ஓரிரண்டு தோல்விகள் மூலம் என்னையும் என் அணியையும் சுலபமாக எடை
போட்டுவிடாதீர்கள். கிரிக்கெட்டில் பொறுமை முக்கியம். என்னையும் என்
அணியையும் நம்புங்கள்." டி20 - 50 ஓவர் என இரு உலகக்கோப்பை வெற்றிகள்,
சாம்பியன் டிராபி கோப்பை, டெஸ்ட் - ஒருநாள் போட்டிகளின் தர
வரிசைப்பட்டியலில்
நெ.1 இடம், 2 ஐ.பி.எல். கோப்பைகள், சாம்பியன் லீக் வெற்றி என
கிரிக்கெட்டில் உள்ள அத்தனை சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கும் தோனியின்
உணர்வுகளை இப்படித்தான்
புரிந்து கொள்ள முடிகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் கிடைத்த 8 டெஸ்ட் தோல்விகள், இந்தியாவில்
நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வி
பின்னடைவுகளால் 6 மாதங்களுக்கு முன்புவரை, தோனி மீது நம்பிக்கை
இல்லை. வீராத் கோலி எப்போது கேப்டன் ஆவார் என்றார்கள். ஆனால், அவ்வப்போது
நிகழும் தோல்விகளால் தம்மை இகழ்வது எவ்வளவு பெரிய தவறு
என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார் தோனி. இந்திய கேப்டனாக இருப்பதை விடவும் ஒரு பெரிய கொடுமை எதுவுமில்லை. எப்போதும்
சீனியர்களை அரவணைக்க வேண்டும், கூடவே ஜூனியர்களையும் வழிநடத்த வேண்டும்.
ஒரு சிறிய தவறுக்கு
நாடே பொங்கி எழும். நிபுணர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கேள்விகளால்
துளைத்தெடுப்பார்கள். தோனி, இயல்பில் பொறுமையானவர். ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட்களில் தோற்றபோது
அவர்மீது நம்பிக்கை வைக்க ஓர் ஆள்கூட இல்லை. இந்திய அணித் தேர்வுக்குழுவும்
அவரை நீக்க எல்லா
ஏற்பாடுகளும் செய்தது. பிறகு பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசனால் அது
தடுக்கப்பட்டது. அதன்பிறகு ஆடிய காமன்வெல்த் பேங்க் சீரிஸ் தொடரிலும்
இந்திய அணி
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை. இந்த நிலையில் வேறு எந்த கேப்டனாக
இருந்தாலும் உடனே பதவி விலகி இருப்பார். ஆனால், தோனி தொடர்ந்து தம்
திறமைமீது
உறுதியாக இருந்தார்.
கோலி அடுத்த கேப்டன் என்கிற பேச்சு அடிபட்டபோதும் நிதானம் தவறவில்லை.
அதேசமயம், ஷேவாக், கம்பீர் போன்ற முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பிய
போதும் தோனி அவர்களை
அணியிலிருந்து நீக்கவில்லை. அந்த வேலையைத் தேர்வுக் குழு செய்ய வேண்டும்
என்று காத்திருந்தார். அதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. மெல்ல மெல்ல
இந்திய அணியில் நிகழ்ந்த சில
மாற்றங்கள் தோனியின் பல பிரச்னைகளுக்குத் தீர்வு கொடுத்துள்ளன. ஹர்பஜனுக்கு மாற்றாக வந்த அஸ்வின் உடனடியாக அணியில் தம் இடத்தை உறுதி
செய்தார். சச்சின் ஒருநாள் அணியிலிருந்து ஓய்வு பெற்றதால் அணிக்குள்
நுழைந்த ஷிகர் தவன் ஒரு பிரளயத்தையே
உருவாக்கி இருக்கிறார். கூடவே, தவானும் முரளி விஜயும் டெஸ்ட் அணியில் இடம்
பிடித்து ஒரு புதிய கூட்டணியைத் தொடங்கியிருக்கிறார்கள். யுவ்ராஜ்
சிங்கின் மறு
அவதாரம் பலனளிக்காதபோது ரவீந்தர் ஜடேஜா கையை உயர்த்தினார். சச்சின், ஷேவாக், கம்பீர், யுவ்ராஜ் சிங், ஷாகீர் கான், ஹர்பஜன் சிங் என
2011 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்கள் இன்று இந்திய
அணியில் இல்லை. பதிலுக்கு அணியில்
இடம்பிடித்த புதிய வீரர்கள் புதிய மலர்ச்சியைக் கொண்டு
வந்துருக்கிறார்கள். 2000ம் வருடம், கங்குலி தலைமையில் உருவான புதிய அணி
ஞாபகத்துக்கு வருகிறது. தோனி, முதல் முதலில் கேப்டனானபோது ஓர் இளைஞர் அணி பட்டாளத்தைக் கொண்டு டி20
உலகக்கோப்பையையும் காமன்வெல்த் சீரீஸ் தொடரையும் வென்று காண்பித்தார்.
