இந்திய, தமிழ்நாட்டு அரசியலில் தேர்தல் சமயங்களில் எல்லாம் அடிபடும் ஒரு
தலைப்பு - மூன்றாவது அணி! முதல் இரண்டு அணிகள் எவை என்பதில் இன்று
யாருக்கும் சந்தேகம்
இருக்க முடியாது. தில்லி அரசியலென்றால், அவை காங்கிரஸ், பி.ஜே.பி.! தமிழக
அரசியலென்றால், தி.மு.க., அ.இ.அ.தி.மு.க.! ஆனால் இவைதான் முதல் இரு அணிகள்
என்ற நிலை ஏற்பட்டது
எழுபதுகளுக்குப் பிறகுதான்! இந்த வரலாற்றைப் புரிந்து கொண்டால்தான் இனி
மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு உண்டா இல்லையா என்பதையே ஆராயமுடியும்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நடந்த முதல் பொதுத் தேர்தலின்போது
தில்லியிலும் தமிழ்நாட்டிலும் இருந்த இரு பிரதான கட்சிகளில் ஒன்று
காங்கிரஸ். மற்றது இரண்டு
இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சிதான். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு
படவில்லை. தில்லியில் நேருவின் காங்கிரஸ் 364 எம்.பி.களைப் பெற்றது.
கம்யூனிஸ்டுகள் அடுத்த
இடத்தில் 16 எம்.பி.களுடன் இருந்தனர். ஹைதராபாத்தில் கம்யூனிஸ்டுகளின்
இயக்கமாக இருந்த மக்கள் ஜனநாயக முன்னணி தனிக் கட்சியாகப் போட்டியிட்டு 7
எம்.பி.களைப் பெற்றது.
ஜெயப் பிரகாஷ் நாராயணனின் சோஷலிஸ்ட் கட்சி 12 இடமும் கிருபளானியின் கிசான்
மஸ்தூர் பிரஜா (உழவன் உழைப்பாளி குடிமக்கள்) கட்சி 9 இடங்களும் பெற் றன.
பின்னர் சோஷலிஸ்ட்
கட்சியும் கிசான் பிரஜாவும் இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியாயிற்று.
இன்றைய பி.ஜே.பி.யின் முன்னோடியான ஜன சங்கம் அந்த முதல் தேர்தலில்
பெற்றது வெறும் மூன்று எம்.பி. இடங்கள்தான். அதன் தோழமை அமைப்பான இந்து
மகாசபா பெற்றது நான்கு. இன்னொரு இந்துத்துவ அமைப்பான ராமராஜ்ய
பரீஷத் பெற்றது மூன்று. ஒரிசாவில் பழைய மகாராஜாக்களின் கட்சியான கணதந்திர
பரீஷத் ஏழு எம்.பி. இடங்களைப் பிடித்தது.
அதே தேர்தலில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை ராஜதானியில்,பெரியார்
திராவிடர் கழகத்தை உருவாக்கி விலகியதும், தேய்ந்துபோய்விட்ட ஜஸ்டிஸ் கட்சி
போட்டியிட்டும் ஒரு
இடம் கூடப் பெறவில்லை. முதல் தேர்தலில் தி.மு.க. தில்லிக்கும்
போட்டியிடவில்லை; மாநில சட்டசபைக்கும் போட்டியிடவில்லை.சென்னை ராஜதானியில் சட்டமன்றத் தேர்தலிலும் முதல் இடத்தில் காங்கிரசும்
(164 எம்.எல்.ஏ.க்கள்) இரண்டாம் நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியுமே (62)
இருந்தன. பெரியார், கம்யூனிஸ்டுகளை
ஆதரித்தார். தி.மு.க. போட்டியிடாத போதும் (பா.ம.க.வின் முன்னோடிகளான)
வன்னியர் சாதிக் கட்சிகளை ஆதரித்தது! அவை 25 இடங்களைப் பெற்றன! பின்னர்
காங்கிரஸ் அணிக்குப்
போய்விட்டன. ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் ஜெயப்பிரகாசரின் சோஷலிஸ்ட்
கட்சி 35 எம்.எல்.ஏ.க்களையும் கிருபளானியின் கிசான் பிரஜா கட்சி 13
எம்.எல்.ஏ.க்களையும் என்.ஜி. ரங்காவின்
லோக் கட்சி 15 எம்.எல்.ஏ.க்களையும் அடைந்தன. இவையெல்லாம் சென்னை
ராஜதானிக்குள் அப்போது இருந்த ஆந்திரம், ஒரிசா, கர்நாடகம், கேரளப்
பகுதிகளில் செல்வாக்குடன் இருந்தவை. தமிழ்நாட்டில்
அல்ல.இப்படி முதல் தேர்தல் நடந்த 1952ல் காங்கிரசுக்கு அடுத்த அணியாக இருந்த
கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க. வளர்ந்து 1957ல் அடுத்த தேர்தலில்
போட்டியிட்டதுமே பலத்த அடிவாங்கிவிட்டது. தி.மு.க.வுக்கு 13. கம்யூனிஸ்ட்
கட்சிக்கு வெறும்
நான்கு சீட்! இந்தச் சரிவுக்கு முக்கியமான இன்னொரு காரணம் இந்தத்
தேர்தலின்போது சென்னை ராஜதானி மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதாகும்.
