Search This Blog

Saturday, June 08, 2013

நாராயணமூர்த்தி ரிட்டர்ன்ஸ்!

 
இந்திய சாஃப்ட்வேர் துறையில் ஒரு சின்ன பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி (வயது 67). 2011 ஆகஸ்டில் தம் தளபதிகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற நாராயணமூர்த்தி மீண்டும் இன்ஃபோசிஸுக்குத் திரும்பி இருக்கிறார். ‘மீண்டும் வருவேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 5 சதவிகித ஷேர்கள்தான் என்னிடம் இருக்கின்றன. ஆனால், மனோரீதியாக நான் 100 சதவிகிதம் இன்ஃபோசிஸ் உடன் இணைந்திருக்கிறேன்’ என்று கூறும் நாராயணமூர்த்தி இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் எக்சிகியூடிவ் சேர்மன். கூடவே, நாராயணமூர்த்திக்கு உறுதுணையாக இருக்க அவரது 30 வயது மகன் ரோஹன் மூர்த்தியும் வந்திருக்கிறார். இருவருமே வருடத்துக்கு ஒரே ஒரு ரூபாய் சம்பளம் பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள்
 
திடீரென்று நாராயணமூர்த்தியை இன்ஃபோசிஸ் நிறுவனம் வற்புறுத்தி வரவழைத்து இருப்பதன் பின் னணி என்ன? இதுதான் தற்போது இந்திய ஐ.டி. துறையின் வாய்க்குக் கிடைத்திருக்கும் அவல். கொஞ்ச நாட்களாகவே இதுபோல ஏதாவது நடக்கக்கூடும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக மந்தப்பட்டு, சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் போட்டி ஐ.டி. நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி, காக்னிசன்ட் போன்றவை அபார வளர்ச்சி கண்டன. இப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலையில் நாராயணமூர்த்தி போன்ற அகில உலக அளவில் பிரம்மாண்டமான இமேஜ் கொண்ட ஒருவர் வந்தால், கம்பெனியின் பிசினஸ் வளர்ச்சிக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  2008-09ல், இன்ஃபோசிஸைவிட இரண்டு பில்லியன் டாலர் அளவுக்கு வருவாய் குறைவாக இருந்த காக்னிசன்ட் இப்போது இன்ஃபோசிஸை முந்திவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், இன்ஃபோசிஸைவிட ஒன்றரை பில்லியன் டாலர் வருமானம் அதிகமாக இருந்த டி.சி.எஸ். இப்போது நாலு பில்லியன் அளவுக்கு அதிகரித்து விட்டது. இன்ஃபோசிஸின் பிசினஸ் வளர்ச்சிக்கு தற்போதைய தலைமைச் செயல் அதிகாரியான சிபுலால் உருவாக்கிய செயல்திட்டம் போதிய பலனளிக்கவில்லையாம். நாராயணமூர்த்தியின் மறுவரவு மகிழ்ச்சியையும் விமர்சனங்களையும் ஒருங்கே கொண்டு வந்திருக்கிறது. பங்குச் சந்தையின் இன்ஃபோசிஸ் ஷேர்கள் ஒன்பது சதவிகிதம் உயர்ந்து, நாராயணமூர்த்திக்கு வரவேற்பு கூறின. அவர் நிறுவனத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடுவார் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தையில் மட்டுமல்ல, இன்ஃபோசிஸ் பணியாளர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.1.5 லட்சம் பணியாளர்களைக் கொண்ட இன்ஃபோசிஸில் சென்ற ஆண்டு சம்பள உயர்வே வழங்கப்படவில்லையாம். இன்றைய சூழலில் யாரும் ஐ.டி. வேலைகளை விட்டு வெளிவரவே மாட்டார்கள். காரணம் பொருளாதாரத் தேக்கம். ஆனால் இன்ஃபோசிஸில் மட்டும் 16.3 சதவிகிதம் பணியாளர் விலகல். காரணம், வளர்ச்சியின்மை. இதையெல்லாம் நாராயணமூர்த்தி நிச்சயம் சரி செய்துவிடுவார் என்று இன்ஃபோசிஸ் பணியாளர்கள் நம்புகிறார்கள்.
 
நமக்கு இப்போது வேண்டியது ரிசல்ட்! அதற்கு ஆக வேண்டியதைச் செய்வோம்’ என்று சொல்லி இருக்கிறார் நாராயணமூர்த்தி.

No comments:

Post a Comment