இந்திய மக்கள் காளை மாட்டைத்
தந்தையாகவும், பசு மாட்டைத் தாயாகவும் கருதுகின்றனர். விலங்குகளை இப்படி
நேசிப்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. மாட்டுச் சாணத்தை எருவாகப்
பயன்படுத்துகின்றனர். சாண வறட்டியை எரித்து அந்தச் சாம்பலை நெற்றியில்
பூசிக்கொள்ளும் விசித்திரப் பழக்கம் இந்தியர்களிடம் இருக்கிறது.
பாதயாத்திரையாக சென்று கடவுளை வணங்கும் இந்திய மக்கள், கணிதம் மற்றும்
நுண்கலைகளில் ஆழ்ந்த அறிவு படைத்தவர்கள். இந்தியாவின் துறைமுக நகரங்களில்
அடிமை வணிகம் நடைபெற்று வந்ததை, தான் கண்கூடாகப் பார்த்ததாகவும் கூறுகிறார்
நிகிதின். மூன்று ஆண்டுகளை இந்தியாவில் கழித்த நிகிதின், இங்கே மக்கள் சமய
வேற்றுமையை மறந்து நட்புடன் அன்புடன் பழகுகின்றனர் என்று குறிப்பிடுவது
மிக முக்கியமானது. 500 ஆண்டுகளுக்கு முன், வியாபார நோக்கத்துக்காக
இந்தியாவுக்கு வந்து சென்ற நிகிதினுக்கு சௌல் துறைமுகத்தில்
நினைவுச்சின்னம் அமைக்க ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்காக இடம்
கொடுத்துள்ளது கொங்கன் கல்விக் கழகம்.
நிகிதின் வாழ்க்கை வரலாற்றை 'பர்தேசி’ என்ற பெயரில்
இந்தி மொழியில் திரைப்படமாக தயாரித்து இருக்கின்றனர். இந்தப் படம் ரஷ்ய
மொழியிலும் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை இயக்கியவர்கள் குவாஜா அகமது
அப்பாஸ் மற்றும் வசிலி புரோனின். இந்தப் படத்தில் நர்கீஸ் கதாநாயகியாக
நடித்திருக்கிறார். இது, நிகிதின் ஓர் இந்தியப் பெண்ணைக் காதலிப்பதைப்
பற்றிய கதை. 15-ம் நூற்றாண்டு இந்தியாவை நிகிதின் எழுத்தில்
பதிவுசெய்திருக்கிறார். அதைவிட ஒரு படி மேலே போய் தனது ஓவியங்களின் மூலம்
18-ம் நூற்றாண்டு இந்தியாவைப் பதிவுசெய்தவர் இளவரசர் அலெக்ஸி சோல்டிகோப்.
இவர், இந்தியாவுக்கு இரண்டு முறை வந்துசென்று இருக்கிறார். முதல் பயணம்
1841 முதல் 43 வரை. இரண்டாவது, 1844 முதல் 1846 வரை. ரஷ்யத் தூதர்,
யாத்ரீகர், ஓவியர் என்று பல்வேறு முகங்கள்கொண்ட அலெக்சி, இந்தியா குறித்து
வரைந்த ஓவியங்கள் இப்போது தொகுப்பாக உள்ளது.
இந்திய இலக்கியங்கள் மற்றும் வேத நூல்கள் அறிமுகமான
அளவுக்கு இந்தியாவின் சமூக வாழ்க்கை பற்றி ரஷ்ய மக்களுக்கு அறிமுகம்
கிடைத்தது இல்லை. 1800-ம் ஆண்டு வரையிலான வரலாற்றுப் புத்தகங்களில்
இந்தியாவைப் பற்றி குறைவான தகவல்களே இருந்தன. ரஷ்யப் பல்கலைக்கழகத்தில்
சமஸ்கிருதம் ஒரு பாடமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டது. அதனால், இந்தியாவின் மரபு
இலக்கியங்கள் குறித்த தேடுதல் ரஷ்ய ஆய்வாளர்களிடம் அதிகம் இருந்தது.
அலெக்ஸியின் தந்தை, மன்னரிடம் இருந்து ஆண்டுக்கு 25,000 ரூபிள் உதவித்
தொகையும், அரச சேவைக்காக மூன்று லட்சம் ரூபிள் வெகுமதியும் பெறக்கூடிய
உயர்பதவி வகித்துவந்தார். பீட்டர்ஸ் பெர்க்கின் பெரிய மாளிகை ஒன்றில்
வசித்த அலெக்சிக்கு பாரசீகக் கலாசாரத்தின் மீது தனி ஈடுபாடு இருந்தது.
