நன்றாகப் படிக்கிறோம்; கடுமையாக வேலை
பார்க்கிறோம்; நாளைக்கு வேண்டும் என முடிந்த அளவு சிக்கனமான வாழ்க்கை
நடத்தி ஓய்வுக்காலத்துக்குப் பணம் சேர்க்கிறோம். அப்புறம், ஏதாவது ஒரு நோய்
வந்து உடம்புக்கு முடியாமல் போய், சேமித்து வைத்த மொத்தப் பணத்தையும்
மருத்துவமனைக்கும், மருந்து நிறுவனங்களுக்கும் தந்து விட்டு, என்ன
செய்வதென்று தெரியாமல் முழிக்கிறோம்.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாழ்க்கை இப்படிதான்
போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் சில நோய்கள் வந்தால், வாழ்நாள் சேமிப்பே
கரைந்துவிடும். அப்படிப்பட்ட கொடிய நோய்களில் ஒன்றுதான் கேன்சர். இந்த
நோயினால் இதுவரை சொல்லமுடியாத கஷ்டத்துக்குள்ளானவர்கள் சமீபத்தில்
வந்திருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு சந்தோஷப்படலாம். அது என்ன
தீர்ப்பு?
மகிழ்ச்சி தந்த தீர்ப்பு!
சுவிட்சர்லாந்து நாட்டின் மருந்து தயாரிக்கும் நிறுவனம்
நொவார்டிஸ் (novartis). இந்நிறுவனம் கேன்சர் நோய்களுக்கான க்ளிவெக்
(Glivec) என்ற மருந்தை விற்று வந்தது. ஆனால், இது அத்தியாவசியமான மருந்து
என்பதால், இந்த மருந்தின் ஃபார்முலாவை வைத்து மற்ற நிறுவனங்களும் அதேபோன்ற
மருந்தைத் தயாரிக்க மத்திய அரசு அனுமதி தந்தது.
இந்த மருந்தை தான் மட்டுமே தயாரிக்கும் காப்புரிமையை
நொவார்டிஸ் நிறுவனம் கேட்டபோது, தரமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம்
2005-ம் ஆண்டே தீர்ப்பு தந்தது. அதன்பிறகு இந்நிறுவனம் 2009-ம் ஆண்டு உச்ச
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. கடந்த நான்கு வருடங்களாக நடந்து வந்த
வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை கடந்த ஏப்ரல் 1-ம்
தேதி சொன்னது இந்திய உச்ச நீதிமன்றம்.
'இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஏற்கெனவே
இருக்கும் மருந்தின் ஒரு சிறிய மாறுபட்ட வடிவம்தான். அதனால், இந்த
மருந்துக்கு காப்புரிமை (பேடன்ட்) தரமுடியாது’ என்று சொல்லி ஏழு வருட
போராட்டத்துக்கு முற்றுபுள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நொவார்டிஸ்
நிறுவனம், இனி இந்தியாவில் ஆராய்ச்சிக்காக செலவிட மாட்டோம் என்று சொல்லி
இருக்கிறது. இதுவரை விற்ற மருந்துகளில் 95 சதவிகித மருந்துகள்
இந்நிறுவனத்தின் அறக்கட்டளை மூலமாக ஏழைகளுக்கு இலவசமாகத்
தந்திருப்பதாகவும், கிட்டத்தட்ட 16,000 பேர் இதனால் பயன்
அடைந்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறது. ஆனால், இதன் ஜெனரிக் வகை (அதாவது,
ஒரு மருந்தின் காப்புரிமை முடிந்தபிறகு அந்த மருந்துக்கான ஃபார்முலாவை
வைத்து வேறு நிறுவனங்கள் அதே நோய்க்கு மருந்து தயாரிப்பதுதான் ஜெனரிக்)
மருந்துகளை 3 லட்சம்பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு காரணம்,
நொவார்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் மருந்தின் விலை மாதத்திற்கு சுமார் 1.4
லட்சம் ரூபாய். ஆனால், மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் அதே மருந்தின் விலை
சுமார் 8,500 ரூபாய் மட்டுமே.