கம்யூனிஸ்டுகளுக்கு தமிழ்நாட்டை விட
ஆந்திரம், கேரளம், ஒரிசா பகுதிகளிலேயே அதிக செல்வாக்கு இருந்தது. அடுத்து
வந்த 1962 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்தும் கூட கம்யூனிஸ்ட்
கட்சிக்குக்
கிடைத்தது இரண்டு எம்.எல்.ஏ.தான். தி.மு.கவுக்கு 50! தி.மு.க.விலிருந்து
பிரிந்து சென்ற ஈ.வி.கே. சம்பத்தின் கட்சி போட்டியிட்ட 9 இடத்திலும்
தோற்றது. காங்கிரஸ் 139 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சியாயிற்று.
1967 தேர்தலின்போது கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு இரு கட்சிகளாகியிருந்தது.
அதில் மார்க்சிஸ்ட் கட்சி, வலதுசாரியான ராஜாஜியின் சுதந்திரா கட்சி சகிதம்
தி.மு.க. கூட்டணியில் இருந்தது. சுதந்திராவுக்கு 20 இடங்களும்
மார்க்சிஸ்ட்டுக்கு 11 இடங்களும் கிடைத்தன. யாருடனும் கூட்டு சேராமல்
தனித்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு எம்.எல்.ஏ.க்களை
பெற்றது.இப்படியாக 1952ல் இரண்டாம் நிலையில் இருந்த இடதுசாரிகள் 1967ல் சென்னையில்
அந்த இடத்தை இழந்து அடிமட்டத்துக்குப் போய் விட்டார்கள். தில்லியில்
அவ்வளவு மோசமில்லை. தொடர்ந்து 20 முதல் 40 வரை இடங்களைப் பெற்றுப்
பெரும்பாலும்
இரண்டாம் இடத்திலேயே இருந்து வந்தனர். 1967 தேர்தலில் காங்கிரஸ்
பலவீனமடைந்த போதும் கூட ஆட்சியைப் பிடித்தது. கம்யூனிஸ்டு கட்சி இரண்டாகப்
பிளவுபட்டும் கூட
இரு பிரிவுகளுமாகச் சேர்ந்து 42 இடங்களை வென்றன. ஜனசங்கம்,
சோஷலிஸ்ட்டுகள், சுதந்திரா போன்றோர் எல்லாம் அடுத்த நிலையிலேயே பலவீனமாக
இருந்தனர்.பலமான நிலையில் காங்கிரஸ், அடுத்து பல இடங்கள் தள்ளியிருந்தாலும் இரண்டாம்
இடத்தில் இடதுசாரிகள் என்று 1967 வரை தில்லியில் இருந்த நிலை எழுபதுகளில்
மாறத் தொடங்கியது. முக்கியமான காரணம் இந்திரா காந்தி, காங்கிரஸ் கட்சியை
1969ல் பிளவுபடுத்தியதுதான். பிளவுபட்ட காங்கிரசின் ஓர் அணி இந்திரா
தலைமையில் சோஷலிசம் பேசிற்று. ராஜ மான்ய ஒழிப்பு, வங்கி தேசியமயம் எல்லாம்
செய்யப்பட்டன. இன்னொரு அணி வலதுசாரி பழமைவாதம் பேசிற்று.சோஷலிஸ்டுகளில் கொஞ்சம் பேர் இந்திராவுடன் சேர்ந்தார்கள். இடதுசாரிகள்
அவ்வப்போது இந்திராவை ஆதரிப்பது, எதிர்ப்பது என்று மாறி மாறி நிலை
எடுத்தார்கள். ஜனசங்கம் போன்ற வலதுசாரி மத வாத அமைப்பும், சுதந்திரா போன்ற
வலதுசாரி
மதச்சார்பற்ற அமைப்பும் சோஷலிஸ்டுகளில் ஜனநாயகத்தை முக்கியமாகக்
கருதியவர்களும் இந்திராவை எதிர்த்த காங்கிரசின் அணியுடன் கலக்க
ஆரம்பித்தார்கள். 1970 முதல் 1980 வரை பத்தாண்டுகள் தில்லி அரசியலில்
இந்த மிக்சிங் நடந்தபடி இருந்தது. இதில் கடைசியில் பயனடைந்தவர்கள்
இந்துத்துவவாதிகளான ஜனசங்கிகள்/ஆர்.எஸ்.எஸ்.தான்.
