நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை
பலரும் வீட்டை தங்களது ஐம்பதாவது வயதில்தான் கட்டினார்கள். ஆனால், இன்றோ
இருபது வயதிலேயே வீடு வாங்குவது சகஜமாகிவிட்டது. அன்று பணத்தைச் சேர்த்து
வைத்து வீடு கட்டினார்கள். இன்று வீட்டை கடனில் வாங்கிவிட்டு, கடைசிக்
காலம் வரை இ.எம்.ஐ-ஆக திரும்பச் செலுத்துகிறார்கள்!
எதற்கெடுத்தாலும் ஈஸியாக கடன் கிடைப்பது நல்லதுதான். அப்படி கிடைக்கும்போது அதை நாம் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டாமா?
தனிநபர் ஒருவர் வாங்கும் பெரிய கடன் என்றால், அது
வீட்டுக் கடன்தான். ஆகவே, வீட்டுக் கடனை வாங்குவதில் மட்டும் ஒருவர் பெரிய
தவறேதும் செய்யவில்லை எனில், மற்ற கடன்களை எல்லாம் ஊதித் தள்ளிவிடலாம்.
வீட்டுக் கடன் வாங்க ஒரு வங்கியை நீங்கள் அணுகும்போது,
அந்த வங்கியின் மேலாளர் உங்கள் கடன் விண்ணப்பப் படிவத்தை எந்தக் கோணத்தில்
பார்ப்பார் என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.
வங்கி மேலாளர் முதலில் உங்களின் மாத / ஆண்டு வருமானம்,
கடந்த இரண்டு, மூன்று வருடங்களில் உங்களின் வருமானம், வீட்டிற்கு
எடுத்துவரும் சம்பளம் எவ்வளவு என்கிற விஷயங்களை அலசி ஆராய்வார். நீங்கள்
வேலை செய்யும் நிறுவனம் எந்தத் தொழிலில் உள்ளது என்றும் பார்ப்பார்.
சினிமா, அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம்
நிலையாக இருக்காது என்பதால் வீட்டுக் கடன் தர யோசிப்பார்கள். சுயதொழிலில்
ஈடுபட்டு, வருமான வரித் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கும் கடன்
கிடைப்பது கடினமே. வேறு ஏதும் லோன் வாங்கி அதற்காக இ.எம்.ஐ. கட்டி
வருகிறீர்களா என்றும் பார்ப்பார்கள்.
கடன் வாங்குபவரைப் பற்றிய அலசல்தான் ஆரம்பத்தில்
பெரிதாக இருக்கும். இதற்காக உங்களிடமிருந்து பல டாக்குமென்டுகளைக்
கேட்பார்கள். இதனால் நீங்கள் பொறுமை இழந்து, கோபம்கூட அடையலாம். நான்
வீட்டை அடமானமாக வாங்கித்தானே கடன் தரப் போகிறீர்கள்? பிறகு ஏன் இத்தனை
விசாரிப்பு? என்றுகூட நீங்கள் கேட்பீர்கள்.
ஆனால், வங்கிகள் உங்கள் வீட்டை விற்று தங்கள் கடனை
செட்டில் செய்துகொள்ள விரும்புவதே இல்லை. அதனால் அவர்களுக்கு நஷ்டம்தான்.
எனவேதான், கடன் தரும் முன்பே உங்களைப் பற்றி முழுவதுமாக அலசி
ஆராய்கிறார்கள். வங்கி மேனேஜர் அடுத்து பார்க்கும் முக்கிய விஷயம், உங்கள்
வயதைத்தான்! 55 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொதுவாக கடன் தரமாட்டார்கள் -
அரசு பென்ஷன் வாங்குபவராக இருந்தால் தவிர!
இதற்குப் பிறகு உங்களது சிபில் ஸ்கோரை நிச்சயம்
பார்ப்பார்கள்! நீங்கள் கடந்த காலத்தில் வங்கிகளிடம் கடன் வாங்கி
ஒழுங்காகச் செலுத்தாமல் இருந்திருந்தால், உங்களின் சிபில் ஸ்கோர் குறைவாக
இருக்கும். அதுபோன்ற சமயத்தில் வங்கிகள் உங்களுக்கு வீட்டுக்
கடன் தராது.
