ஓர் அணியை மனத்தளவில் உடையச் செய்தால் போதும், அந்த அணி மைதானத்தில் தானாகவே நிலைகுலைந்துவிடும். முதலில் ராஜஸ்தானுக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அடுத்ததாக ஐ.பி.எல். ஃபைனலில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு. சுலபமான ஸ்கோரைக் கூட அடிக்கமுடியாத அளவுக்கு மிக மோசமாகத் தோற்றுப் போனது சென்னை சூப்பர் கிங்ஸ்.
சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து மூன்று சந்தேகங்கள் உண்டு. முதலாவதாக, குருநாத் மெய்யப்பன் பிரச்னையால் சி.எஸ்.கே. அணிக்குத் தடை விதிக்கவேண்டும் என்று எல்லா வட இந்திய மீடியாக்களும் விரும்புகின்றன. (கவனிக்க - மூன்று வீரர்கள் ஸ்பாட் ஃபிக்ஸிங் செய்த ராஜஸ்தான் அணியோ அதன் தலைவர் டிராவிடோ இதுமாதிரியான நெருக்கடியைச் சந்திக்கவில்லை). அடுத்ததாக, சி.எஸ்.கே.வில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தொடர்பாக இனி சென்னை அணிக்காக தோனி ஆடமாட்டார் என்றொரு கருத்து நிலவுகிறது. மூன்றாவதாக, சி.எஸ்.கே.யால் பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசனின் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து.
பலமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உறுதியாக இருக்கிறார் ஸ்ரீனிவாசன். நான் குற்றவாளி இல்லை. எந்தத் தவறும் செயவில்லை. எல்லா பி.சி.சி.ஐ. உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். எனவே, நான் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கௌரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மீதான புகார் குறித்து விசாரணை செய்ய 3 பேர் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது. குருநாத் மெய்யப்பன் விவகாரம் குறித்து விசாரணை கமிஷன் முடிவுகள் எடுக்கும். இந்த விஷயத்தில் நான் விலகி இருப்பேன். இதுதொடர்பான விவாதங்களில் எதிலும் எனது பங்கு இருக்காது" என்று சொல்லி விட்டார் என். ஸ்ரீனிவாசன்.
ஐ.பி.எல். முடிந்தாலும் ஸ்பாட் ஃபிக்ஸிங், பெட்டிங் தொடர்பான சர்ச்சைகள், சந்தேகங்கள் எல்லாம் இன்னும் கொஞ்சகாலம் நீடிக்கும்.
ஐ.பி.எல்.-லிலிருந்து சச்சின் விலகிவிட்டார். ஒருநாள் ஆட்டத்திலிருந்து விலகிய பின்பும் சச்சின் தொடர்ந்து ஐ.பி.எல்.-லில் ஆடியது பலருக்கும் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. மும்பை அணி ரசிகர்களுக்காகவும் மும்பை அணிக்குப் பங்களிக்க வேண்டிய பொறுப்புக்காகவும் அவர் இந்த ஐ.பி.எல்.-லில் ஆடியிருக்கவேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி, ஐ.பி.எல். கோப்பையை வென்றபிறகு இப்போது முழு மனத்துடன் விலகியிருக்கிறார். மற்ற சீனியர் வீரர்கள் போலில்லாமல் ஐ.பி.எல்.-லில் ஓரளவு நன்றாகவே ஆடினார் சச்சின். சில ஐ.பி.எல்.-கள் தவிர பெரும்பாலும் அவர் மும்பை அணிக்குப் பெரிய பலமாகவே இருந்திருக்கிறார். ஒரே குறை, ஒருநாள் போட்டியிலும் டெஸ்ட் மேட்சுகளிலும் மறக்கமுடியாத எத்தனையோ ஆட்டங்களை சச்சின் ஆடியிருக்கிறார். ஐ.பி.எல்.-லில் அப்படிப்பட்ட ஆட்டங்கள் மிகக்குறைவு. தோல்வியினால் காணாமல் போயிருந்த ஹர்பஜன்சிங்குக்கு 2013 ஐ.பி.எல். மிகப்பெரிய திருப்புமுனை. ஒருசில மேட்சுகள் என்றில்லாமல் ஐ.பி.எல். முழுக்கவே மிக பிரமாதமாக பௌலிங் செய்திருக்கிறார். முக்கியமாக, அடிக்கடி விக்கெட்டுகளை எடுத்து அணிக்குச் சாதகமான சூழல்களை உருவாக்கியதால்தான், மும்பையால் எளிதாகக் கோப்பையை வெல்லமுடிந்தது. அஸ்வின், மிஸ்ரா இருவரில் யாராவது ஒருவர் சொதப்புகிற பட்சத்தில் ஹர்பஜனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதி.
டென்னிஸிலும் ஒரு ஐ.பி.ல். ஆரம்பமாக உள்ளது. மகேஷ் பூபதி தைரியமாக அகலக்கால் வைத்து ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறார். சர்வதேச ப்ரீமியர் டென்னிஸ் லீக் (ஐ.டி.பி.எல்.) என்கிற ஐ.பி.எல். பாணியிலான போட்டியை ஆரம்பித்துள்ளார். (மகேஷ் பூபதியின் பார்ட்னர்களில் ஒருவர், பிரபல டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர்.) ஐ.பி.எல். போல இந்தப் போட்டியில் ஆசியாவைச் சேர்ந்த 6 அணிகள் (சிங்கப்பூர், சியோல், துபா, ஜகார்த்தா, டோக்கியோ, மும்பை, தில்லி, ஹாங் காங் போன்ற நகரங்களிலிருந்து ஆறு அணிகள்) பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணிக்கும் அதிக பட்சமாக 10 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முன்னணி வீரர்களின் சம்பளம், எப்படியும் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே இருக்கும். ஜோகோவிச், நடால், ஆன்டி முர்ரே, செரினா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, விக்டோரியா அஸரங்கா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஐ.டி.பி.எல்.-லில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு ஆட்டமும் அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு மேல் இருக்காது. எனவே, பல பரபரப்பான மேட்சுகளைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் ஏ.டி.பி. சார்பில் சென்னை ஓபன் மட்டும் நடக்கிறது. மகளிருக்கான சர்வதேசப் போட்டி எதுவும் இல்லை. ஐ.டி.பி.எல்., இந்திய டென்னிஸில் முக்கியமான மாற்றமாக இருக்கும். இந்திய ரசிகர்களுக்கு, பல பிரபல வீரர்களின் மேட்சுகளை நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்" என்கிறார் மகேஷ் பூபதி. இந்தப் போட்டியில் லியாண்டர் பெயஸும் கலந்துகொள்வார் என்று கூறியிருப்பதுதான் மேலும் சுவாரசியத்தை அதிகமாக்கியிருக்கிறது. ஐ.டி.பி.எல். 2014 டிசம்பரில் தொடங்கவுள்ளது.
No comments:
Post a Comment