சென்னை அரசியல் இன்னும் விசித்திரமாயிற்று. 1967ல்தான் ஆட்சியிலிருந்து
அகற்றிய காங்கிரசுடனே தி.மு.க. 1971ல் நான்கே வருடங்களில் கூட்டு
சேர்ந்தது. காரணம் இப்போது
இரண்டு காங்கிரஸ் கட்சிகள் வந்துவிட்டன. ஒன்று இந்திரா. இன்னொன்று காமராஜ்.
தமிழ்நாட்டில் தம் தலைமைக்குச் சவால் காமராஜிடமிருந்துதான் வரமுடியும்
என்று தெளிவாக உணர்ந்திருந்த கலைஞர்
கருணாநிதி, இந்திராவைப் பயன்படுத்தி காமராஜைப் பலவீனப்படுத்தினார்.
தி.மு.க.வுக்கு எதிராக காமராஜர் உருவாக்கிய எதிர்ப்பலையெல்லாம்,
அனைத்திந்திய அளவில் அவர் சார்ந்திருந்த பிற்போக்கான சக்திகளினால்
வீணாயிற்று.அப்போது இந்திரா மட்டும் காமராஜரைத் தம்முடன் இருக்கும்படி செய்திருந்தால்,
தமிழக அரசியல் மாறிப் போயிருக்கும். அனைத்திந்திய அரசியலும்தான். ஆனால்
அது நிகழவில்லை. 1971 தேர்தல் வெற்றி, வங்கதேச உருவாக்கப் போர்
வெற்றி எல்லாம் முடிந்ததும், இந்தியப் பொருளாதார வீழ்ச்சியைச் சரி
செய்யவும், ஊழலைத் தடுக்கவும் இந்திராவிடம் எந்தத் திட்டமும் இல்லை. இதில்
உண்டான அதிருப்தி
வட மாநிலங்களில் மாணவர் இயக்கமாக உருவாகி, சோஷலிஸ்ட் தலைவர் ஜெயப்பிரகாஷ்
நாராயணன் தலைமையில் மக்கள் இயக்கமாக மாறியது. ஜனசங்கம் முதல் லோகியாவாதிகள்
வரை ஓரணியில்
திரண்டனர்.தமிழ்நாட்டில் காமராஜரை இந்திரா அலை மூலம் வீழ்த்திய கலைஞர், இந்திராவைத்
தேர்தல் தொகுதி உடன்பாட்டின் மூலம் வீழ்த்தியிருந்தார். 1971 சட்ட மன்றத்
தேர்தலை விட
மக்களவைத் தேர்தலையே தன் அதிகாரத்துக்கு முக்கியமென இந்திரா கருதியிருந்த
பலவீனத்தைப் பயன்படுத்தி கலைஞர், தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திரா
காங்கிரசுக்குப் போட்டியிட ஒரு சீட் கூட
தராமல் தொகுதி உடன்பாடு செய்தார். 1967ல் ஆட்சியை இழந்தபோது கூட 40 சதவிகித
வாக்கு பெற்றிருந்த காங்கிரஸ் சட்ட சபைக்குள் நுழையவே முடியாமல் போயிற்று.கலைஞரின் இந்த அரசியல் சூழ்ச்சியை காங்கிரசுக்குள் இருந்த சோஷலிஸ்டுகளும்
காங்கிரஸை வெளியிலிருந்து ஆதரித்த சில கம்யூனிஸ்டுகளும் முன்னதாகவே
புரிந்து கொண்டு விட்டனர். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர்
கட்சிக்குள்ளும் வெளியிலும் தம்மை வலுப்படுத்திக் கொள்ளும் கலைஞர்
கருணாநிதியையும் அவரது தி.மு.க.வையும் பலவீனப்படுத்தாமல் காங்கிரஸோ
இடதுசாரிகளோ திரும்ப மேலெழ முடியாது என்பது இவர்களுக்கு நன்றாக உறைத்தது.
எனவே கட்சிக்குள் தமக்குப் போட்டியாளரான எம்.ஜி.ஆரைப் பலவீனப்படுத்த
முயற்சித்துக் கொண்டிருந்த கலைஞரை அதே எம்.ஜி.ஆரைக் கொண்டே வீழ்த்துவது
என்று எதிர் வியூகம் வகுக்கப் பட்டது.
ஆனால் காங்கிரஸ் சோஷலிஸ்டுகள்- கம்யூனிஸ்டுகளின் இந்த முயற்சி பஸ்மாசுரன்
கதை மாதிரி ஆகிவிட்டது. தி.மு.க.வின் முதன்மை இடத்துக்குக் காங்கிரசும்
வரமுடியவில்லை. தன் பழைய இரண்டாம் இடத்துக்கு இடதுசாரிகளும் வரமுடியவில்லை.
முதல் இரண்டு
இடங்களும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டுக்கும்தான். இதில் யாரேனும்
ஒருவரை நம்பித்தான் தாங்கள் இருக்க முடியும் என்ற நிலைக்கு காங்கிரசும்
இடதுசாரிகளும் தள்ளப்பட்டுவிட்டார்கள். எழுபதுகளின் இறுதியிலிருந்து
இதுதான் தமிழகச்
சூழல். இதில் மூன்றாம் அணி என்றால், அது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. அல்லாத
இன்னொன்றாகவே இருக்க முடியும். அதற்கான முயற்சிகள் என்ன ஆயின; இனி
அதெல்லாம்
சாத்தியமா என்று பின்னர் பார்ப்போம். தில்லி அரசியல் காங்கிரஸ்-இடதுசாரிகள் என்று அறுபதுகளில் இருந்த நிலையை
ஜே.பி. இயக்கமும் அதைச் சமாளிக்க இந்திரா கொண்டு வந்த நெருக்கடி நிலையும்
மாற்றியமைத்தன. இந்துத்துவர்கள்
முதல் வலதுசாரிகள், சோஷலிஸ்டுகள் வரை சங்கமித்து உருவாக்கிய ஜனதா கட்சி
காங்கிரசுக்கான மாற்று இரண்டாம் அணியாகத் தோற்றமளித்தது. ஆனால் அதை
உருவாக்கி அதில்
ஊடுருவி அதைப் பயன்படுத்தி, தங்களையே முதன்மைப்படுத்திக் கொள்ள
திட்டமிட்டிருந்த ஜனசங்கிகள், இரண்டே வருடங்களில் ஜனதாவைப் பலவீனமாக்கி,
பாரதிய ஜனதா கட்சியாக இன்னொரு
அவதாரம் எடுத்தனர்.
எண்பதுகளில் இருந்து தில்லி அரசியலைப் பொறுத்தமட்டில் முதல் அணி காங்கிரஸ்,
இரண்டாம் அணி பி.ஜே.பி. என்ற நிலை இப்படித்தான் தொடங்கியது. இப்போது
அங்கேயும் இவையல்லாத
மூன்றாம் அணி சாத்தியமா, இதற்கு முன் இரண்டாம் நிலையில் இருந்த
இடதுசாரிகளும் சோஷலிஸ்டுகளும் புத்துயிர்ப்பு பெறுவார்களா என்பதைப் பின்னர்
பார்ப்போம்.
No comments:
Post a Comment