அப்துல் கரீம், மகாராணியோடு நெருக்கமாக இருப்பதோடு, அரசியல் விஷயங்களில்
காய் நகர்த்துவதை அறிந்த அரண்மனை அதிகாரிகள், அவரைப்பற்றி ராணியிடம் புகார்
சொல்ல ஆரம்பித்தனர். ராணி எதையும் நம்பவில்லை. 'மகாராணியின் செல்ல
நாய்க்குட்டிதான் அப்துல் கரீம்’ என்று மகாராணியின் பாதுகாப்பு அதிகாரிகள்
வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். அவர், மகாராணியின் உளவாளி என்றே
மற்றவர்கள் நினைத்தனர். 1890-ல் கரீம் உடல் நலம் இல்லாமல் படுக்கையில்
விழுந்தார். செய்தி அறிந்த விக்டோரியா மகாராணி தனது தனது சொந்த மருத்துவரை
அனுப்பி சிகிச்சை அளித்தார். தினமும் இரண்டு முறை அவரைப் பார்த்துச்
சென்றார். இது, அரண்மனையில் பல வதந்திகளைக் கிளப்பியது.
உடல்நலம் தேறிய அப்துல் கரீமைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவரை அழகான வண்ண
ஓவியமாகத் தீட்டவும் மகாராணி ஏற்பாடு செய்தார். கூடவே, முன்பு எடுபிடியாக
இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், ஓவியங்கள் அத்தனையும்
எரித்துவிட வேண்டும் என்றும் உத்தரவு போட்டார். இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக்கொண்ட அப்துல் கரீம், இந்தியாவில் தனக்கு நிலமானியம்
வேண்டும், பிரபுக்களுக்கு இணையாக தனக்குப் பட்டம் வேண்டும் என்று கேட்க
ஆரம்பித்தார். இந்தியாவில் உள்ள கவர்னருக்குக் கடிதம் எழுதிய மகாராணி,
அப்துல் கரீமுக்கு நிலம் ஒதுக்கும்படி ஆணையிட்டார். 'கான் பகதூர்’ என்ற
பட்டத்தை கரீமுக்கு வழங்கினார்.ஆக்ராவில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு அருகில் இருந்த நிலங்களை
விலைக்கு வாங்கி பெரிய மாளிகை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தார். கூடவே, தன்னை
இந்தியாவில் ஒரு நவாப்பாக அறிவிக்கும்படி மகாராணியிடம் கெஞ்சினார். அப்துல்
கரீமுக்குப் பிள்ளை இல்லை என்பதால், தனது மருத்துவரைக்கொண்டே கரீமின்
மனைவிக்குச் சிகிச்சை அளித்தார் ராணி. ஆனாலும், குழந்தைப் பேறு
கிடைக்கவில்லை.மகாராணியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி
அப்துல் கரீமை ஒதுக்கிவைக்க அரண்மனைப் பிரமுகர்கள் முயன்றனர். அது
சாத்தியமாகியது. ஆகவே, மீண்டும் ஒருமுறை இந்தியா வந்து சென்றார் அப்துல்
கரீம். லண்டன் திரும்பும்போது தனது வாரிசு என, ரஷீத் என்பவரை அழைத்துச்
சென்றார்.1900-ம் ஆண்டு நவம்பரில் விக்டோரியா மகாராணி இறந்தார்.எந்த அறையில் ஓர் இளைஞனாக பயத்துடன் மகாராணியின் கால்களைப் பற்றிக்கொண்டு
தனக்கு வேலை தரும்படி கெஞ்சினாரோ, அதே அறையில் மகாராணியின் உடல்
வைக்கப்பட்டு இருந்தது. கரீம் குனிந்து மண்டியிட்டு வணங்கி தனது தாயைப் போல
மகாராணி தன்னை வாழ்வில் மேலோங்கவைத்தார் என்று கூறி கண்ணீர் வடித்தார்.அதன் பிறகு, அப்துல் கரீமின் சகல அதிகாரங்களும் பறிக்கப்பட்டதோடு, மகாராணி
அவருக்கு அளித்த பரிசுகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் அத்தனையும் பறிமுதல்
செய்யப்பட்டன. வெறும் ஆளாக அவர் அரண்மனையைவிட்டு வெளியே துரத்தப்பட்டார்.
இந்தியா திரும்பிய கரீம், இங்கும் நிம்மதியாக வாழ முடியவில்லை. ராணியோடு
தொடர்புடைய ஆவணங்கள், குறிப்புகள் ஏதாவது அவரிடம் இருக்கிறதா என்ற சோதனை
தொடர்ந்து நடந்து வந்தது. பத்திரிகைகள் எதிலும் அவர் ஒரு வார்த்தை பேசக்
கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மொத்தமாகத் தீ வைத்து எரிக்கப்பட்டன. அரசின்
கண்காணிப்பின் கீழே வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனஉளைச்சல் மற்றும்
தூக்கமின்மை காரணமாக 1909-ம் ஆண்டு அப்துல் கரீம் மரணம் அடைந்தார்.
அதன்பிறகும் அவரது இரண்டு மனைவிகள் மற்றும் குடும்பத்தினர் இங்கிலாந்து
அரண்மனையின் கண்காணிப்பில் இருந்தனர். அப்துல் கரீம் மறைவுக்குப் பிறகு, அவரை மகாராணியோடு இணைத்து வதந்திகள்
வரத் தொடங்கின. ஜான் பிரௌனைப் போலவே, யாரும் இல்லாத ஒரு தனி இடத்தில்
அப்துல் கரீம் மகாராணியோடு இருந்தார் என்று பரபரப்பாகப் பேசிக்கொண்டனர்.
அந்தப் பரபரப்பின் அடுத்த நகர்வு போல, அப்துல் கரீமுக்கும் மகாராணிக்குமான
கடிதத் தொடர்பு மற்றும் உறவு குறித்து ஆராய்ந்து தனிநூல் ஒன்றும் வெளியாகி
இருக்கிறது.இன்று, அப்துல் கரீம் குடும்பம் ஆக்ராவில் இருந்து இடம் மாறி திசைக்கு
ஒருவராக வாழ்கிறார் கள். ஆனால், விக்டோரியா மகாராணியின் அரண்மனைப்
பதிவேடுகளில், நினைவுகளில் கரீம் நடமாடியதும், அதிகாரம் செலுத்தியதும்
பேசப் பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. சாமான்யர்களின் விதி, இப்படி ஏதாவது
ஒரு குருட்டுக் கரம் சுழற்றி மேலே கொண்டுசெல்வதும்... பின்பு தானே தூக்கி
எறியப்படுவதுமாக வரலாற்றில் திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருக்கிறது.
அப்துல் கரீமின் வாழ்வ இங்கிலாந்து அரண்மனை அமைத்துக் கொடுத்தது. ஆயா
அந்தோனி பெரா, தனது வாழ்க்கையைத் தானே தேடிக் கொண்டார்.படிப்பறிவும் வசதியும் இல்லாத ஒரு பெண், 50-க்கும் மேற்பட்ட முறை கப்பலில்
லண்டன் போய் வர முடிந்தது, அவரது துணிச்சலான மனதையே காட்டுகிறது.
1800-களில் இந்தியாவுக்கு ராணுவச் சேவைக்காகவும், அதிகாரிகளாகவும் வந்த
இங்கிலாந்துவாசிகள் பலர், இங்கு உள்ள சூழ்நிலையில் தங்களது குழந்தைகளை
வளர்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். அன்றைய கணக்கெடுப்புப்படி 1000
குழந்தைகளில் 189 பேர், பிறந்த சில வாரங்களிலே இறந்தனர். சாவு எண்ணிக்கை
அதிகமாக இருப்பதற்கு சீதோஷ்ண நிலையும் அதனால் அவரது தாயின் உடல்நலக்கேடும்
முக்கியக் காரணமாக இருந்தன. ஆகவே, பிறந்த குழந்தைகளை ஐந்து வயது வரை
பராமரிக்க பணிப் பெண்கள் தேவைப்பட்டனர்.லக்னோவில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த அந்தோனி பெரா, பிழைப்புக்காகத்
தாதி வேலை செய்ய ஆரம்பித்தார். அவளது எஜமானர் அவளுக்குச் சூட்டிய பெயர்தான்
அந்தோனி பெரா. அவளுடைய உண்மையான பெயர் அவளுக்கு மறந்து போய் இருந்தது.
அந்தக் காலத்தில் ஆயா வேலை செய்பவர்கள்தான் குழந்தைக்குத் தாய்ப்பால் தர
வேண்டும். பகலும் இரவும் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும். ஆனால்,
குழந்தையை முத்தமிடக் கூடாது, ஒன்றாகப் படுத்துக்கொள்ள கூடாது என்பது போன்ற
கடுமையான விதிமுறைகள் இருந்தன. மீறினால் சவுக்கடி கிடைப்பதோடு சம்பளமும்
கொடுக்க மாட்டார்கள். இதனால், பல ஆயாக்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டதோடு,
குறைவான சம்பளமே பெற்றனர்.
