Search This Blog

Saturday, March 24, 2012

இடிந்த கரை... இடியாத நம்பிக்கை!, ஓ பக்கங்கள் - ஞாநி

 
இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம்.பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்க கடிதத்திலிருந்து சில பகுதிகள் இதோ : 
 
உங்கள் முன்னால் தெளிவாக இரண்டு வழிகள் இருக்கின்றன. முதல் வழி அணு உலைகளை எதிர்க்கும் இயக்கங்களின் விஞ்ஞானிகள் குழுவைச் சந்தியுங்கள். அணு உலையை ஆதரிக்கும் அரசு விஞ்ஞானிகள் குழுவை அவர்களுடன் பயப்படாமல் உரையாடச் சொல்லுங்கள். சங்கரன்கோவில் தேர்தலுக்கு அனுப்பும் 31 அமைச்சர்களை இடிந்தகரைக்கு அனுப்பி மக்களிடம் பேசச் சொல்லுங்கள். சிறுமியாக நடிக்கப் போன காலத்திலிருந்து செட்டில்கூட புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். வாசிப்பு ருசியும் பழக்கமும் உடைய நீங்களே ஒரே ஒரு நாளை ஒதுக்கி இருதரப்பு நூல்களையும் வாசியுங்கள். நமக்கு ஒருபோதும் அணு உலை வேண்டாம் என்ற முடிவுக்கு நிச்சயம் வருவீர்கள். கேரளத்தைப் போல, மேற்கு வங்கத்தைப் போல தமிழகமும் அணு உலை மறுப்பு மாநிலமாக உங்களால் அறிவிக்கப்படட்டும். தமிழர்கள் பல தலைமுறைகளுக்கு உங்களைப் போற்றுவார்கள். ஒரு பென்னிகுவிக்கை நினைவு கூர்வது போல, தமிழகத்தில் செர்னோபில்லும் புகொஷிமாவும் வராமல் தடுத்த பெருமைக்குரியவராக நீங்கள் வரலாற்றில் இடம் பெறுவீர்கள்.இரண்டாவது வழியை மேற்கொண்டாலும் வரலாற்றில் இடம் உண்டு. சீனிவாசன் குழு அறிக்கையை ஏற்று அணு உலையை அனுமதிக்கலாம். போராடும் மக்களை போலீஸ், ராணுவ உதவியுடன் ஒடுக்கலாம். ஓரிரு துப்பாக்கிச் சூடுகளும் சில நூறு உயிர் சேதமும் ஏற்பட்டாலும் பொருட்படுத்தாமல் இருக்கலாம். இவ்வாறெல்லாம் செய்வதன் மூலம் மத்திய அரசின் அன்புக்கும் ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச் முதலாளிகளின் அன்புக்கும் உரியவர் ஆகலாம். ஆனால், தமிழக மக்களின் துரோகி என்ற பெயருடன் வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்யும். ஏற்கெனவே அந்த இடம் உங்கள் சக அரசியல்வாதி கலைஞர் கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. என்ன செய்ய, நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உங்கள் இருவருக்கும் வரலாற்றின் ஒரே வரிசையில்தான் இடம் கிடைக்கும். அவர்தான் கேரளம் ஏற்க மறுத்த கூடங்குளம் அணு உலையை முதலில் தானும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு வரவேற்று பல்டி அடித்த துரோகத்துக்குரியவர். மத்திய அரசின் நிர்பந்தத்தால் அணு உலையை எங்கள் மீதும், தமிழர்கள் துரோகி பட்டத்தை உங்கள் மீதும் திணித்து விடாதீர்கள். அணு உலை எதிர்ப்புக் குழுவைச் சந்தியுங்கள். அந்த முதல் வழி மட்டுமே உங்களை நிஜமான தமிழக அன்னையாக்கும்."
 
ஜெயலலிதா புரட்சித் தலைவி அல்ல, மக்கள் விரோதத் தலைவி என்பதை நிரூபித்துவிட்டார். இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் புதன்கிழமை மதிய நேரத்தில் இடிந்தகரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மீது ஜெயலலிதாவின் அரசும் மன்மோகன் அரசும் கூட்டாக ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ராஜபட்சே இலங்கையில் பின்பற்றிய எல்லா உத்திகளையும் ஜெ-மன்மோகன் கூட்டணி இங்கே பின்பற்றிக் கொண்டிருக்கிறது. போராடும் மக்களுக்கு மின்சாரம், தண்ணீர், பால், உணவு, காய்கறிகள் எதுவும் செல்ல முடியாமல் வழிகளை அடைத்து அவர்கள் மீது ஒரு முற்றுகை யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது.இந்தக் கட்டுரை அச்சாகி உங்கள் கைக்கு வரும் நேரத்துக்குள் இடிந்தகரையில் தடியடியோ, துப்பாக்கிச்சூடோ கூட நடத்தப்பட்டிருக்கலாம். அங்கே என்ன வன்முறை நடந்தாலும் அதற்கு அரசுதான் பொறுப்பேற்றாக வேண்டும்.சுமார் 200 நாட்களுக்கு மேலாக ஐயாயிரம் முதல் நாற்பதாயிரம் வரை மக்கள் தினசரி கலந்துகொண்டு நடத்தி வந்த அறவழிப் போராட்டத்தில் துளிகூட வன்முறை கிடையாது. இந்தியாவில் 1947க்குப் பின் இது போல ஓர் அற்புதம் நிகழ்ந்ததே இல்லை. அணு உலையை பலமாக ஆதரிக்கும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும்தான் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தை ஆள்பவர்கள். அவர்களுடைய தலைவர்களைக் கைது செய்தால் அடுத்த நொடியில் தெருவில் இறங்கி பஸ்களை உடைப்பது, எரிப்பது, கடைகளைச் சூறையாடுவது என்பதுதான் அவர்களுடைய அரசியல் கலாசாரம். ஒரு சிறு கல்லைக்கூட எடுத்து வீசாமல், 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மீது ஜெ-மன்மோகன் அரசுகள் பயங்கரவாதிகள் மீது போர் தொடுப்பது போல போர் தொடுத்துள்ளனர்.ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். மார்ச் 18 அன்று சங்கரன்கோவில் வாக்குப் பதிவு முடிந்ததும் பெரும் போலீஸ் படை, துணை ராணுவப் படை எல்லாம் கூடங்குளத்தைச் சூழ்ந்து கொள்கின்றன. கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 40 ஆயிரம் மக்கள் நினைத்திருந்தால் மார்ச் 15ஆம் தேதியே அணு உலைக்குள் நுழைந்து அதை உடைத்து நொறுக்கியிருக்க முடியாதா? அற வழியில் போராடும் மக்களுக்கு அப்படி ஒரு சிந்தனையே வரவில்லை. இத்தனை பேர் கூடி அமைதியாக உண்ணாவிரதம் இருக்கிறோம். நாம் சொல்வதை அரசு செவி கொடுத்துக் கேட்கும் என்று நம்பினார்கள்.
 
அவர்கள் கேட்டது என்ன?  

உலை பாதுகாப்பானது அல்ல என்று எங்கள் சார்பில் சொல்லும் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். கடைசிவரை மக்களின் விஞ்ஞானிகளைச் சந்திக்க அரசுகளின் விஞ்ஞானிகள் முன்வரவே இல்லை.விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தருவது பற்றி, உலையை விற்ற ரஷ்யாவுடன் போட்ட ஒப்பந்தத்தை வெளியிடுங்கள் என்று கேட்டார்கள். அரசு கடைசிவரை வெளியிடவே இல்லை.மக்களின் கோரிக்கையை அரசு கேட்கும் என்று நம்பி போராட்டத்தை அறவழியில் கடைசி நொடி வரையில் மக்கள் தொடர்ந்தார்கள். ஆனால் மக்கள் சொல்வதைக் கேட்கவே போவதில்லை என்பதில் இரு அரசுகளும் ஆரம்பத்திலிருந்தே பிடிவாதமாக இருந்தன. மன்மோகன் அரசு அதை பகிரங்கமாகவே நாராயணசாமி மூலம் சொல்லிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் அரசு நடித்தே ஏமாற்றியது.ஆனால், ஜெயலலிதாவின் அரசு இதைத்தான் செய்யும் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் இருந்தன. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் போராடுவோருக்கு சாதகம் போன்ற ஒரு தீர்மானத்தைப் போட்டு முதல் சீனில் நடித்தது. ஆனால் அதில் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அச்சம் போகாவிட்டால் அணு உலை வேண்டாம் என்று சொல்லப்படவே இல்லை. அடுத்து மத்திய அரசு நியமித்த குழு முழுக்க முழுக்க அணு விஞ்ஞானிகளின் லாபியாகவே இருந்தது. அது அம்பலமானதும் அதை சமாளிக்க ஜெயலலிதா அரசு நியமித்த நால்வர் குழு மிகத் தெளிவாக ஜெ. கடைசியில் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காட்டிவிட்டது. எம்.ஆர்.சீனிவாசன் அதில் இடம் பெறுவதைப் போராட்டக் குழுவினர் ஆட்சேபித்ததை ஜெ. கண்டுகொள்ளவே இல்லை. சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு எழுத்தாளர்கள் தம்மைச் சந்தித்து அணு உலை எதிர்ப்பை விளக்க நேரம் கேட்டதற்கு ஒரு மரியாதைக்குக் கூட அவர் பதில் கடிதம் போடவில்லை.நடுவில் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி வராமல் இருந்திருந்தால், ஜெ. அணு உலை திறப்பையும் மக்களுக்கு எதிரான யுத்தத்தையும் ஒரு மாதம் முன்பே செய்திருப்பார். இப்போது நாம் செய்யக்கூடிய ஆராய்ச்சியெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஜெ.யின் சோந்த புத்தியிலேயே அணு உலை நல்லது என்று படுவதால் இப்படி செய்கிறாரா அல்லது அதிகாரிகள் சொல்படி ஆடுகிறாரா அல்லது மத்திய அரசின் ‘நிர்பந்தத்துக்கு’ பணிகிறாரா என்றெல்லாம் ஆராயலாம். எல்லாம் வெற்று ஆராய்ச்சிதான்.
 
அசல் யதார்த்தம் என்னவென்றால் கூடங்குளத்தில் போராடிய ஆயிரக்கணக்கான மக்களை மன்மோகன் அரசு பகிரங்கமாகவும் ஜெயலலிதா அரசு நயவஞ்சகமாகவும் ஏமாற்றியுள்ளன என்பது மட்டும்தான். இதை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் அப்துல் கலாம், டாக்டர் சாந்தா, இனியன், சீனிவாசன், பாலு என்று ஒரு பக்கம் மெத்தப் படித்தவர்கள் பட்டியலும் இன்னொரு பக்கம் போராட்டத்தை ஒடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் பட்டியலும் நீளமானவை. படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், படிக்காதவன் போவான் போவான் அயோவென்று போவான் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.உண்மையில் ஏமாந்திருப்பது மக்கள் மட்டுமல்ல; ஜெ., மன்மோகன் வகையறாக்களும்தான். எல்லாரையும் ஏமாற்றியிருப்பது அணு சக்தித் துறையும் உலக அணு உலை வியாபாரிகளும்தான். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சரியாக ஒரு வருடம் கழித்து ஏப்ரல் 1, 2013ல் முட்டாள்கள் தினத்தன்று, கூடங்குளம் உலைகளிலிருந்து எத்தனை ஆயிரம் மெகாவாட் பொங்கி பிரவாகித்து தமிழகத்தில் பாலும் தேனும் ஓடச் செய்தன என்ற கணக்கைப் பார்க்கும்போது, எப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது புரியும். இந்தியாவில் ஒரு செர்னோபில்லோ புகோஷிமாவோ நடக்கவே நடக்காது என்ற மயக்கத்தில் இருப்பவர்களை யாரும் திருத்த முடியாது. அப்படி ஒரு கொடுமை என் ஆயுட்காலத்துக்குள் நடக்க வேண்டாமென்று மட்டுமே, நான் நம்பாத கடவுளை பிரார்த்தித்துக் கொள்கிறேன்!இந்தக் கணத்தில் என்னுடைய மிகப் பெரிய வேதனையெல்லாம் கூடங்குளம் மக்கள், காந்தி போன்ற ஒரு தலைமை இல்லாமலே நடத்திய அற்புதமான காந்திய போராட்டத்தை மன்மோகனும் ஜெயலலிதாவும் அரசு இயந்திரத்தைக் கொண்டு வன்முறையால் நசுக்கிக் கொண்டிருப்பதைப் பற்றித்தான். வாஜ்பாயியும் கருணாநிதியும் இருந்தாலும் இதையேதான் செய்வார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. தோழர்கள் (!) ஜி.ஆரும் தா.பாவும் கூட ஆட்சியில் இருந்தால் (நல்லவேளை அவர்கள் ஆயுட்காலம் முழுவதும் அவர்கள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பே இல்லை) இதையேதான் செய்வார்கள் என்று கணிக்க வேண்டிய சூழல் இருப்பதைப் பார்க்கும்போது, என் வேதனை பல மடங்கு அதிகமாகிறது.உலையை அனுமதிப்பது என்ற முடிவை எடுத்த ஜெயலலிதா ஏன் திரும்பவும் தம்மை சந்திக்க உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினரை அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களுடைய விஞ்ஞானிகளையும் அழைத்திருக்கக் கூடாது? ஏன் அவர்களிடம் தமக்கு உலை திறப்பதைத் தவிர வேறு தீர்வு இல்லை என்பதைப் பேசியிருக்கக் கூடாது? வோட்டு கேட்க மக்களைச் சந்திக்க ஓடும் ஜெவும், மகளுக்காக வீல் சேரில் தில்லிக்கே செல்லும் கருணாநிதியும் ஏன் அமைதியாகக் கூடி உட்கார்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களை ஒரு முறைகூட போய் பார்க்க முன்வரவில்லை?
 
