ஐம்பது வருடங்களுக்கு முன் கார் ஒரு ஆடம்பரம்!
முப்பது வருடங்களுக்கு முன் கார் ஒரு அந்தஸ்து!
இருபது வருடங்களுக்கு முன் கார் ஒரு சௌகர்யம்!
இன்றைக்கு கார் ஒருஅடிப்படைத் தேவை!
உங்கள் கார் ஆசைக்குத் தூபம் போட்டு ஊதியிருக்கிறோம். பயன்படுத்தி பலன் பெறுங்க! பழசோ புதுசோ, நல்லதா ஒரு கார் வாங்கி லைஃபை என்ஜாய் பண்ணுங்க!
புதிய கார் வாங்குறீங்களா?
முதலில் விற்பனை நிலையத்துக்குச் சென்று வெவ்வேறு கார்களை ஆராய்ச்சி செய்து அவற்றின் சிறப்பு அம்சங்கள் என்று உங்களுக்குத் தோன்றுவதை அங்கேயே குறித்துக் கொள்ளுங்கள். அதேபோல கண்ணில் படும் குறைபாடுகளை நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் முறை பார்க்கச் செல்லும்போது டீலர்களின் வார்த்தைகளில் மயங்காதீர்கள். நான் சும்மா பார்க்கத்தான் வந்தேன்" என்று கூறி அவர்களை அனுப்பி விடுங்கள்.
டீலர்கள் கூறும் விலையோடு ஆன்லைனில் அதே காருக்கான விலையை ஒப்பிட்டுப் பாருங்கள். இது குறித்து டீலரிடம் விவாதம் செய்யுங்கள். விலையை நிச்சயம் செய்யும்வரை ஃபைனான்ஸ் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம்.
முன்பு போல டீலர்களை நேரடியாக அணுகித்தான் கார்களைப் பார்க்க முடியும் என்பதில்லை. வலைத் தளங்களில் கார்களின் பலவித தோற்றங்கள் கொண்ட படங்களும் வேறு பல விவரங்களும் உள்ளன. முதல் கட்டமாக அவற்றை அறிந்து கொள்ளலாம். ஆனால் டெஸ்ட் டிரைவ் செய்ய நீங்கள் நேரடியாகத்தான் போக வேண்டும். அதாவது நீங்கள் வாங்க உள்ள காரை நீங்கள் ஓட்டிப் பார்க்க வேண்டும். அதைப் பற்றி விவரமாகப் பிறகு பார்ப்போம்.
வாங்குவதற்கு முன் சில குழப்பமான கேள்விகள் உங்கள் மனதில் எட்டிப் பார்க்கலாம். அவை குறித்த ஆலோசனைகள்:-
பெரிய கார் வாங்கலாமா? சின்ன கார் வாங்கலாமா?
உங்களுக்கு ஏற்ற காரை வாங்குங்கள். உங்கள் வீட்டில் ஆறு பேர் என்றும், பெரும்பாலும் ஆறு பேரும்தான் வெளியிடங்களுக்குக் கிளம்புவீர்கள் என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது அதற்குத் தகுந்த இருக்கை வசதி கொண்ட காரைத்தான் வாங்க வேண்டும். நான்கு பேர் மட்டுமே அமரக்கூடிய காரை வாங்கினால் எப்போதுமே பிரச்னைதான். சொல்லப்போனால் புதிய மனத்தாங்கல்கள் உண்டாகி, குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம்.
அதே சமயம் பொதுவாக மூன்றுபேர்தான் வீட்டில் இருப்பார்கள் என்றால், எப்போதாவது வரக்கூடிய உறவினர்களுக்காகப் பத்து பேர் அமரக்கூடிய காரை வாங்குவது விலை, பெட்ரோல் செலவு ஆகிய இரண்டு கோணங்களிலுமே வேஸ்ட்.
கார் வாங்குவதா?ஆம்னி வேன் வாங்குவதா?
ஆம்னி வேனில் எட்டு பேர் வரை போகலாம் என்பது கூடுதல் வசதி. ஆனால் பொதுவாக அதில் ஏ.சி. வசதி இருக்காது. பவர் ஸ்டீயரிங் கிடையாது.
பெட்ரோல் காரா? டீசல் காரா?
