Search This Blog

Wednesday, March 07, 2012

எனது இந்தியா! ( மன்னரின் மதிய உணவு! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
பெரும்பாலும், மன்னருக்கு காலை உணவு கிடையாது. பழங்களும் பழரசங்களும் மட்டுமே அளிக்கப்படும். மன்னருக்கான பழரசம் தயாரிக்கப்பட்டு தங்கக் குடுவைகளில் நிரப்பி அதை முத்திரையிடுவார்கள். அது என்ன பழச்சாறு என்ற பெயர் குடுவையில் பொறிக்கப்பட்டு இருக்கும். முத்திரையிடுவதற்கு என, சமையல் அறையில் தனிஅதிகாரி இருப்பார். அவரது முத்திரை பெற்ற குடுவையை, அரசனின் உணவுப்பிரிவு அதிகாரி ஒருவர் பார்வையிடுவார். சமையல் பணிகள் செய்பவர்களில் புதுஆட்களை வேலைக்குச் சேர்க்கவோ, சமையல் செய்பவர்கள் காரணம் இல்லாமல் விடுப்பு எடுக்கவோ அனுமதி இல்லை. இதற்குக் காரணம், அவர்கள் சதி செய்துவிடுவார்கள் என்பதே!மன்னர் அன்றாடம் அரசாங்க விலங்குகளைப் பார்வை​யிட வேண்டும். அதற்காக நாள்தோறும் குறிப்பிட்ட எண்ணிக்​​ கை​கொண்ட யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், பசுக்கள், கோவேறுக் கழுதைகள் ஆகியவை, மன்னர் முன்பு கொண்டுவந்து நிறுத்தப்படும். விலங்குகள் எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதைப் பார்வையிட்டு, அதற்கேற்ப உரிய ஆலோசனைகள், சன்மானங்​களை மன்னர் வழங்குவார். மோசமான நிலையில் உள்ள விலங்குகளைப் பராமரிக்கும் காப்பாளருக்குச் சம்பளக் குறைப்பு செய்யப்படுவதும் உண்டு. தாக், தாஷிகா என்ற அடையாளக் குறியீடு செய்த குதிரைகளைப் பார்வையிடுவதும், புதிதாக விலங்குகள் வாங்கப்படுவது குறித்தும், அதன் விலை குறித்தும், மன்னர் ஆலோசனை வழங்குவார். இதுபோலவே, படைக்கலன்களைப் பார்வையிடுதல், சித்திர வேலைப்பாடுகளைப் பார்வையிடல், உருவப் படம் வரைவது, மொழிபெயர்க்கப்பட்ட ஏடுகளை வாசித்து அறிவது, புதிதாக நெய்து கொண்டுவரப்பட்ட ஆடைகளைக் காண்பது, வைரம் வெட்டுபவர்கள், நுண்கலை விற்பன்னர்கள், கட்டடக் கலைஞர்கள், வரைபடம் தயாரிப்பவர்கள் போன்றவர்களுடன் ஆலோசனை செய்வது என, தினம் ஒன்று வீதம் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்படும்.
 
 
மன்னர் 30 விதமான வாள்களைப் பயன்படுத்துவார். ஒவ்வொரு வாளுக்கும் தனிப்பெயர் உண்டு. 8 குறுங்கத்திகள், 20 ஈட்டிகள், 86 அம்புகள் மன்னர் உபயோகத்துக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்​பட்டு இருந்தன. அதைத் தினமும் பரிசோதனை செய்துபார்ப்பது மன்னரின் வழக்கம். இந்த அலுவல்கள் முற்பகலில் நாலரை மணி நேரம் நடந்து இருக்கின்றன. அது முடிந்தவுடன், அரசர் அந்தப்புரத்துக்குச் சென்றுவிடுவார். மதிய உணவுதான் அரசனின் பிரதான உணவு என்பதால், அதைத் தயாரிப்பதற்கு என, 30 சிறப்புச் சமையல்காரர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களை நிர்வகிக்க தலைமைச் சமையல்காரர் ஒருவர் இருந்தார். சமையலறைப் பணியாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் வேலையில் இருந்துள்ளனர்.மிகச்சிறந்த அரிசி முதல் கடுகு வரை தனியாக ஒரு நிலத்தில் பயிரிடப்பட்டு, அவை சேமிப்புக் கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். கங்கை நதியில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு அதில்தான் சமையல் செய்து இருக்கிறார்கள். தானியத்தில் செய்யப்படும் உணவு வகைகள், காய்கறிகளைச் சமைப்பது, பல்வேறு விதமான அசைவ உணவு வகைகள், இனிப்புப் பண்டங்கள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு என, மதிய உணவில் 135 வகை உணவுகள் பரிமாறப்படும்.தலைமைச் சமையல்​காரர் தினமும் உணவுப் பதிவேடு ஒன்றை எழுத வேண்டும். அதில், மன்னருக்கு இன்று என்ன உணவு தயாரிக்கப்பட்டது. அதைச் செய்தவர் யார் என்ற விவரங்கள் பதிவு செய்யப்படும்.தங்கம், வெள்ளி, செம்பு,வெண்கலப் பாத்திரங்கள் உணவுக் கலயங்களாகப் பயன்படுத்தப்படும். தங்கம் மற்றும் வெள்ளிக் கலயங்களில் சிவப்பு நிறத் துணி மூடி முத்திரை வைக்கப்பட்டு இருக்கும். வெண்கலம் மற்றும் சீனக் களிமண் கலயங்கள் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு முத்திரை வைக்கப்பட்டு இருக்கும்.
 
விரத நாட்கள், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாமிசம் விலக்கப்பட வேண்டும் என்பதால், அந்த நாட்கள் மட்டும் தனித்துக் குறிக்கப்பட்டு, அன்றைய சமையலில் எந்த அசைவ உணவும் இடம்பெறாது. மற்ற நாட்களில் ஆடு, மாடு, கோழி, வான்கோழி, மான், முயல், காடை, மீன்கள், நண்டு உள்ளிட்ட 16 வகை மாமிச உணவுகள் தயாரிக்கப்படும்.உணவு வேளையில், மன்னருக்கு முன் ஒவ்வோர் உணவும் விஷப் பரிசோதனை செய்யப்​பட்டு, பிறகே பரிமாறப்படும். அதுபோல, உணவு பரிமாறுகிறவன் தும்மிவிட்டால், அது அபசகுனமாகக் கருதப்படும். ஒன்றரை மணி நேரம் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மன்னர் வெற்றிலை போடுவார். அதற்காக, தங்கக் கிண்ணத்தில் வெற்றிலை பாக்கு, வாசனை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும்.உணவு வேளைக்குப் பிறகு, மன்னர் அந்தப்புரம் செல்வார். அங்கே,  ஓய்வுக்குப் பிறகு அரச மகளிரின் நிதி மற்றும் அலுவல் பிரச்னைகளை கேட்டு அவர்களுக்கான தீர்வுகளைச் சொல்வார். அதற்குப் பிறகு, யானைச் சண்டை, சிங்கம் அல்லது எருதுச் சண்டை, படை வீரர்களின் மற்போர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பார்த்து ரசிப்பார். பிற்பகலில் முழு தர்பார் தொடங்கும்.இந்தக் கூட்டத்தில், பணி நியமனம், ஊதிய உயர்வு, வழக்கு விசாரணை, அந்நிய நாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பது, படைப் பணிகளுக்காக வெளியூர் செல்லும் மாநில ஆளுநர்களுக்கு விடைகொடுத்து அனுப்புதல், வெளியூர் பணி முடிந்து வந்த ஆளுநர்களைச் சந்தித்து விவரம் அறிதல், படைப் பிரிவினருக்கான நிதி ஆலோசனை ஆகியவை நடக்கும்.வழக்கமாக இரண்டரை மணி நேரம் நடக்கும் இந்த தர்பார், சில நாட்களில் மாலை வரை நீண்டுவிடுவதும் உண்டு. தர்பாரில் மன்னர் முன் நின்று பேசும் உரிமை எல்லாருக்கும் வழங்கப்படுவது இல்லை. அது தனிப்பட்ட சிலருக்கு அளிக்கப்படும் கௌரவம். மற்றவர்கள், அந்த உரிமை பெற்றவர்கள் வழியாகவே தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்க வேண்டும். இதுபோல கடிதம் வாசிக்க வஸீர் நியமிக்கப்பட்டு இருப்பார். அரசாங்கச் செயலர்கள் மன்னர் அமர்ந்துள்ள மாடத்தின் அருகில் நின்று, தங்களது துறைகள் சார்ந்த குறிப்புகளைப் படிப்பார்கள். இதில், மான்சப்தார், பக்ஷி, ஸதர், மீர்சாமான், திவான் எனப் பல நிலைகளில் அதிகாரிகள் உண்டு.வருவாய், நிதி, நியமனம், ஊதியம் வழங்குதல், மானியம், துறை சார்ந்த மாற்றங்கள் என முந்தைய நாள் மன்னர் இட்ட கட்டளைகளின் சுருக்கத்தை, ஒவ்வொரு நாளும் செயலர்கள் தர்பாரில் வைப்பார்கள். அதில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும். மன்னரின் முக்கியக் கவனம் பெற வேண்டிய விண்ணப்பங்களைத் தனியே விசாரித்து உடனடியாக அதற்கான ஆணைகளைப் பிறப்பிப்பது வழக்கம்.
 
அரசர் இட்ட கட்டளைகளை வாகுயநவிஸ் என்ற குறிப்பு எடுக்கும் அதிகாரி, தனது குறிப்பேட்டில் எழுதிக்கொள்வார். பிறகு, அது தொடர்பான அதிகாரிகளின் ஆய்வுக்கு உள்ளாகும். அதன் பிறகு அதன் திருத்தப்பட்ட வடிவம் அரசர் முன்பு கொண்டுவரப்பட்டு ஒப்புதல் பெறப்படும். அதன் பெயர் யாத்தாஷ்ட். அதாவது, குறிப்பாணை பல நிலைகளைக் கடந்து முதல் அமைச்சரின் ஒப்புதல் பெற்று வரும். வெவ்வேறு பணிகளுக்காக மன்னரிடம் ஐந்து விதமான முத்திரைகள் இருந்தன. இதில் உஸீக் என்ற முத்திரை மோதிரம் மிக முக்கியமானது.  இந்த வேலைகளை முடித்த பின், மன்னர் மீண்டும் அந்தப்புரத்துக்குச் சென்றுவிடுவார். அங்கே மாலைக் குளியல் நடக்கும். அது முடிந்தவுடன், அங்கே உள்ள தனி மண்டபத்தில் நீதிமான்கள் மற்றும் கவிஞர்கள், தத்துவ ஞானிகளுடன் இலக்கியம் மற்றும் ஞானமார்க்கம் குறித்து மன்னர் விவாதிப்பார். இந்த நேரத்தில், புதிதாக எழுதப்பட்ட கவிதைகளை வாசிக்கச் சொல்லி, மன்னர் கேட்பதும் உண்டு. சில சமயம், ஞானமரபில் உள்ள நூலின் பகுதிகள் குறித்து விவாதம் நடக்கும். வரலாற்று அறிஞர்களுடன் விவாதமும் நடந்து இருக்கிறது.அதன் பிறகு, பிரத்யேகமாக உருவாக்கப் பட்ட குஷால் கானாவுக்கு மன்னர் போய் விடுவார். அங்கே, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட12 விளக்குகள் நறுமண எண்ணெயில் பிரகாசமாக எரியும். விளக்கு ஏற்றப்படும் நேரத்தில் இசைப்பதற்கு என, ஈரடிப் பாடல் ஒன்று உண்டு. இந்த இடத்துக்கு, அவசரமான அரசு வேலைகளை விவாதிக்க திவா​னும் பக்ஷியும் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளைச் சொல்லும் முன், மண்டியிட்டு வணங்கியே தகவலைத் தெரிவிக்க வேண்டும். இந்தத் தனி அறையில் சில வேளைகளில் பாரசீகத் தூதுவர்கள், மற்றும் வெளிநாட்டவருக்கு நேர்காணல் தருவது நிகழும். பகலில் விசாரிக்க முடியாத முக்கிய அலுவல்கள், ரகசியச் சந்திப்புகள், பணப் பரிமாற்ற ஆணைகள் இங்கே விவாதிக்கப்படும். பொதுவாக இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்த அறையில்  அரசர் இருப்பார்.பிறகு, அங்கே இருந்து கிளம்பி ஷாபுர்ஜ் எனப்படும் உட்புற மண்டபத்துக்கு மன்னர் செல்வார். அங்கேமன்னரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இளவரசர்கள் மன்னரைச் சந்தித்துப் பேசுவார்கள். 45 நிமிடங்கள் இந்த அறையில் இருந்துவிட்டு அந்தப்புரத்துக்குச் சென்று இசை கேட்பதும், நடனத்தைப் பார்வையிடுவதும் வழக்கம். இதற்காக தேசத்தின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்கள், நடனக்காரிகள் அழைத்து வரப்படுவர். நிகழ்ச்சியின் முடிவில் அவர்களுக்குப் பரிசுகளைத் தந்து அனுப்புவார்.
 