அதற்குக் காரணம் அவருக்கு ஒன்பது வயதானபோது, மிர்ஷா அப்துல் ஹசன் கான் என்ற
பாரசீக வணிகர் தனது அலங்காரமான யானைகள், பல்லக்குகளுடன் பெரிய ஊர்வலமாக
அந்த நகருக்கு வந்ததை நேரில் பார்த்ததே. அதற்காகவே, பாரசீகத் தூதராகப்
பணியாற்ற வேண்டும் என்று முடிவுசெய்து தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்
இளவரசர் அலெக்சி. படிக்கும் காலத்திலேயே, ரஷ்யன், பிரெஞ்சு, ஜெர்மன்,
ஆங்கிலம், லத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றுத்தேர்ந்தார். அதோடு, ஓவியம்
வரைவதிலும் ஆர்வம்கொண்டு அரச சபை ஓவியரான அலெக்சாண்டர் ஒர்லாவ்ஸ்கியிடம்
கற்றுக்கொண்டார். தென்னிந்தியாவுக்கு வந்த அலெக்ஸிக்கும், திருவிதாங்கூர்
மன்னர் சுவாதித் திருநாளுக்கும் இருந்த நட்புறவு தனித்துவமானது. சுவாதி
திருநாள் இசையில் மிகுந்த ஆர்வம்கொண்டவர். அவரே நூற்றுக்கும் மேற்பட்ட
சாகித்யங்களை இயற்றி இருக்கிறார். ஆகவே, ஓவியரான அலெக்ஸியுடன் அவருக்கு
நெருக்கமான நட்பு ஏற்பட்டது. சுவாதி திருநாள் ஆட்சியின்போது திருவிதாங்கூர்
சமஸ்தானத்தில் வானவியல் ஆய்வுகளுக்கான ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது.
புதிய அச்சகங்கள், மிருகக் காட்சி சாலை, இலவசப் பாடசாலை, பொது நூலகம்,
சுவடிகள் பாதுகாப்பு நூலகம் என்று பல்வேறு விதமான செயல்பாடுகள் நடந்த
காரணத்தால் சுவாதி திருநாள் மீது மக்கள் மிகுந்த அபிமானத்துடன் இருந்தனர்.
அந்த நாட்களில் இதுபோன்ற சமஸ்தானங்களைக் கண்காணிப்பதற்காக ரெசிடென்ட்
எனப்படும் வெள்ளை அதிகாரி ஒருவர் பணியாற்றுவார். அப்படி ரெசிடென்டாகப்
பணியாற்றிய கல்லன் என்பவர் பெண் பித்தராகவும், பேராசை பிடித்த மனிதராகவும்
இருப்பதை உணர்ந்து அவருடன் சுவாதித் திருநாள் மோதலைக் கடைப்பிடித்தார்.
இதனால், அவருக்கும் பிரிட்டிஷ் கம்பெனிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில்தான் திருவிதாங்கூருக்கு வந்தார் அலெக்ஸி. பிரான்ஸில்
இருந்து கப்பலில் பம்பாய் வந்து சேர்ந்த அலெக்ஸிக்கு, பிரிட்டிஷ் கம்பெனி
சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பம்பாய் நகரில் சில வாரங்கள்
தங்கியிருந்த அவர், கோடையின் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,
இலங்கையை நோக்கிப் புறப்பட்டார். தனிக் கப்பலில் 12 நாட்கள் பயணம் செய்து
கண்டி நகரை அடைந்தார். அங்கே, அரச விருந்தினராக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதன்முறையாக நாட்டுப்புறக் கூத்து நடனம் ஒன்றை அங்கே பார்த்ததாகவும், அது
பிரமிப்பூட்டுவதாக இருந்ததாகவும் அலெக்சி எழுதியிருக்கிறார். இலங்கையில்
இருந்து படகில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்த அலெக்ஸிக்கு, மேளதாளங்கள் முழங்க
சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்கு மலர்மாலை
அணிவிக்கப்பட்டதைப்பெருமையுடன் குறிப்பிடும் அலெக்ஸி, ஆண்கள் பொதுவாக
மலர்களை அணிந்துகொள்வதில்லை. விருந்தினர்களுக்கு மட்டுமே மலர் மாலைகள்
அணிவிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். பாம்பன் பகுதியில் உள்ள
கடற்கரைக் காட்சிகளை வரைவதற்காக இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்தவர்,
அங்கிருந்து பல்லக்கில் பயணம்செய்து நாகப்பட்டினம் வழியாக புதுச்சேரிக்குச்
சென்றார். அங்கும் அவருக்கு சிறப்பான ராஜமரியாதை அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து வேலூர் புறப்பட்ட அவர் அங்கே கோட்டையில்
சிறைவைக்கப்பட்டு இருந்த திப்புவின் குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொண்டு
அவர்களையும் சந்தித்துப் பேசினார். அதன் பிறகு ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாக
மதறாஸ் வந்து சேர்ந்த அவர் எல்பின்ஸ்டோன் பிரபு வீட்டில் விருந்தினராகத்
தங்கியிருந்து மதறாஸின் கலாசார நடவடிக்கைகளை ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.
அதன் பிறகு, அங்கிருந்து கிளம்பி புதுக்கோட்டைக்குச்
சென்ற அலெக்ஸியை புதுக்கோட்டை மன்னர் வரவேற்று விருந்தளித்தார்.
புதுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்குச் சென்றார். தஞ்சை மன்னரிடம் 40
யானைகள், 7 புலிகள், 5 சிறுத்தைகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளவர்,
மன்னருக்கு 300 மனைவிகள் இருந்ததையும் குறிப்பிடத் தவறவில்லை. தஞ்சையில்
இருந்து மதுரைக்குச் சென்றார் இளவரசர் அலெக்ஸி. அங்கே உள்ள கோயிலைக் கண்டு
வியந்து மிகப் பழைமையான மதுரைக் கோயில் வியப்பூட்டுவதாக இருக்கிறது.
இத்தாலி நகரில் கோபுரங்களில் பூனைகள் அலைவதைப் போல மதுரை நகரில் குரங்குகள்
திரிகின்றன என்று தனது குறிப்பேட்டில் எழுதியிருக்கிறார். மதுரையில்
இருந்து குற்றாலம் வழியாக கொல்லம் செல்ல பல்லக்கில் கிளம்பினார். காட்டில்
ஒரு மதம்பிடித்த யானை வெறிகொண்டு சுற்றி அலைவதாக அவரைப் பயமுறுத்தினர்.
அதற்காகப் பழங்குடி மக்கள் 20 பேரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அவர்
காட்டுக்குள் பயணம் செய்தார். ஆறு நாட்கள் பயணத்துக்குப் பிறகு,
காட்டைக் கடந்து சென்றனர். கொல்லத்தில் இருந்து மீண்டும் பயணம் செய்து
திருவனந்தபுரம் சென்று மன்னர் சுவாதித் திருநாளை சந்தித்தார். அங்கே,
வானவியல் ஆய்வுக்காக வந்திருந்த ஜான் கால்டிகட் என்பவருடன் அறிமுகம்
ஏற்பட்டது. அவர், சுவாதித் திருநாள் மன்னர் அழைத்ததின் பேரில் பிரிட்டனில்
இருந்து வானவியல் கருவிகளை வாங்கி வந்து இங்கே வானவியல் கூடம் அமைக்கும்
பணியில் தீவிரமாக இருந்தார். கணித மேதையான சுவாதித் திருநாள் விஞ்ஞானம்,
இசை, ஓவியம், நடனம், இலக்கணம் என்று பரந்த தளங்களில் ஆர்வமும் தனித்திறனும்
கொண்டிருந்ததில் அலெக்சிக்கு ஆச்சர்யம். மன்னரின் விருந்தினராகத்
தங்கியிருந்து தென்னிந்தியாவின் கலை மற்றும் கலாசாரம் குறித்து நிறையவே
அறிந்துகொண்டார்.
சுவாதித் திருநாள் மகாராஜா, அலெக்ஸியை
சந்தோஷப்படுத்துவதற்காக நடன நாடகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அதில்,
ஆதாம் ஒரு முக்கியக் கதாபாத்திரமாக சித்திரிக்கப்பட்டது வேடிக்கையாக
இருந்தது என அலெக்ஸி தனது குறிப்பில் பதிவுசெய்திருக்கிறார்.
திருவிதாங்கூரில் இருந்து மைசூர் சென்று, அங்கிருந்து வட இந்தியா முழுவதும்
பயணம் செய்தவர், வழியில் கண்ட காட்சிகள் அத்தனையையும் ஓவியங்களாக
வரைந்தார். இந்த ஓவியங்களே 18-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது
என்பதற்கான நேரடி அத்தாட்சி.
வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவைப் பற்றி எழுதிய
குறிப்புகள் யாவும் நிஜமானது அல்ல. மிகைப்படுத்துதலும், கேட்டறிந்த
தகவல்களும் நிறைய கலந்திருக்கின்றன. ஆனாலும், கடந்த காலத்தின் குரலை இந்தக்
குறிப்புகள் மூலம் கேட்க முடிகிறது என்பதே இதன் வரலாற்று
முக்கியத்துவத்துக்கான காரணம்.
'இந்தியர்கள் பூமியின் சுற்றளவை 100 சதவிகிதம்
துல்லியமாகக் கணிக்கும் திறன்கொண்டவர்கள், அதே மக்கள்தான், இந்த பூமி ஒரு
மீனின் மீது நிற்கும் பசுவின் கொம்புகளில் தாங்கப்பட்டிருப்பதாக
நம்புகிறார்கள். இந்த இரட்டை மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது?’ என்று
கேட்கும் வெளிநாட்டுப் பயணியின் குரலில் உள்ள உண்மைதான் இன்றும் அதை
வாசிப்பதற்கும் ஆய்வுசெய்வதற்கும் முக்கியத் தூண்டுகோலாக இருக்கிறது.
No comments:
Post a Comment