Search This Blog

Thursday, March 15, 2012

விருதுநகர் - ”வெயில் மனிதர்களின் ஊர் - - வசந்த பாலன்


'எத்தனை ஊருக்குப் பயணப்பட்டாலும் என் ஊரின் தனித்துவம் வேறு எங்கும் காணக்கிடைப்பது இல்லை!'' - பேசத் தொடங்கும்போதே பெருமிதம் பொங்குகிறது இயக்குநர் வசந்தபாலனின் வார்த்தைகளில்.ஒவ்வோர் ஊருக்கும் ஓர் அடையாளம் இருக்கும் இல்லையா? விருது நகருக்கான அடையாளம் புழுதிதான்! என் ஊரின் முக்கியமான பகுதி தேசபந்து மைதானம். அந்த நடுவாந்திரப் பகுதியில்தான் ஊரின் முக்கியத் தலமான முருகன் கோயில், மாரியம்மன் கோயில், வெயிலுக்குகந்த அம்மன் கோயில்கள் இருக்கு. வெயில் உகந்தப்பட்டினம் என்பதுதான் என் ஊரின் பழைய பெயர். காலப்போக்கில் மருவி விருதுப்பட்டி ஆகி, பிறகு விருதுநகர் ஆகிடுச்சு. விருதுநகரின் சிறப்பு அதன் உணவகங்கள். ஆரோக்கியராஜ் சேவுக் கடைக்கு நான் இப்போதும் ரசிகன். அங்கே கிடைக்கும் கருப்பட்டி மிட்டாய், வெள்ளை மிட்டாய், சேவு, சீவல் எல்லாமே அவ்வளவு ருசி!

விருதுநகர் எண்ணெய் பரோட்டா ஊரோட தனி அடையாளங்களில் ஒண்ணு. பெரியவடை சட்டியில் நல்லெண்ணெயைக் காயவெச்சு பரோட்டாவைப் போட்டு முறுக்கு மாதிரி பொரிச்சு எடுப்பாங்க. மொறு மொறு பரோட் டாவுக்கு மட்டன் அல்லது சிக்கன் சால்னா தொட்டுச் சாப்பிடறது சுகமான அனுபவம். அதே மாதிரி ஆட்டுக் கறியைப் பொடிசா நறுக்கி, கொழுப்போட சேர்த்து வதக்கி, அலுமினியக் கிண்ணத்துல தருவாங்க. உலகத்தின் அற்புதமான சாப்பாடு இதுதானோனு தோணும்.ஸ்கூல் லீவு நாட்கள்ல கடைக்கு வேலை பார்க்கக் கிளம்பிடுவோம். அப்ப எல்லாம் ஒட்டுமொத்த விருதுநகரையும் எட்டே தெரு வழியா  சுத்தி வந்துடுவோம். சம்பளக் காசை சேர்த்துவெச்சு படம் பார்ப்போம். அப்போ பெரிய நகரத்தில்கூட நாலு ஷோதான் போடு வாங்க. ஆனா, விருதுநகர்ல அஞ்சு ஷோ உண்டு. ஞாயிற்றுக்கிழமைகள்ல  அஞ்சுஷோவை யும் தொடர்ந்து பார்த்த அனுபவம் எல்லாம் உண்டு.

சின்ன வயசுல நான் விருதுநகரில் பார்த்தவங்க எல்லாருக்குமே ஏதாவது ஒரு தனித் தன்மை இருக்கும். தந்தி மரத் தெருவுல  சலூன் கடை வைத்திருப்பவரின் தம்பி, போலியோ வால் பாதிக்கப்பட்டவர். அவரிடம் அபாரத் திறமை ஒண்ணு இருந்தது. ஒரு ஆள் இப்படி இருப்பார் என்று வர்ணிச்சால் போதும். அச்சு அசலா அவரை அப்படியே வாட்டர் கலர்ல வரைந்துடுவார். கடைசி வரைக்கும் புகைப்படம் எடுக்காமலே இறந்துபோன பல பேருடைய உருவங்களை அவர்தான் வரைஞ்சுகொடுத்தார்.அப்போது எங்கள் ஊரில் வீட்டுக்கெல்லாம் வெள்ளை அடிக்கிறதுக்குன்னே ஒருத்தர் இருந்தார். எம்.ஜி.ஆர்.  மேல உள்ள அபிமானத் தால தன்னோட பெயரை எம்.ஜி.ஆர். என்றே மாற்றிக்கொண்டார். எம்.ஜி.ஆர்- படத்தைத் தொடர்ந்து பார்ப்பதற்காகவே தியேட்டரில் வேலை பார்த்தார். எம்.ஜி.ஆர். இறந்தப்ப  சென்னை சென்றவர், இரண்டு மாதம் அவரு டைய சமாதி அருகிலேயே சுற்றிவிட்டுதான் ஊர் திரும்பினார். எங்க ஊரில் 'முறுக்கு முறுக்கு அஞ்சு பைசா முறுக்கு’ என ராகம் போட்டுப் பாடிகிட்டே முட்டிவரைக்கும் கட்டுன வேட்டி, மேல கசமுசா சட்டையோட முறுக்கு விற்ற திருநங்கையை மறக்கவே முடியாது. நான் பார்த்து ரசிச்ச ஒருத்தர்கூட இப்போ உயிரோட இல்லை. இது புழுதிக் காடு. வெயில் பூமி. வெள்ளரிப் பிஞ்சுல ஆரம்பிச்சு கோயில் கோபுர சிலை வரைக்கும் எல்லாமே புழுதியா இருக்கும். என் ஊரும் கூட அந்தப் புழுதி மாதிரியே என்னுள் எங்கும் பரவிப் படிஞ்சிருக்கு!''

விகடன் 

 

3 comments:

  1. 'எத்தனை ஊருக்குப் பயணப்பட்டாலும் என் ஊரின் தனித்துவம் வேறு எங்கும் காணக்கிடைப்பது இல்லை!''

    எல்லோருடைய தீர்மானமும் இதுதான்...

    ReplyDelete
  2. Innum maaramal puludhi padindirukum migapaeriya ondrai marandhu vittergalae vasantha balan sir...

    ReplyDelete