பெட்ரோல் காரைவிட டீசல் காரின் விலை அதிகம். ஆனால் இந்தியர்களைப் பொறுத்தவரை மைலேஜ் என்பது முக்கியம். ஒரு விளம்பரத்தில்கூட புதிய ஆகாய விமானம் குறித்து பல சிறப்பு தன்மைகளை ஒருவர் விளக்கி முடிக்க ‘அதெல்லாம் இருக்கட்டும் மைலேஜ் எவ்வளவு?’ என்று கேட்பது போல் அமைத்தது நினைவிருக்கலாம். டீசல் கார் என்பது எரிபொருள் என்கிற கோணத்தில் சிக்கனமானதுதான்.
ஆனால் பராமரிப்பு என்பது பெட்ரோல் காரைவிட டீசல் காருக்கு அதிகம். ஏனென்றால் பொதுவாக பெட்ரோல் கார்களின் உதிரி பாகங்களின் விலை குறைவு.
நீங்கள் தினமும் ஐம்பது கி.மீ. செல்வதாக இருக்கிறீர்கள் என்றால் டீசல் கார் வாங்கலாம். வாரத்திற்கு ஐம்பது கி.மீ.தான் செல்லப்போகிறீர்கள் என்றால் பெட்ரோல் கார் வாங்கலாம்.
சாதாரண கார் போதுமா? சொகுசு கார் வேண்டுமா?
அது உங்கள் பட்ஜெட்டையும் அந்தஸ்து குறித்த உங்கள் சிந்தனையையும் பொறுத்தது. என்றாலும் ஓர் ஆலோசனை. தினமும் பதினைந்து மைல்கள் மட்டுமே கார் சவாரி செய்பவர்களுக்கு (அதாவது பெரும்பாலானவர்களுக்கு) மிக அதிக விலை கொண்ட மிக நவீன கார் தேவையா?
அதேசமயம் தினமும் வெகுதூரம் செல்ல வேண்டுமென்றால் மைலேஜ் என்பது மட்டுமல்ல வசதியான பயணம் என்பதும் மிக முக்கியம். பாதுகாப்பு அம்சங்களும்தான்.
லீஸுக்கு எடுப்பது நல்லதா? வாங்கி விடுவது நல்லதா?
இரண்டிலும் சாதக பாதகங்கள் உண்டு.
லீஸில் எடுத்தால் சில வருடங்களுக்கு ஒருமுறை புதிது புதிதாகக் காரை மாற்றிக் கொண்டே இருக்கலாம். குறைந்த தொகைக்கு விலை உயர்ந்த கார்களை ஓட்டலாம்.
விலைக்கு வாங்கினால் எப்படியும் அது உங்களுக்கு சொந்தமான வண்டி. அதில் உண்டாகும் சேதங்களுக்கு யாரிடமும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மாற்றலாகும் வேலை என்றால் உங்களுக்கு வேண்டும்போது காரை விற்றுவிடலாம்.
பொதுவாக கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது காரை வாங்குவதுதான், லீஸுக்கு எடுப்பதைவிட நல்லது.
டீலரிடம் செல்லும் முன்:
கார் டீலரிடம் போவதற்கு முன்பு சில ஒப்பிடல்களைச் செய்யுங்கள். பல்வேறு வலைத்தளங்களில் பலவித கார்களை உபயோகித்தவர்கள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்திருப்பார்கள். கார் எப்படி இயங்குகிறது என்பது மட்டுமல்ல. அவர்கள் கொடுக்கும் கேரண்டியின் தன்மை ‘உண்மையில்’ எப்படிப்பட்டது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ளலாம். எல்லோருமே வலைத்தளங்களில் உண்மையைத்தான் பதிவு செய்கிறார்கள் என்பதில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருக்க இவை மிகவும் உதவும்.
Conditions apply என்று விளம்பரங்களிலோ காரோடு அளிக்க முன்வரும் கையேட்டிலோ காணப்பட்டால் நீங்கள் அது தொடர்பான முழு உண்மையை அறிந்து கொள்வது அவசியம். உதாரணமாக, மணிக்கு இவ்வளவு கிலோமீட்டர் ஓடும் என்று அறிவித்துவிட்டு கூடவே ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்பது போல் போட்டிருக்கலாம். நீங்கள் அந்த வண்டியை வாங்கிவிட்டு அவர்கள் அறிவித்ததை விடக் குறைவான மைலேஜ் கொடுக்கிறதே என்று கேட்டால், மேடு பள்ளமில்லாத நெடுஞ்சாலைகளில், போக்குவரத்து நெரிசல் இல்லாத பொழுதில் மணிக்கு இவ்வளவு வேகம் என்று போனால் கிடைக்கும் மைலேஜைத்தான் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்" என்று கூறக்கூடும்.
