Search This Blog

Thursday, June 06, 2013

அருள்வாக்கு - அநாயாஸம்!

 
‘அநாயாஸம்’ என்பது ஆத்ம குணங்களில் அடுத்தது. ஆயாஸத் துக்கு எதிர்ப்பதம் அநாயாஸம். ‘லைட்’டாக இருப்பது என்கிறார்களே அதுதான் அநாயாஸம். ஆயாஸம் இல்லாமல், அதாவது எதையுமே ஒரு சுமையாக எடுத்துக் கொண்டு, கஷ்டப்படாமல், ‘லைட்’டாக, லேசாக இருப்பது அநாயாஸம். எப்போது பார்த்தாலும் ‘உர்’ரென்று இருந்துகொண்டு வாழ்க்கையில் தனக்கு எல்லாம் கஷ்டம் என்று புலம்பிக்கொண்டு, நொந்து கொண்டு இல்லாமல், எதிலும் கடுமையாகச் செய்யாமல் நிம்மதியோடு லேசாகச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதாலேயே ஆயாஸப்பட்டுக் கொண்டு செய்வதைவிடப் பலமடங்கு வேலை செய்துவிடலாம். பதட்டமில்லாமல் பண்ணுவது அநாயாஸம். படபட என்று செய்தால் நம்மையும் நெரித்துக்கொண்டு மற்றவர்களையும் நெரிப்பதுதான் மிஞ்சுமே தவிர, காரியம் சரியாக ஆகாது. அநாயாஸம் ஒரு பெரிய Virtue (குணசீலம்). அலட்டிக்கொள்ளாமல் இருக்கிற குணம் அநாயாஸம். தானும் சிரமப்படாமல், மற்றவர்களையும் சிரமப்படுத்திக் கொண்டிராமல் இருப்பது அநாயாஸம். அநேக கர்மாநுஷ்டானங்களில் உடம்பால் சிரமப் படத்தான் வேண்டியிருக்கும். 
 
சிரார்த்தம் செய்வதென்றால் மத்தியானம் இரண்டு மணி, மூன்று மணிவரை பட்டினி கிடக்கத்தான் வேண்டும். ஒரு யாகம் என்றால் அதில் இருக்கிற சரீர சிரமம் கொஞ்ச நஞ்சமில்லை; ஆகையால், இங்கே சிரமப்படக் கூடாது என்பது மனசினால் சிரமப்படாமலிருப் பதைத்தான் குறிக்கும். எந்தக் காரியமானாலும் விக்கினங்கள் ஏதாவது வரத்தான் செய்யும். இதைப் பார்த்து மனஸை strain பண்ணிக் கொள்ளக்கூடாது. எல்லாம் பகவான் திட்டப்படி நடக்கிறது என்று, மனசிலே பாரமில்லாமல் இருக்க வேண்டும். சங்கீத வித்வான் அநாயாஸமாக தாரஸ்தாயி பிடித்தார் என்றால் என்ன அர்த்தம்? சிரம சாத்ய மானதையே சுலபமாக்கிக் கொண்டு விட்டார் என்றுதானே அர்த்தம்? சிரமமான வாழ்க்கையை அப்படிப் பண்ணிக் கொள்வதுதான் ‘அநாயாஸம்’.

No comments:

Post a Comment