Search This Blog

Tuesday, March 06, 2012

ஜகம் நீ... அகம் நீ..! -2


'தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!' என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.''ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது. பெரியவா உடனே, 'என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.  'காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!'' என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப் பெரியவாகிட்டே சொன்னோம். அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம்  தெரிவிச்சோம். 'அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது. அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.


பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.  விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!  காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்! அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, 'வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு சொன்னார்.ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும், அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே... அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!

இன்னொரு நாள்... பெரியவா தன்னோட ஒத்தை ரூம்லே உட்கார்ந்து ஜபம் பண்ணிண்டிருந்தார். எப்பவும் ஜபம் பண்றபோது கண்ணை மூடிண்டிருப்பார். நாங்க ஜன்னல் வழியா அவரைத் தரிசனம் பண்ணுவோம்.ஒரு நாள், பெரியவா ஜபம் பண்ணிக் கொண்டிருக்கிறபோது, ஒரு பாம்பு மெதுவா ஊர்ந்து போய், அவர் மடியிலே ஏறிப் படுத்துண்டுது. அதைப் பார்த்ததும், நாங்க நடுநடுங்கிப் போயிட்டோம். பெரியவாளை அது ஒண்ணும் பண்ணிவிடக் கூடாதே என்று பயந்தோம். அதிகம் சத்தம் கித்தம் செய்யாமல், 'பெரியவா, பாம்பு... பாம்பு...’ என்று சொன்னோம். பெரியவா உடனே கண்ணை விழிச்சுப் பார்த்தா. உடுத்தியிருந்த காஷாயத் துணியை அப்படியே பாம்போடு சேர்த்து, தூக்கிப் போட்டுட்டு, கௌபீனத்தோடு வெளியிலே வந்தார். வேற ஆடை கொடுத்தோம். எங்களுக்கு அப்போதுதான் ஆசுவாசமாக இருந்தது.நீங்க இன்னிக்குத்தான் இதைப் பார்க்கறேள். அது இங்கே வர்றதை நான் நாலஞ்சு நாளாவே பாத்துண்டுதான் இருக்கேன்' என்றார் பெரியவா. எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டுது. 'அடிச்சுடலாமே’ என்று சிலர் சொன்னபோது, 'கூடாது’ என்று தடுத்துவிட்டார். 'எந்தப் பிராணிக்கும், எந்த ஜீவராசிக்கும் தீங்கு இழைக்க மாட்டேன்னு, சந்நியாசியாகிறபோது சங்கல்பம் பண்ணியிருக்கேன். அதைக் காப்பாத்த வேண்டாமா நான்?’ அப்படின்னு எங்களை சமாதானம் பண்ணினார்.அப்படித்தான், தேனம்பாக்கத்தில் நிறைய நாய்கள் அங்கேயும் இங்கேயும் அலைஞ்சுண்டிருக்கும். கணக்கே சொல்ல முடியாது. ஏகப்பட்ட நாய்கள். ஒருமுறை, ஒரு பாம்பு படமெடுத்து நிக்கறது. மூணு நாலு நாய்கள் குரைச்சிண்டே அதைச் சுத்தி சுத்தி வருது.  பெரியவா முதல்ல பாம்பை பத்திரமா விரட்டிடுன்னார். அது எப்படியோ தப்பிச்சுப் போயிடுத்து. ஆனா, நாய்கள் அட்டகாசம் ஓயவே இல்லே. முனிசிபாலிடியிலே சொல்லி பிடிச்சுண்டு போக ஏற்பாடு பண்ணலாமே என்று சொன்னபோது, தடுத்துவிட்டார் பெரியவா. அந்தப் பாபத்தைச் செய்யக் கூடாதுன்னுட்டார். 'எச்சில் இலைகளை வெளியே போட்டுடுங்கோ. எல்லாம் அங்கே போயிடும். இங்க அதுகள் சுத்தி வந்து உங்களுக்கு உபத்திரவம் தராது’ன்னு சொல்லிட்டார்.  பெரியவா வெளியிலே கிளம்பினா, அம்பது அறுபது நாய்களும் அவரோடு கிளம்பிடும். அதுகளுக்குத் தெரியும், யார் இங்கே எஜமானன்னு!

எப்பவும் கை- காலை சுத்திகரிக்கிற போது, பூமியில ஒரு சின்னக் குழி தோண்டி, அதுலதான் மண்ணால கை கால் எல்லாம் தேச்சு, வாய் கொப்பளிச்சுத் துப்புவார், பெரியவா. ஒரு நாள், கீழே குனிஞ்சு அந்தக் குழியிலே இருந்து எதையோ கையால எடுத்து மெள்ள தூக்கி வெளியில விட்டார்.

அது, கட்டெறும்பு!

எந்தவொரு ஜீவராசிக்கும் ஆபத்து வரக்கூடாது என்று பிரதிக்ஞை செய்து கொண்டிருந்த பெரியவாளின் கருணை மனசுக்கு உதாரணம் அது!

சாருகேசி 
விகடன் 

3 comments:

 1. யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே... அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!


  மன நிறைவான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. மிகவும் அற்புதம்.

  ReplyDelete
 3. nalla visayangkall... namba mudiyavillai irunthaalum nadanthavai... sakththi irukku enru namba vaikkirathu...vaalththukkal

  ReplyDelete