Search This Blog

Thursday, April 11, 2013

குருவே சரணம்... திருவே சரணம்! -4

சின்ன காஞ்சிபுரம் ஆனைக் கட்டித் தெருவுல ஒரு வேத பாடசாலை இருக்கு. ஐம்பதுகளில் அங்குதான் மகாபெரியவாளுக்கு கனகாபிஷேகம் நடந்தது. அந்த வைபவத்தைப் பக்கத்துல இருந்து தரிசித்தது, நாங்கள் செய்த பெரும் பாக்கியம்!
 
 மகாபெரியவாளுக்கு அவரோட பரமகுரு ஸ்வர்ண வஸ்து ஒன்றைக் கொடுத்திருந்தார். பொன்னாலான அந்த அங்கியைப் போட்டுக் கொண்டுதான் கனகாபிஷேகத்தில் அமர்ந்திருந்தார் மகாபெரியவா. இன்னிக்கும், குருவாரம்தோறும் (வியாழக்கிழமைகளில்) காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இருக்கும் ஆதிசங்கரர் திருமேனிக்கு அந்த சொர்ணத் தைச் சாத்துகிறோம்...'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள், ஓரிக்கையில் நிகழ்ந்த மகாபெரியவாளின் சஷ்டியப்த பூர்த்தி வைபவத்தைப் பற்றி விவரித்தார்...

''ஓரிக்கையில், காங்கிரஸ் பிரமுகர் மட்டப்பாறை வெங்கட்ராமய்யரின் பேரன் வீட்டில் வைத்துதான் மகா பெரியவாளுக்கு சஷ்டியப்த பூர்த்தி நடந்தது. அந்தத் தருணங்களில் மடத்துக்கு மிகவும் பணக் கஷ்டம். அங்கே வைத்துதான் நடத்தணும்னு மகாபெரியவா சொல்லிட் டார். மிக அருமையாக நடந்தது அந்த வைபவம்.


ஹோமம் மற்றும் வைதீக காரியங்கள் நடத்துவது குறித்து விளக்கிய மகாபெரியவா, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்துச் சத்திரங்களிலும் இலவசமாகச் சாப்பாடு போடணும்னும் உத்தரவு தந்தார். போதும் போதும்னு சொல்ற அளவுக்கு அன்னம் பரிமாறுவதுடன், இனிப்பு வகையறாவும் நிறையப் பரிமாறணும்னு சொன்னார். அன்பர்கள் சாப்பிட்டு எஞ்சியது நரிக்குறவர்களுக்குப் போகும்; அவர்களுக்கும் இனிப்புப் பலகாரங்கள் கிடைக்கணும் என்பதுதான் காரணம். அதேபோன்று, கிராமத்து ஏழைகளுக்கும் வயிறு நிறையக் கூழ் காய்ச்சி ஊத்தணும் என்பதும் பெரியவாளின் விருப்பம். அவரது ஆசியுடன் எல்லாம் தடபுடலாக ஏற்பாடு ஆனது.

அதேபோன்று, காஞ்சி காமாட்சியம்மன் கோயில் முழுக்க முழுக்கக் காய்-கனிகளால் அலங்கரிக்கணும்னு சொல்லிட்டார். அம்பாளுக்கு சாகம்பரின்னு ஒரு பெயர் உண்டே! சாகம்பரிதேவிக்கு காய்- கனிகள் உகந்தவை. அதனால்தானோ என்னவோ காய்- கனி அலங்காரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார் மகா பெரியவா. காய் - கனி அலங்காரத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலைப் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அந்தத் தருணத்தில் ஒரு சம்பவம்!

மகாபெரியவா இனிப்பு நிறையப் பரிமாறணும்னு சொல்லியிருந்தார், இல்லையா? அதனால, அவருக்கு இனிப்புன்னா ரொம்பப் பிடிக்கும் போலன்னு முடிவு பண்ணிவிட்டார் ஓர் அம்மணி. ஒருநாள், மலாடு செய்து ஒரு கிண்ணத்தில் வைத்து எடுத்துக் கொண்டு மடத்துக்கு வந்தார். மகாபெரியவா முன், இலையால் மூடி கிண்ணத்தை வைத்து விட்டுத் தரிசித்துச் சென்றார்.
வெறும் நெல் பொரி, வேகவைத்து இறுகிய வாழைக்காயைப் பொடியாக்கி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்துக் குடிப்பது என்று மிக மிகக் குறைவான ஆகாரம்தான் மகாபெரியவாளுக்கு. அவர் எப்படி மலாடு சாப்பிடுவார்? நாக்கு ருசிக்கு அடிமையாவது கூடாது என்பது அந்த மகானுக்கா தெரியாது?


