Search This Blog

Saturday, April 06, 2013

எனது இந்தியா (மணமகனுக்கு வலைவீசிய கப்பல்கள்!) - எஸ். ...

எண்ணிக்கையற்ற விநோதங்களாலும் வியப்புகளாலும் நிரம்பியது வரலாறு. 19-ம் நூற்றாண்டில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா புறப்படும் கப்பல்களில் இடம் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. காரணம், திருமண வேட்​டைக்காக இந்தியா புறப்பட்ட வெள்ளைக்கார இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

படித்த, உயர்வகுப்பு பிரிட்டிஷ் ஆண்களில் பலர் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்துவிட்ட காரணத்தால், நல்ல மாப்பிள்ளை வேண்டி பிரிட்டிஷ் இளம்பெண்கள் கப்பல், கப்பலாக இந்தியாவுக்கு வந்து இறங்கினர். இப்படி, மணமகனைத் தேடி வலைவீசி வந்த கப்பல்களுக்கு 'ஃபிஷ்ஷிங் பிளீட்’ என்று பெயர்.

திருமணத்துக்காக பெண்களை இந்தியா அனுப்பிவைக்கும் இந்த முறைக்கு முன்னோடியாக இருந்தவர்கள் போர்த்துக்கீசியர்கள். 15-ம் நூற்றாண்டில் கடலோடிகளாக போர்த்துக்கீசியர்கள் இந்தியா​வுக்கு வந்து கோவாவில் தங்களுடைய குடியேற்றத்தை நிறுவிய காலத்தில், அவர்கள் பெண்களை உடன் அழைத்து வரவில்லை. ஒரு போர்த்துக்கீசியன் தனது மனைவியையோ, மகளையோ கப்பல் பயணத்தில் இந்தியா அழைத்து வருவது எளிதானதாக இல்லை. இதற்காக, மன்னரிடம் தனி அனுமதி பெற வேண்டியிருந்தது. அத்துடன், நிறையப் பணம் செலவிட வேண்டும்.

இந்தியா வந்த போர்த்துக்கீசியர்கள் இங்குள்ள இந்தியப் பெண்களுடன் பழகி சேர்ந்து வாழ்ந்தனர். 'இது, மதக் கட்டுப்பாட்டை மீறிய செயல். இதன் காரணமாக, அவர்களிடம் ஒழுக்கக்குறைவு ஏற்படு​கிறது. அதைப் போக்குவதற்கு போர்த்துக்கீசிய இளம்​பெண்களை உடனே இந்தியாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை இயேசு சபை பாதிரிகள் முன்வைத்தனர்.


அதைத் தொடர்ந்து, போர்த்துக்கீசிய நாட்டில் போரில் பங்கேற்று இறந்துபோனவர்​களின் பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்த இளம்பெண்கள் பலர் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 'ஆர்பஸ் டெல் ராய்’ எனப்படும் ஆதரவற்றோர் காப்பகத்தைச் சேர்ந்த இளம்​பெண்கள் கப்பல் கப்பலாக கோவா வந்து இறங்கினர். 'அரசரின் அநாதைகள்’ என்று அழைக்கப்பட்ட இந்த இளம்பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முன்வரும் போர்த்துக்கீசிய இளைஞர்களுக்கு அரசுப் பணி, நிலம் மற்றும் உதவித் தொகை  வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

ஆர்பஸ் டெல் ராய் இல்லத்தில் வளர்ந்த இளம்பெண்களை ஏற்றிக் கொண்டு, கோவாவுக்கு ஒரு கப்பல் 1545-ம் ஆண்டு வந்து சேர்ந்தது. பதவி மற்றும் உதவித்தொகை கிடைக்கிறதே என, பல போர்த்துக்கீசியர்கள் இந்தப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாக, லிஸ்பன் நகரில் இருந்து ஆதரவற்றப் பெண்களை ஏற்றிக்கொண்டு மாப்பிள்ளை தேடும் கப்பல்கள் நிறைய புறப்பட்டன. ஒருகட்டத்தில், கோவாவில் போர்த்துக்கீசிய மாப்பிள்ளை கிடைப்பதே சிரமமாகிப்போனது. ஒருவரே இரண்டு திருமணங்கள் செய்துகொள்வது மற்றும் முதல் திருமணத்தை மறைத்து, மறுமணம் செய்து கொள்வது என்ற குளறுபடிகள் ஏற்படத் தொடங்கின.

