கடந்த வியாழக்கிழமை அன்று ரூபாய்
60-க்கும் அருகே போய், பங்குச் சந்தையை பதைபதைக்க வைத்தது. சென்ற
திங்கட்கிழமை அன்று நடந்த ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில் கடன் மற்றும் நிதிக்
கொள்கையில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. இதன்காரணமாக ரூபாய் ஓரளவு
உயர்ந்தது. ஆனால், புதன்கிழமை இரவு கியூ.இ. 3-யை விரைவில் குறைக்கப் போவதாக
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்-ன் தலைவர் பென் பெர்னான்கி சொன்னதால்,
வியாழனன்று இந்திய ரூபாயின் மதிப்பு அதலபாதாளத்துக்கு இறங்கிவிட்டது.
ரூபாய் சரிந்தால் என்ன, உயர்ந்தால் என்ன என்று நாம்
சும்மா இருந்துவிட முடியாது. ரூபாய் சரிவதால் நம் அன்றாட வாழ்க்கையில் பல
பாதிப்புகள் (சில சாதகங்களும் உண்டு!) நமக்கு ஏற்படும். அப்படி என்ன
பாதிப்பு ஏற்படும் என்கிறீர்களா?
பணவீக்கம் அதிகரிப்பு!
உள்நாட்டில் விலைகள் அதிகரிப்பதி னால் மட்டும்
பணவீக்கம் அதிகரிக்காது. ரூபாய் மதிப்பு சரிந்தாலும் பணவீக்கம்
அதிகரிக்கும். இதற்கு 'இறக்குமதியாகும் பணவீக்கம்’ என்று சொல்வார்கள்.
உதாரணமாக, சில நாட்களுக்கு முன் பெட்ரோல் விலையை 2 ரூபாய் உயர்த்தியது
மத்திய அரசு. காரணம், ரூபாய் மதிப்பு சரிந்ததே! பெட்ரோல் மட்டுமல்ல,
பாமாயில், உரம், இரும்புத்தாது, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உள்ளிட்ட
பொருட்களின் விலை அதிகரிக்கும். (சில பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்து
விட்டது!)
வட்டி குறையாது!
ரூபாய் மதிப்பு சரிவதால், பணவீக்கம் அதிகமாக இருக்கும்.
எனவே, ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களைக் குறைக்க இன்னும் அதிக
காலத்தை எடுத்துக்கொள்ளும். இதனால் வீட்டுக் கடன் மற்றும் மற்ற கடன்களுக்கு
வட்டி விகிதம் குறைவது தள்ளிப்போகும். வட்டி குறையும் என்று
காத்திருந்தவர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.
லாபம் குறையும்!
ரூபாய் சரியும்போது கச்சா எண்ணெய்யை அதிக விலை தந்து
வாங்க வேண்டியிருக்கும். இதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும்
அதிகரிக்கும். இதனால் அரசின் மானிய சுமை அதிகரிக்கும். தவிர, பல முன்னணி
நிறுவனங்கள் வெளிநாட்டில் கடன் வாங்கி இருப்பதால், அதிக வட்டி
கட்டவேண்டியிருக்கும். இதனால் அந்த நிறுவனங்களின் லாபம் குறையும்.
மாணவர்களுக்கும் பாதிப்பு!
வெளிநாட்டுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் மற்றும்
சுற்றுலா செல்பவர்கள் அதிக தொகையைச் செலவிட வேண்டியிருக்கும். சுற்றுலா
செல்பவர்கள்கூட டூரை சில மாதங்களுக்கு தள்ளிப்போடலாம். ஆனால்,
வெளிநாட்டுக்கு படிக்கப் போகிறவர்கள் வேறு வழியில்லாமல் அதிக தொகையைச்
செலுத்தியே ஆகவேண்டும்.
சாதகங்கள் என்னென்ன?
ரூபாய் சரிவினால் ஐ.டி., பார்மா, டெக்ஸ்டைல் உள்ளிட்ட
துறை நிறுவனங்களில் லாபம் அதிகரிக்கும். அந்நிய முதலீடுகள் இந்தியாவை
நோக்கி இன்னும் அதிகமாக வரலாம். என்.ஆர்.ஐ.களின் முதலீடும் அதிகரிக்க
வாய்ப்புண்டு.
அள்ளித் தந்த ஃபண்டுகள்!
ரூபாய் மதிப்பு சரிந்ததால், இன்டர்நேஷனல் ஃபண்டுகள்
நல்ல லாபம் தந்திருக்கின்றன. ஜே.பி.மார்கன் ஏசியன் ஈக்விட்டி ஆஃப்ஷோர்
பண்ட் சுமார் 32 சதவிகித வருமானத்தைத் தந்திருக்கிறது. மேலும், ஆறு
ஃபண்டுகள் 20 சதவிகிதத்துக்கு மேல் லாபம் தந்திருக்கிறது.
No comments:
Post a Comment