மாதச் சம்பளத்தில் கழிவுகள் போக மீதி எவ்வளவு
உங்களுக்கு கிடைக்கிறது என்று அலசுவார்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம்
ரூ.45,000 என்று வைத்துக்கொள்வோம். கழிவுபோக, உங்களுக்கு கையில்
கிடைக்கும் தொகை ரூ.40,000 எனில், இன்றைய வட்டி நிலவரத்தில் 30, 40
வயதிற்குள் இருக்கும் நபருக்கு, முறையே 16 - 18 லட்சம் வீட்டுக் கடன்
கிடைக்கும் (20 - 30 வருடங்கள் கடன் காலம் என்று
எடுத்துக்கொள்ளும்பட்சத்தில்!). அதாவது, உங்கள் வயது மற்றும் கடன்
காலத்தைப் பொறுத்து உங்களது வீட்டிற்கு எடுத்துச் செல்லும் மாதச்
சம்பளத்தைப்போல் 40 - 45 மடங்கு கடன் கிடைக்கும்.
இன்னொரு கோணத்தில் பார்த்தால், நீங்கள் வீட்டிற்கு
எடுத்துவரும் பணத்தில் அதிகபட்சமாக 40 சதவிகிதம் தொகையை இ.எம்.ஐ-ஆக
கட்டுமளவிற்கு வங்கிகள் வீட்டுக் கடன் தரும். மீதி 60 சதவிகித சம்பளம்
உங்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையாக இருக்கும். எனவே, கணவன்-மனைவி என
இருவரும் சம்பாதிக்கும் போது அதிக கடன் கிடைக்க வாய்ப்புண்டு.
இதுபற்றி எல்லாம் இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லக்
காரணம், வங்கிகளின் பொதுவான வரையறைக்கு உட்பட்டு நாம் கடன் வாங்கினால், நம்
வாழ்க்கையில் பெரிய சிரமங்கள் ஏற்படாது. நமது திருப்பிச் செலுத்தும் திறனை
மீறி கடன் வாங்கும்போதுதான், பெரும்பாலானோர் பிரச்னையில் மாட்டிக்
கொள்கிறார்கள்.
இளம் வயதில் கடன் வாங்கி வீடு வாங்குவதில் தவறே இல்லை!
ஆனால், வீட்டுக் கடன் வாங்கியபிறகு, நம் சம்பாத்தியத்தில் ஏதேனும் தடை
ஏற்பட்டால் என்ன செய்வோம் என்பதை தீர்க்கமாக யோசித்துவிட்டு, கடன் தொகையை
நிர்ணயம் செய்வது நல்லது.
இன்றைக்கு கைநிறைய சம்பளம் வருகிறது என்று கடன்
வாங்கிவிட்டு, நாளைக்கு திடீரென அந்த வேலையை இழக்க நேர்ந்தால், இ.எம்.ஐ.
கட்டுவது பாதிப்படையும். இதனால் வாங்கிய வீட்டை குறைந்த விலைக்கு
விற்கவேண்டிய கட்டாயம்கூட ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒரே வழி, ஆறு
மாதத்திற்கு தேவையான இ.எம்.ஐ. மற்றும் வீட்டுச் செலவுக்கான பணத்தை
எப்போதும் வங்கியில் வைத்திருப்பதே.
வீட்டுக் கடன் வாங்கும்போது அதிகமான பணத்தை வட்டியாகச்
செலுத்த விரும்பாதவர்கள், வழக்கமாகச் செலுத்தும் டவுன் பேமன்ட் தொகையைவிட
அதிகமாகச் செலுத்துவது நல்லது. உதாரணமாக, ரூ.30 லட்சத்திற்கு ஒரு வீட்டை
நீங்கள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
வங்கி விதிகளின்படி, குறைந்தது ரூ.6 லட்சம் (20%)
நீங்கள் டவுன் பேமன்டாகச் செலுத்தவேண்டும். மீதி 80 சதவிகிதத்தை (ரூ.24
லட்சம்) வங்கிக் கடனாக தரும். 20 வருட கடன் மற்றும் 10% வட்டி
என்கிறபட்சத்தில், மாத இ.எம்.ஐ. ரூ.23,161-ஆக இருக்கும்.
உங்கள் கையில் ரூ.6 லட்சம் இருக்கும் பட்சத்தில்,
உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. ஒன்று, நீங்கள் உடனே வீட்டை
வாங்கிவிட்டு இ.எம்.ஐ-யைத் துவக்கிவிடலாம்; அல்லது வீடு வாங்குவதை சற்று
ஒத்திப் போடலாம். உதாரணத்திற்கு, நீங்கள் 3 ஆண்டு காலம்
ஒத்திப்போடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த 3 ஆண்டுகாலத்தில்,கையில் இருக்கும் 6 லட்சத்தை ஒரு
ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டுவிடுங்கள். அதேபோல், நீங்கள் லோன்
எடுத்திருந்தால் மாதத்திற்கு கட்டவேண்டிய ரூ.23,161-ஐ ஒரு ஆர்.டி-யில்
அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டுவிடுங்கள். மூன்று வருடம் கழித்துப்
பார்க்கும்போது, ஆண்டிற்கு 8.5% வட்டி கிடைக்கும் என்ற பட்சத்தில், உங்கள்
கையில் 17 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
அதே 30 லட்சம் ரூபாய் வீட்டிற்கு நீங்கள் இப்போது
வெறும் 13 லட்சம் கடன் வாங்கினால் போதும். இதனால் நீங்கள் செலுத்தவேண்டிய
இ.எம்.ஐ. வெறும் ரூ.12,545-ஆக மட்டுமே இருக்கும்!
ஆனால், இந்த மூன்றாண்டு காலத்துக்குள் வீட்டின் மதிப்பு
உயர்ந்திருக்குமே! என நீங்கள் கேட்கலாம்! இனிவரும் காலத்தில் வீட்டு விலை
அவ்வளவு வேகமாக உயராது. அப்படியே உயரும் என்றாலும் உங்கள் வட்டி வருமானம்
ஓரளவுக்கு அதை ஈடுகட்டிவிடும். இப்படி செய்வதால், உங்கள் ரிஸ்க் வெகுவாக
குறைவதுடன், உங்களுக்கு நீங்களே ஒரு வெள்ளோட்டம் பார்த்துக்கொண்டதுபோல்
இருக்கும்.
டன் பெறும் தகுதி உங்களுக்கு இருக்கும் பட்சத்தில்,
நீங்கள் எவ்வளவு கடன் வாங்கலாம் என்பதை ஒரு அட்டவணையாகத் தந்திருக்கிறேன்
(அட்டவணை எதிர்பக்கத்தில்!). அதில் கணவன், மனைவி ஆகிய இரண்டுபேரின்
சம்பாத்தியத்தை ரூ.20,000; 40,000; 60,000; 1 லட்சம் மற்றும் 2 லட்சம் என
ஐந்து கேட்டகிரியாகப் பிரித்துள்ளேன்.
அதேபோல், வீட்டுக் கடன் வாங்குபவரின் ரிஸ்க் எடுக்கும்
திறனை கன்ஸர்வேட்டிவ், மாடரேட் மற்றும் அக்ரெஸிவ் என பிரித்துள்ளேன். வேறு
எந்தக் கடனும் இல்லாதபட்சத்தில் இந்த கேட்டகிரியில் உள்ளவர்கள் எவ்வளவு
உச்சபட்சமாக வீட்டுக் கடன் எடுக்கலாம் என்பதைக் கொடுத்துள்ளேன்.
வீட்டுக் கடனின் வட்டி 10% என்றும், திருப்பிச்
செலுத்தும் காலம் 20 வருடங்கள் என்றும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள்
வயது, ஒற்றைச்/ இரட்டைச் சம்பாத்தியம், நீங்கள் இருக்கும் துறை போன்றவற்றை
வைத்து உங்களுக்கு ஏற்ற கடன் தொகையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
தகுதி அறிந்து கடன் பெற்று, நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment