Search This Blog

Friday, April 12, 2013

தமிழக அரசின் பட்ஜெட் ஓர் அலசல்

தமிழக அரசின் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் மார்ச் 21-ம் தேதி சமர்ப்பித்த தமிழக அரசின் 2013-2014 பட்ஜெட்டின்படி அரசின் மொத்த வருமானம் (மத்திய அரசிடமிருந்து நிதிக் கமிஷன் சிபாரிசின்படி கிடைக்கும் தொகையையும் சேர்த்து) ரூபாய் 118579 கோடி. வருவாய் இனத்தில் செலவு: ரூபாய் 117916 கோடி. ஆக வருமானத்தில் உபரி 663 கோடி. இதில் முக்கியமான பல வரிகள் மூலம் அரசு திரட்டும் தொகைகள்:

2012- 2013 திருத்தப்பட்ட பட்ஜெட் 2013- 2014 திருத்தப்பட்ட பட்ஜெட்


மேற்சொன்ன புள்ளிவிவரங்களிலிருந்து தெரிவது: தமிழ்நாட்டின் மொத்த வருவாய்த் தொகையில் பெரும் அளவாக இருப்பது விற்பனை வரிதான்: 

அதற்கடுத்தது கலால் வரி.

விற்பனை வரி வந்த கதை சுவாரசியமானது.

ராஜாஜி 1938-ல் சென்னை மாகாணத்தின் முதன் மந்திரியாக இருந்தபோது பரீட்சார்த்தமாக நான்கு மாவட்டங்களில் (அப்போதைய பெயர் ஜில்லா) மது விலக்கை அமல்படுத்த தீர்மானித்தார். அவர் பிறந்த சேலம் மாவட்டத்தையும் அந்த 4 மாவட்டங்களில் ஒன்றாகத் தீர்மானித்து அங்கு மதுவிலக்கை அமல் படுத்தினார். மதுவிலக்கை அமல் செய்தால் அரசுக்கு வருவாய் குறைந்துவிடும் என்று அப்போது பலர் கூக்குரலிட்டார்கள். மதுவிலக்கினால் அரசு இழக்கும் வருவாயை ஈடுகட்ட ராஜாஜி ஒரு புதிய வரி விதிப்பை அறிமுகப்படுத்தி அதை அன்றைய சென்னை மாகாணம் முழுவதும் அமல்படுத்தினார். அந்த வரிக்கு பெயர்தான் ‘விற்பனை வரி’.

பொது மக்கள் வாங்கும் ஒருசில பொருள்களின் மீது மட்டும் மிகக் குறைந்த அளவில் இந்த விற்பனை வரி விதிக்கப்பட்டது. அதன் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் மதுவிலக்கினால் ஏற்பட்ட வரி இழப்பை நன்றாக ஈடுசெய்தது.

ராஜாஜியால் 1938-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விற்பனை வரி இன்று இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரு காமதேனுவாக விளங்குகிறது. ஆனால், மதுவிலக்குக்கு எவரும் முயல்வதே இல்லை.

சென்ற ஆண்டை விட (2012-2013) அடுத்த ஆண்டில் (2013-2014) விற்பனை வரி மூலம் அரசுக்கு 9000 கோடி ரூபாய் அதிகமாக வசூலாகும் என்று பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் கணக்கிட்டிருக்கிறார். நாட்டின் இன்றைய மொத்த பொருளாதாரச் சூழ்நிலையில், மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே வருகிறது. (விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று தமிழக நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் குற்றம்சாட்டியிருக்கிறார்). இதனால் மக்கள் பிற பொருள்களை (ஆடம்பரப் பொருள்கள் என்று சொல்லலாம்). வாங்குவது குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து மொத்த இந்தியாவுக்குமான அடுத்த ஆண்டின் உற்பத்தி 5 சதவிகிதத்துக்கும் குறைவாகத் தான் இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் அடுத்த ஆண்டின் உற்பத்தி வளர்ச்சி ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் விற்பனை வரி 19 சதவிகிதம் அதிகரிக்கும்? தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமையைப் பார்த்தால் அதனால் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வாய்ப்பே இல்லை என்பது புலப்படும். ஏனென்றால் மதுவின் மூலம் அரசு எதிர்பார்க்கும் வருமானம் (2013-2014) பட்ஜெட்படி ரூபாய் 14469 கோடி. அரசின் மொத்த வருமானத்தில் இது ஒரு கணிசமான பங்கு.

சரி, இப்போது செலவினங்களைப் பார்ப்போம்:

அரசு தனது ஊழியர்கள் அனைவருக்கும் (ஓய்வு ஊதியர்கள் உள்பட) தனது வருமானத்தில் சுமார் 42 சதவிகிதத்துக்கும் அதிகமாகச் செலவழிக்க வேண்டி இருக்கிறது. இதற்கான தொகை 49687 கோடி ரூபாய். மீதி இருக்கும் தொகையில்தான் மற்ற இனங்களுக்கு ஒதுக்க வேண்டும். முக்கியமாக கடன் வாங்கிய தொகையில் வட்டிக்காக அரசு செலுத்த வேண்டிய தொகை 13584 கோடி ரூபாய்.

நிதி அமைச்சர் தமது பட்ஜெட் உரையில் பல முன்னேற்றத் திட்டங்களுக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கியிருந்தாலும் இன்று மிகப் பெரிய பிரச்னையாக தமிழ்நாட்டைப் பாதித்து வரும் மின் பற்றாக்குறையைப் போக்க என்ன செய்யப்போகிறார் என்று பட்ஜெட்டில் தெளிவாக இல்லை.

மொத்தத்தில் தமிழக பட்ஜெட் ஒரு வரவு - செலவு கணக்காகத்தான் இருக்கிறதே தவிர, பொருளாதார முன்னேற்றத்துக்கு என்ன நடவடிக்கைகள் என்று எந்த அறிகுறியும் இல்லை. புதிய வரிவிதிப்பு இல்லை, மேலும் எந்த வரியும் ஏற்றப்படவில்லை என்பது ஒரு ஆறுதல் சமாசாரம் என்றாலும் இது பொருளாதார முன்னேற்றத்துக்கு அடிப்படை ஆகாது. இந்தச் சூழ்நிலையில் தமிழக முதல்வரின் தமிழ்நாடு 2023 ஒரு தொலைநோக்குப் பார்வை" (Tamil Nadu Vision 2023) என்ற திட்டத்தை நிறைவேற்ற பெரும் பாடுபட வேண்டியிருக்கும்.

 வி.கோபாலன்

No comments:

Post a Comment