ஆனால், அந்தப் பெண்மணி திரும்பி வந்த போது, காலியான கிண்ணத்தை அவரிடம் கொடுத்துக் கை தூக்கி ஆசீர்வதித்தார். பரம திருப்தியுடன் திரும்பிச் சென்றார் அந்தப் பெண்மணி. தான் கொடுத்த மலாடுவை பெரியவா ருசித்து சாப்பிட்டிருப்பார் என்ற மகிழ்ச்சி அந்த அம்மாவின் முகத்தில். ஆனால், பெரியவா அதைச் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். தமக்கு உரிய நியமங்களுக்கு பங்கம் ஏற்படாமல், அதே நேரம் அந்த பக்தையின் மனதும் புண்படாதபடி மகாபெரியவா செய்த அனுக்கிரகம் அற்புதமானதுதான்.

வைகாசி- பௌர்ணமி அன்று மகாபெரியவா ஜயந்தி. அந்த வருடம் மகாபெரியவாளுக்கு சஷ்டியப்த பூர்த்தி வேறு. அன்று பௌர்ணமி என்பதால், காமாட்சியம்மன் கோயில்லயும் பூஜைகள் விமரிசையாக நடைபெறும். சஷ்டியப்த பூர்த்தி வைபவங்கள் முடிந்து ஸ்ரீகாமாட்சியம்பாளைத் தரிசிக்க எண்ணியிருந்தார் மகா பெரியவா. ஆனால், 'ஓரிக்கையில் விழா வைப வங்கள் முடியறதுக்கே நெடுநேரம் ஆகிவிடும். அதற்குப் பிறகு மகா பெரியவாளுக்கு ரொம்பச் சிரமமா இருக்கும். அங்கே கோயிலிலும் நடை சாத்தி விடுவார்கள். அதனால், வேறொரு நாள் அம்பாளைத் தரிசிக்கப் போகலாமே?’ என்று விசுவநாதய்யர் சொல்லிப் பார்த்தார். ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

ராத்திரி 12 மணி இருக்கும். அன்பர்கள் புடை சூழ வந்து சேர்ந்தார் மகாபெரியவா. என்னைக் கூப்பிட்டனுப்பி, ''பாராக்காராளை வரச் சொல்லு. தீப்பந்தம்பிடிக்கறவாளையும் வரச் சொல்லிடு!'' என்று கட்டளையிட்டார். எல்லோரும் வந்து சேர, உடனே புறப்பட்டு விட்டார். அந்த நள்ளிரவிலும் கோயிலின் ராஜ வீதியைப் பிரதட்சிணம் பண்ணி, கோயில் கோபுரத்தைத் தரிசித்து வணங்கி வழிபட்ட பிறகே ஓரிக்கைக்குக் கிளம்பிச் சென்றார்.

ஜகத்குரு என்றாலும், அந்த ஜகதாம்பிகைக்கு அவர் குழந்தைதானே?! அதனால்தான், நள்ளிரவாகிவிட்ட பிறகும்கூட காஞ்சிக்கு வந்து, கோயில் கோபுரத்தையே அம்பிகை யாகக் கண்டு வணங்கி மகிழ்ந்தார் மகா பெரியவா!'' என்ற நீலக்கல் ராமச்சந்திர சாஸ்திரிகள் இன்னொரு தகவலையும் பகிர்ந்துகொண்டார்.

''தஞ்சாவூர்ல பூதான இயக்கம் மும்முரமாக இருந்தபோது, நிறையப் பேர் நிலம் தானம் கொடுத்தார்கள். அப்போது, கால் ஏக்கர் நிலம் மடத்துக்குக் கிடைத்தது. அதில் வரும் வருமானத்தை வைத்துதான் வேதபாஷ்ய சதஸ் நடத்தினார் மகாபெரியவா.

வேதங்களை என்றென்றைக்கும் காப்பாற்ற வேண்டும் என்பார் அவர். அவருக்கு உற்சாகம் தருவது எப்பவும் வேதம்தான். வேதத்தோட அர்த்தம் எல்லாருக்கும் தெரியணும்னு வேத அத்யயனம் பண்ணினவர்களைக் கொண்டு, வேதபாஷ்ய சதஸ் நிகழ்த்தி, அதன் அர்த்தத்தை எல்லோரும் அறிய வழிசெய்தார்!''