இசை முடிந்ததும் பால், பழங்கள் மற்றும் இனிப்பு​களை மன்னர் உண்பார். இப்படித் தினமும் இசை நடன நிகழ்ச்சிகளுக்காக ஒன்றரை மணி நேரத்தைச் செலவிட்டு, பின்பு தனக்கு விருப்பமான ஒரு பெண்ணின் அறைக்கு மன்னர் சென்றுவிடுவார். அங்கே, திரைக்குப் பின்னால் நின்றுகொண்டு காம ரசம் சொட்டும் கதை சொல்பவர்கள் இருப்பார்கள். சிருங்காரப் பாடல்கள் இசைப்பவர்களும், கலவியின்பம் பற்றிய வேடிக்கைகளைச் சொல்லும் பெண்கள் இருப்பார்கள்.ஐந்து மணி முதல் ஆறு மணி நேரம்தான் மன்னரின் உறக்கம். யுத்த நாட்களில் இந்தத் துயில் மூன்று மணி நேரம் மட்டுமே. முறைப்படி தொழுகை செய்வது, நீதிமுறை சார்ந்த வழக்குகளை விசாரிக்க தனி நாள் ஒதுக்கி விசாரணை செய்வது, வெளிப்படையான நிர்வாக முறையைக் கடைப்பிடிப்பது, திருவிழாக்களில் கலந்துகொள்வது, வேட்டைக்குச் செல்வது, வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது, புலிகளைப் பழக்குவது, நுண்கலைகளைப் பயில்வது, சித்திர எழுத்துகள் எழுதுவது, நூதனப் பொறிகளைப் பரிசோதனை செய்வது என்று மொகலாய மன்னர்களுக்கு ஒரு நாளின் 24 மணி நேரம் போதாமல் இருந்தது.வருடத்தில் ஒரு மாதமோ அல்லது இரண்டு வாரங்களோ மன்னர் முழுமையான பட்டினி கிடப்பார். அதை லங்கன மாதம் என்கிறார்கள். அந்த மாதங்​களில் அவர் எலுமிச்சைச் சாற்றை அருந்திக்கொண்டு எளிமையான உடைகளை உடுத்திக்கொண்டு, இசை கேட்பது, கவிதை வாசிப்பதில் அதிக நேரம் செலவிடுவார். சாமான்ய மனிதனைப் போல, கிடைப்பதைக் கொண்டுவாழும் நிம்மதியான வாழ்க்கையை, மன்னர்கள் ஒரு போதும் அனுபவிக்கவே இல்லை.  ஒரு மன்னர் இந்தியாவின் சிறந்த ஆட்சியாளர் என்று பெயர் எடுப்பதற்கு மூன்று அம்சங்கள் முக்கியமானவை என்கிறார் வரலாற்று ஆசிரியர் இபின் ஹாசன். அவை...  வலிமையான படை பலம், உறுதியான மைய அரசு,  மக்களைத் தொல்லை செய்யாமல் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவி செய்வது ஆகியவை.  இந்த மூன்றையும்கூட பல மன்னர்களால் சமாளித்துவிட முடிந்திருக்கிறது. ஆனால், அவர்களின் வாரிசுகள், சகோதரர்கள், மனைவிகளின் அதிகார ஆசையை, அதற்கான நயவஞ்சக சதித் திட்டங்களை அவர்களால் உணர முடியவில்லை. யுத்தக் களத்தில் கொல்லப்பட்டதைவிட படுக்கையில் கொல்லப்பட்ட மன்னர்கள் அதிகம் என்கிறது வரலாறு.
 
ராஜ வாழ்க்கை என்பது மிதமிஞ்சிய சந்தோஷமும், எதிர்பாராத நெருக்கடிகளும், தீர்க்க முடியாத மரண பயமும் கலந்தே இருந்தது. அது, பலிகொடுக்கப்படும் ஆட்டுக்கு விதவிதமான உணவுகளைத் தந்து குளிப்பாட்டி, நடமாட வைப்பது போன்றது. அந்த வகையில், மன்னரைவிடவும் சந்தோஷமான வாழ்க் கையை சாமான்ய மனிதன் அனுபவிக்கிறான் என்பதே என்றும் மாறாத நிஜம்.

No comments:

Post a Comment