இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை, முடிவுக்கு வந்திருக்கிறது. இல்லை,
புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. கிரிக்கெட் நிபுணர்களின் பலத்த
கண்டனங்கள், மீடியாவின் இடைவிடாத இடித்துரைத்தல்களுக்குப்
பிறகு, விடாப்பிடியாக இருந்த சீனிவாசன், இப்போது சிலகாலம் பி.சி.சி.ஐ.
தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியாவுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்.
பி.சி.சி.ஐ. செயற்குழுவில் உள்ள சரத்பவார், சஷாங்க் மனோகரை
பரிந்துரைத்துத் தோல்வி அடைந்திருக்கிறார். பி.சி.சி.ஐ.-யில் இன்னமும்
சரத்பவார்ஙண் டால்மியா மோதல் தொடர்வதும், சீனிவாசன் தொடர்பான சிக்கல்கள்
நீடிப்பதும் எந்தவிதத்தில்
இந்திய கிரிக்கெட்டுக்கு உபயோகமாகும்?ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த குருநாத்
மெயப்பன் கைது செய்யப்பட்ட பிறகு எல்லா பாரங்களும் சீனிவாசன்மீது
விழுந்துவிட்டன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் சஞ்ச க்தாலேவும், பொருளாளர்
அஜஷிர்கேவும், ஐ.பி.எல். சேர்மனாக இருந்த ராஜிவ் சுக்லாவும் தங்கள் பதவிகளை
ராஜினாமா செய்து சீனிவாசன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று
கோடிட்டுக் காண்பித்தார்கள்.
ஆனாலும் சீனிவாசன் தன் நாற்காலியை இன்னமும் தக்கவைத்துக் கொண்டிருப்பது,
பி.சி.சி.ஐ.யில் நிலவும் போட்டி அரசியல்களை அப்பட்டமாகக் காட்டிவிட்டது.
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி. உறுப்பினர்கள் உயர்
பதவிகளில் இருப்பதால் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,
நடப்பதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது. வசதி படைத்தவர்களும் அரசியல்வாதிகளும் பி.சி.சி.ஐ.-யின் முக்கியமான
பதவிகளில் அமர்ந்துகொண்டு பதவி சுகத்தை அனுபவிக்கும் சூழலில்
நியாயத்துக்கும் மனசாட்சிக்கும் இடமில்லாமல் போய்விட்டது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சீனிவாசன் வாங்காமல் இருந்திருந்தால்,
குருநாத் மெய்யப்பனை அணியின் உரிமையாளராக்காமல் இருந்திருந்தால் இன்று அவர்
தம் பதவியை ஜாம்ஜாம் என்று அனுபவித்துக் கொண்டு இருக்கலாம்.
பி.சி.சி.ஐ., சி.எஸ்.கே. என்கிற இரட்டைக் குதிரைச் சவாரி, தனக்குப்
பின்னால் மிகப்பெரிய தலைவலியைக் கொடுக்கும் என்று அவர் எப்படி அறியாமல்
இருந்தார்? இறுதியில், சீனிவாசனின் நிர்வாக நேர்மையின்மீது எல்லோருக்கும்
நம்பிக்கை போய்விட்டது.சூதாட்டப் புகார் குறித்து தோனி நிறைய பேச வேண்டும் என்று மீடியா
எதிர்பார்க்கிறது. காரணம், சீனிவாசன் பாணியிலான புகார்கள் இப்போது
தோனிமீதும். தோனியின் விளம்பரங்களைக் கவனிக்கும் ரித்தி ஸ்போர்ட்ஸ்
நிறுவனத்தில் தோனிக்கும்
சில பங்குகள் உள்ளனவாம். தோனியின் நண்பர் அருண் பாண்டே, ரித்தி ஸ்போர்ட்ஸை
நிர்வகிக்கிறார். ரித்தி ஸ்போர்ட்ஸ், சி.எஸ்.கே.வுடனும் கைகோத்திருக்கிறது.
இதனால், ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் உள்ள கிரிக்கெட்
வீரர்கள், இந்திய அணியில் நுழைய தோனி
ஏதாவது உதவி செய்திருக்கிறாரா அல்லது மற்ற விளம்பர நிறுவனங்களுடன்
ஒப்பந்தத்திலுள்ள வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா போன்ற கேள்விகள்
எழுந்துள்ளன. இந்திய அணியின் கேப்டன், சி.எஸ்.கே.வின் கேப்டன் மற்றும்
இந்தியா சிமெண்ட்ஸின் வைஸ் பிரசிடெண்ட் ஆகிய முக்கியமான பதவிகளை
தோனி சுமப்பதால், இப்போது சீனிவாசனுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை இனி
தோனியும் சந்திக்க நேரிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. இன்று பலருடைய கோரிக்கையாக இருப்பது, இந்திய கிரிக்கெட் வாரியத்தை அரசே
ஏற்று நடத்த வேண்டும் என்பதுதான். ஆனால் கிரிக்கெட்டை அரசே ஏற்று
நடத்தினால், இந்தியாவில் மற்ற விளையாட்டுகள் போல கிரிக்கெட்டும்
வளர்ச்சியடையாமல் போகலாம்.
பதிலாக, பி.சி.சி.ஐ. தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் பணபலம், அதிகாரம்
படைத் தவர்களை அமரவைக்காமல் இருந்தாலே போதும். நூறு கோடி பேருள்ள
தேசத்தில் சிறந்த நிர்வாகிகளுக்கா பஞ்சம்! ரசிகர்கள் டி.வி.யில் செலுத்தும்
ஒவ்வொரு
மணித்துளியும் பி.சி.சி.ஐ.க்குக் கோடிகளாக மாறுவதால், பி.சி.சி.ஐ.யின்
எல்லாக் கணக்கு வழக்குகளும் மக்கள் பார்வைக்கு நேரடியாக வைக்கப்படவேண்டும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் போல நேரடியான நிர்வாகம் கொண்டுவரப்பட வேண்டும்.
அதுதான்
கிரிகெட் ரசிகனின் எதிர்பார்ப்பு!
மீண்டும் டால்மியா!
ஜக்மோகன் டால்மியா- 1979ல், பி.சி.சி.ஐ.க்குள் நுழைந்தவர். இவரும் ஐ.எஸ்.
பிந்த்ராவும் 1987 உலகக்கோப்பைப் போட்டி, இந்தியாவுக்குக் கிடைக்க
முக்கியக் காரணகர்த்தா. 90களில் டால்மியாவின் முயற்சியால் தான் பணத்தில்
புரள ஆரம்பித்தது
பி.சி.சி.ஐ. 1997ல் ஐ.சி.சி. தலைவராகி கிரிக்கெட்டில் நீடித்து வந்த
மேற்குலக ஆதிக்கத்தைத் தடுத்தார். ஒளிபரப்பு உரிமம், விளம்பரக் கட்டணம்
மூலமாக எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை
பி.சி.சி.ஐ.க்கு மட்டுமல்ல,
ஐ.சி.சி.க்கும் கற்றுத் தந்தவர் டால்மியா. 2001ல் பி.சி.சி.ஐ. தலைவர். 15
வருட ஆளுமை 2005ல் முடிவுக்கு வந்தது. சரத்பவார், பி.சி.சி.ஐ. தலைவரான
பிறகு, வாரியத்திலிருந்து தடை செய்யப்பட்டார் டால்மியா. 1996 உலகக்
கோப்பையின்போது பணமோசடி செய்த
குற்றச்சாட்டால் அவர்மீது வழக்கு. ஆனால் பின்னாளில், பெங்கால் கிரிக்கெட்
சங்கத்தின் தலைவர் ஆனார். மோசடி வழக்குகளிலிருந்து நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்டார். ‘நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க
பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு முயற்சி செய்வேன். என் எதிரிகளுக்குப் பதில்
சொல்ல அதுதான் பொருத்தமாக இருக்கும்’ என்று சில ஆண்டுகளுக்கு முன்பு
பேட்டியளித்தார் டால்மியா. அது இந்த ரூபத்தில் வந்து பதிலளிக்கும் என்று
டால்மியாவே எதிர்பார்த்திருக்க மாட்டார்.
No comments:
Post a Comment