வெங்கட்ராமன் என்கிற பிரதோஷம் மாமா, காஞ்சி மகா பெரியவாளின் ஜயந்தியை எப்போதும் விமரிசையாகக் கொண்டாடுவார். அப்படிக் கொண்டாடுவது, தான் அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடன் என்றும், தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றும் சொல்வார். சேலத்தில் வேலையில் இருந்தபோதும் கூட, பல கஷ்டங்களுக்கு இடையிலும் பல வருடங்களாக பெரியவாளின் ஜயந்தி உத்ஸவங்களை தன் வீட்டில் கொண்டாடி வந்தார். அப்போது கணபதி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம் என்று காலையில் முறையாக நடத்தி, ஏழை- எளியோர் எல்லோருக்கும் வயிறு நிறைய அன்னதானமும் செய்வார்....' என்று, மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டரான பிரதோஷம் மாமா பற்றி நெகிழ்ச்சியாகச் சொன்ன அகிலா கார்த்திகேயன், மகா பெரியவாளுடனான பிரதோஷம் மாமாவின் அனுபவங்களை மேலும் பகிர்ந்துகொண்டார்.

 'பிரதோஷம் மாமா சென்னை எழும்பூருக்கு மாற்றலாகி வந்த பிறகும் மகா பெரியவாளின் ஜயந்தியை கோலாகலமாகக் கொண்டாடினார். ஒருகட்டத்தில் வருடாந்தர ஜயந்தியாக இல்லாமல், மாதாந்தர ஜயந்தியாகவே கொண்டாடத் துவங்கிவிட்டார். வருடாந்தர ஜயந்தி கொண்டாட்டத்தில் மகாருத்ர பாராயணம், ஜப ஹோமங்கள், திருத்தேர் மற்றும் பூப்பல்லக்கு ஊர்வலம் என அமையும். சென்னையில் வசிக்கிற பெரியவாளின் பக்தர்கள் அந்த வைபவங்களைக் கண்டு மகிழ்வார்கள். பெரியவா பற்றி அறிந்திராத மற்றவர்களுக்கு இவை எல்லாம் புதுமையான அனுபவங்களாக இருக்கும். அதேநேரம், இந்தக் கொண்டாட்டங்களை எல்லாம் மகா பெரியவா விரும்பினாரா என்றும் பிரதோஷம் மாமாவுக்கு ஒருபுறம் கவலையாக இருந்தது.  

ஒரு தடவை, எழும்பூரில் மாத ஜயந்தி உத்ஸவப் புறப்பாட்டுக்கு எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. ஒவ்வொரு மாதமும் பெரியவாளுக்கு மலர் அலங்காரம் செய்து தரும் ஒரு பக்தருக்கு அன்றைக்கு வர முடியாத சூழ்நிலை. நேரம் ஆக ஆக பிரதோஷம் மாமாவின் மனசு நிலை கொள்ளாமல் தவித்தது. இத்தனை மாதங்களாக பெரியவாளை மலர்களால் அலங்கரித்து மகிழ்ந்தது போல, இந்த மாதம் முடியாமல் போய்விட்டதே என்ற கவலை சூழ்ந்துகொண்டது. அந்தக் குறிப்பிட்ட பக்தரைத் தவிர அப்படிச் சிறப்பாக மலர் அலங்காரம் செய்பவர் வேறுயாரும் அங்கே இல்லை என்பதும் பிரதோஷம் மாமாவின் தாபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது.

அப்போது, திடீரென்று ஒரு பக்தர் அங்கே வந்து சேர்ந்தார். தன்னை முருகனடிமை என்று அறிமுகம் செய்துகொண்டார்.

தனக்குப் பூக்களால் அலங்காரம் செய்யும் கலை கைவந்தது என்று மாமாவிடம் அவர் சொன்னார். சாட்சாத் பெரியவாளே அனுப்பி வைத்த மாதிரி வந்து நின்ற அந்த முருகனடிமையைக் கண்டு பிரதோஷம் மாமாவுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.

இதில் என்ன விசேஷம் என்றால், வழக்கத்தைவிட இந்த முறை மலர் அலங்காரம் மிக மிக விசேஷமாக அமைந்து விட்டது. ஊர்வலம் தொடங்கும் போது, பிரதோஷம் மாமா அவரைத் தேடினார். ஆனால், அவரைக் காணவில்லை. அவர் எங்கேயிருந்து வந்தார்? எங்கே போனார்? அந்த அலங்கார நிபுணர் வந்துபோன சுவடே தெரியவில்லை. யோசிக்க யோசிக்க, பிரதோஷம் மாமாவுக்கு ஒரு விஷயம் புரிந்து விட்டது. நடந்தது அத்தனையுமே மகா பெரியவாளின் அருள்தான் என்று தெரிந்து, நெகிழ்ந்துபோனார்!' என்று சொன்ன அகிலா கார்த்திகேயன், இன்னொரு அனுபவத்தையும் விவரித்தார்.

'இன்னொரு முறை, இதேபோன்று மகா பெரியவாளின் ஜயந்தி உத்ஸவத்துக்குப் பெரியவாளின் உத்தரவு கேட்டு, அப்போது பெரியவா தங்கியிருந்த மீரஜ் நகருக்குப் புறப்பட்டுப் போனார் பிரதோஷம் மாமா. ஆனால், உடனே உத்தரவு கிடைக்கவில்லை.
பிரதோஷம் மாமாவுக்கு வருத்தம். 'ஸ்ரீபெரியவா ஜயந்தி பண்றேன். பெரியவா அனுக்கிரகம் பண்ணலையே?’ என்று மறுகினார். தமது ஜயந்தி கொண்டாட்டம் பற்றி உத்தரவு கொடுக்காத பெரியவா, அதற்குப் பதிலாக ஆதிசங்கர பகவத் பாதர் ஜயந்தியை மிகவும் விமரிசையாகக் கொண்டாடும்படி உத்தரவு போட்டு விட்டார். கொண்டாட்டம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விஸ்தாரமாகப் பேசவும் தொடங்கிவிட்டார்.

ஸ்வாமி புறப்பாட்டின்போது, கபாலி ஓதுவார் தேவாரம் பாட வேண்டும்; வேங்கட வரதனின் திருவாய்மொழி இசைக்கப்பட வேண்டும்; திருப்புகழ் சொல்லப்பட வேண்டும்; மராத்தி பஜனைப் பாட்டெல்லாம் பாட வேண்டும்... என்று ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினார் பெரியவா. குருபக்தியின் மேன்மை பெரியவாளிடம் நன்றாகத் தெரிந்தது. தவிர, கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளை அழைத்து வந்து பிருகுவல்லி பாராயணம் செய்யச் சொல்லவும் கட்டளை போட்டார். பிருகுவல்லி பாராயணம் செய்து, அதைக் கேட்கிறவர்களுக்கு ஆத்ம தரிசனம் கிடைக்க வழி கிடைக்கும். இப்படிப்பட்ட ஆனந்தமான நிலையை அடைய வேண்டித்தான் பிரதோஷம் மாமாவுக்காக பெரியவா இந்த ஆணையை இட்டிருக்க வேண்டும்.

ஆதிசங்கர பகவத் பாதரின் ஜயந்தியைக் கொண்டாடுவதில் பிரதோஷம் மாமாவுக்குப் பரம சந்தோஷம்தான்! ஆனால், பெரியவா தமது ஜயந்தி கொண்டாட்டத்துக்கு உத்தரவு அருளவில்லையே என்று வருந்தினார். கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே மாமா போவதை பெரியவா பார்த்துவிட்டார். அருகில் இருந்தவரை அழைத்து, 'அதோ போறான் பார், அவன் என்னோட பக்தன். அழுதுண்டு போறான். கூப்பிடு அவனை. என்னோட ஜயந்தியையும் பேஷா கொண்டாடட்டும்னு சொல்லிடு அவன்கிட்டே!' என்று உத்தரவு கொடுத்துவிட்டார்.

அந்த வருடம், பெரியவா விருப்பப்பட்டபடியே ஆதிசங்கர பகவத் பாதரின் சங்கர ஜயந்தி கொண்டாட்டங்கள் விமரிசையாக நடை பெற்றன. ஆனால், பெரியவாளின் ஜயந்தி எளிய முறையில் கொண்டாடப்பட்டது. கொண்டாட்டங்கள் எல்லாம் நிறைவேறியதும், பெரியவாளுக்குப் பிரசாதம் சமர்ப்பித்து விட்டு வரச் சென்றபோது, பெரியவா பிரதோஷம் மாமாவிடம் விளையாட்டுக் காட்டுகிற மாதிரி பேசினார்.

'இந்த வருஷம் என் ஜயந்தியை சுருக்கிட்டியோ?'  

ஒரு குழந்தை தன் தாயிடம் கேட்பதுபோல், ஜகத்துக்கே குருவான அந்த மகான் இப்படிக் கேட்டபோது, பிரதோஷம் மாமாவுக்குத் திகைப்பாகப் போய்விட்டது. கண்களில் ஜலம் வந்துவிட்டது. மாமாவுக்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது. இனி பெரியவாளின் ஜயந்தியையும் கோலாகலமாகக் கொண்டா டலாம்; அதற்கான உத்தரவுதான் அந்தக் கேள்வியில் பொதிந்திருந்த கருணையின் அர்த்தம். 'சுருக்கிட்டியோ?’ என்பது, உத்ஸவம் எல்லாம் இனி சிறப்பாக நடைபெறலாம் என்பதற்கான அனுமதியாகவே இருந்தது.

அதன்பின்பு, ஒவ்வொரு வருடமும் ஜயந்தி உத்ஸவங்கள் எல்லா அம்சங்களிலும் ஒரு குறையும் இல்லாமல், பெரியவாளின் அனுக்கிரக ஆசியோடு நடந்தன. மகாருத்ர ஜபத்துக்குத் திரவியம் சேகரிப்பதில் தொடங்கி... வைதீக, லௌகீக சம்பிரதாயங்கள், தேர் பல்லக்கு திருவீதி உலா வரை கொண்டாட்டங்கள் சிறப்பாகத் தொடர்ந்தன...' என்று சொல்லிச் சற்று நேரம் மௌனமாக இருந்த அகிலா கார்த்திகேயன், மகா பெரியவாளின் ஜயந்தி உத்ஸவத்தில் நடைபெற்ற இரு சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

'ஒரு மகா ஜயந்தியின் போது, அட்சதை குறைவாக இருந்தது. பிரதோஷம் மாமா கலங்கிப்போய்விட்டார். மூணு நாள் உத்ஸவத் துக்கு இது போதாதே என்று வருந்தினார்.

அப்படி வருத்தப்பட்டு ஒரு நிமிடம்கூட ஆகியிருக்க வில்லை...  மடத்திலுள்ள ஒரு பையன் ஓடி வந்து, 'வாசல்ல கார் வந்திருக்கு!’ என்றான். காரில் வந்தவர்கள் பரசுராமன் தம்பதி. காஞ்சிப் பெரியவாளின் பரம பக்தர்கள். பிரதோஷம் மாமா சற்றும் எதிர்பாராத ஒரு காரியத்தை அவர்கள் செய்துவிட்டுப் போனார்கள். ஆமாம், காரில் இருந்து இரண்டு மூட்டை அட்சதையை இறக்கி வைத்துவிட்டுப் போனார்கள். இது மகா பெரியவாளின் கருணை அல்லாமல், வேறு என்னவாக இருக்க முடியும் என்று உருகிக் குழைந்து போனார் பிரதோஷம் மாமா.

இதே மாதிரி இன்னொரு தடவை, ஸ்வாமி புறப்பாட்டுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு, வருடம்தோறும் அழைத்து வரும் யானையைக் கொண்டு வரத் தடை ஏற்பட்டு விட்டது. அமைச்சர் வரை போயும் எதுவும் நடக்கவில்லை. அப்போது ராதாகிருஷ்ணன் என்பவர் ஐ.ஜி-யாக இருந்தார். அவரிடம் அனுமதி கேட்கலாம் என்று ஒருவர் யோசனை சொன்னார். அதை ஒரு விண்ணப்பமாகத் தயார் பண்ணி வைத்தார்கள்.

அந்த நேரத்தில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. எந்த ஐ.ஜி-யைப் பார்த்து விண்ணப்பத்தைக் கொடுக்கத் தயார் பண்ணினார்களோ, அதே ஐ.ஜி. ராதாகிருஷ்ணனே பெரியவாளை தரிசிக்க வந்துவிட்டார். அதுவும், பெரியவாளின் ஜயந்தி உத்ஸவத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டு வந்துவிட்டாராம். அவரிடம் நேரிலேயே விண்ணப்பத்தைக் கொடுத்து, விஷயத்தைச் சொன்னவுடன், ''போலீஸ் பந்தோபஸ்தை நான் உடனே அனுப்பி வைக்கிறேன்; கவலையே படாதீர்கள்!'' என்றார் ஐ.ஜி. அதையடுத்து, யானையுடன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்ததில் பிரதோஷம் மாமாவுக்கு ஏக சந்தோஷம். அவருக்கு மட்டுமா... எல்லா பக்தர்களுக்கும்தான்!' என்று விவரித்து முடித்தார்.

காஞ்சி மகாபெரியவா சாட்சாத் ஈஸ்வர அம்சம். பலப்பல அபூர்வமான சம்பவங்களின் மூலம் நிருபணமான சத்தியம் இது. அப்படியான அந்த சம்பவங்களை, அவரது மகிமைகளை முழுவதுமாக விவரித்து முடிக்க ஓர் ஆயுள் போதாது. அவர் நம்மிடையே வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது நமது பூர்வ ஜென்ம புண்ணியம்தான்!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!

No comments:

Post a Comment