இவ்வளவு விலை உயர்ந்த மருந்தினை 95 சதவிகித மக்களுக்கு
இலவசமாகக் கொடுத்ததாகச் சொல்லும் இந்த மருந்து நிறுவனம், ஏன் இந்தத்
தீர்ப்புக்காக கவலைப்படவேண்டும்?
''அங்குதான் இந்நிறுவனத்தின் பிஸினஸ் இருக்கிறது.
ஒருவேளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்நிறுவனத்துக்குச் சாதகமாக
வந்திருந்தால், இந்த மருந்தினை வேறு யாரும் தயாரிக்க முடியாது. அப்போது,
இந்நிறுவனம் வைத்ததுதான் விலை என்றாகி இருக்கும். அதன்பிறகு சேவையாவது,
மண்ணாவது! ஒரு மாதத்துக்கான மருந்து 1.4 லட்சம் ரூபாய்க்கு விற்க
ஆரம்பித்திருக்கும். பணமிருப்பவர்கள் வாங்கிச் சாப்பிட்டிருப்பார்கள்.
ஆனால், பணமில்லாத ஏழைகள்தானே நம் நாட்டில் அதிகம். மருந்து வாங்க வழி
இல்லாமல் பலரும் மடிந்துதான் போயிருப்பார்கள்''.
உணவே மருந்து என்கிற காலம் போய், இப்போது மருந்தே உணவு
என்ற நிலைமைக்குப் பலரும் வந்துவிட்டோம். வெளியூர்களுக்குச் செல்லும் போது
துணிமணிகளை எடுத்துக்கொள் கிறோமோ இல்லையோ, அனைவரிடமும் ஒரு மருந்துப்பை
இருக்கிறது. மருந்துகள் இல்லாவிட்டால் நாம் உயிர் வாழவே முடியாது என்கிற
நிலைக்கு நாம் வந்திருப்பதை நம்மைவிட மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள்
நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றன. நம் உயிர் பயத்தையே அடிப்படையாக
வைத்து மருந்து கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன.
இப்படி லாபம் சம்பாதிக்கும் மருந்து நிறுவனங்களுக்கு
பெரிய அளவில் செலவு இல்லை. உதாரணமாக, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு
விளம்பரச் செலவு கிடையாது. அதற்கு பதிலாக, மருத்துவர்களுக்குச் 'செலவு’
செய்வதன் மூலம் தங்கள் மார்க்கெட்டிங்கை கனகச்சிதமாகச் செய்துவிடுகின்றன
மருந்து கம்பெனிகள்.
மருத்துவர்களின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு
குளிர்சாதன வசதி, குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றை வாங்கித் தருவது, சேர்கள்
வாங்கித் தருவது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது என மருந்து
கம்பெனிகள் செய்யும் செலவு ஏராளம். அதற்கு கைமாறாக டாக்டர்களும் அதிகளவு
மருந்துகளை எழுதித் தள்ளி, தங்கள் நன்றிக்கடனை மருந்து கம்பெனிகளிடம்
காட்டிவிடுகிறார்கள். மருந்துகளில் மட்டுமல்ல, பரிசோதனை லேப்களிலும்
நடக்கிறது.
45 வயதுக்கு மேல் மருந்து மாத்திரை யோடுதான் நம்மில் பலர் வாழ்கிற
சூழ்நிலையில், மருந்துகளுக்கு லாப உச்சவரம்பு நிர்ணயம் செய்தால் மட்டுமே
இனி பலரும் நோயிலிருந்து தப்பிக்க முடியும் என்கிற நிலை உருவாகி
இருக்கிறது. தரமான கல்வியும், சுகாதார வசதியும் ஒவ்வொருவருக்கும்
அளிக்கவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உண்டு. இந்த இரண்டையும் தனியார்
நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டு, தப்பிக்கப் பார்க்கிறது மத்திய
அரசாங்கம். மருந்து கம்பெனிகள் அரசாங்கத்தின் வாயையும் அடைத்துவிடுகிறதோ
என்னவோ!
அவசியமான பதிவு...
ReplyDeleteExl't msg Sir..
ReplyDelete