சோதனை ஓட்டம்
எந்தக் காரையும் ஓட்டிப் பார்க்காமல் வாங்கக் கூடாது. சோதனை ஓட்டம் அவசியம் தேவை. பொதுவாக நீங்கள் எந்தவிதமான பாதையில் காரை ஓட்டப் போகிறீர்களோ அதே போன்ற பாதையில்தான் போக வேண்டும். நீங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் அடிக்கடி செல்ல வேண்டுமென்றால், சோதனை ஓட்டம் செய்யும் போது சற்று உயரமாகச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேடு, பள்ளமான சாலைகளிலும் ஓட்டிப் பார்க்கவும். குறுகலான திருப்பங்களையும் முயற்சிக்க வேண்டும். பிரேக் எப்படி இயங்குகிறது என்பதைச் சோதிக்க பாதுகாப்பான இடங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
ஓட்டுநர் இருக்கையில் மட்டுமல்ல பின்புற இருக்கையிலும் உட்கார்ந்து பாருங்கள். இரண்டு, மூன்று வெவ்வேறுவிதமான கார்களை ஓட்டிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்றால். அந்தக் கார்களை அடுத்தடுத்து ஒரே நாளில் ஓட்டிப் பார்ப்பது நல்லது.
இன்ன காரணம் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒரு காரை ஓட்டும் போது மனதுக்குள் ஏதோ இடிக்கிறது என்றால் அந்தக் காரை வாங்க வேண்டாம். உள் உணர்வுக்கு மதிப்பு அளியுங்கள். ஏனென்றால் ஒருவித நெருடலோடு ஆண்டுக் கணக்கில் அந்தக் காரை ஓட்ட வேண்டியிருக்கலாம். நீங்கள் உங்கள் சொந்த உபயோகத்திற்காக கார் வாங்குகிறீர்களா? அக்டோபர் மாதம் வாங்குவதுதான் பெஸ்ட். அப்போது பல நிறுவனங்களும் தள்ளுபடி மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை அளிப்பார்கள்.
நீங்கள் உங்கள் நிறுவனத்திற்காக கார் வாங்குகிறீர்களா? மார்ச் மாதத்தில் வாங்குவது நல்லது. அது செலுத்த வேண்டிய வரியைக் குறைக்க உதவும். இதனால்தான் பல நிர்வாக அதிகாரிகளும், தங்கள் நிறுவனத்துக்கான காரை மார்ச்சில் வாங்குகிறார்கள்.
செகண்ட் ஹேண்ட் கார் வாங்கப் போறீங்களா?
கார் தயாரிப்பு நிறுவனங்களே செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்கி விற்கின்றன. மாருதி நிறுவனம் ‘ட்ரூ வேல்யூ’ என்ற பெயரிலும் ஹோன்டா நிறுவனம் ‘ஆட்டோ டெரஸ்’ என்ற பெயரிலும், ஹுண்டா நிறுவனம் ‘ஹெச்-அட்வான்டேஜ்’ என்ற பெயரிலும் டாட்டா நிறுவனம் ‘டாட்டா அஷ்யூர்ட்’ என்ற பெயரிலும் இப்படிச் செய்கின்றன.
இதுபோன்ற விற்பனை நிலையங்களில் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதில் சில நன்மைகள் உண்டு. நிறுவனத்தின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்பதால் வெளிப்படைத் தன்மையுடன் இவர்கள் இருக்க வாய்ப்பு உண்டு. ஆவணங்கள் சரியானவையா என்பதை இவர்கள் சரிபார்ப்பார்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வண்டியை இவர்களிடம் சர்வீசுக்கு விட முடியும். மறைமுகமாக விலையைக் கூட்டுதல் (Hidden cost) இவர்களிடம் பொதுவாக இருப்பதில்லை.
மற்றபடி வேறெங்காவது வாங்கினால் கார் டீலரிடம் காருக்கான தொகை குறித்துப் பேசும்போது, அதில் டீலரின் கமிஷனும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள், இல்லாவிட்டால் நீங்கள் மூன்று லட்சத்திற்கு கார் வாங்குவதாகத் தீர்மானித்து, அதற்கு ஒப்புக் கொண்ட டீலர் நீங்கள் காரை எடுத்துக் கொள்ளச் செல்லும்போது ’ என்னுடைய கமிஷன் 3000 ரூபாய் தனி’ என்பதுபோல் கூறிவிடக்கூடும்.
பழைய கார்களை வாங்கும் போது மறக்காமல் அதன் ஆர்.சி. புத்தகத்தை வாங்கி நன்கு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒரிஜினலை சரிபார்ப்பதுதான் நல்லது. ஒருவேளை திருட்டுக் காராக இருந்துவிட்டால்? திருட்டுக் காரை உங்கள் தலையில் கட்டிவிட்டு டீலர் கம்பி நீட்டி விட்டால்? அப்போது நீங்கள் காரையும் அதன் ஒரிஜினல் உரிமையாளரிடம் கொடுத்து விட வேண்டியிருக்கும் தவிர கொடுத்த காசையும் திரும்ப வாங்க முடியாமல் தவிப்பீர்கள். நாலுபேருக்குத் தெரிந்தால் அவமானம் என்ற மனதுக்குள்ளேயே மருகுவீர்கள்.
டீலர் மட்டுமல்ல, காரை விற்பவரின் பின்னணியையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. அவர் காரை அவ்வப்போது சர்வீசுக்கு விடுபவரா என்பதையும் அறிந்து கொள்ள முயற்சியுங்கள். முக்கியமாக வண்டி இன்ஷ்யூர் செய்யப்பட்டிருக்கிறதா, எந்த வகையிலான இன்ஷ்யூரன்ஸ், இன்ஷ்யூரன்ஸ் தேதி காலாவதியாகாமல் இருக்கிறதா போன்ற விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
காரை நன்கு ஆராய்ச்சி செய்யுங்கள். ஏதோ சின்னதான உராய்வு என்றால் அதற்கு அதிகம் செலவாகாது. ஆனால் ஒரு கதவையே மாற்றும்படியான நிலை என்றால், பல ஆயிரங்கள் அதற்குச் செலவழிக்க வேண்டியிருக்கும்.
சம்பந்தப்பட்ட சாலைப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (RTO), சென்று அந்தக் கார் மீது எந்த குற்றப் பத்திரிகையும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். என்ன காரணம் என்கிறீர்களா? காரின் சொந்தக்காரர் இன்று காலை நெடுஞ்சாலையில் பொறுப்பில்லாமல் வேகமாக ஓட்டி வந்து ஒருவர் மீது தன் காரை ஏற்றிவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். உடனடியாக ஒரு டீலரிடம் கொடுத்து அந்தக் காரை விற்றுவிடச் சொல்கிறார். உங்கள் போதாத காலம் நீங்கள் அந்தக் காரை வாங்கினால் நாளைக்கு காவல் துறையினர் உங்களிடமும் நிறைய கேள்வி கேட்கலாம். அதுவும் அந்தக் காரை விபத்து நடந்ததற்கு முன்தினமே உங்களுக்கு விற்றுவிட்டதாக நீங்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தால் நிறைய தொந்தரவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
செகண்ட் ஹேண்ட் காரை வாங்கினால் இன்ன தேதியில், இந்த மணிக்கு வாங்கிக் கொண்டேன் என்பதோடு இந்த நேரம், தேதிக்கு முன்னால் அந்தக் கார் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் அதன் பழைய உரிமையாளர்தான் பொறுப்பு" என்றும் எழுதி இருதரப்பினரும் கையெழுத்திட வேண்டும்.
அந்தக் கார்மீது கடன் வாங்கியிருந்தால் அந்த விவரம் ஆர்.சி. புத்தகத்தில் இருக்கும். அரிதாக ஆர்.சி. புத்தகம் இல்லாமலே கூட சில அடமானங்கள் நடப்பது உண்டு. எனவே சிரமம் பார்க்காமல் ஒருமுறை RTO அலுவலகத்துக்குச் சென்று இந்த அடமானம் குறித்த விவரங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.
