Search This Blog

Wednesday, March 21, 2012

எனது இந்தியா! (போலீஸுக்குத் துப்பாக்கி தந்த போராட்டம்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

 
காராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த வினோபாவே, பதின் வயதி​லேயே காந்திய மார்க்கத்​தால் ஈர்க்கப்பட்டு காந்தியின் சத்யாக்கிரகத் தொண்டர்களில் ஒருவராக துணை நின்று காந்தியின் மறைவுக்குப் பிறகு சர்வோதய நெறிகளை முதன்​மைப்படுத்தி இந்தியாவை முன்னேற்றப் பாடுபட்டவர். வினோ​பாவின் வாழ்க்கை, தனி நபர் ஒருவர் காந்தியத்தை தனது வாழ்க்கை நெறியாக உறுதியாகப் பற்றிக்கொள்ளும்போது மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்ய முடியும் என்பதற்குச் சான்றாக விளங்கு​கிறது.இன்று, இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களில் 26 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர் என்​கிறது ஒரு புள்ளிவிவரம். வறுமையை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் நிறைய நலத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. வறுமை ஒழிப்பின் ஆதாரப் புள்ளி நிலச் சீர்திருத்தம். அதை முழுமையாக அமல்படுத்தி, நிலங்கள் உரிய முறையில் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டால் மட்டுமே வறுமையை விரட்ட முடியும் என்ற குரல், சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், நாட்டை ஆளும் அரசுகள் அதைக் கண்டுகொள்வதே இல்லை.அயராது உழைத்துக் கொடுத்​தும், பசியும் பட்டினியுமாக அடிமைபோல வாழ்ந்த ஆந்திர விவசாயிகள், தங்களின் உரிமைக்காக எழுச்சிகொண்டது தெலுங்கானாவில் நடந்தேறியது. இந்திய விவசாயிகள் என்றால் மிகவும் சாத்வீகமானவர்கள், ஒடுங்கித்தான்போவார்கள் என்ற பொதுப் பிம்பத்தை இந்த எழுச்சி உடைத்து எறிந்தது. 1946-ல் தொடங்கி 1951 வரை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த தெலுங்கானா விவசாயிகளின் எழுச்சி, இந்திய வரலாற்றில் மறக்க முடியாத போராட்டம். இதில், 4,000-க்கும் அதிகமான விவசாயிகள் பலி ஆகினர். ஆனால், இந்த வீரத் தியாகத்தால் 3,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் எழுச்சி உருவானது. பல ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த மக்கள் எழுச்சிக்கு அங்கு களப் பணி ஆற்றிய கம்யூ​னிஸ்ட் கட்சிகளே காரணமாக இருந்தன.
 
 
தெலுங்கானா எழுச்சியை 'அரசு எதிர்ப்பு இயக்கம்’ என்று அடையாளப்படுத்திய மத்திய அரசும் நிஜாம் நிர்வாக​மும், இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக மிக மோசமான முறையில் தாக்குதல்களையும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு​வந்தன.இதுபோல, இந்தியா முழுவதும் உள்ள நில​மற்ற ஏழை விவசாயிகள் போராடிவிடக் கூடாது, அதைத் தடுப்பதற்கு இந்தியா முழுவதும் போலீஸ்காரர்​களுக்கு துப்பாக்கிகள் வழங்குவது என்று ஒரு தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதற்கு முன், போலீஸ்காரர்களுக்கு லத்தி மட்டுமே அனுமதி. போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டுமே துப்பாக்கி வைத்திருந்தார்கள். ஆனால், தெலுங்​கானா போராட்டத்துக்குப் பிறகு போலீஸ்​காரர்​களுக்குத் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி அடையும்போது அதைத் தடுப்பது எளிதானது இல்லை என்பதை அந்தப் போராட்டம் உணர்த்தியது.1951-ம் ஆண்டு சிவ்ராம் பள்ளியில் நடந்த சர்வோதய இயக்க விழாவில் கலந்துகொண்ட வினோபாவே, விவசாயிகளின் போராட்டம் நடந்த தெலுங்கானா மாவட்டத்தின் ஊடே பாத யாத்திரையாகச் சென்று, பவநகரில் உள்ள தனது ஆசிரமத்தை அடைவதாக அறிவித்தார். 300 மைல் தூரத்துக்கு இந்தப் பாத யாத்திரை திட்டமிடப்பட்டு இருந்தது.அந்த யாத்திரையின் உண்மையான நோக்கம், இது விவசாயிகள் எழுச்சியா? அல்லது கம்யூனிஸ்ட்​டுகள் தூண்டிவிட்ட கலகமா? என்பதை அறிந்து​கொள்வதே. பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, நிலச்சுவான்தார்களால் விவசாயிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.ஏப்ரல் 18 அன்று, போச்சம்பள்ளி என்ற ஊரில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட ராமச்சந்திர ரெட்டி என்ற வழக்கறிஞர், தனது நிலத்தில் இருந்து 100 ஏக்கரை தலித் மக்களின் பயன்பாட்டுக்காக பூமி தானமாக தருவதாக அறிவித்தார்.அந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்டு நிலத்தை தலித் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்தார் வினோபாவே. அப்படித்தான் 'பூதான் இயக்கம்’ தொடங்கப்பட்டது. ஆகவே, இன்றும் ஏப்ரல் 18-ம் தேதியை பூமி தான நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த ஊரின் பெயரே பூதான் போச்சம்பள்ளி என்று பின்னாளில் மாறியது.அந்த உத்வேகத்தால் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலத்தைத் தானமாகப் பெற்றுத் தருவதை தனது பயணத்தின் லட்சியமாக மாற்றிக்கொண்டார் வினோபாவே. இது, காந்திய வழியில் நிலத்தைப் பகிர்ந்து அளிக்கும் திட்டம் என்று உறுதியாக நம்பினார். 58 நாட்கள் பாத யாத்திரையின் முடிவில் 200 கிராமங்களில் இருந்து 12,201 ஏக்கர் நிலம் தானமாகப் பெறப்பட்டது. இது, தனது அறப் போருக்குக் கிடைத்த வெற்றி என்று அறிவித்த வினோபாவே, தனது பவநகர் ஆசிரமத்துக்குத் திரும்பி, இயந்திரங்களின் உதவி இல்லாமல் இயற்கை விவசாயம் செய்வது தொடர்பான தனது செயல் திட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார். பூதான் பெரிய இயக்கமாக உடனே மாறிவிடவில்லை. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அமைதி வழியில் வினோபாவே, விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கியிருக்கிறார் என்றுதான் மற்ற காந்தியவாதிகள் நினைத்தார்கள்.
 
1951-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் நடந்த திட்டக் கமிஷன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி நேருவால் அழைக்கப்பட்டார் வினோபாவே. அதை ஏற்று டெல்லிக்கும் பாத யாத்திரை​யாகவே வருவதாக அறிவித்தார். அதன்படி, செப்டம்பர் 12-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார். நவம்பர் 13-ம் தேதி டெல்லியை அடைந்தார். இந்த இடைப்பட்ட நாட்களில் அவர், 19,436 ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்றார். அதன்பிறகு, 13 ஆண்டுகள், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பூமி தான இயக்கத்துக்காக நடந்துகொண்டே இருந்தார் வினோபாவே. 1952-ம் ஆண்டு மே 9-ம் தேதி புத்த ஜெயந்தி அன்று, அதுவரை தானமாகப் பெற்ற 2,95,054 ஏக்கர் நிலத்தை முறைப்படி விநியோகம் செய்ய வழிவகைகளும், தானம் பெற்றோர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இது பின்னாட்களில், பல்வேறு மாநிலங்களில் அரசின் சட்டமாகவே இயற்றப்பட்டது. பூதான் இயக்கத்தில், சோஷலிஸ்ட் தலைவர்களில் ஒருவரான ஜெயபிரகாஷ் நாராயண் இணைந்து செயல்பட்டது கூடுதல் பலத்தைக் கொடுத்தது. 22.32 லட்சம் ஏக்கர் நிலம் பூதான் இயக்கத்துக்காக தானமாகப் பெறப்பட்டது. இந்தியாவில் பூதான் இயக்கம் மிக வெற்றிகரமாகச் செயல்பட்டது பீகார் மாநிலத்தில்தான்! இந்த நிலையில், நிலத்தைத் தானமாகப் பெறுவதன் அடுத்த கட்டம் போல கிராம தானத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் வினோபாவே. இதன்படி, முழுக் கிராமமும் தனது நிலத்தைப் பொதுவில் பகிர்ந்து தந்துவிடும். அந்தக் கிராமத்தில் யாருக்கும் தனி உரிமை இருக்காது. உழைப்பவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தின் கீழ், 1,60,000 கிராமங்கள் முழுமையாகத் தானமாகப் பெறப்பட்டு, நிலப் பகிர்வு நடந்து இருக்கிறது. பூதான் அல்லது கிராமதான் திட்டத்துக்காக நிலத்தைப் பெறுவதற்காக தனது 57-வது வயதிலும் ஓயாது நடந்துகொண்டு இருந்த வினோபாவுக்கு கடுமையான வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டன. அதைப்பற்றி அவர் கவலைப்படாமல் 'இயற்கை மருத்துவம்’ செய்துகொண்டு தினமும் 15 முதல் 20 மைல் நடந்துகொண்டே இருந்தார். அதிகாலை 3 மணிக்கு எழுந்துவிடும் வினோபாவே, பகல் முழுவதும் நடப்பதும் பொதுமக்களைச் சந்தித்துப் பேசுவதுமாக இருந்தார். மிகவும் பின்தங்கிய மாநிலமான ஒரிசாவில் பயணத்தை முடித்துவிட்டு, தமிழகத்துக்கு வந்தார் வினோபாவே. வளமான தமிழக விவசாயிகளிடம் பூமியைத் தானம் பெறுவது எளிது அல்ல என்று பத்திரிகைகள் கேலி செய்தன. ஆனால், பூமி தானம் மற்றும் கிராம தானம் ஆகிய இரு திட்டங்களுக்கும் தமிழகத்தில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காஷ்மீருக்குச் சென்ற வினோபாவே, 13,500 அடி உயரத்தில் உள்ள பிர்பஞ்சால் கிராமத்துக்கு மலை ஏறிச் சென்று அங்கும் பூமி தானம் பெற்று இருக்கிறார். அதுபோலவே, கொள்ளையர் வசிக்கும் சம்பல் பள்ளத்தாக்கில் பயணம் செய்தும் அவரால் பூமி தானம் பெற முடிந்தது.1960-களில் அஸ்ஸாமில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்பட்டது. சமாதானப் பணி செய்வதற்காக, வினோபாவை அங்கு அனுப்பிவைத்தார் நேரு. அஸ்ஸாம் சென்ற வினோபாவே, அங்கு  ஓர் ஆண்டு தங்கி இருந்தார். மக்கள் சச்சரவு இல்லாமல் வாழ்வதற்குக் கிராம தான முறை சிறந்தது என்பதை அந்த மக்களிடம் விளக்கினார். இன்றும் அந்தக் கிராமங்களில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்போதும் அங்கு நிலம் பொதுவில்தான் இருக்கிறது.
 