வெள்ளைக்கார அதிகாரி தனது குடும்பத்தை இங்கிலாந்து அனுப்பும்போது கூடவே
தனது ஆயாவுக்கும் பாஸ்போர்ட் வாங்கித் தந்து அனுப்பிவிடுவான். அப்படி
அனுப்பப்பட்டவர்தான் அந்தோனி பெரா. கப்பலில், அவருக்கும் எஜமானிக்கும்
தகராறு ஏற்பட்டது. எஜமானி, அந்தோனியை உதைத்து தனி அறையில் பூட்டிவிட்டாள்.
என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு நாட்கள் இருட்டு அறையிலேயே
அடைந்துகிடந்தார் அந்தோனி. இன்னொரு இங்கிலாந்துப் பெண், கதவைத்
திறந்துவிட்டு தனது பிள்ளைகளின் ஆயாவாக இருக்க முடியுமா என்று கேட்கவே
அதற்கு ஒப்புக்கொண்டார் அந்தோனி.லண்டன் போய் இறங்கியபோது தன்னைப் போலவே இந்தியாவில் இருந்து அழைத்து
வரப்பட்டு கைவிடப்பட்ட ஆயாக்கள் நூற்றுக்கணக்கில் லண்டனில் இருப்பதை
உணர்ந்தார். விசுவாசமாகப் பிழைத்தால் தன்னால் முன்னேற முடியாது என்று
அறிந்த அந்தோனி, தந்திரத்துடன் நடந்துகொண்டார். சில மாதங்களிலேயே, அந்த
வீட்டு வேலையும் பறிபோனது.இன்னொரு வெள்ளைக்காரக் குடும்பம் கப்பலில் இந்தியா கிளம்பியது. அவர்களுடன்
தானும் இந்தியா கிளம்பினார். இந்தியாவில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்.
அந்த வீட்டிலும் பிரச்னை ஏற்பட்டது. புதிய எஜமானனைத் தேடிப் பிடித்தார்.
இந்த முறை அவளது எஜமானராக வாய்த்தவர் ஸ்மித் என்ற இன்ஜினியர். அவரது
மனைவிக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது. இதைப் பயன்படுத்தி அந்தோனி நிறைய
பணம் கறக்க ஆரம்பித்தார். அந்தப் பெண்ணுக்கு வெயில் தாங்க முடியவில்லை.
அதனால், இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். அந்தோனியும் அவருடன் சென்றார்.
இப்படி இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில், ஆயா வேலைக்காக 54 முறை
பயணம் செய்து இருக்கிறார் அந்தோனி பெரா. முடிவில், இனிமேலும் இந்தியா போக
வேண்டிய தேவை இருக்காது என்று இங்கிலாந்திலேயே வீடு வசதி என
அமைத்துக்கொண்டு வாழத் தொடங்கினார். 1800 முதல் 1900 வரை, ஆயா வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என்று வந்த
ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் அடிமைகள் போல நடத்தப்பட்டதோடு, கப்பல்
பயணத்தில் நோயுற்று இறந்துபோய் கடலில் தூக்கி வீசப்பட்ட சம்பவமும் நடந்து
இருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளரான வில்லியம் தாக்ரே, சிறு வயதில் இந்திய
ஆயா ஒருவரால் தான் வளர்க்கப்பட்டதாகவும், தனது பள்ளிப் படிப்பு முடியும்
வரை அந்த ஆயா தன்னுடன் இருந்தார் என்றும் நினைவு கூர்கிறார். இவரைப்போல,
இங்கிலாந்தில் ஒரு தலைமுறையே இந்திய ஆயாக்களால்தான் உருவாக்கப்பட்டது.
அந்தோனி பெரா வளர்த்த வெள்ளைக்காரப் பிள்ளைகள் யார், எங்கே இருக்கிறார்கள்
என்ற தகவல்கள் தெரியவில்லை. ஆனால், தனக்கென்று ஒரு பிள்ளை இல்லாமல் போய்
இறந்துபோன அந்தோனியின் கல்லறை, இங்கிலாந்தின் பெல்மாண்ட் பகுதியில்
கவனிப்பார் இல்லாமல் இருக்கிறது. பெராவும், கரீமும் வாழ்க்கைச் சூறாவளியால்
அடித்துப் போடப்பட்ட மனிதர்கள். இவர்களை சுழற்றி அடித்தது காலனிய அரசின்
மாற்றமே. சரித்திர மாற்றம் என்பது சுனாமி போல அடிக்கக்கூடியது. அதற்கு,
சாமான்யனும் சக்கரவர்த்தியும் ஒன்றுதான். சரித்திர மாற்றத்தை தனக்குச்
சாதமாக்கிக்கொண்டவரும் உண்டு. அதற்குப் பலியானவர்களும் உண்டு. இரண்டுமே
எப்படி நடக்கிறது என்பதுதான் இன்று வரை பதில் அறிய முடியாத பெரும் புதிர்.
விகடன்
வேதனையான பதிவு.
ReplyDelete