Search This Blog

Sunday, June 02, 2013

வெற்றி பெறுவாரா அலான்சோ?

அலான்சோ, வெட்டல், கிமி ராய்க்கோனன் -  இந்த மூவரில் யார் சாம்பியன் என்பதில்தான் இந்த ஆண்டுக்கான த்ரில் போட்டா போட்டி இருக்கிறது. கடந்த மாதம் பஹ்ரைன் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்ற ரேஸில் வெட்டல், அலான்சோ ஆகிய இருவரும் வெற்றி பெற்று, இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் பட்டத்துக்கு நாங்கள்தான் போட்டியாளர்கள் என்பதை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கின்றனர்.

பஹ்ரைன் 

பஹ்ரைனில் உள்ள சாஹீர் ரேஸ் டிராக்கில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி ஃபார்முலா-1 ரேஸின் நான்காவது சுற்று நடைபெற்றது. ரேஸுக்கு முந்தைய நாள் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில், மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ரோஸ்பெர்க் முதல் இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றார். வெட்டல் இரண்டாவது இடத்தில் இருந்தும், அலான்சோ மூன்றாவது இடத்தில் இருந்தும், ஹாமில்ட்டன் நான்காவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கத் தகுதி பெற்றனர். ஆனால், கடைசி நேரத்தில் கியர் பாக்ஸில் சில மாற்றங்களைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால், ஹாமில்ட்டனுக்கு 5 இடங்கள் பின்னால் இருந்து ரேஸைத் துவக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டது. அதனால், லூயிஸ் ஹாமில்ட்டன் ஒன்பதாவது இடத்தில் இருந்து ரேஸைத் துவக்கினார்.


ரேஸ் துவங்கியதுமே வெட்டலுக்கும், அலான்சோவுக்கும் இடையே முட்டல் ஆரம்பமானது. முதல் லேப்பின் முதல் திருப்பத்தில், வெட்டலை முந்தினார் அலான்சோ. ஆனால், ஐந்தாவது வளைவிலேயே அலான்சோவை விரட்டிப் பிடித்த்தார் வெட்டல். அடுத்ததாக, முதல் இடத்தில் சென்றுகொண்டுஇருந்த நிக்கோ ராஸ்பர்க்கை முந்தினார் வெட்டல். அதன் பிறகு, வெட்டலை யாரும் முந்த முடியவில்லை. மற்ற வீரர்கள் அனைவரும் டயர்களை மாற்றவும், வேறு காரணங்களுக்காகவும் மூன்று முறை பிட் ஸ்டாப்பில் காரை நிறுத்த, இரண்டு முறை மட்டுமே பிட் ஸ்டாப் பக்கம் சென்ற லோட்டஸ் அணியின் கிமி ராய்க்கோனன், இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இந்தச் சமயம் பார்த்து அலான்சோவின் காரில் டி.ஆர்.எஸ் (டிராக் ரிடக்ஷன் சிஸ்டம்) சரியாக வேலை செய்யவில்லை. காரின் பின் பக்கத்தில் உள்ள ஸ்பாய்லரில் இருக்கும் ஃப்ளாப்புகளைத் திறந்து காரை வேகமாக செலுத்த உதவுவதுதான் டி.ஆர்.எஸ் சிஸ்டம். டிரைவர் கன்ட்ரோலில் இருக்கும் பட்டன் மூலம் இந்த டி.ஆர்.எஸ் சிஸ்டத்தை இயக்க முடியும். ஆனால், இது வேலை செய்யாததால், அலான்சோவால் முந்த முடியவில்லை. அதனால், மொத்தம் 57 லேப்புகள் கொண்ட பஹ்ரைன் ஜீபி ரேஸை, ஒரு மணி நேரம் 36 நிமிடங்களில் கடந்து முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றார் ரெனோ அணியின் செபாஸ்ட்டியன் வெட்டல்.

கிமி ராய்க்கோனன் ஒன்பது விநாடிகள் பின்தங்கி இரண்டாம் இடத்தையும், லோட்டஸ் அணியின் ரொமெய்ன் கிராஸின் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

ஸ்பெயின் 

ஃபெராரி அணி வீரர் அலான்சோவின் சொந்த நாடான ஸ்பெயினில் உள்ள பார்சலோனா நகரில், ஃபார்முலா-1 ரேஸின் ஐந்தாவது சுற்று மே 12-ம் தேதி நடைபெற்றது. பஹ்ரைன் ரேஸைப் போலவே ஸ்பெயினிலும் தகுதிச் சுற்றில் முதல் இடம் பிடித்தார் மெர்சிடீஸ் அணியின் நிக்கோ ராஸ்பர்க். லூயிஸ் ஹாமில்ட்டன் இரண்டாவது இடத்தில் இருந்தும், செபாஸ்ட்டியன் வெட்டல் மூன்றாவது இடத்தில் இருந்தும், அலான்சோ ஐந்தாவது இடத்தில் இருந்தும் ரேஸைத் துவக்கினார்கள்.

ரேஸை முதல் இடத்தில் இருந்து துவக்கிய மெர்சிடீஸ் அணியின் இரண்டு கார்களுமே டயர் பிரச்னையால் பின்னுக்குத் தள்ளப்பட்டன. முதல் லேப்பின் முடிவிலேயே ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறினார் அலான்சோ. இதற்கிடையே கிமி ராய்க்கோனன் முதல் இடத்தில் பறக்க... அலான்சோ இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். அலான்சோவின் சொந்த ஊரில் ரேஸ் நடைபெறுவதால், அலான்சோவின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். ரசிகர்களின் உற்சாகக் குரல்களுக்கிடையே ரேஸ் ஓட்டிய அலான்சோ, 36-வது லேப்பின் போது கிமி ராய்க்கோனனை முந்தினார். அதன் பிறகு, ராய்க் கோனனால் அலான்சோவைப் பிடிக்க முடியவில்லை. 66 லேப்புகள்கொண்ட இந்த ரேஸ் போட்டியின் இறுதியில் அலான்சோ, கிமி ராய்க்கோனனைவிட ஒன்பது விநாடிகள் முன்னிலை பிடித்து வெற்றி பெற்றார். அலான்சோவின் ஃபார்முலா-1 ரேஸ் வரலாற்றில் இது 32-வது வெற்றியாகும். ஃபெராரியின் மற்றொரு வீரரான ஃபிலிப் மாஸா, இந்த ரேஸில் மூன்றாவது இடம் பிடித்தார்.

ஐந்து சுற்றுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், செபாஸ்ட்டியன் வெட்டல் 89 புள்ளிகளுடன் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 85 புள்ளிகள் ஜெயித்திருக்கும் லோட்டஸ் அணியின் கிமி ராய்க்கோனன் இரண்டாவது இடத்திலும், ஃபெர்னாண்டோ அலான்சோ 72 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.


அலான்சோதான் இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வெல்வார் என இப்போதே புக்கிகள் பணம் கட்டத் துவங்கிவிட்டனர். அலான்சோ தொடர்ந்து வெற்றி பெறுவாரா அல்லது வெட்டல், ராய்க்கோனன் இருவரும் அவரின் வெற்றிக்கு வேட்டு வைப்பார்களா என்பது விரைவில் தெரிந்து விடும்!




No comments:

Post a Comment