Search This Blog

Wednesday, April 10, 2013

எனது இந்தியா (திருமண வேட்டை!) - எஸ். ரா

'மாப்பிள்ளைத் தூண்டில் கப்பல்​கள்’ என அழைக்கப்பட்ட இந்தக் கப்பல்களில், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு இளம்பெண்கள் வருவது 18-ம் நூற்றாண்டில் அதிகரித்தது. மணமகனைத் தேடிவரும் பெண்கள் தனியாக வராமல் திருமணப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சகோதரன் அல்லது அத்தை என்று யாரோ ஒருவரை உடன் அழைத்து வந்தனர். சில பெண்கள் கப்பலில் கன்னித்தன்மையை இழந்துவிடக்கூடும் என்று பயந்த வளர்ப்புத் தாய்கள், தாங்களும் துணையாக இந்தியாவுக்கு வந்தனர். மாப்பிள்ளை தேடுவதற்கு உகந்த நேரம் என்று கிறிஸ்துமஸ் சமயத்தைக் கருதி, அதையட்டி இந்தியா வருவதற்கு கப்பலில் பலத்த போட்டி நிலவியது. அன்று, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்து சேருவதற்கு ஆறு மாதங்கள் ஆகும். இந்தக் காலகட்டத்தில் உணவு மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்க, இளம்பெண்கள் அதிகச் சிரமங்களைச் சந்தித்தனர். தொற்றுநோய் பரவிய காலங்களில் இளம்பெண்களில் சிலர் பயணத்திலேயே இறந்துவிட்டனர்.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, இப்படி மாப்பிள்ளை தேடிவரும் பெண்களை தனது அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. குறிப்பாக, குறுநில மன்னர்கள் மற்றும் ஜமீன்தார்களுக்கு இந்தப் பெண்களைத் திருமணம் செய்துவைத்து தங்களின் நட்புறவை வலுவாக்கிக் கொண்டனர். அழகிய பெண்களைத் திருமணம் செய்துவைப்பதற்கு ஈடாக, வணிக ஒப்பந்தங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். பாட்டியாலாவில் ஒரு ஐரீஷ் பெண்ணை மகாராஜாவுக்குத் திருமணம் செய்துவைப்பதற்கு ஈடாக, தானியச் சந்தை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும் என்ற ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.


இங்கிலாந்தில் இருந்து திருமண வேட்டைக்குப் புறப்படும் பெண்கள், இந்தியாவில் ஓர் ஆண்டு மட்டுமே  வசிக்க அனுமதிக்கப்பட்டனர். அந்தக் காலகட்டத்துக்குள் அவர்கள் உரிய மணமகனைத் தேடி திருமணம் செய்து கொண்டுவிட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்படுவார்கள்.

உரிய மணமகனைத் தேடிப்பிடிப்பது என்பது பெரிய சவால். ஆகவே, இதற்காகப் பெரிய திட்டமே தீட்டப்பட்டது. நடன விருந்து, நாடகம் பார்ப்பது, பிக்னிக் போவது, டென்னிஸ் விளையாடுவது, வேட்டைக்குச் செல்வது, நீச்சல், அரங்க விளையாட்டுகள் என்று பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டன. அங்கே, திருமணம் ஆகாத பிரிட்டிஷ் இளைஞர்கள் விருந்தினர்களாக அழைக்கப்படுவர். விருந்துக்காக விசேஷ உடைகள் தயாரிக்கப்பட்டன.  உயர்ரக மதுவகைகள் பரிமாறப்பட்டன. இளம் அதிகாரிகள் தாங்கள் விரும்பிய பெண்ணுடன் நடனமாட அனுமதிக்கப்பட்டனர். மகாராஜாக்களுக்காக ஒரே அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலேயப் பெண்கள் நடனமாடினர். அதில், ஏதாவது ஒரு பெண்ணை மகாராஜாவுக்குப் பிடித்துவிட்டால், அந்தப் பெண் பெரும் அதிர்ஷ்டசாலியாகக் கருதப்பட்டாள். மகாராஜாவின் 32-வது மனைவியாகக்கூட வாழ்வதற்கு ஆங்கிலேயப் பெண்கள் போட்டியிட்டனர். நடன விருந்தில் ஒரு பெண்ணை பிரிட்டிஷ் அதிகாரி விரும்பிவிட்டால், அடுத்த சில நாட்களுக்குள் அவசரஅவசரமாகத் திருமணம் செய்துவிடுவார்கள். காதலிப்பதற்கோ, யோசித்துத் திருமணம் செய்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை.


