நெல்சன் மண்டேலா
தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் 1918 ஜூலை 18 அன்று பிறந்தார்.
அப்பா சோசா பழங்குடி இனத் தலைவர். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட மண்டேலா
மேற்படிப்பை லண்டன்
மற்றும் தென் ஆப்பிரிக்க பல்கலைக் கழகங்களில் முடித்தார். ஜோகனஸ்பர்க்
கல்லூரியில் பகுதி நேரம் சட்டக் கல்வியும் பயின்றார். ஆப்பிரிக்க தேசியக்
காங்கிரஸில் சேர்ந்து கறுப்பர் இன விடுதலைக்காகப் போராடினார்.
ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து மண்டேலா மீது
வழக்கு பாய்ந்தது. வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்தில் வின்னியுடன்
திருமணம். கணவனின் கொள்கைகளுக்காகப் போராடியதுடன் அவரது
பொதுவாழ்க்கைக்கு முழு ஒத்துழைப்பும் வின்னி அளித்தார். கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் சிறுபான்மை வெள்ளையர்களே ஆண்டு வந்தனர்.சொந்த மண்ணிலேயே கறுப்பர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். இதற்கிடையே
‘ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின்’ தலைவர் பொறுப்பும் தேடி வர, அரசுக்கு
எதிரான போராட்டங்களில்
தீவிரமாக இறங்கினார் மண்டேலா. பலமுறை சிறையில் அடைக்கப்பட்ட போதும் இவரது
வேகம் குறையவில்லை. 1956ல் கறுப்பின மக்களுக்குப் பிரத்யேக கடவுச் சீட்டு
வழங்கப்படுவதை எதிர்த்து நடைபெற்ற ஊர்வலத்தில் வன்முறை
வெடித்து 69 பேர் கொல்லப்பட்டனர். தேசத் துரோக குற்றத்துக்காக ஐந்து ஆண்டு
சிறைவாசத்துக்குப் பிறகு 1961ல் விடுதலையானார். வெளியே வந்த மண்டேலா
அமைதிப் போராட்டத்தை விடுத்து ஆயுதப் போராட்டத்துக்குத் தயாரானதுதான்
வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்பம். வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு நிதி மற்றும் ஆயுத
உதவிகளைப் பெற்றுக் கொண்டு ராணுவ மையங்கள் மீது கெரில்லாத் தாக்குதல்களை
நடத்தினார். அரசு அலுவலகங்கள்
தீக்கிரையாக்கப்பட்டன. கறுப்பின மக்களுக்கு ஆதரவான இவரது போராட்டத்தை மனித
உரிமைகளுக்கு விரோதமான போராட்டமாக பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகள் முத்திரை
குத்தின. அரசுக்கு எதிராகச்
சதி, புரட்சி, கலகம், பொதுச் சொத்துகளுக்குச் சேதம், ராஜத் துரோகம்
உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 1962ல் மண்டேலா கைது
செய்யப்பட்டார். 1964 ஜூன் 12ம் தேதி ஆயுள் தண்டனை
எனத் தீர்ப்பானது. 46 வயதில் சிறை சென்ற மண்டேலா 27 ஆண்டுகள்
சிறைவாசத்துக்குப் பிறகு 1990ல் தனது 73 வயதில் விடுதலை ஆனார். உலக
வரலாற்றில் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ஒரே
தலைவர் மண்டேலா தான்!இவரது சேவைகளைப் பாராட்டி ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இந்திய அரசு ‘பாரத
ரத்னா’, ‘மகாத்மா காந்தி சர்வதேச விருது’, ‘நேரு சமாதான விருது’ ஆகியவற்றை
வழங்கி பெருமைப்படுத்தியது.
1994 மே 10 அன்று தென்னப்பிரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி ஆனார்.
1999ல் பதவியை விட்டு விலகியதுடன் மீண்டும் அதிபராகவும் மறுத்தார். ஐ.நா.
அறிவிப்பைத் தொடர்ந்து உலக சமாதானத்தை
வலியுறுத்தும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 18 ‘மண்டேலா தினமாக’க்
கொண்டாடப்பட்டு வருகிறது.
அலெக்ஸாண்டர்
கிரேக்கத்தின் ஒரு பகுதியான மாசிடோனிய மன்னன் இரண்டாம் பிலிப்ஸுக்கும் அரசி
ஒலிம்பியாவுக்கும் கி.மு. 356 ஜூலை 20ல் பிறந்தார் அலெக்ஸாண்டர். தனது
மகன்
மிகச் சிறந்த அறிவாளியாகத் திகழ வேண்டும் என்னும் நோக்கத்துடன் தத்துவ மேதை
அரிஸ்டாடிலை ஆசிரியராக நியமித்தார். கலை, இலக்கியம், நாடகம், கவிதை,
அறிவியல், அரசியல் என
அனைத்தையும் அலெக்சாண்டர் கற்றுக்கொண்டார்.
மன்னர் பிலிப்ஸிடம் அரேபியக் குதிரையை விற்க வணிகர் ஒருவர் வந்திருந்தார்.
யாருக்கும் அடங்காத முரட்டுக் குதிரையாக இருந்ததால், அதை வாங்க
விருப்பமில்லை. 10 வயதே நிரம்பிய அலெக்சாண்டர்
குதிரையை அமைதிப்படுத்தினார். அலெக்சாண்டரின் திறமைக்குப் பரிசாக
‘பூஸிஃபாலஸ்’ என்ற அந்தக் குதிரையை பரிசாக அளித்தார் மன்னர். 18 வயதில் போர்க் களமிறங்கி தந்தைக்கு உதவியாக கெரனியா, அதினியம், திபன் படைகளை வெற்றி கொண்டார். கி.மு. 336ல் தந்தை கொல்லப்படவே,
19 வயதில் அரியணை ஏறினார் அலெக்ஸாண்டார். சாம்ராஜ்யத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி உலகையே தனது காலடியின் கீழ்கொண்டு
வர வேண்டுமென்பது அலெக்சாண்டரின் ஆசை. முதல் முயற்சியாக
தெஸ்ஸாலி, திரேஸ் நகரங்கள் மீது படையெடுத்து வெற்றி கொண்டார். இவரது
போர்த்திறனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல கிரேக்க அரசுகள்
தாமாகவே சரணடைந்தன. தொடர்ந்து பாரசீகம், சிரியா, ஃபினீஷியா, பாபிலோனியா,
எகிப்து நாடுகளைத் தனது ஆளுகையின் கீழ்கொண்டு
வந்தார். வெற்றியின் அடையாளமாக அலெக்சான்ட்ரியா என்ற நகரை உருவாக்கினார்.
மத்திய தரைக்கடல் நாடுகளை இணைத்துக் கொண்ட பிறகு, இந்தியாவை வெற்றிகொள்ளும்
நோக்கத்துடன் பஞ்சாபில் தடம் பதித்தார். போரஸ்ஸை வெற்றி கொண்ட போதும் அவரது
வீரத்தை மெச்சி ஆட்சியைத் திருப்பிக் கொடுத்தார். பல வருடங்கள் தொடந்து
போரிட்டதால் சோர்ந்து போன படை வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபடவே வேறு
வழியின்றி ஊர் திரும்ப முடிவெடுத்தார். கி.மு. 323, ஜூன் 13ல் 33 ஆவது
வயதில் மலேரிய காய்ச்சலால் மரணமடைந்தார் அலெக்ஸாண்டர்.
காமராஜர்
கறுப்பு காந்தி, கர்ம வீர்ர், படிக்காத மேதை, கிங் மேக்கர் என்று
அழைக்கப்படுகிறார் காமராஜர். பத்தாண்டு காலம் தமிழக முதல்வராக இருந்த
போதும் சொந்த வீடோ, வங்கியில் பணமோ இல்லாமல் ஏழையாகப்
பிறந்து ஏழையாகவே மறைந்த மக்கள் தலைவர் காமராஜர். 1903 ஜூலை 15 அன்று
குமாரசாமிக்கும் சிவகாமி அம்மாளுக்கும் மகனாக விருதுநகரில் பிறந்தார். வறுமை காரணமாக படிப்பைத் தொடர முடியாமல் மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச்
சேர்ந்தார். மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட தலைவர்களின்
விடுதலைப் பேச்சுகளால்
கவரப்பட்டு 16 வயதில் காங்கிரஸ் உறுப்பினரானார். 1930ல் ராஜாஜி தலைமையில்
வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு
கொல்கத்தா அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
1936ல் தீரர் சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவரான போது காமராஜர் செயலாளர்
ஆனார். 1940ல் வேலூர் சிறையிலிருந்து கொண்டே விருதுநகர் நகரசபைத் தலைவர்
தேர்தலில் வெற்றி பெற்றார்1953ல் முதல்வர் ராஜாஜி பதவி விலக, 1954ல் காமராஜர் முதல்வரானார். மாணவர்கள் படிக்க வருவதை ஊக்குவிக்க மதிய உணவுத் திட்டத்தை
அறிமுகப்படுத்தினார். தொழில், விவசாயத் துறைகளிலும் தமிழகத்தை
முன்னேற்றினார். பாரத மிகு மின் நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி,
சென்னை
சுத்திகரிப்பு ஆலை, ஐசிஎஃப், இந்துஸ்தான் போடோ ஃபிலிம்ஸ் உள்ளிட்ட
பொதுத்துறை நிறுவனங்களை நிறுவினார். பவானி, மேட்டூர், மணிமுத்தாறு,
அமராவதி, வைகை, சாத்தனூர் நீத்தேக்கங்களை உருவாக்கினார். முதல்வர் பதவியை விட மக்கள் சேவையும் கட்சிப் பணியுமே முக்கியம் எனக் கருதி
‘காமராஜர் திட்டம்’ ஒன்றை உருவாக்கி, தனது முதல்வர் பதவியை ராஜினாமா
செய்தார். அகில இந்திய காங்கிரஸ்
தலைவராகப் பதவியேற்றுக் கொண்டு கட்சியைப் பலப்படுத்தினார். நேருவின் மறைவுக்குப் பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும் பின்னர் இந்திரா
காந்தியையும் பிரதமர்களாக்கி ‘கிங் மேக்கர்’ என்று புகழ்பெற்றார். அயராது உழைத்த காமராஜர், 1975 அக்டோபர் 2 அன்று தேதி தூக்கத்திலேயே மரணமடைந்தார்.
No comments:
Post a Comment