Search This Blog

Saturday, June 29, 2013

எனது இந்தியா (ஜமீன்தார்கள்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

நிலவரி வசூல்தான், ஒரு நாட்டின் முக்கிய வருமானம். அதை எப்படி வசூல்செய்வது என்பது காலம்காலமாகத் தொடரும் பிரச்னை. தன் கையைக்கொண்டே தன் கண்ணைக் குத்தவைப்பதுதான், பிரிட்டிஷ் அரசின் ராஜதந்திரம். அப்படி, இந்தியாவின் ஏழை விவசாயிகளை அடக்கி ஒடுக்கி வரி வசூல் செய்கிறேன் என்று, கடைசி சொட்டு ரத்தம் வரை உறிஞ்சி எடுப்பதற்கு பிரிட்டிஷ் வகுத்த திட்டமே ஜமீன்தாரி முறை. தங்களின் வருவாயைப் பெருக்கிக்கொள்வதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு பிரிட்டிஷ் அரசு உருவாக்கிய இந்த முறை, 1793-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜமீன் என்ற பாரசீகச் சொல்லுக்கு, நிலம் என்று பொருள். நில உடைமையாளர் என்ற பொருளில்தான், ஜமீன்தார் என்ற பெயர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நில வரி, குத்தகை வரி, யுத்த காலங்களில் படைக்கு ஆள் அனுப்புவது, உள்ளுர் நீதி பரிபாலனம் என்று செயல்பட்ட ஜமீன்தார்கள், சுயேச்சையான குறுநில மன்னர்களைப் போல ஆணவமும் அதிகாரமுமாக நடந்துகொண்டனர். 

ஜமீன்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் மறக்க முடியாத பாடம். மொகலாயர்கள் காலத்தில் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் நில வரி வசூல் செய்வதற்கும் உள்ளூர் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்வதற்கும் மான்சப்தார்கள் நியமிக்கப்பட்டனர். உயர்குடியைச் சேர்ந்தவர்களும் ராஜவிசுவாசிகளும் மட்டுமே மான்சப்தார்களாக நியமிக்கப்பட்டனர். இது, பெர்சிய நடைமுறை. அக்பரின் ஆட்சிக் காலத்தில் மான்சப்தார்கள் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். இவர்களுக்கு அரசு மானியங்களும் பட்டங்களும் உயர் மரியாதைகளும் கிடைத்தன. நிலவரி வசூல் செய்வதில் மான்சப்தார்கள் கடுமையாக நடந்துகொண்டனர். அக்பர் காலத்தில் நிலவரி வருவாய் 363 கோடி தாம்கள் என அயினி அக்பரியில் ஒரு குறிப்பு இருக்கிறது. அக்பர் காலத்தில், மாநிலங்கள் சுபாக்கள் எனவும், மாவட்டங்கள் சர்க்கார் எனவும், தாலுக்கா என்பது பர்கானா என்றும் பிரிக்கப்பட்டிருந்தன. 1579-ல் மொகலாயப் பேரரசு 12 சுபாக்களாக பிரிக்கப்​பட்டிருந்தன. அக்பர் காலத்தில் நிலம் அளக்கப்​பட்டு வரி ஒழுங்குபடுத்தப்பட்டது.


அந்த வகையில், நிலம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டது. பருவம் தவறாமல் பயிரிடப்படும் நிலம் பெலாஜ் என்றும், சில பருவங்களுக்குத் தரிசாக விடப்படும் நிலம் பரவுதி எனவும், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தரிசாக விடப்படும் நிலம் சச்சார் எனவும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்படாமல் இருக்கும் நிலம் பஞ்சார் என்றும் அழைக்கப்பட்டன. மொத்த விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு விளைபொருள், அரசாங்கத்துக்கு வரியாக செலுத்தப்பட்டது. வரி வசூலிக்க, கார்கூன்கள் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கூலியாக, தானியங்கள் வழங்கப்பட்டன. மான்சப்தார் முறையின் தொடர்ச்சியாகவே பிரிட்டிஷ்காரர்கள் ஜமீன்தார் முறையை நடைமுறைப்படுத்தினர். 

மொகலாயப் பேரரசர் ஷா ஆலம் 1765-ல் கம்பெனியுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்தது. இதற்கு திவானி உரிமை என்று பெயர். கம்பெனி இதைப் பயன்படுத்தி விவசாய வரியின் மூலம் தங்களின் வருவாயை அதிகப்படுத்திக்கொள்ள முடிவுசெய்தது. இதற்கு முன்னோடியாக கிழக்கிந்தியக் கம்பெனி 1767-ல் நில அளவாய்வுத் துறையை உருவாக்கி, மொத்த நிலப்பரப்பையும் அளந்தது. ஆகவே, அவர்களால் எவ்வளவு வரி விதிப்பது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. வாரன் ஹேஸ்டிங்ஸ் 1772-ல் ஏலத்தில் விடும் முறையை அறிமுகம்செய்தார். அதன்படி, வரி வசூலிக்கும் உரிமையை விரும்பியவர்கள் ஏலத்தில் எடுத்துக்கொள்ளலாம். உரிய வரியை வசூல்செய்து அரசுக்குச் செலுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை தாங்களே வைத்துக்கொள்ளலாம் என்பதே இந்த முறை. இதனால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வரி முழுமையாகக் கிடைத்தது. ஆனால், ஏலமிடுவதிலும், வசூல் செய்வதிலும் நிறைய முறைகேடுகள் நடந்தன. ஆகவே, இந்தத் திட்டம் தோல்வி அடைந்தது. (இன்று இதே முறையின் சற்று உருமாறிய வடிவமே, தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் பல்வேறு அரசுக் குத்தகைகளில் நடைமுறையில் இருக்கிறது என்பது வரலாற்று முரண்.)

அதன் பிறகு, கம்பெனி ஏஜென்ட்கள் என நியமிக்கப்பட்டவர்கள் வரி வசூல் செய்தனர். இவர்களுக்கு நிலத்தின் வகைகள் மற்றும் குத்தகை முறை பற்றி எதுவும் தெரியவில்லை. எனவே, ஏஜென்ட்களாலும் நில வரியை முழுமையாக வசூலிக்க முடியவில்லை. இந்தியாவில், நிலம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க எழுத்துப்பூர்வமான சான்றுகள் மிகக் குறைவு. ஆகவே, இது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. இதனால், வரி வசூல் செய்வதில் நிரந்தர முறை ஒன்றை அறிமுகம்செய்ய பிரிட்டிஷ் அரசு முடிவுசெய்தது. 1793-ல் காரன் வாலிஸ் புதிய திட்டத்தை அறிமுகம்செய்தார். அது நிரந்தரமாக வரி வசூலிக்கும் உரிமை தரும் 'பெர்மனென்ட் செட்டில்மென்ட்’ திட்டம். அதன்படி, முந்தைய காலங்களில் நில வரி வசூலிக்கும் உரிமை மட்டுமே பெற்றிருந்தவர்கள், அதே நிலத்தின் உரிமையாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள், ஆண்டுதோறும் கம்பெனிக்குத் செலுத்த வேண்டிய வரி, நிலையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் தொகைக்குப் பெயர் 'பேஷ்குஷ்’.

இப்படி நியமிக்கப்பட்டவர்கள் விவசாயிகளிடம் தங்கள் இஷ்டம்போல பணமாகவோ அல்லது பொருளாகவோ வசூலித்துக்கொள்ளலாம். இவர்கள் 'ஜமீன்தார்’, 'மிட்டாதார்’, 'தாலுக்தார்’ என்ற பெயர்களில் அழைக்கப்பட்டனர். ஒருவேளை, ஒரு ஜமீன்தாரால் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் நில வரி வசூலிக்க முடியாமல் போய்விட்டால், அந்த உரிமை கம்பெனியால் பிடுங்கப்படும். பொதுவாக, ஜமீன்தார்கள் வாரிசு முறையில் தேர்வுசெய்யப்படுவதால் ஜமீன் உரிமை வேறு ஒருவருக்குக் கிடைப்பது எளிதானது அல்ல. இந்த நடைமுறை காரணமாக, ஜமீன்தார்கள் என்ற புதிய நிலப்பிரபுக்கள் இந்தியாவெங்கும் உருவாக ஆரம்பித்தனர். இவர்களில் சிலர் ஒருகாலத்தில் மன்னர்களாக இருந்து தங்களின் உரிமையை இழந்தவர்கள் மற்றும் குறுநிலமன்னர்களின் வாரிசுகள். ஜமீன்தார் முறையால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இரண்டு விதங்களில் லாபம் கிடைத்தது. ஒன்று, தாங்களே நேரடியாக விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்யும் சிக்கலில் இருந்து விடுபடுவது, இரண்டாவது தங்களுக்கு விசுவாசிகளாக ஜமீன்தார்கள் என்ற ஓர் இனத்தையே உருவாக்கிக்கொள்வது.

பண்டைய இந்தியாவில் கிராமத்தின் நில வரி மூலம் கிடைக்கும் வருவாய், அந்தக் கிராமத்தின் உள்ளூர் கட்டு​மானம் மற்றும் விவசாயம் சார்ந்த வளர்ச்சிக்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஜமீன்தார் முறை அறிமுகமான பிறகு உழைப்பவனிடமிருந்து நிலம் பறிக்கப்பட்டதுடன், நில வரி முழுவதும் ஜமீன்தாரின் தனிச் சொத்தாக மாறத்தொடங்கியது. ஏழை விவசாயிகள் நில வரி செலுத்த முடியாமல் தங்கள் நிலங்களைப் பறிகொடுத்து கூலிகளாக மாறினர். சிலர் குத்தகைதாரர்களாக மாறி, அதே நிலத்தில் விவசாயம் செய்தனர். குண்டர்களைக்கொண்டு கெடுபிடியாக வரி வசூல் செய்த ஜமீன்தார்கள், அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியை மட்டுமே அரசுக்குச் செலுத்தினர். இதனால், ஜமீன்தார்கள் செல்வச் செழிப்புடன் சர்வாதிகாரம் படைத்தவர்களாக வாழ்ந்தனர். சென்னை மாகாணத்தின் ஆளுனராக 1820-ல் பொறுப்பேற்ற சர் தாமஸ் மன்றோ, 'ரயத்வாரி’ முறையை அறிமுகப்படுத்தினார். இதன்படி, வரியானது ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நேரடியாக வசூலிக்கப்பட்டது. 'ரயத்’ என்ற சொல்லுக்கு 'உழவர்’ என்று பொருள். இந்த முறையில் விவசாயிகளிடமிருந்து வரி வசூல் செய்து அரசுக்குச் செலுத்த இடைத்தரகர்கள் கிடையாது. ஆனால், விதிக்கப்பட்ட வரி மிகவும் அதிகமாக இருந்தது. ரயத்வாரி முறையில் நிலச் சொந்தக்காரர்களுக்கு 'மிராசுதார்’ என்று பெயர்.  

மிராசுதாரர்கள் பெரும்பகுதி நிலத்தைக் கட்டுக் குத்தகைக்கோ அல்லது வாரக் குத்தகைக்கோ விவசாயிகளிடம் விடுவார்கள். அந்த விவசாயிகளுக்கு நிலத்தில் எந்த உரிமையும் கிடையாது. நிலச் சொந்தக்காரர்கள் இஷ்டப்பட்ட சமயத்தில் விவசாயிகளை வெளியேற்றி, வேறு விவசாயிக்கு அந்த நிலத்தைக் கொடுக்கலாம்.  

இதனால், விளைபொருட்​களில் 80 சதவிகிதத்தைக் குத்தகையாக மிராசுதாரர்​களுக்குக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ரயத்வாரி முறையில் நிலங்கள் சில தனிநபர்கள் கையில் குவியத் தொடங்கின.

இதுபோலவே, 'மகால்வாரி’ என்றொரு வரிவிதிப்பு முறையை பஞ்சாபில் அமல்படுத்தினர். இந்த முறையில் குத்தகை நிலங்களின் வரியை வசூல்செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டியது, உள்ளூர் நிர்வாகத்தின் கடமை. இதில் நிலத்தின் தன்மைக்கு ஏற்ப வரி விதிக்கப்பட்டது. பிரிட்டிஷாரின் இத்தகைய கொடுமையான வரிவிதிப்பு முறைகள், பாரம்பரிய இந்திய விவசாயத்தைக் கொஞ்சம் கொஞ்சம் அமுக்கிக் கொல்லத் தொடங்கின.

பழந்தமிழகத்தில் வரி வசூல் செய்வது மிகவும் கெடுபிடியாக நடைபெற்றுள்ளது என்பதை விவரிக்கும் வரலாற்று ஆய்வாளர் ஆ. சிவசுப்பிரமணியன், தனது 'தமிழ்ச் சமூகத்தில் வரி’ என்ற கட்டுரையில், பல அரிய தகவல்களைக் கொடுத்துள்ளார். சோழர் காலக் கல்வெட்டுக்கள் சிலவற்றில் 'மண் கலம் உடைத்து, வெண்கலம் எடுத்து’ என்ற தொடர் இடம்பெற்று இருக்கிறது. இந்தத் தொடர், சோழப் பேரரசின் அலுவலர்கள் வரி வாங்குவதில் எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டனர் என்பதைக் காட்டுகிறது. வரி செலுத்த முடியாத ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து, அவனது வீட்டிலுள்ள மதிப்பு வாய்ந்த பொருளான வெண்கலப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்வதை 'வெண்கலம் எடுத்து’ என்ற சொல் குறிக்கிறது. வெண்கலப் பாத்திரங்கள் எதுவும் இன்றி வெறும் மண் பாத்திரங்கள் மட்டுமே இருந்தால், அதைப் பறிமுதல் செய்வதால் பயன் இல்லை. இருந்தாலும், அவனுக்குத் தண்டனை வழங்கும் வழிமுறையாக அந்த மண் பாத்திரங்களை உடைத்து நொறுக்குவதை 'மண்கலம் உடைத்து’ என்ற சொல் உணர்த்துகிறது. வரி செலுத்த இயலாதவனின் உலோகப் பாத்திரங்களைப் பறிமுதல் செய்தும் மண் பாத்திரங்களை உடைத்தும் அவன் சமைத்து உண்ண முடியாது செய்வது பொற்காலச் சோழர்களின் வரிவாங்கும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்துள்ளது.

No comments:

Post a Comment