இதையடுத்து, இனிமேல் இந்தியாவுக்குப் பெண்களை அனுப்ப வேண்டாம் என்று, கோவா நிர்வாகம் போர்த்துக்கீசிய மன்னரிடம் கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு அதற்கு செவிமெடுக்கவில்லை. இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு கப்பலிலும் 100 இளம்பெண்களாவது வந்தனர். ஒரு​முறை, இளம்பெண்கள் வந்த ஒரு கப்பல் கடற்புயலில் சிக்கியது. கப்பலுக்குள் தண்ணீர் புகுந்து, பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்துவிட்டனர். மற்றவர்களை காப்பாற்றி சரக்குக் கப்பல்களில் அரபு நாடுகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே, அந்தப் பெண்கள் அடிமைச் சந்தையில் விற்கப்பட்டனர். இன்னொரு முறை, போர்த்துக்கீசியப் பெண்களை ஏற்றி வந்த கப்பல் ஒன்றை டச்சுக்காரர்கள் வழிமறித்துக் கொள்ளையிட்டனர். அதோடு, கப்பலில் இருந்த இளம்பெண்களை சூரத் நகருக்கு கடத்திச் சென்றனர். சூரத் நகரில் உள்ள வணிகர்கள் அழகான போர்த்துக்கீசியப் பெண்களைத் திருமணம் செய்துகொள்வதற்குப் போட்டியிட்டனர். இந்தப் பெண்களில் அழகியாக இருந்த 'டோனா லூசியா’ என்ற பெண்ணை சூரத்தில் இருந்த டச்சு வணிகர் ஒருவரே திருமணம் செய்துகொண்டார். இன்னொரு பெண்ணை ஒரு இஸ்லாமியர் மதம்மாற்றித் திருமணம் செய்துகொண்டார். இப்படி, போர்த்துக்​கீசியரைத் திருமணம் செய்துகொள்ள இந்தியா வந்த பெண்களை பல்வேறு இனத்தவர்கள் திருமணம் செய்து​கொண்டதும் நடந்தேறியது. 1595-ம் ஆண்டு போர்த்துக்கீசிய அரசு, இளம்​பெண்களை இந்தியா அனுப்பத் தடை விதித்தது. இதற்கு உள்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்குத் திருமண வேட்டைக்காக பெண்கள் மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தியா புறப்படும் பெண்களுக்கு தேவையான உடைகள், சமையல் பாத்திரங்கள், மெழுகுவத்திகள் உள்ளிட்ட பொருட்​களை போர்த்துக்கீசிய அரசே பரிசாக அளித்து அனுப்பியது.

கோவாவில் உரிய மணமகன் கிடைக்​காத பெண்கள், பம்பாயின் தெற்கில் உள்ள சௌல், தமாவு போன்ற இடங்களில் குடியேறினர். சிலர், மணமகனைத் தேடி இலங்கைக்கும் சென்றனர். சில போர்த்துக்கீசியப் பெண்கள், உள்ளூர் வணிகர்களின் சுகப்பெண்களாகவும், மன்னரின் ஆசைநாயகியாகவும் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். கிழக்கிந்தியக் கம்பெனி​யில் பணியாற்றியவர்களில் உயர் அதிகாரிகள் மட்டுமே தங்களது குடும்பப் பெண்களை இந்தியாவுக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள், தனித்து வாழ வேண்டிய கட்டாயம். இதே நிலை, ஆரம்ப காலத்தில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி பணியாளர்களுக்கு இருந்தது. ஆனால் அவர்கள், ஜாவாவில் தங்களுக்​கான தனிக்குடியேற்றம் ஒன்றை உருவாக்கிக்கொண்ட காரணத்தால், குடும்பத்துடன் சேர்ந்து வாழ அனுமதிக்​கப்பட்டனர்.

இது, ஜாவாவில் பணியாற்றிய டச்சுக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்த சலுகை. சூரத்தில் பணியாற்றிய டச்சுக்காரர்கள் குடும்பம் இல்லாமலே வாழ்ந்தனர். இவர்களில் சிலர் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டபோதும் டச்சுப் பெண்கள் கிடைக்காத காரணத்தால் ஆர்மேனிய அல்லது சிரியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். அந்தப் பெண்கள் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்று மட்டுமே நிபந்தனை இருந்தது. இதனால், கப்பலில் வந்து இறங்கும் போர்த்துக்கீசியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு ஜாவாவில் குடியேற, டச்சு அதிகாரிகள் பலர் ஆசைப்பட்டனர்.

இப்படிப் போர்த்துக்கீசியக் கப்பலில், மாப்பிள்ளை தேடி வந்த அழகான இளம்பெண்களான மரியா, ஜுலியன் ஆகிய இருவரையும் அக்பரின் ஆசைநாயகியாகத் தேர்வு செய்து அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றனர்.  அந்தப் பெண்களின் அழகில் மயங்கிய அக்பர், மரியாவை தனது ஆசை​நாயகியாக ஆக்கிக்கொண்டார் என்று 'ராயல் இந்தியா’ என்ற புத்த​கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 'அல்போன்சா அல்பெர்க்யூ’ என்ற கடலோடி நாடு பிடிக்கும் ஆசையில் மன்னர்களுக்கு இளம்​பெண்களைப் பரிசாக அளித்து தனது வணிக ஒப்பந்தங்களை நிறைவேற்றிக்கொண்டார் என்றும் ஒரு குறிப்பு காணப்படுகிறது. 19-ம் நூற்றாண்டுக்கு முன்பே ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயப் பெண்கள் இந்தியா வரத் தொடங்கிவிட்டனர். 1617-ம் ஆண்டு ஆர்மீனியப் பெண் ஒருத்தியின் வேலைக்காரியாக வந்த 'பிரான்சிஸ் வேர்தி’ என்பவரே இந்தியாவுக்கு வந்த முதல் ஆங்கிலேயப் பெண் என்று, வரலாற்று ஆய்வாளர் சிவனடி குறிப்பிடுகிறார். இந்த 'பிரான்சிஸ் வேர்தி’ கடற்பயணத்திலேயே காதல் வயப்பட்டு இந்தியாவில் இறங்கியவுடன் ஒருவருடன் ஓடிப்​போய்விட்டார் என்ற குறிப்பு ஒன்றை​யும் சிவனடி எழுதி இருக்கிறார்.

No comments:

Post a Comment