பயன்படுத்திய காரை வாங்கும் போது மூன்று கோணங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒன்று, உங்கள் பட்ஜெட். இரண்டாவது, அந்தக் கார் தயாரிக்கப்பட்ட வருடம், மூன்று, அது எவ்வளவு ஓடியிருக்கிறது என்ற விவரம். பதினொரு வருடங்களைத் தாண்டிய கார் என்றால் பத்தாயிரம் கி.மீ. ஓடியிருக்க வாய்ப்பு உண்டு. டாக்டர்கள் வைத்திருக்கும் கார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. குறைவாகத்தான் பயன்படுத்தி இருப்பார்களாம். இதனால் சேதம் (Wear and Tear) குறைவாகவே இருக்கும்.
புதிய காரை வாங்கினாலும், பயன்படுத்திய காரை வாங்கினாலும் நினைவு கொள்ள வேண்டியவை:
ஓட்டுநரை நியமித்து காரில் செல்லப் போறீங்களா? அவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்பது தெரியுமா? ஓட்டுநரை வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பரைக் கேட்டுப் பாருங்கள். நடுவில் ஓட்டுநர் விடுப்பு எடுத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தீங்களா?
* உங்கள் முதுகின் நலம் எப்படி? ஏதாவது பிரச்னை உண்டா? அப்படியானால் அதற்குத் தகுந்த இருக்கை கொண்ட காரைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
* நீங்கள் வாங்கும் காரானது, உங்கள் கராஜ் அல்லது பார்க்கிங் பகுதியில் சுலபமாக அடங்கிவிடுமா என்பதையும் நிச்சயம் செய்து கொள்ளுங்கள்.
* நீங்கள் ஏதாவது நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்குகிறீர்கள் என்றால், கீழே உள்ள ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வேலை பார்ப்பவர் என்றால் கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மெண்டும், கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கான சம்பள பில்லும் தேவைப்படும். பிசினஸ் செய்பவர் என்றால் கடந்த சில வருடங்களுக்கான உங்கள் வருமான வரி ரிட்டனைக் காட்ட வேண்டியிருக்கும். உங்கள் முகவரி தொடர்பான அடையாளச் சான்று தேவை. நிதி நிறுவனம் கேட்பதில்லை என்றால் கூட, காரை வாங்கும் போது ஓட்டுநர் உரிமம் உங்கள் பெயரில் இருந்தாக வேண்டும்.
* சில விஷயங்கள் எல்லோருக்கும் பொதுவானவை தான். என்றாலும் பெண்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மறக்காமல் சீட் பெல்ட் அணிய வேண்டும். இதில் அலட்சியம் காட்டக் கூடாது. வண்டி ஓட்டும்போது மட்டுமல்ல உட்கார்ந்து செல்லும் போதும் - முக்கியமாக முன்வரிசையில் உட்கார்ந்து செல்லும் போதும்.
* எப்படியும் காரின் வலதுபுறம், பின்வரும் வண்டிகளைக் கவனிக்க ரியர்வியூ கண்ணாடி இருக்கும். ஆனால் மறக்காமல் ஓட்டுநரின் இடப்புறத்திலும் காரின் வெளிப்பகுதியில் இதே போன்ற கண்ணாடி ஒன்று பொருத்தப்பட வேண்டும். இது இல்லாமலும் பெரும்பாலான ஆண்களால் வண்டியை மேனேஜ் செய்ய முடியும். ஆனால் பெண்களுக்கு இது கடினமான காரியம்.
* புதிய வண்டி வாங்கினால் உங்களுக்கு சாய்ஸ் நிறைய உண்டு. உங்களுக்கு வேண்டிய பிராண்டை உங்களுக்குப் பிடித்த நிறத்தில் வாங்கலாம்.
* வெள்ளை, சில்வர், கிரே வண்ணம் கொண்ட கார்களை வாங்குவது ஒருவிதத்தில் நல்லது. ஏனென்றால் இவற்றைப் பராமரிப்பது சுலபம். கறுப்பு நிற கார் என்றால் துடைத்துத் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
* பெட்ரோல் போடும்போது குறிப்பிட்ட பங்கிலேயே பெட்ரோல் போடுங்கள்.
* காரின் சக்கரங்களில் வழக்கமான காற்றை அடிப்பதைவிட நைட்ரஜன் காற்றை நிரப்பிக் கொண்டால் டயரின் ஆயுள் அதிகரிக்கும்.
பயனுள்ள தகவல்கள்! நன்றி!
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
ReplyDelete