இதுவே கூடங்குளம் மக்கள் சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போல ஆயுதந்தாங்கி போராடியிருந்தால், காவல்துறை உயர் அதிகாரிகள் வள்ளியூர் வரை கூட போயிருக்க மாட்டார்களே? களத்தில் கடைநிலை சிப்பாய்களை நிறுத்திவிட்டு சென்னையில் இருந்தபடியே அல்லவா உத்தரவிட்டுக் கொண்டிருப்பார்கள்? இடிந்தகரைக்கு மின்சாரத்தையும் தண்ணீரையும் உணவையும் அவர்கள் நிறுத்தியிருக்க முடியுமா? ஜெயலலிதாவும் மன்மோகனும் சிதம்பரமும் அவர்களை, பேச்சுவார்த்தைக்கு வரும்படி கெஞ்சியிருக்க மாட்டார்களா?காந்திய அறவழியில் போராடும் மக்களிடம் தாமும் அறவழியில் பேசுவதே சரியென்று ஏன் அரசுகளுக்கு உறைப்பதே இல்லை? அமைதியாக வாழவும் அமைதியாகப் போராடவும் விரும்பும் மக்களை ஆயுதக் கலாசாரத்தை நோக்கித் தள்ளுவது அரசுதானே? அதுதானா அரசின் உண்மை விருப்பம்? காந்தியைக் கொல்வதுதான் அரசின் நிரந்தர திட்டமா? காந்தி இந்தியாவில் ஒரு முறை மட்டும் கொல்லப்பட்டவர் அல்ல. திரும்பத் திரும்பக் கொல்லப்படுகிறார். இந்த முறை கோட்சேவின் இடத்தில் மன்மோகனும் ஜெயலலிதாவும்.அணு உலைகள் ஆபத்தானவை. அவற்றால் எந்தப் பெரும் பயனும் வளர்ச்சியும் நடப்பதில்லை என்ற உண்மையை, கூடங்குளத்தின் பாமர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். படித்தவர்களின் சூது அவர்களை இப்போது முறியடித்துவிட்டது. தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லக் காண்போம். அந்த நம்பிக்கையில்தான் நான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் கூடங்குளத்தில் மன்மோகன், ஜெ. நடத்தும் யுத்தம் இந்த ஜனநாயகத்தின் மீது எனக்கு 35 வருடங்களாக இருந்து வந்த நம்பிக்கையை தகர்த்துவிட்டது. இனி எல்லா தேர்தலிலும் என் வோட்டு 49ஓதான்.
 
இன்னமும் எனக்கு இந்த நாட்டு ஜனநாயகத்தின் மீது கொஞ்சம் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கு ஒரே காரணம், இதை எழுதும் இந்த நொடியிலும், துளிகூட வன்முறை இல்லாமல், அறவழியில் நம்பிக்கையுடன் இடிந்தகரையில் கூடியிருக்கும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் குறிப்பாக மீனவர்களும்தான். அவர்கள் என்றோ ஒரு நாள் அதிகரிப்பார்கள், வெல்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வாரத்துடன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்கிறேன்...

No comments:

Post a Comment