இன்றும் அதே
போல் ஒரு அணியின் உதவியோடு சாம்பியன் டிராபியை வென்றுள்ளார். இந்த
நேரத்தில், தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் படேலையும் பாராட்டவேண்டும்.
ஜாம்பவான்களை எல்லாம் தைரியமாக அணியிலிருந்து
நீக்கி, இனிமேல், ஆடுகளத்தில் பங்களிக்காதவர்களுக்கு அணியில் இடமில்லை
என்கிற பயத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்திய ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான நேரம். ஏராளமான தோல்விகள், ஐ.பி.ல்.
பிரச்னைகள் என கிரிக்கெட்டையே வெறுக்கும் அளவுக்குப் பல சங்கடமான
விஷயங்கள் சமீபகாலத்தில் நடந்துவிட்டன. அத்தனைக்கும் மருந்தாக
அமைந்திருக்கிறது, சாம்பியன்ஸ் டிராபி வெற்றி. ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை 4-0
என்கிற கணக்கில் வென்ற பிறகு
கிடைத்திருக்கும் இன்னொரு மகத்தான வெற்றி. இந்திய கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக
சச்சின் அறியப்படுவதுபோல கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கேப்டன் என்கிற புகழை
அடைந்திருக்கிறார் தோனி. சச்சினின் ஓய்வு வரை அவரைக்
கேள்வி கேட்காமல் சுதந்திரமாக வைத்திருப்பது போன்ற நம்பிக்கையை இனி தோனி
மீதும் வைக்கவேண்டும். அடுத்த தலைமுறைக்கான அணி, தோனியின் பின்னால்
நிற்கிறது.
புதிய முகம்!
இனி இந்திய அணியில் ஷேவாக், கம்பீர் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா என்கிற
கேள்வி எழுந்துள்ளது. ஷிகர் தவான், ரோஹித் சர்மாவோடு முரளி விஜயும் தொடக்க
ஆட்டக்காரராக அணியில் இடம்பெற்றுள்ளார். தவிர, ரெஹானேவுக்கு
மீண்டும் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஐ.பி.எல்.-லில்
ஹர்பஜன் சிங் சிறப் பாகப் பந்து வீசினார். ஆனால் ஜடேஜாவின்
அசத்தலான பந்துவீச்சு, ஹர்பஜனுக்கு சுலபத்தில் வழிவிடுவதாகத் தெரியவில்லை.
அஸ்வின், ஜடேஜா, மிஸ்ராவுக்குப் பிறகுதான் ஹர்பஜன். அதாவது, வெயிட்டிங்
லிஸ்ட். மிடில் ஆர்டரில்
தினேஷ் கார்த்திக்குக்கு ஓர் இடம் கிடைத்துவிட்டதாலும், புஜாரா, எப்போது
வேண்டுமானாலும் 50 ஓவர் அணிக்குள் நுழையலாம். ஷாகீர்கானுக்கு மீண்டும்
டெஸ்ட் அணியில் இடம்
கிடைக்கலாம். ஜூலையில் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து
5 ஒருநாள் ஆட்டங்களில் ஆடுகிறது. அதற்கான இந்திய அணியில் பழைய
முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமா அல்லது மீண்டும் ஒரு இளைஞர்
பட்டாளத்தைத் தேர்வுக்குழு தேர்ந்தெடுக்குமா என்பது பெரிய சஸ்பென்ஸ்.
மாற்றங்கள் தந்த மலர்ச்சி! வாழ்த்துக்கள்!
ReplyDelete