வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு
பல்லாயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கும் உத்தரகாண்ட்டில் மீண்டும் மழை
ஆரம்பித்துள்ளதால், ஒட்டுமொத்த இந்தியாவும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை, வெள்ளம் மற்றும்
நிலச்சரிவில் சிக்கித் தவிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரத்துக்கும்
மேல். இறந்தவர்களின் எண்ணிக்கையோ ஆயிரத்தைத் தாண்டும் என்கின்றனர். சாவு
எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமானதற்கு என்ன காரணம்? இந்தக் கேள்விக்கான
விடையை அறிவதில்தான் மத்திய - மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
'இந்திய வரைபடத்தில் ராம்பாரா கிராமம் இருந்த இடம் தெரியவில்லை.
வெள்ளப்பெருக்கு அந்தக் கிராமத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. அந்தக்
கிராமத்தில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது.
10 அடி உயர சகதி வெள்ளம் அந்தக் கிராமத்தையே கபளீகரம் செய்துவிட்டது'.
கிட்டத்தட்ட 1,000 பேர் மக்கள்தொகையைக் கொண்டது கேதர்நாத். இங்குள்ள புகழ்பெற்ற சிவன் கோயில்,
மூன்று பக்கமும் மலை சூழ்ந்தது. மந்தாகினி ஆற்றங்கரையில் இந்தக்கோயில்
அமைந்திருக்கிறது. மே முதல் செப்டம்பர் வரைதான் கோயில் திறந்திருக்கும்.
மற்ற மாதங்களில் கோயில் மூடப்படும். கடுமையான குளிர், பனி சூழ்நிலையில்
அங்கே யாரும் போக முடியாது.
கடல் மட்டத்தில் இருந்து கேத்ரிநாத் கோயில் சுமார்
11,754 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த இடத்தை அடைய கௌரி குண்டு என்ற
இடத்தில் இருந்து 14 கி.மீ. மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். அதற்கு
ஏழு கி.மீ. முன்னதாக ராம்பாரா கிராமம் எதிர்படும். கான்கிரீட் கட்டங்களால்
ஆன இங்குள்ள விடுதிகளில், புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், சுற்றுலாப்
பயணிகள் தங்கி இருப்பார்கள். அந்த வகையில், பேய் மழைக்கு முன்பு இங்கே
தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டும். இப்போது அங்கே
எவ்வளவு பேர் உயிருடன் இருக்கின்றனர் என்பதே தெரியவில்லை. பேரழிவு நடந்த
ஒரு வார காலத்துக்குப் பிறகு மீட்புப் படையினர் அந்த
ஏரியாவை இப்போதுதான் அடைந்திருக்கின்றனர்.
இதேபோல், கேதர்நாத் கோயிலுக்கு மேலே மூன்று கி.மீ.
தொலைவில் காந்திசரோவர் என்கிற மிகப் பெரிய ஏரி உள்ளது. கன மழையால் அந்த ஏரி
நிரம்பி வழிந்ததாலோ, ஒரு பகுதி உடைந்து தண்ணீர் திடீரென வெளியேறியதாலோதான்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேதர்நாத்தை உள்ளடக்கிய ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஜூன்
1 முதல் ஜூன் 17 வரை பெய்த மழை அளவு 410 மி.மீ (கடந்த ஆண்டு இதே நாட்களில்
பெய்த மழை 85.9 மி.மீ). இந்த அளவுக்கு மிக அதிகமாக மழை கொட்டியதுதான்
வெள்ளப்பெருக்கு ஏற்பட இன்னொரு காரணம் என்கின்றனர்.
No comments:
Post a Comment