Search This Blog

Wednesday, March 14, 2012

அருள் மழை ----------- 47


'விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்.' - இதன் பொருள் தெரியுமா?

'விடிய விடிய ராமாயணம் கேட்டவனிடம், சீதைக்கு ராமன் யார்?' என கேள்வி கேட்டார் உபன்யாசகர். சித்தப்பா என்றாராம் சொற்பொழிவைக் கேட்டவர். வேதனையின் உச்சத்திற்கே போய்விட்டார் உபன்யாசகர். இவ்வளவு நேரம் ராமாயணம் சொல்லியும் பலனில்லையே! இருந்தாலும், மற்றவர்கள் மனது புண்படும் அல்லவா! நிலைமையை இப்படி சமாளித்தார். இவர் சொல்வது உங்களுக்கு புரியவில்லை. 'சித்தம்+அப்பா' என்று அவர் சொல்கிறார். சித்தம் என்றால் மனம். அப்பா என்றால் தலைவன். சீதையின் மனதிற்கு ராமன் தானே தலைவன் என பேசி கைத்தட்டல் வாங்கி விட்டார்.
 எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும் வேண்டும்.
அர்ஜுனனுக்கு கீதையைப் போதித்தான் கிருஷ்ணன். கீதை முடிந்ததும், தேரின் மேற்பகுதியில் ஏறி அமர்ந்து கொண்டான். இந்த நேரத்தில், அர்ஜுனனின் மகன்,அபிமன்யு கொல்லப்பட்டான். அர்ஜுனனுக்கு சோகம் தாங்கவில்லை. கண்ணீர் வழிந்தது. சிறிது நேரத்தில், அவன் மீது மேலிருந்து சில சொட்டு தண்ணீர் சூடாக விழுந்தது. அர்ஜுனன் ஏறிட்டுப் பார்த்தான். கிருஷ்ணனின் கண்களில் இருந்து விழுந்த கண்ணீர் தன் மீது பட்டதை அறிந்து, 'என் மகன் இறப்புக்காக நான் அழுகிறேன். நீ ஏனப்பா அழுகிறாய்?' என்று கேட்டான். 'இவ்வளவு நேரம், வாழ்வின் நிலையாமை பற்றி உனக்கு கீதை சொன்னேனே! அதை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்', என்றானாம் கிருஷ்ணன்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

No comments:

Post a Comment