பிரம்மம் என்கிற ஒரு பரம்பொருள்தான் ஜீவன், ஜகத் இரண்டுக்கும் காரணம். அந்தக் காரணமும் அதன் விளைவான ஜீவ-ஜகத்துக்களும் வேறு வேறு இல்லை. ஏனென்றால் பிரம்மத்துக்கு வேறாக எதுவுமே இருக்க முடியாது. இப்போது ஜகத்தையே நிஜம் என்று நினைக்கிற ஜீவாத்மா, அதை ஒதுக்கிவிட்டு, தன்னையே யார் என்று விசாரம் பண்ணிப் பார்த்துக் கொண்டால், ‘உடம்பு நானில்லை, இந்திரியங்கள் நானில்லை, மனஸ் நானில்லை, புத்தி நானில்லை, பிராணன் நானில்லை’ என்று ஒவ்வொன்றும் கழன்று போய் கடைசியில் ‘தான் பிரம்மமே’ என்று அறிந்து கொள்வான். ‘பரமாத்மா என்று ஒன்று ஜீவாத்மாவைப் படைத்தது என்று சொல்வதுகூட ஒரு மாயைதான். ஜகத்தெல்லாம் அந்த மாயையின் விளையாட்டுதான். வாஸ்தவத்தில் பரமாத்மா ஜீவாத்மா என்ற பேதமில்லாமல் ஆத்மா என்ற ஒன்றுதான் இருக்கிறது. அந்த ஒன்றே ஸத்தியம்’ என்று தெரிந்து கொள்வான். அப்படி ஸத்தியத்தோடு இரண்டற (அ-த்வைதமாக) இருக்கிற போதுதான் சுக -துக்க ஊச லாட்டம் போய் ஒரே சாச்வத இன்பமாக, சாந்தியாக ஆகிறது. அதுதான் மோக்ஷம்.
இருப்பது ஒன்றுதான். பார்ப்பது பலவாக இருந்தாலும் உள்ளது ஒன்றே என்று அநுபவத்தில் ஆக்கிக் கொள்ள வேண்டும். அதனால் சாச்வத சாந்தியை, சதானந்தத்தைப் பெற வேண்டும். இதுதான் உபநிஷத்துக்களின் லக்ஷ்யம்.
இப்படி நான், அத்வைதந்தான் வேதாந்தத்தின் முடிவான சித்தாந்தம் என்று சொன்னால், மற்ற த்வைத, விசிஷ்டாத்வைத சித்தாந்திகள் ஆகே்ஷபம் பண்ணக் கூடும். அந்த சித்தாந்தங்களின் பெரியவர்களும் இதே உபநிஷத்துக்களுக்குத்தான் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். தங்கள் தங்கள் கொள்கையே ஔபநிஷதமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். அதனால் அத்வைதந்தான் உபநிஷத்துக்களின் உபதேசம் என்றால் எப்படி ஏற்பது?
அத்வைதம் என்பது த்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகியவற்றையும் தழுவி முதல் படிகளில் ஒப்புக் கொள்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் இந்த ஆகே்ஷபணை வராது.
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
No comments:
Post a Comment