Search This Blog

Friday, April 05, 2013

நீயுமா முரளிதரன்?


விளையாட்டில் அரசியலைக் கலக்கக்கூடாது என்று விளையாட்டு வீரர்களும் (முக்கியமாக இலங்கை வீரர்கள்), கிரிக்கெட் நிபுணர்களும் இப்போது தமிழ்நாட்டுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நிஜத்தில், அரசியல் இல்லாமல் விளையாட்டு இல்லை. ஒலிம்பிக்ஸில் இல்லாத அரசியல்களா?

இந்த நிலையில், உலகம் முழுக்க அடக்குமுறைக்கு எதிராக விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கிரிக்கெட் நிபுணர் பீட்டர் ரொபோக்கிடம், ‘நான் வாழுகிற கண்டியில் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் பார்க்காத பிரச்னைகளைப் பற்றிப் பேச முடியாது’ என்று முரளிதரன் முன்பு பேட்டியளித்தது போல எல்லா விளையாட்டு வீரர்களும் பிரச்னைகளைக் கண்டு ஒதுங்குவதில்லை. அப்பாவி மக்கள் பாதிக்கப்படும்போது குரல் எழுப்புகிற விளையாட்டு வீரர்களை வரலாறு என்றும் நினைவு கூறுகிறது. 2003 உலகக் கோப்பையின் போது ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆண்டி ஃபிளவரும் ஹென்றி ஒலங்காவும் செய்த கலகம் போல.

2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, கென்யா ஆகிய நாடுகளில் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த அடுத்த நாள் பிரளயம் கிளம்பியது. அன்று, ஜிம்பாப்வேவுக்கும் நமிபியாவுக்கும் இடையே மேட்ச். ஆனால், ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் பத்திரிகையாளர்களை அழைத்தார்கள் ஜிம்பாப்வே அணியின் பிரபல வீரரான ஆண்டி ஃபிளவரும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் முதல் கருப்பின வீரருமான ஹென்றி ஒலங்காவும். அவர்களுடைய கைகளில் ஓர் அறிக்கை இருந்தது. அதில், இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

‘ஜிம்பாப்வேக்காக ஆடுவதைப் பெருமையாகக் கருதினாலும், எங்கள் நாட்டில் நடக்கும் சில சம்பவங்கள் தொடர்பான எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல், மைதானத்துக்குள் காலடி வைக்க விரும்பவில்லை. நாங்கள் அமைதியாக இருந்தால், நடக்கின்ற குற்றங்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்று அர்த்தமாகிவிடும். பல ஆயிரம் ஜிம்பாப்வே மக்கள் கருத்துச் சுதந்திரத்தை இழந்துள்ளார்கள். மக்கள் கொல்லப்படுவதையும், தாக்கப்படுவதையும் கற்பழிக்கப்படுவதையும் நாங்கள் அறிகிறோம். பலருடைய வீடுகள் நொறுக்கப்பட்டுள்ளன. நாங்கள் விளையாட்டு வீரர்களாக இருந்தாலும் எங்களுக்கும் மனசாட்சியும் உணர்வுகளும் இருக்கின்றன. எங்கள் நாட்டில் ஜனநாயகம் செத்துப்போனதற்கு துக்கம் அனுஷ்டிக்கிறோம். இந்த எதிர்ப்பின் மூலம், எங்கள் நாட்டின் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.’

ஜிம்பாப்வேயில் 30 ஆண்டுகால வெள்ளையர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த கறுப்பினத் தலைவர் முகாபே, வெள்ளையர்கள் வசம் உள்ள முக்கால்வாசி நிலங்களைப் பறிக்க சர்ச்சைக்குரிய நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன்படி, அதிக நிலங்கள் வைத்திருக்கும் வெள்ளை இன விவசாயிகள், தங்கள் நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதனால் வெள்ளையர்கள் தங்கள் உரிமை பறிபோவதாக எண்ணினார்கள். முகாபே அரசால், நிலத்துக்கு ஈடான மதிப்பைத் தரமுடியவில்லை. இதைத் தட்டிக்கேட்ட மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. கொடுங்கோல் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

ஆண்டி ஃபிளவர், பூனைக்கு மணி கட்ட முடிவு செய்தார். தம் கருத்துகளைத் தைரியமாக வெளிப்படுத்தக்கூடிய ஒலங்காவை அணுகினார். ஒரு வெள்ளை, ஒரு கருப்பு என இருதரப்பிலிருந்தும் குரல் எழுப்பப்படும்போது மிகப்பெரிய கவனம் கிடைக்கும் என்று இருவரும் நம்பினார்கள். சம்பவத்தன்று, கண்டன அறிக்கையை வெளியிட்ட பிறகும், இருவரும் அந்த மேட்சில் ஆடினார்கள். கைகளில், கறுப்புப்பட்டை அணிந்து உலகுக்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்.

முரளிதரனுக்கு வருவோம். இத்தனை நாளாக, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் பற்றி முரளிதரன் வாய் திறந்ததில்லை. இருந்தாலும், அவர் தமிழர் என்பதால் தமிழ்நாட்டில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இலங்கை அணியில் வினோதன் ஜான், ரஷல் அர்னால்ட், மேத்யூஸ் ஆகிய தமிழர்கள் விளையாடினாலும் முரளிதரன் மீதுதான் தமிழ் ரசிகர்கள் தனிப்பாசம் வைத்திருக்கிறார்கள். (தமிழ்ப் பெண்ணான மதிமலரைத் திருமணம் செய்ததும் ஒரு காரணம்.) ஆனால், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல். மேட்சுகளில், இலங்கை கிரிக்கெட் வீரர்களைத் தடுக்கும் தமிழக அரசின் அரசியல் செயல்பாட்டை எதிர்த்து, ராஜபட்சேவுக்கு ஆதரவாகப் பேசி இருக்கிறார் முரளிதரன். ‘இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் விளையாட அனுமதி மறுக்கப்பட்டிருப்பது கிரிக்கெட்டுக்கு சோகமான நாள். இலங்கையில், ஒரு சமயத்தில் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் போர் நடந்தது. ஆனால், இப்போது மக்கள் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் சரிசமமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தமிழர்கள் எப்படி இலங்கையில் வாழ்கிறார்கள் என்பதை நேரில் வந்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க வேண்டும்,’ என்கிற அவருடைய பேட்டி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் அமைதி நிலவுகிறது என்று இலங்கைத் தமிழரான முரளிதரனே சொல்லி விட்டார், வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று ஆங்கில மீடியா தமிழகத்தைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறது.

முரளிதரன், யாழ்ப்பாணத் தமிழர் இல்லை. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர். ஆனாலும், தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காகப் பெரிய போராட்டங்களெல்லாம் நடக்கும்போது அவருக்கு மட்டும் அந்த அக்கறை இல்லாமல் போனது ஆச்சர்யமாக இருக்கிறது. வெள்ளை இன மக்களைக் கொடுமைப்படுத்திய அரசை எதிர்த்து, கருப்பின வீரரான ஒலங்கா குரல் எழுப்பியது மாதிரியான ஓர் அதிரடி நடவடிக்கையை முரளிதரனிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இலங்கையில் இனப்படுகொலை நடந்த நிலையில், ‘இலங்கை மக்கள் அமைதியான முறையில் வாழ்கிறார்கள், பழசை மறக்க வேண்டும்’ என்கிற வார்த்தைகள் முரளிதரன் மீது வைத்திருந்த நம்பிக்கையைச் சிதறடித்திருக்கிறது. விளையாட்டு வீரர்களுக்குச் சமூக அக்கறை தேவையில்லையா என்கிற கேள்வியை எழுப்புகிறது.

ராஜபட்சே அரசுக்கு ஆதரவு என்கிற நிலைப்பாட்டை எடுத்ததால், தம்முடைய பல ரசிகர்களை இழந்து விட்டார் முரளிதரன்.

No comments:

Post a Comment