அகழ்வாய்வு, மொழியியல் ஆய்வு,
நிலவியல் கண்டுபிடிப்பு என்று பல்திறன்கொண்ட புரூஸ் புட், தென்னிந்தியா
முழுவதும் குதிரையில் சுற்றி தொல்கற்காலம் குறித்து ஆய்வுசெய்து
இந்தியாவின் பழைமையை உலகுக்கு அடையாளம் காட்டியவர். அதன் தொடர்ச்சியாக
இன்று, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆய்வில் கல்லாயுதங்கள்
கிடைத்திருக்கின்றன.
இதுகுறித்து, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் சுந்தரவேலு
வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தஞ்சை வட்டத்தில் வல்லம், புதூர்,
சாணூரப்பட்டி, செங்கிப்பட்டி, கூனம்பட்டி ஆகிய இடங்களில் கற்கால
மனிதர்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. அரியலூர் மாவட்டம்
செந்துறை வட்டத்தில் பாசாலம், நல்லாம்பாளையம், செந்துறை, தாமரைப்பூண்டி,
சிறுகளத்தூர், கஞ்சமலைப்பட்டி மற்றும் உடையார்பாளையம் வட்டத்தில்
மருங்கூர், இடையக்குறிச்சி, கூழாட்டுக்குப்பம், மைக்கேல்பட்டி,
பிலிச்சிக்குழி, மேலசிந்தாமணி, காக்காபாளையம், அணிக்குறிச்சி, வெண்மான்
கொண்டான், ஆதிச்சனூர், விளாங்குடி, கா.அம்பாப்பூர், காத்தான்குடிக்காடு,
கோரியம்பட்டி, நடுப்பட்டி, புதுக்குடி, செங்குந்தபுரம் ஆகிய இடங்களிலும்
நுண் கற்கருவிகளும், பழைய கற்காலக் கருவிகளும் கிடைத்திருக்கின்றன.
தர்மபுரி மாவட்டம்தான் அதிக அளவில் கற்கால ஆயுதங்கள் கிடைக்கக்கூடிய
பகுதி'' என்கிறார்.
சிறிய நுண்கற்கருவிகள் குவார்ட்ஸ் என்ற வெள்ளை
நிறக்கல்லை உடைத்துச் செய்யப்பட்டுள்ளன. இரண்டு அங்குலம் உள்ள கற்கருவிகள்,
மிருகங்களைக் கொல்வதற்கும் அவற்றின் தோலை உரிக்கவும், தோல்களை
உடைகளாகவும், குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் தூளியாகவும் கற்கருவிகள் பயன்
பட்டிருக்கின்றன. பூமியைத் தோண்டுவதற்கும், தாவரங்களை வெட்டி
எடுப்பதற்கும் இந்த ஆயு தங்கள் பயன்பட்டன. ஆகவே, பல்வேறுவிதக் கற்களை
செதுக்கி கையடக்க ஆயுதமாக மாற்றிக்கொள்வதன் மூலம் தங்களின் அன்றாடத்
தேவைகளைப் பூர்த்தி செய்யப் பழகினர் பழங்கற்கால மக்கள்.
பழங்கற்காலத்தில் மனிதர்கள் இனக் குழுவாக
வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள், விவசாயத்தின் முக்கியத்துவத்தை
அறிந்திருக்கவில்லை. மிருகங்களை மேய்ச்சலுக்கு ஓட்டி அதை நம்பி வாழும்
வாழ்முறையும் அவர்களுக்குத் தெரியவில்லை. வேட்டையை நம்பி வாழ்வதே
அவர்களின் உலகம். அதற்கு
உதவுவதற்கே இத்தகைய கருவிகள். மனிதர்கள் பயன்படுத்திய முதல் ஆயுதமாக
கடினமான மரத்தடியைக் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தடியை கையில்
ஏந்திக்கொண்டு வேட்டைக்குப் போவது, மிருகங்களைத் தாக்குவது என
செயல்பட்டனர். பிறகு, தடியின் முனையில் கூர்மையான கல்லைக் கட்டி ஈட்டியாகச்
செய்திருக்கின்றனர். அந்த ஈட்டிகளைக் கொண்டு மிருகங்களைக் கொன்றனர். அதன்
பிறகு, உருவாக்கப்பட்டதே கையடக்கக் கோடரி.
இன்றுள்ள இரும்புக் கோடரி போல அது மரத்தில்
பொருத்தப்பட்டது அல்ல. ஒரு கல்லைக் கூர்மையாகச் செதுக்கி அதைக் கையில்
பொருத்திக்கொண்டு அதைக்கொண்டு தாக்கும்படியாக உருவாக்கினர். அது தான்
கற்கோடரி. செதில்போல வடிவமைப்புகொண்ட இந்தக் கோடரி, மிருகங்களின் தோலை
உரித்து எடுப்பதற்கே முக்கியமாகப் பயன்பட்டது. கல் ஆயுதங்களைச் செய்யும்
பட்டறைகள் இந்தியாவில் பல்வேறு குகைகளில் காணப்படுகின்றன.
ஆற்றோரங்களில்தான் பழங்கற்கால மனிதர்கள் அதிகம் வசித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, கிருஷ்ணா நதியை ஒட்டியும், சென்னையில் உள்ள கொற்றலை ஆற்றை
ஒட்டிய அதிரம்பாக்க ஆற்றுப்படுகையிலும் மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள்
இருக்கின்றன. இங்கே வாழ்ந்தவர்களை வேட்டைச் சமூகம் என்றே
வகைப்படுத்துகிறார்கள். ஹோமோ எரெக்டஸ் எனப்படும் மானுட முன்னோடி வம்சமாக
இது இருந்திருக்க கூடும்.
நியாண்டர்தால் மனித எலும்புகள், ஆப்கானிஸ்தானிலும்
பாகிஸ்தானிலும் இந்தியாவின் மராட்டியத்திலும் கிடைத்திருக்கின்றன.
நியாண்டர்தால் மனிதனுக்கு முன் வாழ்ந்த ஹோமோ எரெக்டஸ் மனிதர்கள் கல்
ஆயுதங்களைக் கொண்டுதான் அன்றாட வாழ்வை வாழ்ந்திருக்க முடியும்
என்கிறார்கள். கிங் மற்றும் ராபர்ட் புரூஸ் ஆகியோர் அதிரம்பாக்கம்
பகுதியில் செய்த அகழ்வாய்வை சமீபத்தில் மீளாய்வு செய்திருக்கிறார்
வரலாற்று அறிஞர் சாந்தி பப்பு. இந்த ஆய்வில் கல்ஈட்டி மற்றும் பல்வேறு
கல்லாயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, 15 லட்சம் ஆண்டுகளுக்கு
முற்பட்டதாக இருக்கக்கூடும். கற்காலக் கருவிகளின் வயதைக் கண்டுபிடிப்பதில்
பல்வேறுவிதமான முறைகள் நடைமுறையில் உள்ளன. ஆகவே, துல்லியமாக இதன் பழைமையைக்
கணிக்க முடியவில்லை. தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும்,
ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும்
அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப்பிந்தைய கற்காலத்தில் களிமண் போன்ற
வண்டற் படிவகளைக்கொண்டு மண்பாண்டங்கள் செய்யப்பட்டன.
தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே
முதல் காலம். கற்காலத்தை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும் என 1851-ம்
ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவர்.
இன்று பயன்பாட்டில் உள்ள கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை
ஜான் லுப்பொக் என்பவரால் 1865-ம் ஆண்டில், அவர் எழுதிய 'வரலாற்றுக்கு
முந்திய காலங்கள்’ என்னும் நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பழைய கற்காலம்.
இடைக் கற்காலம். புதிய கற்காலம் எனும் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய
காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப்
பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும்
பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடுகின்றன.
பழைய கற்கால மனிதர்களின் வரலாறு 5 லட்சம் ஆண்டுகளுக்கு
முன்பிருந்தே தோன்றுகிறது. பழைய கற்கால மனிதர்களை உணவு சேகரிப்போர் என
வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். மனிதனின் முக்கியமான
கண்டுபிடிப்புகளில் ஒன்றான நெருப்பு இந்தக் காலத்தில்தான்
கண்டுபிடிக்கப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் பிம்பெடகா என்ற இடத்தில்
கற்கால மனிதர்களின் 30ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம் ஒன்று
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் வேட்டைக் காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
குகைகளில் இதை எதற்காக வரைந்தனர் என்பதற்கான காரணம் இன்றும் முழுமையாக
அறியப்படவில்லை. ஆனால், சடங்குகள் காரணமாக இவை வரையப்பட்டிருக்கலாம் என்ற
ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இடைக்கற்காலம் என்பது கி.மு. 10,000-ல்
இருந்து கி.மு. 6,000 வரை உள்ள காலம். இந்தக் காலகட்டத்தில், நாடோடியாக
வாழ்ந்த மனிதர்கள் குழுக்களாக இணைந்து வாழத் தொடங்கினர். இவர்களும் கல்
ஆயுதங்களையே பயன்படுத்தினர். ஆனால், இவை நுண்மையான ஆயுதங்களாக இருந்தன.
இடைக்கற்காலச் சான்றுகள் குஜராத்தின் லகான்ஜ் ராஜஸ்தான், மத்தியப்
பிரதேசத்தின் ஆதம்கர் மற்றும் பீகார், தமிழகப் பகுதிகளில்
கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கற்காலத்தின் கடைசிக் காலம் புதிய கற்காலம். இது கி.மு
6,000 முதல் கி.மு 4,000 வரை உள்ள காலம் என்கிறார்கள். மனித நாகரிகத்தில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நடைபெற்ற காலகட்டம் அது. அந்தக்
காலங்களில்தான் கால்நடைகளை வீட்டில் வளர்க்க ஆரம்பித்தனர். முறையாக
விவசாயம் செய்தனர். மனிதனின் மிக முக்கியக் கண்டுபிடிப்பான சக்கரம்
உருவாக்கப்பட்டது. கல் ஆயுதங்களைப் பயன்படுத்தி வந்த மனிதன் உலோகங்களைக்
கண்டெடுத்தான். பிறகு, அவற்றை உருக்கி உலோகக் கருவிகளைச் செய்தான்.
படிப்படியாக கல் ஆயுதங்களுக்கு விடைகொடுத்து உலோக ஆயுதங்களைப் பயன்படுத்த
ஆரம்பித்தான். இது, உலோகக் காலம் ஆகும்.
கருவிகளின் பயன்பாடு சமூகத்தின் செயற்பாடுகள்
நம்பிக்கைகள் ஆகியவற்றைச் சுட்டும் ஒரு காரணி மட்டுமே. இடைப் பழைய
கற்காலத்திலும், மேல் பழைய கற்காலத்திலும் மனிதர்கள் தொடக்கக் கால வகை
ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன், இறந்தோரை அடக்கம் செய்தல், சடங்குகள்
செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இடைக்
கற்காலத்தில் கடல்மட்ட உயர்வு, காலநிலை மாற்றங்கள், உணவுக்கான புதிய
மூலங்களைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய கற்காலத்தில், வேளாண்மை,
மண்பாண்டங்களின் வளர்ச்சி, பெரிய குடியிருப்புக்களின் தோற்றம் என்பன
முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன. பயிர்களை அறுவடைசெய்வதற்கும்
பதப்படுத்துவதற்குமான தேவை ஏற்பட்டதால், அரைப்பதற்கும், தீட்டுவதற்குமான
கற்கருவிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. முதன்முதலாக பெரும்
கட்டுமானங்கள் கட்டப்பட்டன.
பொதுவாகப்
பழைய கற்காலத் தொடக்கத்தில் மக்கள் வேட்டையாடுபவர்களாகவும் உணவு
சேகரிப்போராகவும் மட்டுமே இருந்தனர். ஆண், பெண்களுக்கு இடையே சம நிலை
நிலவியது. ஆண்கள் வேட்டைக்குச் சென்றனர். உணவு சேகரிப்பு மற்றும்
குழந்தைகளைக் கவனிப்பதில் பெண் ஈடுபட்டாள். இதற்கு மேலுள்ள வேலைகளை இரு
பகுதியினரும் சமமாகவே பகிர்ந்துசெய்தனர். ஆண், பெண் இருவருமே தாவரங்கள்,
மூலிகைகள் என்பன பற்றிக் குறிப்பிடத்தக்க அறிவைப் பெற்றிருந்தனர். இதனால்,
அவர்களுடைய வாழ்க்கை முறை இயற்கையோடு இணைந்திருந்தது.
விவசாயம் செய்யத் தொடங்கியதும் மேய்ச்சலைப் பயன்படுத்தி
வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயன்றதும், உருக்கு உலைகளின் அறிமுகமும்
கற்காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தன. உலோகத்தின் பயன்பாடு அறிமுகமான பிறகு
கத்தி, கோடரி, சுத்தியல், ஊசி, ஈட்டி, தூண்டில், கேடயம், கவசம், வில்அம்பு
ஆகியவை செம்பு மற்றும் இரும்பைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. இந்தக்
கருவிகளின் வளர்ச்சியே மானுட வளர்ச்சியின் முதல் கட்டம். கற்காலத்தில்
வாழ்ந்த மக்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, பொதுவாகக் குகை மனிதர்கள்
என்றே கூறுகிறார்கள். இது சரியல்ல. குகையில் வாழும் மனிதர்கள் என்று பொருள்
தரும் ட்ரோக்லோடைட்ஸ் எனும் கிரேக்கச் சொல்லுக்கு பொந்துகளில்
வசிப்பவர்கள் என்றே பொருள்.
கற்கால மனிதர்களில் பெரும்பான்மையினர் வேட்டையாடி உயிர்
வாழும் நாடோடிக் கூட்டத்தினர். எப்போதாவது சில இடங்களில் குகைகளைப் பயன்
படுத்தினர். மற்றபடி ஆற்றோரங்களிலும் திறந்தவெளிகளிலும்தான்
வாழ்ந்திருக்கிறார்கள். கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என, 200-க்கும்
மேற்பட்ட இடங்கள் ஐரோப்பாவில் அடை யாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைவான
இடங்களே குகைகள். ஆகவே, கற்கால மனிதர்கள் யாவரும் குகை மனிதர்கள் என்று
கூறுவது ஏற்புடையது அல்ல. கற்கால மனிதர்கள் வாழ்ந்த விதம் மற்றும் அவர்கள்
பயன்படுத்திய ஆயுதங்கள் போன்றவற்றை விளக்கும் அகழ்வாய்வுக் காப்பகம் ஒன்று
திருவள்ளூர் மாவட்டத்தின் பூண்டியில் அமைந்துள்ளது. இந்தக் காப்பகத்தில்,
நெருப்பை உண்டாக்கப் பயன்படுத்தப்பட்ட சிக்கிமுக்கிக் கற்கள் மற்றும்
பழங்கற்கால ஆயுதங்கள், கற்கால மனிதர்களின் தோற்றம் மற்றும் வாழ்வியல்
முறைகள் சிற்ப வடிவம்கொண்ட கண்காட்சியாக இடம் பெற்றுள்ளன
ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வாழ்ந்த
தடயம்கொண்ட தமிழகம் அதன் வரலாற்றுப் பெருமைகளை மறந்து முக்கிய வரலாற்றுச்
சின்னங்கள், தடயங்கள், அகழ்வாய்வு நடைபெற்ற இடங்கள்
யாவற்றையும் சிதைத்தும் அகற்றியும், கைவிட்ட நிலையில் வைத்துள்ளது
வரலாற்றுக்குச் செய்யும் பெரும் துரோகம்.
No comments:
Post a Comment