இசையிலும் கவிதையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட மொகலாய
மன்னர்கள் தங்களுக்கென தனித்துவமான ஓவிய ரசனையையும் கொண்டிருந்தனர்.
அரண்மனையின் அன்றாட நிகழ்வுகளை ஓவியமாக வரையச்செய்வது, முக்கியத்
திருவிழாக்கள், வேட்டையாடுதல் மற்றும் குடும்ப நிகழ்வுகளை ஓவிய வரிசைகளாக
வரைவதற்காக அரண்மனையிலேயே ஓவியர்கள் இருந்திருக்கின்றனர். அக்பர், பாபர்
மற்றும் ஒளரங்கசீப் ஆகியோரைப் பற்றிய ஓவியங்கள்தான் அவர்களின் வாழ்க்கை
வரலாற்றின் சாட்சிகளாக இன்று திகழ்கின்றன. 'மொகல் மினியேச்சர்’ எனப்படும்
நுண்ணோவியங்கள் வரலாற்றின் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. இந்த வகை
நுண்ணோவியங்கள் பெர்சியாவில் இருந்து இந்தியாவுக்கு அறிமுகமானவை. 13-ம்
நூற்றாண்டில் துருக்கியில் இந்த வகை ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்று
இருந்தன. இந்தியாவில் பாபர் காலம் தொடங்கி அடுத்த 300 ஆண்டுகளுக்கு மொகலாய
நுண்ணோவியங்கள் மிகவும் பிரபலமாக விளங்கியிருக்கின்றன. பிரதானமான ஓவிய
முறையாகவே இதை மொகலாயர்கள் வளர்த்து எடுத்தனர்.
16-ம் நூற்றாண்டில் தொடங்கி இன்றுவரை மினியேச்சர்
ஓவியங்கள், அதன் வெளிப்பாடு, உள்ளடக்கம் மற்றும் நிறத்தேர்வு ஆகியவற்றில்
பல்வேறு வித உருமாற்றங்களை அடைந்து இருக்கிறது. நுண்ணோவியங்கள் வரைவது
மிகவும் கடினம். இதை வரைய மிகுந்த கவனமும் அக்கறையும் தீவிர உழைப்பும்
தேவை. தேர்ந்த ஓவியரால் மட்டுமே நுண்ணோவியங்கள் வரைய முடியும்.
பெர்ஷியாவில், புத்தகங்கள் கலைப்பொருளாகக் கருதப்பட்டன. ஆகவே, அதன் ஓரங்களை
அலங்காரம் செய்வது முக்கியமானதொரு கலையாகக் கருதப்பட்டது. இந்தப் பணியைச்
செய்வதற்காகவே நுண்ணோவியக் கலைஞர்கள் இருந்தனர். இந்தக் கலைஞர்களைப் பற்றி,
'மை நேம் இஸ் ரெட்’ என்ற நாவலை நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஒரான்
பாமுக் எழுதியிருக்கிறார். இந்த நாவல் தமிழில் 'என் பெயர் சிவப்பு’ என்று
ஜி.குப்புசாமி மொழியாக்கத்தில் வெளியாகி உள்ளது. அந்த நாவல் பெர்ஷிய
நுண்ணோவிய மரபை விரிவாக விவரிக்கிறது.
புத்தகங்களின் பக்கங்களில் குதிரைகள், பூக்கள்,
அடையாளச் சின்னங்கள் போன்றவற்றை நுண்ணோவியமாகத் தீட்டுபவர்கள் முழுமையாக
உருவங்களை வரைவது இல்லை. குதிரையை அவர்கள் அரூபமான கோட்டுரு வடிவிலேயே
வரைகின்றனர். அதாவது தாவிச்செல்லும் ஒரு கோடு குதிரையைக் குறிக்கிறது.
அந்தக் கோட்டின் பாய்ச்சலில் குதிரையின் வலிமையை நாம் உணரமுடிவதே அதன்
சிறப்பு. இதுதான் குதிரையை வரைவதன் உன்னதமான நிலை. அதை அடைய ஒரு கலைஞன் தன்
வாழ்வில் பல வருடங்கள் அயராமல் குதிரைகளை மாறிமாறி வரைந்து கொண்டே இருக்க
வேண்டும். அப்போதுதான் ஒற்றைக்கோடு குதிரையாகும் விந்தை சாத்தியமாகிறது.
மதப்பிரதிநிதிகள் மற்றும் மன்னர் பயன்படுத்தும் புத்தகங்களை
அழகுபடுத்துவதற்காக நிறைய ஓவியர்கள் அரச சபையில் இருந்தனர். அவர்கள் வரைந்த
புத்தகங்கள் ஓவியரின் பெயராலேயே தொகுப்பு ஓவிய நூலாக வெளியாகி இருக்கிறது.
உலகின் பல முக்கிய மியூசியங்களில் இந்தப் புத்தகங்கள் காட்சிக்கு
வைக்கப்பட்டு இருக்கின்றன.
