Search This Blog

Tuesday, April 09, 2013

ஸ்மார்ட் போன் தொலைந்தால்..?

''ஸ்மார்ட் போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும், அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட் போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்’ வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும்.
 
'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அந்நியர் பயன்படுத்துவதற்கு எதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான முறைகளில் மேற்படி பாதுகாப்பை திறக்க முயற்சித்தால், செல்போன் தானாக தனது டேட்டா அனைத்தையும் அழித்துக்கொள்ளும் வகையில் கட்டமைத்துக் கொள்ளலாம். மொபைல் ட்ராக்கிங் என்னும் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம், உங்களது சிம்கார்டு தவிர்த்து வேறு சிம்கார்டுகளை உங்கள் மொபைலில் பொறுத்தினால்... அந்த சிம்கார்டு குறித்த விவரங்களை உங்கள் குடும்பத்தினர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரச்செய்யுமாறு உள்ளிடலாம்.  
 
அடுத்ததாக, மொபைல் திருட்டுக்கு எதிரான இன்ஷூரன்ஸ் பற்றி பார்ப்போம். பல ஆயிரங்கள் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட் போனுக்கான இன்ஷூரன்ஸ் பிரீமியம் நூற்று சொச்ச ரூபாய்தான். மொபைல் காணாமல் போனது உறுதியானதும் விரைந்து சந்தாதாரராக இணைப்பில் இருக்கும் செல்போன் நிறுவனத்தை தொடர்புகொண்டு உங்கள் சிம் கார்டை செயல்படாது செய்யுங்கள். பிறகு, அருகிலிருக்கும் கிளையை அணுகி அதே எண்ணில் புதிய சிம்கார்டை, பேலன்ஸ் டாக் டைமுடன் பெற்றுக் கொள்ளுங்கள். சிம்கார்டை பிளாக் செய்ததற்கும், புதிய சிம் வழங்கியதற்குமான அவர்கள் வழங்கும் அத்தாட்சி நகலோடு, செல்போன் பில் நகலையும் இணைத்து, காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். முடிந்தால் திருடுபோன செல்போனை கண்டுபிடித்து தருவார்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என்பதற்கான சான்றை தருவார்கள்.
 
இந்த சான்றோடு மொபைல் வாங்கியதற்கான பில், காப்பீட்டு விவரம் இவற்றை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திடம் நேரடியாகவோ தபால் மூலமோ அணுகினால், தொலைந்த போனுக்கான காப்பீடு கிடைக்கும். இந்தத் தொகை, அநேகமாக அதே ஸ்மார்ட் போனின் சரிந்திருக்கும் தற்போதைய விலைக்கு இணையாக இருக்கும் என்பது ஆறுதல். இந்த வகையில் பண இழப்பை சரிசெய்துவிடலாம்.ஸ்மார்ட் போன் தொலைந்து போவதில், இன்னுமொரு பண இழப்பை தவிர்க்கும் நடவடிக்கை... மொபைல் பேங்கிங் செயல்பாட்டை முடக்குவதுதான். இதற்கு உங்கள் வங்கி சேவையாளர் மையத்தை கால்சென்டர் உதவியுடன் அணுகி மேற்படி இணைப்பில் இருக்கும் மொபைல் பேங்க் வசதியை ரத்து செய்யுமாறு    கோரலாம். செல்போனில் உங்களது பிறந்தநாள், வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்கள், மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டு போன்றவற்றை எக்காரணம் கொண்டும் பதியக்கூடாது. இது ஸ்மார்ட் போன் திருடுபோன சூட்டில் உங்கள் வங்கி கணக்கின் இருப்பையும் காணாமல் போக வழி செய்துவிடும்.இ-மெயில் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தனிப்பட்ட கணக்கு தகவல்களை பிறர் அணுகாமல் தவிர்க்க அவ்வப்போது அவற்றிலிருந்து வெளியேறியதும் லாக் அவுட் செய்ய வேண்டும். ஆனால், பலரும் தங்கள் வசதிக்காக, ஒற்றை தொடுகையில் இ-மெயில், ஃபேஸ்புக் போன்றவை திறக்குமாறு வைத்திருப்பார்கள். இவர்கள், ஸ்மார்ட் போன் தொலைந்ததை உறுதிபடுத்திக் கொண்டதும் உடனடியாக வேறு இணைய இணைப்பின் மூலம் தங்கள் இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளின் பாஸ்வேர்டுகளை மாற்றிவிட்டால், பிரச்னையிலிருந்து தப்பலாம்.னிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள், வீடியோக்களை ஸ்மார்ட் போனில் இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த மாதிரியான பர்சனல் படங்களை எடுக்காமல் தவிர்ப்பதே உத்தமம். காரணம், எடுத்த படங்களை அழித்துவிட்டாலும் அவற்றை மீட்பதற்கான உபத்திரவ தொழில்நுட்பங்கள் நமக்கு பெரும் அச்சுறுத்தலே! மற்றபடி ஸ்மார்ட் போனில் சேகரிக்கும் ஏனைய படங்கள், வீடியோக்களை அவை பதிந்திருக்கும் ஃபோல்டருக்கு தனியாக பாஸ்வேர்டு உபயோகிப்பதன் மூலம் பாதுகாக்கலாம்.
 
உங்கள் போனில் இந்த வசதி இல்லாவிட்டால் இலவசமாக கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்ற அப்ளிகேஷன்கள் உதவியோடு இந்த பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம். ஸ்மார்ட் போனின் உள்ளடங்கிய மெமரி தவிர்த்து, மெமரி கார்டு போன்ற எளிதில் அகற்றக்கூடிய சேமிப்பு அம்சங்களிலும் இதேபோல அப்ளிகேஷன்களை செயல்படுத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட பாஸ்வேர்டு தருதல், குறிப்பிட்ட ஹேண்ட்செட்டில் இணைத்தால் மட்டுமே அந்த பாஸ்வேர்டும் செயல்படுவது என பல வகைகளிலும் மெமரி கார்டு பாதுகாப்புக்கு அப்ளிகேஷன்கள் கைகொடுக்கும். அரிய படங்களை எப்போதும் மெமரி கார்டிலேயே வைத்திராது, அவ்வப்போது 'பேக்கப்’ எடுத்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.''

1 comment:

  1. பயனுள்ள தகவல்...

    விளக்கத்திற்கு நன்றி...

    ReplyDelete