சென்னைப் பல்கலைக்கழக மீடியா துறைக் கருத்தரங்கில் பேசிய ஒரு பேராசிரியர், தங்கள் ஆசிரியர்களான மு.வ, பாலசுப்ரமணியம் ஆகியோர் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் மொழிப் போராட்டத்திலேயே மாணவர்கள் பங்கேற்பதை ஆதரிக்கவில்லை என்று தெரிவித்தார். தேர்வுக் காலங்களில் செய்தித்தாள்களைக் கூட தினசரி படிக்காமல் சேர்த்து வைத்து ஒரு மாதம் கழித்து மொத்தத்தையும் படித்தால் போதும் என்று அறிவுரைகள் சொல்லப்பட்டதாம். மாணவ பருவத்தில் உலக அரசியலில், சமூகத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் ; ஆனால் ஈடுபடக் கூடாது என்பதே அந்தப் பார்வை.அறிந்து வைத்துக் கொள்வது என்பதே இன்று பெரும் சிக்கலாக இருக்கிறது. மாணவர்களை, இளைஞர்களை அறியாமையில் வைத்திருப்பதையே அதிகாரத்தில் இருக்கும் எல்லாரும், குடும்பம் முதல் அரசு வரை விரும்புகிறார்கள். பிழைக்கும் வழி மட்டும் தெரிந்தால் போதுமென்கிறது குடும்பம். உழைக்கும் வழி மட்டும் தெரிந்துகொள் என்கின்றன அரசு, தனியார் நிர்வாகங்கள்.ஈழத் தமிழர்களின் இன்னலை தமிழக மாணவர்களால் துடைக்க முடியுமா என்பதை விடப் பெருங் கவலையாக எனக்கு இருப்பது, தமிழக இளைஞர்களை, மாணவர்களை மதுவிலிருந்து காப்பாற்ற முடியுமா என்பதுதான்.சினிமா, டி.வி. போதைகள் தவிர மது போதையும் மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 12,13 ஆகிக் கொண்டிருக்கிறது. பியர், ஒயின் மட்டும்தான் என்று தொடங்கி எது கிடைத்தாலும் சரி என்ற சரிவு நிலையை நோக்கிப் போகிறது மதுப்பழக்கம். சாலை விபத்துகள், குடும்பச் சீரழிவு, உழைக்கும் திறன் நலிவு என்று பல கோணங்களில் மது இன்று தமிழகத்தைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.

இந்த வாரம் மூன்று பெண்களைச் சந்தித்தேன். மூவருக்கும் வயது சுமார் 30லிருந்து 40க்குள்தான். இரண்டு பேர் இருபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் வட்டாரத்தில் வீட்டுப் பணியாளர்களாக இருந்தவர்கள். இன்னொருத்தி எங்கள் குடியிருப்பின் நடைபாதையில் குடியிருந்த ஒரு தொழிலாளியின் மகள். மூவரையும் சிறுமிகளாக அறிவேன். மூவருமே உற்சாகமும் துடிப்பும் உழைப்பும் நிரம்பியவர்களாக அப்போது இருந்தவர்கள். இப்போது உழைப்பு மட்டும்தான் எஞ்சியிருக்கிறது.இப்போது மூவரும் விதவைகள். மூவரின் கணவர்கள் மரணத்துக்கும் காரணமாக அமைந்தது மதுதான். ஒவ்வொரு வாரமும் இப்படி ஏதோ ஓர் ஏழைக் குடும்பத்தை மது வெட்டி சாக்கும் கதை காதில் விழுந்து கொண்டே இருக்கிறது. முப்பது வருடங்களில் கடும் ஏழைமையிலிருந்து மேலே எழுந்து வந்த குடும்பங்களையும் எனக்குத் தெரியும். அடுத்த தலைமுறையில் படிப்பை ஆயுதமாகக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தவர்கள் அவர்கள்.அந்த வாய்ப்பை ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் தன் அடுத்த தலைமுறையில் பெற்றுவிட முடியும் என்ற கனவில் இருக்கிறது. அப்படித்தான் இந்த மூவரும் தங்கள் குழந்தைகளை இப்போது படிக்க வைக்கச் சிரமங்களை மீறி முயற்சிக்கிறார்கள். இந்தக் குழந்தைகள் மதுவில் சிக்கினாலோ அல்லது கணவர்கள் மதுஅடிமைகளாக அமைந்தாலோ இன்னொரு தலைமுறையும் படுகுழியில். முன் தலைமுறையின் ஏழைமையிலிருந்து அடுத்த தலைமுறை விடுபடும் வாய்ப்பை இன்று மிகப்பெரும் அளவில் குலைத்துக் கொண்டிருக்கும் காரணங்களில் தலையாயது மதுதான்.மதுவைப் பக்குவமாகக் குடிக்கப் பழகவேண்டும் என்று சொல்லும் அறிவு ஜீவிகள் தயவுசெய்து அப்படிப்பட்ட பக்குவமான சமூகங்களுக்குப் புலம் பெயர்ந்து போய்விடும்படி கேட்டுக் கொள்கிறேன். இங்கே இப்போது அது சாத்தியமே இல்லை. மது விலக்கைக் கொண்டு வந்தால் கள்ளச் சாராயத்தில் பலரும் சாவார்கள் என்று வாதாடும் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சொல்வேன்: இப்போது இரண்டு கோடி பேர் தினமும் குடிக்கிறார்கள். இதில் கள்ளச் சாராயத்தைக் குடித்து இருபது லட்சம் பேர் சாகும் வாய்ப்பு உண்டா? இல்லை. அப்படியே இருபது லட்சம் செத்தாலும், மீதி ஒரு கோடி எண்பது லட்சம் பேர் குடியிலிருந்து மீளமாட்டார்களா? மதுவிலக்கு இருந்த முப்பது ஆண்டுகளில் கூட இங்கே முப்பதாயிரம் பேர் செத்த வரலாறு இல்லை. ஆனால் ஆண்டுதோறும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவோரால் குடிக்காதவர்கள் உட்பட பத்தாயிரம் பேர் சாகிறார்கள். மாணவர்கள் படிக்கிற காலத்தில் போராடுவது, படித்து முடித்தபின் போராடுவது எதுவானாலும் சரி, சுய சிந்தனையும் தெளிவும் இருந்தால்தான் இரண்டும் சாத்தியம். இரண்டையும் அழிக்கும் மது, மாணவர்கள் மத்தியில் பெருகிக் கொண்டிருக்கிறது. போராட்டங்களில் பங்கு பெறும் மாணவர் எண்ணிக்கையை விட, மது குடிக்கும் மாணவர் எண்ணிக்கைதான் அதிகம் என்பது கசப்பான உண்மை.

அரசியல் கட்சிகளும் அதற்கு அப்பாற் பட்டவர்களும் சேர்ந்து மதுவை ஒழிக்காவிட்டால், தமிழகத்து தமிழன் வருங்காலத்தில் தனக்காகவும் போராட மாட்டான்; மற்றவருக்காகவும் போராட மாட்டான். போரில் அநீதியாக தமிழர்களைக் கொன்ற ராஜபட்சேவை விட, கத்தியின்றி ரத்தமின்றித் தமிழர்களைக் கொன்ற பெரிய கொலைகாரர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான் என்று நாளைய வரலாறு குறிக்கப் போவதைத் தடுக்க விரும்பினால், இருவரையும் கேட்டுக் கொள்வேன். தயவு செய்து நீங்கள் ஏற்படுத்திய இழிவை உங்கள் காலத்திலேயே நீக்குங்கள்.

1 comment: