அதுவரை ஏகபோகமாக விவசாய உரிமைகளை அனுபவித்து வந்த உயர்குடி
நிலப்பிரபுக்கள், புலேயின் செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்தனர். தங்களின்
ஆச்சாரங்களைக் கெடுப்பதற்கு முயற்சிக்கிறார் என உயர்குடி பிரா மணர்கள்
கூக்குரலிட்டனர். பிறப்பால் உயர்குடியாக பிறந்தவன் மட்டுமே உயர்வானவன்,
அவனது நிலையை ஒருபோதும் சூத்திரர்கள் அடைய முடியாது என்று பகிரங்க அறைகூவல்
விட்டனர். தங்களின் உரிமைகளுக்காகப் போராடிய தாழ்த்தப்பட்ட மக்களை
அடித்தும் உதைத்தும் பொய் வழக்குகளில் சிக்கவைத்தும் புலேயின் போராட்டங்களை
ஒடுக்க முயன்றனர். ஆனால், புலே இந்த அச்சுறுத்தல்களுக்கு பயப்படாமல்
போராட்டங்களைத் தொடர்ந்தார்.
கேசவராவ் பவால்கர், ஜகத்நாத் சதாவி, அண்ணா சகஸ்ரபுதே,
பாபுராவ்ஜி மண்டே, விஷ்ணு மோரேஷ்சவர் பீடே, கிருஷ்ணா சாஸ்திரி சிப்லுங்கர்,
விஷ்ணு சாஸ்திரி பண்டிட் ஆகியோர் இந்தப் பள்ளியின் செயற்குழு
உறுப்பினார்களாக இருந்தனர். இவர்களில் சிலர் பிராமணர்கள். அவர்கள்,
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு கல்வி தருவதன்
முக்கியத்துவத்தை உணர்ந்தனர். சமூக மாற்றங்களுக்கு குரல் கொடுக்க
முன்வந்தனர். அவர்களையும் வைதீக பிராமணர்கள் விட்டுவைக்கவில்லை. பள்ளியின்
ஆசிரியராக செயல்பட்டு வந்த விஷ்ணுபந்த் தட்டே என்ற பிராமணரைத் தடுத்து,
அவரை சாதிவிலக்கம் செய்துவிடுவதாக மிரட்டினர். உனது பெண் பிள்ளைகளை நாங்கள்
ஒருவரும் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என்று அச்சுறுத்தினர். தொடர்ந்த
மிரட்டலைக் கண்டு அவர் பயந்து, ஆசிரியர் பொறுப்பை ராஜினாமா
செய்துவிட்டார்.
பள்ளிக்கூடம் வளர்ந்து வரும் சூழலில் அதற்கு ஆசிரியர்
இல்லாமல் போய்விட்டதால் இனி என்ன செய்வது என்ற நெருக்கடி நிலை.
தாழ்த்தப்பட்டவர்கள் படித்து ஆசிரியப் பணிக்கு வர வேண்டும், அதுதான்
இதற்கான நிரந்தரத் தீர்வு என்று திட்டமிட்ட புலே, வேறு ஆசிரியர் கிடைக்கும்
வரை தனது மனைவி சாவித்திரி பாயை ஆசிரியராக்கி விட்டார். தாழ்த்தப்பட்ட
ஒரு பெண் ஆசிரியராகப் பணியாற்றுகிறாள். இதனால், கல்வியின் புனிதம்
கெட்டுவிட்டது. இது, எங்கே போய் முடியப்போகிறது எனத்தெரியவில்லை
என்று பள்ளியின் முன்னால் வைதீகவாதிகள் திரண்டு கூச்சலிட்டனர்.
சாவித்திரியை வழிமறித்து ஆபாசமாகப் பேசி சாபமிட்டனர். அவர்மீது காறித்
துப்பினர். சகதியை அள்ளி வீசினர். இதற்காக பல நாட்கள் பள்ளியின்
ஜன்னல்களையும் கதவுகளையும் மூடிவைத்துவிட்டுத்தான் பாடம் நடத்தப்பட்டது.