இன்றைக்கும் கலைக்கூடங்களில் இதுபோன்ற தொகைஓவிய
நூல்களைப் பார்க்கலாம். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பத்துக்கும்
மேற்பட்ட ஓவியத்தொகுப்புகள் இருக்கின்றன. அவற்றில் தண்டனை
முறைகள், தாவரவியல் தொகுதிகள், பறவையினங்கள் ஆகியவை பற்றிய அரிய
ஓவியங்களைப் பார்க்கலாம். மினியேச்சர் ஓவியங்கள் பெரும்பாலும், புராணம்
மற்றும் தொன்மக் கதைகளின் விளக்கப்படமாகவே இருந்தன. மொகலாய ஓவிய மரபில் கூட
இந்திய புராணீகம், தொன்மம் மற்றும் இதிகாசம் சார்ந்த காட்சிகள் நிறைய
வரையப்பட்டு இருக்கின்றன. கிறிஸ்தவ பாதிப்பும் மினியேச்சர்களில் உண்டு.
இன்னொரு பக்கம், மன்னர்களின் வேட்டை மற்றும் முடிசூட்டு விழாக்கள்,
வனவிருந்து, நீதிபரிபாலனம், படை நடத்திப் போவது, யுத்தம் மற்றும் ஞானிகளை
எதிர்கொண்டு ஆசி பெறுவது போன்றவை முக்கியமான கருப்பொருளாக
இருந்திருக்கின்றன.
கையளவு உள்ள ஒரு சிறிய ஓவியத்தை வரைய ஏழு ஆண்டுகள் ஆகி
இருக்கிறது. ஒரு மொகலாய நுண்ணோவியத்தில் ஓணாணின் கண் உள்ளே தெரியும்
மங்கலான பிம்பம் கூட துல்லியமாக வரையப்பட்டிருக்கிறது என்றால் அதன்
நுட்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
நுண்ணோவியங்களில் பிரதானமானது, அதற்குத் தேர்வு
செய்யப்படும் நிறம், பொருளின் துல்லியமான சித்திரிப்பு மற்றும் அரூபமான
குறியீடுகள் ஆகியவைதான். ஆரம்பகால நுண்ணோவியங்களில் வெள்ளிப்பூச்சு அல்லது
தங்கப்பூச்சு சேர்த்தே வரையப்பட்டன. அவற்றில் பாக்தாத் வகை ஓவியங்கள்
மற்றவற்றில் இருந்து பெரிதும் மாறுபட்டவை. உடைகளை வரைவதிலும்
பாத்திரங்களின் உடல்வாகை சித்திரிப்பதிலும் அதற்குத் தனித்துவம் இருந்தது.
அலங்காரமான உடைகளைக் கொண்ட பெர்ஷிய நுண்ணோவியங்களைப் பாருங்கள். அந்த
உடைகளில் உள்ள சிறிய பூக்கள் கூட மிகத்துல்லியமாக வரையப்பட்டு
இருப்பதை நன்றாக உணர முடியும். பெர்ஷியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட
ஓவியர்கள், தங்களுக்கான பாணியை உருவாக்கியபோது இந்தியாவில் புத்த
கலைமரபில் இதுபோன்ற நுண்ணோவியங்கள் உருவாக்குவது இன்னொரு பாணியாக
நடைமுறையில் இருந்திருக்கிறது. இந்த இரண்டு பாணிகளும் கலந்து ஒரு புதிய கலை
உருவாக்கம் மொகலாயர்கள் காலத்தில் நடந்திருக்கிறது. அதை அக்பரும் அவரது
வாரிசுகளும் ஊக்கப்படுத்தி இருக்கிறார்கள். அதுதான் மொகலாய
நுண்ணோவியங்களின் தனிச்சிறப்பு. மன்னரின் சுயஉருவம், சபைக்காட்சிகள்,
வேட்டை, விழாக்கள் ஆகியவை குறுஓவியங்களில் முதன்மையாக இடம் பெற்றுள்ளன.
தாராவின் திருமணம், ஒளரங்கசீப்பின் யுத்த வெற்றி, அக்பரின் சபை, அக்பரின்
வேட்டை, மொகலாய இளவரசிகளின் அழகான உருவங்கள், சபைக்கு வந்த வெளிநாட்டுப்
பிரதிநிதிகளின் உருவம், பிரார்த்தனை நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள்
ஆகியவை மொகல் மினியேச்சர் ஓவியங்களில் தனக்கென தனியான அகஉலகைக்
கொண்டிருக்கிறது. பனித்துளிக்குள் ஆகாசம் அடங்கியிருப்பதைப் போல ஒவ்வொரு
ஓவியமும் ஒரு கதையைச் சொல்கிறது. மொகலாயர் கால வாழ்க்கையின் அரிய
தருணங்களின் சாட்சி போல இவை திகழ்கின்றன. மொகலாய
நுண்ணோவியங்களில் இடம்பெற்றுள்ள யானை, காண்டாமிருகம், கழுகு, அணில், நாய்,
சிறுத்தை ஆகியவை அற்புதமாக வரையப்பட்டு இருப்பதை உணரலாம். இன்று, நேஷனல்
ஜியாக்ரஃபி சேனலில் அருகில்நெருங்கி படம்பிடிக்கப்பட்ட மிருகங்கள் தரும்
வியப்பை, பரவசத்தை இந்த ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு மிருகத்தின்
இயல்பும் தனித்துவமும் ஓவியரால் சரியாக உள்வாங்கப்பட்டு இருக்கிறது. அதன்
வெளிப்பாடே ஓவியத்தில் மிருகங்களின் உடல்தோற்றம் மற்றும் பாவங்களாக
வெளிப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, யானைகளை அவ்வளவு பரவசத்துடன்
திமிருடன் வியப்புடன் மதர்ப்புடன் வேறு ஓவியங்களில் நான் பார்த்தது இல்லை.
சிங்கத்துடன் வேட்டையாடும் மூவர் என்ற ஓவியத்தில் ஒரு யானை தனது
துதிக்கையால் ஒரு சிங்கத்தை வளைத்து வீசுகிறது. அப்போது, அதன் கண்களில்
பயமேயில்லை. யானை மீது இருப்பவனின் முகத்தில் பயம் தெறிக்கிறது. அந்த
யானையின் உடல்வாகும் திமிறலும் வெகுஅழகாக வரையப்பட்டு இருக்கின்றன.
யானைக்கு செய்துள்ள அலங்காரமும் அதன் நகங்கள் ஒளிர்வதும் கழுத்து மணிகள்
அசைவும் கிறக்கமூட்டுகின்றன. யானை மீது இருந்து விழும் மனிதனை
காப்பாற்றுகிறவர்கள் என்ற ஓவியத்தில் காணப்படும் யானையின் நிறமும் அதன்
கோபமும். உடல்வாகும் வால்வீச்சும் காதுகளும் தனி வசீகரம்! இதுபோலவே,
காம்போசிட் எனப்படும் ஒரே உருவத்துக்குள் பல உருவங்கள் அடங்கியிருப்பது
போன்ற நுண்ணோவிய வகையில் வரையப்பட்ட மொகலாய யானைக்குள்தான் எத்தனை விதமான
மிருகங்கள். இந்த மிருகங்கள் ஒன்றுக்குள் ஒன்று புதையுண்டு இருந்தாலும்
அதைப் பெரியதாக மாற்றிப் பார்க்கையில் அவை எவ்வளவு கவனமாக, நுட்பமாக
வரையப்பட்டு இருக்கின்றன என்பதை அறிய முடிகிறது.
சர்ரியலிஸ பாணி ஓவியங்கள் உருவாக்கிய திகைப்பை,
விசித்திரத்தை இந்த ஓவியங்களும் வழங்கவே செய்கின்றன. ஆனால் இவை, சர்ரியலிஸ
ஓவியம் போல கொண்டாடப்படுவதில்லை என்பதுதான் இதன் குறை.
இத்தகைய ஓவியத்தின் முக்கியமான சவால், எந்த மிருகத்தை
எதற்கு அடுத்து இடம்பெறச்செய்வது என்பதும் அதன் உடலியலை ஒருமித்துச்
சித்திரிப்பதுமே ஆகும். யானையை அடக்கும் அக்பர் ஓவியத்தில் இருப்பது
நீலநிற யானை. அதன் தந்தங்கள் அழகுபடுத்தபட்டு இருக்கின்றன. மேலே
போர்த்தப்பட்டு இருக்கும் சிவப்புத் துணியும் கழுத்து மணியும் அதன்
அந்தஸ்தைக் காட்டுகின்றன. அதேவேளையில், யானைமீது ஏறி அதன் கோபத்தை அடக்க
அங்குசம் வைத்துக் குத்தும் அக்பரின் கால்கள் அதன் கழுத்தில் போடப்பட்டுள்ள
பிரியினுள் நுழைந்திருக்கிறது. அக்பரின் உடையலங்காரம் குறுவாள் கிரீடம்
யாவும் துல்லியமாக வரையப்பட்டு இருக்கின்றன. இந்த ஓவியத்தில் யானையின்
ஆவேசத்துக்கு நேர்மாறாக அருகில் உள்ள மரமும் அதில் சாவகாசமாக இருக்கும்
பறவைகளும் சித்திரிக்கப்படுகின்றன. மரத்தின் தனித்துவமாக இதயவடிவில் இலைகள்
எவ்வளவு அழகாக இருக்கின்றன. யானையின் காலடியில் உள்ள சிறுசெடி, அதன்
பொலிவு, பறவைகளின் தன்னியல்பு அதிலும் ஒரு வால் நீண்ட பறவையின் ஒயில்,
பறவைகளின் கண்களில் காணப்படும் சாந்தம் மன்னரின் வஸ்திர மடிப்புகள் என்று
எவ்வளவு நுட்பங்கள்! இத்தனையும் தாண்டி மதமேறிய யானையின் கால்களுக்கு
இடையில் ஒரு சிறிய செடியில் சிவப்பு நிற பூ பூத்திருக்கிறது. அதை, ஓவியர்
கவனமாக வரைந்திருக்கிறார். அதில்தான் கலையின் வெற்றி அடங்கியிருக்கிறது.
மொகலாய ஓவியங்களின் விளக்கமும் படமும் சிறப்பு! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDelete