ஆன் ஃப்ராங்க்
ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் எடித் ஃப்ராங்க் - ஓடோ ஃப்ராங்க்
ஆகியோருக்கு மகளாக 1929 ஜூன் 12ல் பிறந்தார் ஆன். இவர் புகழ்பெற்ற ஜெர்மன்
நாட் குறிப்பு எழுத்தாளர். 1933ல் ஹிட் லர் ஜெர்மன் நாட்டின் அதிபராகப்
பதவியேற்ற
கையோடு யூதர்களை முற்றிலுமாக அழிக்க உத்தரவிட்டார். உயிருக்குப் பயந்து ஓடோ
ஃப்ராங்க் குடும்பத்துடன் ஹாலந்துக்குச் சென்றார். எந்த ஹிட்லருக்குப்
பயந்து ஓடோ ஃப்ராங்க் ஹாலந்து வந்தாரோ அதே நாஜிப் படை ஹாலந்தையும்
வீழ்த்தியது.
ஹாலந்தில் வாழ்ந்த யூதர்கள் சுதந்தரமாக நடமாடவோ, கருத்துகளை வெளியிடவோ
தடை விதிக்கப்பட்டது. 1942 ஜூன் 12 அன்று ஆனின் 13ஆவது பிறந்தநாள் பரிசாக
ஒரு டையரி கிடைத்தது. ஓடோ ஃப்ராங்க் குடும்பத்தினருடன் நாஜி முகாமில்
ஆஜராக வேண்டும் என உத்தரவு வரவே, உயிருக்குப் பயந்து மீண்டும் தலைமறைவு
வாழ்க்கை வாழ்ந்தனர்.
ஆம்ஸ்டர்டாமில் கழித்த இரு ஆண்டு தலைமறைவு வாழ்க்கையை ஆன் தனது டயரியில்
பதிவு செய்தார். ஆனால் இந்தத் தலைமறைவு வாழ்க்கையும் நீடிக்கவில்லை. 1944
ஆகஸ்ட் 4 அன்று ஜெர்மானிய உளவுப்படை இவர்கள் பதுங்கிய இடத்தை
முற்றுகையிட்டு, கைது செய்தது. ஓடோ ஃப்ராங்க்
தனது மனைவியையும், மகள்களையும் கடைசியாகப் பார்த்தது அப்போதுதான்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடூரமான வதை முகாமில் அடைக்கப்பட்டனர்.
சுகாதாரக் குறைவு, உணவு மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக டைபஸ்
என்னும் கொடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு 15 வயது ஆன் 1945ல்
உயிரிழந்தார். வதை முகாமில் அடைக்கப்பட்டு
இவரைப் போல் இறந்த யூதக் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1 மிலியன்.
ஹிட்லரின் மரணத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
மனைவியையும் மகள்களையும் பறிகொடுத்த நிலையில் ஓடோ ஃப்ராங்க் மட்டுமே உயிர்
பிழைத்தார். ஆன் எழுதிய டையரி
கிடைத்தது. 1947 ஜூன் 25ல் ‘தி டைரி ஆஃப் யங் கேர்ள்’ என்ற தலைப்பில்
புத்தகமாக வெளியாகியது. பின்னர் 60க்கும் மேற்பட்ட மொழிகளில்
மொழிபெயர்க்கப்பட்டது.
இவரைப் போல் ஓர் அரசியல்வாதியை இனி காண முடியுமா என்று வியக்கும்
வகையில் வாழ்ந்தவர் கக்கன். 1908 ஜூன் 18 அன்று மதுரை மாவட்டம்,
தும்பைப்பட்டி கிராமத்தில் பூசாரிக்
கக்கனுக்கும் குப்பி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். மேலூர் தொடக்கப்
பள்ளியில் ஆரம்பக் கல்வியும், திருமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும்
படித்தார். தன்னைப் போன்ற தலித் மாணவர்களும்
கல்வியறிவு பெற வேண்டும் என்பதற்காக இரவு பாடசாலைகளைத் தொடங்கி கல்வி
கற்பித்தார்.
இளம் வயதிலேயே சுதந்தரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1934ல் மதுரை வந்த
காந்தியைச் சந்தித்ததைத் தொடர்ந்து காந்தியின் சீடரானார். 1939ல் தமிழக
முதல்வராக இருந்த மூதறிஞர் ராஜாஜி
கோயில் நுழைவு மற்றும் அதிகாரச் சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து மதுரை
வைத்தியநாத ஐயர் தலைமையில் தலித்துகளை வழி நடத்தி மதுரை மீனாட்சி கோயிலில்
நுழைந்தார். 1942ல் வெள்ளையனே வெளியேறு
போராட்டத்திலும் கக்கன் பங்கேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
1946ல் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 1946-1950 வரை
உறுப்பினராகப் பதவி வகித்தார். 1952-57 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.
1954ல் காமராஜர் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதைத் தொடந்து
கக்கன் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1957ல் மதராஸ்
மாகாணத்துக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறவே கக்கன்
பொதுப்பணி, பழங்குடியினர் நலம் ஆகிய துறைகளின் அமைச்சரானார்.
1962 தேர்தலிலும் காங்கிரசே வெற்றி பெற கக்கன் விவசாயம் மற்றும் உள்துறை
அமைச்சரானார். 1967 தேர்தலில் காங்கிரஸ் தோற்கும் வரை சுமார் 10 ஆண்டு
காலம் அமைச்சராக இருந்தார்.
5 ஆண்டுகள் மக்களவை உறுப்பினர், 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்தும் சொந்த
வீடோ, வாகனமோ இன்றி, கக்கன் எளிமையாக வாழ்ந்தார். அரசு பேருந்துக்காகச்
சாலையில் காத்துக் கிடந்தததும், நோயுற்ற போது மதுரை பொதுமருத்துவமனையில்
படுக்கையின்றித் தரையில்
படுக்க வைக்கப்பட்டதும் நாடறிந்த செய்தி. நேர்மையான அரசியல்வாதிக்கு
இலக்கணமாக வாழ்ந்த கக்கன் 1981 டிசம்பர் 23 ம் தேதி ஏழையாகப் பிறந்து
ஏழையாகவே மறைந்தார்.
ஹெலன் கெல்லர்
புகழ்பெற்ற எழுத்தாளரும் கல்வியாளருமான ஹெலன் கெல்லர் 1880 ஜூன் 27ல்
பிறந்தார். ஆர்தர் ஹென்லி கெல்லர், கடே ஆடம்ஸ் கெல்லர் இவருடைய பெற்றோர்.
பிறந்த ஒன்றரை வருடங்களில் அவருடைய கண் பார்வையும், செவித்திறனும்
செயலிழந்து போயின. படிப்படியாகப் பேசும் திறனையும் இழந்தார்.
1866ல் ஆன் சலிவன் இவருக்குக் கல்வி கற்பிக்கப் பிரத்யேக ஆசிரியையாக
நியமிக்கப்பட்டார். ஹெலனின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்குரியவர் சலிவன்
என்பதுடன் அவர் மூலம் ஹெலன் உலகத்தைப் பார்த்தார், கேட்டார், பேசினார்.
எழுத்து வடிவங்களை ஹெலனின் உள்ளங்கையில் வைத்து அழுத்தி அவற்றின் மூலம்
பொருட்களின் பெயர்களையும் பின்னர் பிரெலி முறையில் எழுதவும், படிக்கவும்
கற்றுக் கொடுத்தார். 1890ல் ஹொரேஸ் மான் பள்ளியின் சாரா ஃபுல்லர் மூலம்
பேசும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். 1904ல் ராட்க்ளிஃப் கல்லூரியில்
படித்து ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் ஹெலன் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.
1903ல் எழுதிய ‘தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப், 1908ல் தி வேர்ல்ட் ஐ லிவ்
இன், 1913 அவுட் ஆஃப் தி டார்க், 1930 மிட்ஸ்ட்ரீம், 1955ல் டீச்சர் : ஆன்
சலிவன், 1957 தி ஓபன் டோர் ஆகிய புத்தகங்கள் அவருக்குப் பெரும் புகழைப்
பெற்றுத் தந்தன.
பார்வை, பேச்சு மற்றும் கேட்கும் திறன்களை இழந்த நிலையில் பட்ட
துயரங்களையும், குறைகளைகளையும் ‘ஸ்டோரி ஆஃப் மை லைஃப்’ புத்தகத்தில்
உருக்கமாகப் பதிவு செய்துள்ளார் ஹெலன் கெல்லர்.
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக நிதி திரட்டப் பல நாடுகளுக்குச்
சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து 1959ல்
தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் 1962 திரைப்படமாகவும் வெளிவந்த ‘தி
மிரகிள் வொர்க்கர்’ இரு ஆஸ்கர் பரிசுகளைத்
தட்டிச் சென்றது. 1964ல் பிரெசிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம் விருதைப்
பெற்றார். 1968 ஜூன் 1 அன்று மறைந்தார்.
தனக்குப் பிடித்த 19ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பெண்மணி ஹெலன் கெல்லர்
என்று புகழ்பெற்ற எழுத்தாளர் மார்க் ட்வைன் பாராட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment