Search This Blog

Thursday, June 06, 2013

யார் எம்.பி. ஆனால் என்ன? - மாநிலங்களவைத் தேர்தல்

 
ஆறு முகங்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கப்போகிறது. பொதுவா கவே, மாநிலங்களவைத் தேர்த லுக்குப் பரபரப்பு ரொம்பவே கம்மி. மக்களவைத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் அதற்கு இல்லை என்பது மட்டுமல்ல; 'யார் எம்.பி. ஆனால் என்ன? அந்த எண்ணிக்கை ஆட்சியைத் தீர்மானிப்பதாக இருக்கப்போவது இல்லையே’ என்பதும் அதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், அடுத்த மாதம் நடக்கப்போகும் மாநிலங்களவைத் தேர்தல் அதற்கு அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தல் கூட்டணிகளைத் தீர்மானிக்கும் சக்தி படைத்தவையாக மாறிக்கொண்டு இருப்பதால், இது அனைவராலும் கவனிக்கப்பட வேண்டிய அவசியத்தைக் கொடுத்துள்ளது.
 
இப்போது எம்.பி-யாக இருக்கும் கனிமொழி, திருச்சி சிவா (தி.மு.க.), ஞானதேசிகன் (காங்கிரஸ்), மைத்ரேயன், திருச்சி இளவரசன் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிகிறது. அதே தினத்தில், அடுத்த ஆறு பேர் எம்.பி-யாக வேண்டும். ஒருவர் மாநிலங்களவை எம்.பி. ஆக வேண்டுமானால், குறைந்தபட்சம் 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும்.அ.தி.மு.க-வுக்கு இப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் 151 உறுப்பினர்கள். அதன் அடிப்படையில் பார்த்தால் 4 உறுப்பினர்களை உறுதியாக யார் தயவும் இல்லாமல் தேர்வுசெய்யலாம். இந்த நான்கு உறுப்பினர்களுக்கு 136 வாக்குகள் போக, மீதம் 15 வாக்குகளை அ.தி.மு.க. வைத்திருக்கும். இந்த 15 வாக்குகளை யாருக்குத் தரப்போகிறது என்ற அடிப்படையில்தான் இன்னோர் உறுப்பினர் யார் என்று தீர்மானிக்க முடியும்.அ.தி.மு.க-வின் அந்த 15 சீட் ஆதரவைப் பெறவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த ஓர் ஆண்டு காலமாகத் தவம் இருந்துவருகிறது. அ.தி.மு.க-வை விமர்சிக்காமல் தா.பாண்டியன் பதுங்கியிருக்கவும் இதுதான் காரணம். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினராக இருக்கக்கூடிய டி.ராஜாவுக்காகத்தான் தா.பாண்டியன் இப்படி மௌனம் சாதிக்கிறார் என்று நினைத்திருந்தால், சமீப காலமாக அவரது சிந்தனையில் மாற்றம். தானே எம்.பி. ஆனால் என்ன என்று தா.பா. நினைக்க ஆரம்பித்தார். 'டி.ராஜாவை தி.மு.க. ஆதரவாளராக ஜெயலலிதா பார்க்கிறார். அதனால், அவர் எம்.பி. ஆவதற்கு உதவ மாட்டார்.   தா.பாண்டியனுக்குத்தான் எம்.பி. பதவியைக் கொடுப்பார். இதன் மூலமாக நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குத் தா.பா-வைப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்’ என்று தா.பாண்டியன் ஆதரவாளர்கள் கட்சிக்குள் சொல்ல ஆரம்பித்தார் கள். இது கட்சி மட்டத்தில் லேசான சலனத்தை ஏற்படுத்தியது. ஆனால், டெல்லியில் கூடிய முக்கியத் தலைவர்கள் கூட்டத்தில், 'டி.ராஜாவுக்குத்தான் எம்.பி. பதவி தரப்பட வேண்டும்’ என்று முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக இருந்தால், டி.ராஜா-தா.பா. விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஜெயலலிதாவுக்கு!
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 உறுப்பினர் கள் ஆதரவு இருக்கிறது. அவர்கள் இடதுசாரிக் கட்சி என்ற அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிக்கலாம். இரண்டு கட்சிகளுக் கும் சேர்த்து 18 வாக்குகள் உள்ளன. இவர்களுக்குத் தேவையான 15 வாக்குகள் ஆளும் கட்சியிடம் இருக்கிறது. இந்தக் கணக்கு சிக்கல் இல்லாமல் போனால், ஐந்தாவது எம்.பி-யாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் ஆகலாம்.ஆறாவது இடம் யாருக்கு என்பதைச் சொல் வதில்தான் 1,008 சிக்கல். முக்கிய எதிர்க் கட்சியாக இருக்கும் தே.மு.தி.க -விடம் வெற்றிபெற்று வரும்போது, 29 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால், சமீப காலத்திய சறுக்கல்கள் காரண மாக ஆறு உறுப்பினர்கள் விஜயகாந்துடன் முரண்பட்டு நிற்கிறார்கள். மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், தமிழழகன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய ஆறு பேர் ஜெயலலிதாவைச் சந்தித்து, 'தங்கள் தொகுதிப் பிரச்னை’ பற்றிப் பேசினார்கள். அதாவது, கட்சி மாறவில்லை. மாறினால் அவர்களது பதவி பறிபோய்விடும் என்பதால் ஜாக்கிரதையாக, 'நாங்கள் விஜயகாந்துடன் இல்லை’ என்பதைச் சொல்லிவிட்டார்கள். எனவே, விஜயகாந்த் அறிவிக்கும் வேட்பாளருக்கு இந்த ஆறு பேரும் வாக்களிக்க மாட்டார்கள். எனவே, அவருக்கு இப்போது சட்டமன்ற பலம் 23 மட்டுமே. ஒரு எம்.பி-யை வெற்றிபெறவைக்கவேண்டுமானால், அந்தக் கட்சிக்கும் 11 வாக்குகள் தேவை. 'மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்களுக்கு எப்போதும் தோழமையானது. எனவே, அவர்களது ஆதரவைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சிப்போம்’ என்று தே.மு.தி.க. வட்டாரம் சொல்லிவருகிறது. 'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் நின்றால், அவர்களைத்தான் ஆதரிக்க வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் தலைமை முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், தே.மு.தி.க-வின் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே, காங்கிரஸ் (5 வாக்குகள்) ஆதரவைப் பெறலாமா என்றும் விஜயகாந்த் யோசித்து வருகிறார்.இந்த முயற்சி குறித்த செயல்பாடுகளை இரண்டு வாரங்களுக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என்பதே விஜயகாந்தின் திட்டம். ஏனென்றால், 'நாம் இந்த மாதிரி ஏதாவது செய்ய ஆரம்பித்தால், உடனே ஆளும் கட்சி உஷாராகி, இன்னும் சில எம்.எல்.ஏ-க்களை இழுப்பார்கள். அதனால் அமைதியாக இருப்போம். கடைசியில் பார்த்துக்கொள்வோம்’ என்பது விஜயகாந்தின் மனவோட்டமாக இருக்கிறது. மேலும், தே.மு.தி.க-வைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் ஆறு மாதங்களுக்குச் சபையை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு எந்தத் தடங்கலும் இல்லை என்று இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், இறுதி நேரத்தில், 'சஸ்பெண்ட் காலத்தில் ஓர் உறுப்பினர் வாக்களித்தால் செல்லுமா?’ என்று ஆளும் கட்சி வட்டாரமே சர்ச்சையைக் கிளப்பி, அது நீதிமன்றம் வரைக்கும் போனால், விஜயகாந்துக்குப் பெரிய நெருக்கடி ஏற்படும். 'சஸ் பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றம் தலையிடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியிருக்கும் நிலையில், இந்த ஆறு வாக்குகள் இறுதிவரை சிக்கலானவைதான்.
 
இப்படிப்பட்ட நிலைமையில்தான் தி.மு.க-வின் பார்வை விஜயகாந்த் மீது விழுந்தது. தி.மு.க-வுக்கு 23 உறுப்பினர்கள். இவர்களுக்கு இன்னும் 11 வாக்குகள் வேண்டும். அதனை விஜயகாந்திடம் இருந்து வாங்கலாம் என்பது கருணாநிதியின் நினைப்பு. விஜயகாந்த் மீது அவதூறு வழக்குகள் பாயும்போதெல்லாம், 'இந்த மாதிரி அவதூறு வழக்குகள் பாய்ச்சப்படுபவர்கள் ஒன்றுசேர்ந்து இதனை எதிர்கொள்ள வேண்டும்’ என்று கருணாநிதி அழைப்பு விடுத்தார். அவரது கட்சி எம்.எல். ஏ-க்களை ஜெயலலிதா இழுப்பதைப் பார்த்து திருவான்மியூர் பொதுக்கூட்டத்தில், 'தம்பியின் கட்சியை இப்படி அழிக்கப்பார்க்கிறார்களே?’ என்று பகிரங்கமாக வருந்தினார். இது எதுவும் விஜயகாந்த் மனதை மாற்றியதாகத் தெரிய வில்லை. 'தி.மு.க-வை ஆதரிக்க விஜயகாந்த் தயாராக இருக்கிறார். ஆனால், பிரேமலதா அதை விரும்பவில்லை’ என்று சொல்லப்படுகிறது. 'கனிமொழிக்கு தே.மு.தி.க. வாக்களிக்க வேண்டும்’ என்று தி.மு.க. கேட்பதாகவும், 'சுதீஷ§க்கு தி.மு.க -வினர் வாக்களிக்க வேண்டும்’ என்று விஜயகாந்த் கேட்பதாகவும் இரண்டு கட்சியினரும் பேசிவருகிறார்கள். 'பிரேமலதாதான் தேர்தலில் நிற்கப்போகிறார். அவரும் கருணாநிதிக்கு மகள் மாதிரிதானே’ என்று தே.மு.தி.க-வினர் கிண்டல் அடித்தது தி.மு.க-வினர் காதுக்கும் வந்துள்ளது. 'நான் யாரைத் தேடியும் போகப்போவது இல்லை. தேவைப்படுபவர்கள் என்னைத் தேடி வரட்டும்’ என்று விஜயகாந்த் சொல்வதை, தி.மு.க-வினர் ரசிக்கவில்லை. விஜயகாந்த் வேட்பாளரை தி.மு.க. ஆதரிக்கும் சூழ்நிலை இல்லாமல்போனால், 'இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என்று தே.மு.தி.க. சொல்லலாம். இதன் மூலமாகத் தன்னை எதிர்க்கும் தே.மு.தி.க-வினர் வாக்குகளை செல்லாமல் ஆக்க விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.ஐந்து இடங்களை ஆக்கிரமித்துக் குதூகலத்துடன் ஆளும் கட்சியும், ஓர் இடம் யாருக்கு என்று தெரியாமல் குழப்பத்துடன் எதிர்க் கட்சிகளும் இருக்க, மாநிலங்களவைத் தேர்தல் தி.மு.க முகாமில் மட்டுமே பெரும் கலக்கத்தை உண்டாக்கி இருக்கிறது!
 
 
ப.திருமாவேலன்.

No comments:

Post a Comment