இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் இந்திய ரூபாய் ஒரு அமெரிக்க டாலருக்கு 54 -
ரூபாய் என்ற கணக்கில் இருந்து ரூபாய் 58.98 என்ற அளவுக்கு ஒரு பெரிய
வீழ்ச்சியைக் கண்டது. இந்த 10 சதவீத வீழ்ச்சி
நான்கு நாள் இடைவெளியில் ஏற்பட்டது. என்ன காரணம்?
இந்தியா ஆண்டொன்றுக்கு சுமார் 500 - பில்லியன் டாலர் மதிப்புக்குப் பிற
நாடுகளில் இருந்து மிகத் தேவையான பொருள்களை இறக்குமதி செய்கிறது.
இதில் பெருமளவு கச்சா எண்ணெய்! அதன் மதிப்பு சுமார் 150 பில்லியன் டாலர்.
அடுத்தபடியாக தங்கம்! சுமார் 60 பில்லியன் டாலர். தவிர கனரக இயந்திரங்கள்,
தாவர எண்ணெய், செய்திப்
பத்திரிகைகளுக்குத் தேவையான காகிதம் (Newsprint), ராணுவ சாதனங்கள்,
இத்யாதி, இத்யாதி... இறக்குமதியில் அடங்கும். நமது பொருளாதார இயந்திரம் தடங்கலின்றி இயங்க வேண்டுமானால் தங்கத்தைத் தவிர,
இந்த இறக்குமதி பொருள்கள் அனைத்தும் மிக அவசியம். இதற்கு நாம் செலுத்த
வேண்டிய
பணத்தை டாலரில் கணக்கிட்டு நாம் ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பின்
மூலம் சரி செய்கிறோம். ஆண்டொன்றுக்கு நமது ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்பு
சுமார் 300 - பில்லியன் டாலர்தான். இதைத் தவிர
வெளிநாடு வாழும் இந்தியர்கள் அனுப்பும் அன்னியச் செலாவணி மற்றும் ஐ.டி.
நிறுவனங்கள் ஈட்டும் அன்னியச் செலாவணி.இந்த இரண்டு துறைகளின் மூலம் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 -
பில்லியன் டாலர் அளவுக்கு அன்னியச் செலாவணி பெறுகிறது. ஆக ஏற்றுமதி,
இறக்குமதி வர்த்தகத்தில் துண்டு விழும்
தொகை சுமார் 100 பில்லியன் டாலர். இதைச் சமாளிக்க இந்திய அரசு,
தொழில்துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதுடன்
அன்னிய முதலீட்டாளர்களை இந்திய
பங்குச் சந்தை மற்றும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவும்
அனுமதித்திருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களின் மூலம் பற்றாக்குறையைச்
சரிக்கட்ட முயலுகிறது.
ஜூன் முதல் வாரத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள்
தாங்கள் இறக்குமதி செய்த கச்சா எண்ணெய்க்குச் செலுத்த வேண்டிய அமெரிக்க
டாலரை வர்த்தக
வங்கிகளிலிருந்து அதற்கான இந்திய ரூபாயைக் கட்டிப் பெற வேண்டியிருந்தது.
அதேசமயத்தில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் (FII)தாங்கள் இந்தியப்
பங்குச்
சந்தையில் முதலீடு செய்திருந்த பங்குகளை விற்று அந்தத் தொகையை டாலராக
மாற்றி எடுத்துச் செல்லும் முயற்சிகளில் இறங்கினார்கள். இதனால் டாலருக்கு
ஏக கிராக்கி! வர்த்தக வங்கிகளிடம் குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர் கைவசம் இல்லாததால்
இந்திய ரூபாயின் வீழ்ச்சி 4 - நாட்களுக்குள் சுமார் 5 ரூபாய்வரை இறங்கியது.
இந்த வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த
பாரத ரிசர்வ் வங்கி உடனே செயல்பட்டு தன் கைவசம் இருந்த டாலரில் ஒரு பகுதியை
விற்க ஆரம்பித்தது. அதனால் ரூபாயின் தொடர் வீழ்ச்சி நிறுத்தப்பட்டு
விட்டாலும் தற்போதைய நிலவரப்படி இந்திய ரூபாய் ஒரு
டாலருக்கு சுமார் 58 ரூபாய்க்கும் அதிகமாகவே இருக்கிறது.ரூபாயின் இந்த வீழ்ச்சியினால் நாம் இறக்குமதி செய்யும் பொருள்களின் விலை
உயர்கிறது. காரணம் ஒரு டாலருக்கு நாம் கொடுக்க வேண்டிய அதிக இந்திய
ரூபாய். முக்கியமாக கச்சா எண்ணெய் விலை சுமார் 10 சதவிகிதம்வரை அதிகமாகக்
கூடும். இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறும். அதனால் மற்ற
பொருள்களின் விலையும்
ஏறும். பண வீக்கம் அதிகமாகும். சாதாரண மற்றும் நடுத்தர மக்கள்
சிரமப்படுவார்கள்.
இதற்கு என்ன நிவாரணம்?
எந்த நாட்டிலும் ஏற்றுமதியும், இறக்குமதியும் ஒரே அளவில் இருந்தால் பிரச்னை
இல்லை! இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருந்தால் அந்த நாட்டின்
நாணயத்தின் மதிப்பு மற்ற
நாட்டு நாணயங்களுக்கு எதிராக உயருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில்
ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி அதிகமாகிறது. ஏற்றுமதி குறைகிறது!
சமீபத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவிகிதத்திலிருந்து 8 -
சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டும் தங்கத்தின் இறக்குமதியின் அளவு
குறைந்ததாகத் தெரியவில்லை.
வி.கோபாலன்
அருமையான விளக்கம்! நன்றி!
ReplyDelete