ஒரு ரௌடிக் கும்பல் கல்லால் தாக்கி, சாவித்திரி பாயால் புனே நகரின் புனிதம்
கெட்டுவிட்டது, அவள் ஒரு வேசி என்று அவமானப்படுத்தினர். அதற்குப் பிறகு
ரஸ்தா பேட், புத்வார் பேட், வித்தல் பேட் ஆகிய பகுதிகளில் புதிய பள்ளிகள்
தொடங்கப்பட்டன. ஒரு பக்கம் பிராமணர்கள் ஜோதிராவ் புலேயைக் கடுமையாக
எதிர்த்தபோது, மறுபக்கம் அவருக்கு ஆதரவு அளித்து துணை நின்றவர்களும்
பிராமணர்களே. பெண் கல்வியைப் போலவே விதவைத் திரு மணத்தையும் கைவிடப்பட்ட
அனாதைக் குழந்தைகளின் நலனையும், முக்கியமான சமூகப் போராட்டமாகக் கருதினார்
புலே. விதவைப் பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று
வலியுறுத்தினார். கைவிடப்பட்ட அனாதைக் குழந்தைகளுக்காக காப்பகம் ஒன்றைத்
தொடங்கினார். அங்கே, சாதி வேறுபாடுகள் எதுவுமின்றி குழந்தைகள்
வளர்க்கப்பட்டனர். கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் எவரும் புலேயின் காப்பகத்தில்
வந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம். சாதி, மதம் பற்றி எந்தக்
கட்டுப்பாடும் கிடையாது. அந்தக் குழந்தைகளை காப்பகமே வளர்க்கும் என்ற
சுவரொட்டி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. அப்படி, காப்பகத்தில்
சேர்க்கப்பட்ட காஷி என்ற பிராமணப் பெண்ணின் குழந்தையை தத்து எடுத்து
வளர்த்தார் புலே.
பல இடங்களிலும் தீண்டத்தகாதவர்கள் குடிதண்ணீர்
கிணற்றைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, 1868-ல் தனது
வீட்டுக் கிணற்றில் இருந்து யார் வேண்டுமானாலும் தண்ணீர்
எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். அதுபோலவே, சமபந்தி விருந்து உண்ணும்
வழக்கத்தையும் தொடங்கி வைத்தார். குழந்தைத் திருமணத்தை எதிர்த்த புலே,
புரோகிதர்களால் நடத்தப்படும் திருமணச் சடங்குமுறைகள் பெரிதும் மாற்றப்பட
வேண்டும் என வலியுறுத்தினார். கடவுளின் பெயரால் நடந்த மோசடிகளை எதிர்த்து
கடவுளுக்கும் வணங்குபவனுக்கும் இடையில் புரோகிதர்கள் இடைநிலை ஏஜென்ட் போல
செயல்பட்டு ஏமாற்றுகிறார்கள் என்று கண்டித்தார். பிறப்பால் மனிதர்களிடம்
எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. சமூகப் பிரிவினைகள் யாவும் மனிதர்களால்
உண்டாக்கப்பட்டவை. ஆகவே, அவற்றை ஆராய்ந்து தேவையற்ற விஷயங்களைக் கைவிட
வேண்டும் என்றார். பிரிட்டிஷ் ஆட்சி, பேஷ்வாக்களைப் போல கடுமையான சாதி
விரோதப்போக்குகளை கடைப்பிடிக்கவில்லை. ஆகவே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நாம்
எதிர்க்க வேண்டியதில்லை என்பது பூலேயின் நிலைப்பாடு. 1876-ம் ஆண்டு புனே
முனிசிபாலிட்டி உறுப்பினராக ஜோதிராவ் புலே தேர்வு செய்யப்பட்டார். 1877-ல்
ஏற்பட்ட பஞ்சத்தின்போது, கிராமம் கிராமமாகச் சென்று உதவிகள் செய்தார்.
விக்டோரியா காப்பகம் என்ற ஒன்றைத் தொடங்கி, ஆதரவற்றோருக்கு உணவு அளித்தார்.
தீனபந்து என்ற இதழில் ஜோதிராவ் புலே தொடர்ச்சியாக எழுதி வந்த கட்டுரைகள்
சமூக நீதிக்காக அவர் எவ்வளவு தீவிரமாக செயல்பட்டிருக்கிறார் என்பதற்கு
சாட்சி.
ஜோதிராவ் புலேயின் நண்பரான லோகாண்டே, இந்தியத் தொழிற்சங்கப் பணிகளில்
முன்னோடியாக இருந்தார். இவர், பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப்
போராடினார். அவரது போராட்டங்களுக்குத் துணை நின்ற புலே, தொழிலாளர்கள்,
விவசாயிகள் ஆகியோர் தங்களின் உரிமைகளுக்காக தொழிற்சங்கம் அமைத்து செயல்பட
வேண்டும் என்று வலியுறுத்தினார். அந்த நாட்களில் பெரிதாக வளர்ந்துவந்த ஆரிய
சமாஜம், பிரம்ம சமாஜம் ஆகிய இரண்டைப் பற்றி கடுமையான விமர்சனம் செய்தார்
புலே. அவை, மதச் சீர்திருத்த இயக்கம்போல தோற்றம்கொண்டிருந்தாலும்
பிராமணர்களின் செல்வாக்கில் உருவான அமைப்புகள். படித்த பிராமணர்களின்
ஆசைக்காக உருவாக்கப்பட்ட அந்த அமைப்புகளால் சமூக அவலங்களைப் போக்க முடியாது
என்று கூறினார். 1880-ம் ஆண்டு புனே முனிசிபாலிட்டி, அன்றைய கவர்னர்
ஜெனரலாக இருந்த லிட்டன் பிரபுவை ஆடம்பரமாக வரவேற்க 1,000 ரூபாய் செலவிடத்
திட்டமிட்டது. அதிகாரத்தில் இருப்பவர்களை சந்தோஷப்படுத்த மக்களின்
வரிப்பணத்தை செலவு செய்வது தவறு. இந்தப் பணத்தைக்கொண்டு மக்களின்
அடிப்படைக் கல்விக்கு உதவி செய்யலாம். லிட்டனுக்கு ஆடம்பர வரவேற்பு
கொடுப்பதை தான் எதிர்ப்பதாக பூலே கூறினார்.
அதுபோலவே, விக்டோரியா மகாராணியின் பேரனான கன்னாட்
பிரபுவுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்கு
விவசாயிபோல உடை அணிந்து சென்ற புலே தடுத்து நிறுத்தப்பட்டார். ஆனால், அவர்
சரளமாக ஆங்கிலம் பேசியவுடன் அனுமதிக்கப்பட்டார். அந்த நிகழ்ச் சியில்
புலே பேசும்போது, விக்டோரியா மகாராணியின் பேரன் உண்மையான இந்தியக்
கிராமங்களையும், மக்களையும் காண விரும்பினால், அருகில் உள்ள சேரிக்கு
சென்று அங்கு வசிக்கும் தீண்டத்தகாத மக்களைப் பார்க்க வேண்டும். இதுபோன்ற
கூட்டங்கள் பகட்டானவை. இங்கே வருபவர்கள் உயர்தட்டு மக்கள். இவர்களை வைத்து
உண்மையான இந்தியாவை எடைபோட முடியாது. ஆகவே, அவர் உண்மையான இந்தியாவைக் காண
சேரிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த உரை பலத்த வரவேற்பைப்
பெற்றது.
சமூகப் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னின்று நடத்தி
வந்த புலேயின் வீட்டை ஒரு கும்பல் அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன்
சுற்றி வளைத்தது. அவர்களிடம் புலே அமைதியான குரலில், ''என்னைக் கொல்வதால்
உங்களுக்குப் பணம் கிடைக்கும் என்றால், நான் சாகத் தயார். இப்போதுகூட
உங்களைப்போல அடித்தட்டு மக்களைக்கொண்டே உயர்குடியினர் வன்முறையில் ஈடுப
டுகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். எனது இனத்தைச் சேர்ந்த உங்கள் கையால்
சாவது எனக்குப் பெருமையே, நீங்கள் என்னைக் கொல்லுங்கள்'' என்றார். அவர்கள்
ஆயுதங்களைப் போட்டுவிட்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டனர். நாம்தேவ்
கும்பார், ரோடே என்ற இரண்டு முரடர்கள் அதன் பிறகு புலே நடத்திய இரவுப்
பள்ளியில் சேர்ந்தனர். கும்பார் பின்னாளில் புலேயின் மெய்க்காப்பாளராகப்
பணியாற்றியதோடு, வேதச்சார் என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். 1890-ம்
ஆண்டு நவம்பர் 28-ம் தேதி பூலே மரணமடைந்தார். தன் வாழ்நாளில் 40
ஆண்டுகளுக்கும் மேலாக சமூகப் போராட்டங்களில் தன்னை முழுமையாக
ஈடுபடுத்திக்கொண்ட புலேயின் பணியே அம்பேத்கருக்கு முன்னோடிச் செயல்பாடாக
இருந்தது.
இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகள், சலுகைகள் ஆகியவை
தானாகக் கிடைத்தவை அல்ல. சமூக நீதிக்காகப் போராடியவர்களின் அர்ப்பணிப்பே
இதற்கான ஆதாரம். அவர்களைப் பற்றி நம்மில் பலர் ஒரு நிமிடம்கூட எண்ணிப்
பார்ப்பது இல்லை. இதைவிட, காலங்காலமாக ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற
உரிமைகளை, நீதியை இன்று சுயலாபங்களுக்காக தூக்கி எறிகிறோம். எவர்
செய்தாலும் சாதியின் பெயரால் நடைபெறும் வன்முறை, மன்னிக்க முடியாத குற்றமே.
No comments:
Post a Comment