நிலத்தைப் பகிர்ந்து தருவதிலும், ஒன்றுக்கும் உதவாத நிலத்தைத் தானமாக தந்து ஏமாற்றியதிலும், பூமி தான இயக்கத்தை வழிநடத்தியவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளாலும், அந்த இயக்கம் மெள்ள முடங்கத் தொடங்கியது. வினோபாவின் அறிவுரை பல ஊர்களிலும் கைவிடப்பட்டது.பூதான் இயக்கத்துக்காக பெற்ற பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தியா முழுவதும் இன்றும் அப்படியே இருக்கிறது. ஆனால், அதை அரசியல்வாதிகளும் அதிகாரத்தைத் துணைகொள்வோரும், முறைகேடான வகையில் விற்பனை செய்வதும் ஆக்கிரமிப்பு செய்வதுமாக பூதான் இயக்கத்தின் நோக்கத்தை முற்றிலும் அழித்து வருகிறார்கள். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸ அரசால் நிலம் பொதுவுடமை ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தனி நபரின் முயற்சியால் காந்திய வழியில் உருவான மக்கள் இயக்கம், 40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெறப்பட்டது ஓர் வரலாற்று நிகழ்வு. ஆனால், அந்த வெற்றி முழுமை அடையவில்லை.பூதான் இயக்கத்தை நடத்தியதற்காக 'ராமன் மகசேசே விருது’ வினோபாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற முதல் இந்தியரும் இவரே. தமிழகத்தில் 1961-ல் நில உச்ச வரம்பு சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், நிலம் முழுமையாகப் பகிர்ந்து தரப்படவில்லை. மாறாக, பினாமி பெயர்களில் நிலம் கைவசமாவதும் அப்போதுதான் தொடங்கியது. நில உச்ச வரம்புச் சட்டம் இயற்றி 44 ஆண்டுகளைக் கடந்த பிறகு, 2005-ம் ஆண்டு கணக்கெடுத்தபோது, 1.88.234 ஏக்கர் நிலம் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலம் 3.50 லட்சம் ஏக்கர். அதுவும் இப்போது அவர்கள் கையில் இல்லை.ஆகவே, வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்கு மாற்றாக, பூதான் இயக்கத்தின் தேவை இப்போது மீண்டும் ஏற்பட்டு உள்ளது. ஆனால், அதை வழிநடத்த வினோபாவே போன்ற அர்ப்பணிப்பும் செயல்திட்டமும் கொண்ட தலைவர்கள்தான் இன்று நம்மிடையே இல்லை என்பது வருத்தத்தை மேலும் அதிகமாக்குகிறது.


விகடன் 

No comments:

Post a Comment