இந்திய ஆண்களைக் காதலித்தால் தொற்றுநோய் பரவி விடும் என்ற பீதியை ஆங்கிலேயப் பெண்களுக்கு தாதிகள் உருவாக்கி இருந்தனர். சில வேளைகளில், மணமகனைத் தேடி பல நூறு மைல்களுக்குக்கூட பெண்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது. 'கிரேஸி டாட்டர்’ என்ற இளம்பெண் ஓர் அனாதை. ஐசிஎஸ் அதிகாரியைக் கவர்ந்துவிடவே, அவள் பணக்கார சீமாட்டி ஆகிவிட்டாள். கணவனுடன் அவள் வங்காளத்தின் கிராமப் பகுதியில் அமைந்திருந்த பெரிய பங்களாவில் குடியேறினாள். தாங்க முடியாத வெப்பம், தனிமை மற்றும் கட்டுப்பெட்டியான வாழ்க்கை அவளுக்கு மனச்சிதைவு நோயை ஏற்படுத்தியது. சில மாதங்களில் அவள் கர்ப்பிணியானாள். முறையற்ற மருத்துவ சிகிச்சை காரணமாக பிரவசத்தில் குழந்தை இறந்து பிறந்ததுடன், அவளும் அடுத்த இரண்டு மாதங்களில் இறந்து விட்டாள். இப்படி, இந்தியாவுக்கு வந்து அற்ப ஆயுளில் இறந்துபோன வெள்ளைக்காரப் பெண்கள் நிறைய இருந்தனர். இங்கிலாந்தில் இருந்து இந்தியத் துறைமுகத்துக்கு கப்பல் வந்து சேரும்போது, கவர்ச்சியான உடை அணிந்துகொள்ள ஆங்கி லேயப் பெண்களை கட்டாயப் படுத்தினர். துறைமுகத்தில் இவர் களைப் பார்ப்பதற்கு தள்ளு முள்ளு நடக்கும். பணக்கார வணிகர்களும், ஜமீன்தார்களும் வெள்ளைக்காரப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை தங்களது அந்தஸ்தாகக் கருதினர். அவர்கள் அழகான பெண்களைத் தேடி துறைமுகத்தில் காத்திருந்தனர். திருமண வேட்டைக்கு வரும் ஆதரவற்ற இளம்பெண்களுக்கு, ஆண்டுக்கு 300 டாலர் உதவித் தொகை வழங்கியது கிழக்கிந்தியக் கம்பெனி. இந்தத் தொகையை, திருமணம் முடிந்தவுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட கெடுவுக்குள் திருமணம் செய்துகொள்ள முடியாமல் போனால், கடன்காரியாக அவர் இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்.

பெரிய நகரங்களில் பொருத்தமான ஆங்கிலேயரைத் திருமணம் செய்து​கொள்ள வாய்ப்பு கிடைக்காத பெண்கள், இதற்கென ஒரு திட்டம் தீட்டினர். அதாவது, நீண்ட தூரத்துக்கு ரயிலில் பயணம் செய்வது. அந்தப் பயணத்தில் உடன் வரும் ஏதாவது ஓர் ஆங்கிலேய அதிகாரியுடன் பேசிப் பழகித் திருமணம் செய்துகொள்வது. ஆலிவ் கிராப்டன் என்ற இளம்பெண்ணுக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. அவள், ரயிலின் ஜன்னல் வழியாக வெளியே எட்டிப்பார்த்தபோது ரயில் ஏற நின்றுகொண்டிருந்த ராணுவ அதிகாரி அவள் அழகில் மயங்கி காதல்வயப்பட்டார். அவள் இருந்த பெட்டியிலேயே அவரும் ஏறினார். அந்தப் பயணம் முடிவதற்குள் இருவரும் காதலித்து திருமண ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

கேதரின் வெல்போர்ட் என்ற பெண்ணுக்கு நடந்த கதை இன்னொரு விதமானது. மணமகனைத் தேடி சென்னைக்கு வந்த இந்தப் பெண், எட்டு நாட்களில் எட்டு பேருடன் பேசிப் பழகியிருக்கிறார். எட்டு பேருமே அவளைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டனர். அவர்களில் யாரைத் திருமணம் செய்துகொள்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. முடிவில், உயர் அதிகாரியான ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டாள். ஸ்டெல்லா ஹட்டன் என்ற இளம்பெண் கல்கத்தாவுக்குக் கப்பலில் வந்தபோது, அங்கே ஒரு தேயிலைத் தோட்ட அதிபரை திருமணம் செய்துகொண்டார். திரு மணமான இரண்டாவது வாரம் அவர்கள் எஸ்டேட் பங்களாவில் குடியேறினர். பழக்கமில்லாத இடம், மொழி தெரியாத மக்கள்,  தனிமை ஆகியவை அவளை வாட்டி வதைத்தது.  இதற்கிடையில், அவளுக்கு அம்மை நோய் ஏற்பட்டது. அவளை ஒரு தனி அறையில் அடைத்து வைத்தார் கணவர். ஒருநாள், வீட்டை விட்டு தப்பியோடி, கல்கத்தா சந்தையில் வேலைசெய்த இந்தியர் ஒருவருடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். மணமகனைத் தேடி இந்தியாவுக்கு வந்த ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

திருமணம் ஆன சில ஆண்டுகள்தான் இந்தப் பெண்கள் இந்தியாவில் வசித்தனர். அதன் பிறகு, குழந்தையின் கல்வியைக் காரணம் காட்டி அவர்கள் மீண்டும் இங்கிலாந்துக்குச் சென்றனர். அதன்பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாத  விடுமுறையாக இந்தியா வந்து சென்றனர். சில நேரங்களில், ஆசை மனைவியை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க விரும்பாத ஆங்கிலேயக் கணவர்கள், தங்களது குழந்தைகளை மட்டும் போர்டிங் ஸ்கூலில் படிக்கவைக்க இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தனர். இந்தியாவுக்கு வந்திறங்கி மாப்பிள்ளை கிடைக்காத பெண்கள் பலர் இங்கிருந்து இலங்கை சென்றனர். அங்கே, காலனிய அதிகாரிகளாக இருந்தவர்களைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தனர். கண்டவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்ட ஆங்கிலேய அதிகாரிகளில் பலர், தங்களின் இளம் மனைவி மீது சந்தேகம்கொள்ளத் தொடங்கினர். ஃபுளோரா பிரைன் என்ற இளம்பெண் மீது சந்தேகம் அடைந்த அவளது கணவன், அவளைக் கொன்றுவிட்டான். இது, அவசரத் திருமணத்தால் உண்டான விளைவு. ஆங்கில நாவலாசிரியர் ஈ.எம்.பாஸ்டர் எழுதி இருக்கும் 'பேசேஜ் டு இந்தியா’ நாவல், ஓர் ஆங்கிலேய இளம்பெண்ணின் பார்வையில் இந்தியாவைப் பற்றி விவரிக்கும் கதை. ஆங்கிலேயப் பெண் ஒருத்தி ஒரு இந்தியன் தன்னைக் கெடுத்துவிட்டதாக பொய்க் குற்றச்சாட்டு கூறுகிறாள். அந்தக் குற்றச்சாட்டின் பின்னால் உள்ள காரணம், வெள்ளைக்காரர்கள் எந்த அளவுக்கு இந்தியர்களை வெறுக்கின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டவே. திருமண ஆசையில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயப் பெண்கள் கம்பெனி அதிகாரிகளின் மனைவி ஆனவுடன், மேம்சாகிப், லேடி, துரைசாணி என்று கௌரவமான பெயர்களுடன் வலம்வந்தனர். இந்தியர்களை மிக மோசமான அடிமைகளாக நடத்தியதுடன் தங்களின் கணவனின் அதிகாரத்திலும் தலையிட்டு அதிகாரத்தை ருசிக்கத் தொடங்கினர்.  ஆங்கிலேய அதிகாரிகளில் பலர் நிர்வாகத்தில் முறைகேடுகள் செய்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் இந்தப் பெண்களே என்கிறார் ஆனி டீ கோர்சி. இந்தியர்களை அடிமைப்படுத்தி உறிஞ்சி வாழ்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி தனது விற்பனைப் பொருட்களில் ஒன்றாக திருமணத்தையும் வைத்திருந்தது என்ற உண்மையைத்தான் இந்த 'ஃபிஷ்ஷிங் பிளீட்’ சம்பவங்கள் தெரிவிக்கின்றன. இன்று, இந்தியாவின் பல்வேறு ஊர்களில் கைவிடப்பட்ட கல்லறைகளாக உள்ள ஆங்கிலேயப் பெண்களின் பெயர்களைக் காணும்போது ஒருவேளை இவளும் கல்யாணக் கனவுடன் இந்தியா வந்தவர்களில் ஒருத்தியாக இருப்பாளோ என்ற எண்ணம் வருகிறது.

No comments:

Post a Comment